Nakula made Sakuni to swoon! | Drona-Parva-Section-169 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 17)
பதிவின் சுருக்கம் : சகுனிக்கும் நகுலனுக்கும் இடையில் நடந்த மோதல்; மயக்கமடைந்த நகுலன்; நினைவு மீண்டு சகுனியின் வில்லை அறுத்த நகுலன்; நகுலனால் துளைக்கப்பட்டுக் கீழே விழுந்து மயக்கமடைந்த சகுனி; சிகண்டிக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்; கிருபரின் வில்லை அறுத்த சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருபர்; சிகண்டிக்காகவும், கிருபருக்காகவும் திரண்ட போர்வீரர்களுக்கிடையில் நடந்த பயங்கரப் போர்; பயங்கரமான அந்த இரவு போரில் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாமலே உறவினர்களைக் கொன்ற போர்வீரர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படையைத் தாக்கிக் கொண்டிருந்த நகுலனை எதிர்த்து, கோபத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் விரைந்து சென்ற சுபலனின் மகன் (சகுனி), அவனிடம் {நகுலனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(1) ஒருவர் மேல் ஒருவர் சினங்கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு வீரர்களும், தங்கள் விற்களை முழுமையாக வளைத்து, கணைகளை ஏவி, ஒருவரையொருவர் தாக்கினர்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி}, கணைமாரி ஏவுவதில் நகுலன் வெளிப்படுத்திய அதே அளவு திறனை அம்மோதலில் வெளிப்படுத்தினான்.(3) அந்தப்போரில் கணைகளால் துளைத்துக் கொண்ட அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்களது உடலில் முட்கள் விறைத்த இரு முள்ளம்பன்றிகளைப் போல அழகாகத் தெரிந்தனர்.(4)
நேரானமுனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்டவர்களும், குருதியில் குளித்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் பயங்கரப் போரில், அழகான, பிரகாசமான இரண்டு கல்ப மரங்களைப் போலவோ, அந்தப் போர்க்களத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலவோ பிரகாசமாகத் தெரிந்தனர்.(5,6) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கணைகளால் துளைத்த அவ்விரு வீரர்களும், முள் கொண்ட சால்மலி {இலவ} மரங்கள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.(7) கண்கள் சினத்தால் விரிந்து, கடைக்கண் சிவந்து, ஒருவர் மேல் ஒருவர் சரிந்த பார்வைகளை வீசிய அவர்கள், அந்தப் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரிக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(8)
அப்போது உமது மைத்துனன் {சகுனி}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, கூர்முனைகொண்ட முள்கணை {கர்ணி} ஒன்றால் மாத்ரியின் மகனுடைய {நகுலனின்} மார்பைத் துளைத்தான்.(9) பெரும் வில்லாளியான உமது மைத்துனனால் {சகுனியால்} ஆழத்துளைக்கப்பட்ட நகுலன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயங்கிப் போனான்.(10) செருக்குமிக்கத் தன் எதிரியின் {நகுலனின்} அந்த அவல நிலையைக் கண்ட சகுனி, கோடை முடிவின் மேகங்களைப் போல உரக்க முழங்கினான்.(11) சுயநினைவு மீண்டவனான பாண்டுவின் மகன் நகுலன், வாயை அகல விரித்த காலனைப் போலவே மீண்டும் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்து விரைந்தான்.(12) சினத்தால் எரிந்த அவன் {நகுலன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அறுபது {60} கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஒரு நூறு நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அவனை {சகுனியை} மார்பில் துளைத்தான்.(13) பிறகு அவன் {நகுலன்}, கணை பொருத்தப்பட்ட சகுனியின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, இரண்டு துண்டுகளாக்கினான். கணப்பொழுதில் அவன் {நகுலன்}, சகுனியின் கொடிமரத்தையும் வெட்டி, அதைக் கீழே பூமியில் விழச் செய்தான்.(14)
