Krishna urged Ghatotkacha! | Drona-Parva-Section-173 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 21)
பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான மோதல்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கர்ணனின் குதிரைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; அர்ஜுனனின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; பாஞ்சாலர்களை முறியடித்த கர்ணன்; கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சி அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனை; கடோத்கசனிடம் பேசிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்; கர்ணனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான கர்ணன், போரில் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கண்டு, முக்கிய அங்கங்களுக்குள் ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான்.(1) அந்தப் பெரும்போரில் திருஷ்டத்யும்னனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் கர்ணனை வேகமாகத் துளைத்து, அவனிடம், “நில், நிற்பாயாக” என்றான்.(2) அந்தப் பயங்கரப்போரில் ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்று முழுதாக வளைக்கப்பட்ட தங்கள் விற்களில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் மீண்டும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(3) அப்போது அந்தப் போரில் கர்ணன், பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(4) பிறகு அவன் {கர்ணன்}, தன் முதன்மையான எதிரியின் வில்லைக் கூரிய கணைகளால் அறுத்து, மேலும் ஒரு பல்லத்தால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியைத் தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(5)
தேர், குதிரைகள் ஆகியவற்றையும் சாரதியையும் இழந்த வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்தான்.(6) கர்ணனின் நேரான கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டு வந்தாலும், கர்ணனை அணுகிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பின்னவனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) படைகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பிறகு, வேகமாகத் திரும்பி தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்தத் தேரில் ஏறி, கர்ணனை நோக்கிச் செல்லவே விரும்பினான்.(8) எனினும், தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்) அவனை {திருஷ்டத்யும்னனை} விலகிச் செல்லச் செய்தான் [1].
[1] வேறொரு பதிப்பில் இந்த இடம் முற்றிலும் வேறு விதமாக வர்ணிக்கப்படுகிறது. அது பின்வருமாறு: “ரதத்தையும், குதிரைகளையும், சாரதியையும் இழந்த திருஷ்டத்யும்னனோ கோரமான பரிகாயுதத்தைக் கையிலெடுத்துக் கர்ணனுடைய குதிரைகளை அடித்தான