பாண்டுவின் மகனான நகுலன், அடுத்ததாக, கூர்முனை கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான கணை ஒன்றால் சகுனியின் தொடையைத் துளைத்து, வேடன் ஒருவன், சிறகு படைத்த பருந்தொன்றை பூமியில் விழச் செய்வதைப் போல, அவனை {சகுனியை} அவனது தேரில் கீழே விழச் செய்தான்.(15) ஆழத்துளைக்கப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காமவயப்பட்ட ஒரு மனிதன் {காமுகன் ஒருவன்} தன் தலைவியை {காமுகியைத்} தழுவிக் கொள்வதைப் போலக் கொடிக்கம்பத்தைத் தழுவி கொண்டு, தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) கீழே விழுந்து, சுயநினைவை இழந்த உமது மைத்துனனை {சகுனியைக்} கண்ட அவனது சாரதி, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, விரைவாக அவனைப் போர் முகப்பை விட்டு வெளியே கொண்டு சென்றான்.(17) அப்போது, பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் உரக்க முழங்கினர்.(18) தன் எதிரிகளை வென்றவனும், எதிரிகளை எரிப்பவனுமான நகுலன், தன் சாரதியிடம், “துரோணரால் நடத்தப்படும் படைக்கு என்னைக் கொண்டு செல்வாயாக” என்று சொன்னான்.(19) மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(20)
துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை எதிர்த்து, சரத்வானின் மகனான கிருபர், உறுதியான தீர்மானத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் முன்னேறிச் சென்றார்.(21) எதிரிகளைத் தண்டிப்பவனான சிகண்டி, சிரித்துக் கொண்டே, துரோணரின் அருகாமையை நோக்கிச் செல்லும் தன்னை, இப்படி எதிர்த்து வரும் கௌதமர் மகனை {கிருபரை} ஒன்பது கணைகளால் துளைத்தான்.(22) உமது மகன்களுக்கு நன்மை செய்பவரான அந்த ஆசான் (கிருபர்), முதலில் சிகண்டியை ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் அவனை இருபதால் துளைத்தார்.(23) அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதலானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் {அசுரன்} சம்பரனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(24) வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் இருவரும், கோடையின் முடிவில் ஆகாயத்தை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் ஆகாயத்தை மறைத்தனர்.(25) பயங்கரமான அந்த இரவு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, போரிட்டுக் கொண்டிருந்த வீரப் போராளிகளால் மேலும் பயங்கரமடைந்தது.(26) உண்மையில், அனைத்து வகை அச்சங்களையும் தூண்டும் பயங்கரத்தன்மைகளைக் கொண்ட அந்த இரவு, (அனைத்து உயிரினங்களுக்குமான) மரண இரவாக {காலராத்திரி} ஆனது.
அப்போது சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கௌதமர் மகனின் {கிருபரின்} பெரிய வில்லை அறுத்து, கூர்த்தீட்டப்பட்ட கணைகளைப் பின்னவர் {கிருபரின்} மீது ஏவினான். கோபத்தால் எரிந்த கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனையையும், தங்கக் கைப்பிடியையும் கொண்டதுமான கடுமையான ஓர் ஈட்டியைத் தன் எதிராளியின் {சிகண்டியின்} மீது ஏவினார். எனினும் சிகண்டி, தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியை}, பத்து கணைகளால் வெட்டினான்.(27-29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஈட்டி (இப்படி வெட்டப்பட்டு) கீழே பூமியில் விழுந்தது. அப்போது மனிதர்களில் முதன்மையான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்த்தீட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் சிகண்டியை மறைத்தார்.(30) இப்படி அந்தப் போரில் கௌதமரின் சிறப்புமிக்க மகனால் {கிருபரால்} மறைக்கப்பட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிகண்டி தன் தேர்தட்டில் பலவீனமடைந்தான்.(31) சரத்வானின் மகனான கிருபர் அவன் பலவீனமடைந்ததைக் கண்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனைக் {சிகண்டியைக்} கொல்லும் விருப்பத்தால் பல கணைகளால் அவனைத் துளைத்தார்.(32) (பிறகு சிகண்டி தன் சாரதியால் வெளியே கொண்டு செல்லப்பட்டான்). வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த யக்ஞசேனன் மகன் {துருபதன் மகனான சிகண்டி} போரில் பின்வாங்குவதைக் கண்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும் (அவனைக் காப்பதற்காக) அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(33) அதே போல உமது மகன்களும், பெரும்படையுடன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரை (கிருபரைச்) சூழ்ந்து கொண்டனர்.(34) அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கு இடையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(35)
ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தி விரைந்து செல்லும் குதிரைவீரர்கள், யானைகள் ஆகியவற்றின் காரணமாக எழுந்த ஆரவாரமானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.(36) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது மிகவும் கடுமையானதாகத் தெரிந்தது. விரைந்து சென்ற காலாட்படையின் நடையால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அச்சத்தால் நடுங்கும் ஒரு பெண்ணைப் போலப் பூமியானவள் நடுங்கத் தொடங்கினாள்.(37) தேர்வீர்கள் தங்கள் தேர்களில் ஏறி மூர்க்கமாக விரைந்து, சிறகு படைத்த பூச்சிகளைப் பிடிக்கும் காக்கைகளைப் போல, ஆயிரக்கணக்கான எதிராளிகளைத் தாக்கினர்.(38) அதே போல, தங்கள் உடல்களில் மதநீர் வழிந்த யானைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதே போன்ற யானைகளைப் பின்தொடர்ந்து அவற்றோடு சீற்றத்துடன் மோதின. அதே போலவே, குதிரைவீரர்கள், குதிரைவீரர்களோடும், காலாட் படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும் கோபத்துடன் அந்தப் போரில் மோதிக் கொண்டனர்.(39,40)
அந்த நள்ளிரவில், பின்வாங்குபவை, விரைபவை மற்றும் மீண்டும் மோதலுக்கு வருபவை ஆகிய துருப்புகளின் ஒலி செவிடாக்குவதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றில் வைக்கப்பட்ட சுடர்மிக்க விளக்குகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கற்களைப் போலத் தெரிந்தன.(41,42) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த இரவானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் பகலைப் போலவே இருந்தது.(43) அடர்த்தியான இருளுடன் மோதி, அதை முற்றாக அழிக்கும் சூரியனைப் போலவே, அந்தப் போர்க்களத்தின் அடர்த்தியான இருளானது, அந்தச் சுடர்மிக்க விளக்குகளால் அழிக்கப்பட்டது.(44) உண்மையில், புழுதியாலும், இருளாலும் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம், பூமி, முக்கிய மற்றும் துணைத் திசைகள் ஆகியவை மீண்டும் அந்த வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்டன.(45) ஆயுதங்கள், கவசங்கள், சிறப்புமிக்க வீரர்களின் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஒளி சுடர்மிக்க அந்த விளக்குகளின் மேலான வெளிச்சத்தில் மறைந்தது.
இரவில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போராளிகளில் எவராலும் தங்கள் தரப்பின் போர்வீரர்களையே அறிந்து கொள்ள முடியவில்லை.(46,47) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அறியாமையால், தந்தை மகனையும், மகன் தந்தையையும், நண்பன் நண்பனையும் கொன்றனர்.(48) உறவினர்கள், உறவினர்களையும், தாய்மாமன்கள் தங்கள் சகோதரிகளின் மகன்களையும், போர்வீரர்கள் தங்கள் தரப்பின் போர்வீரர்களையும் கொன்றனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளும் கூடத் தங்கள் ஆட்களையே கொன்றனர்.(49) அந்தப் பயங்கர இரவு மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் அனைவரும் சீற்றத்துடன் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(50)
-----------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 169-ல் வரும் மொத்த சுலோகங்கள்-50
ஆங்கிலத்தில் | In English |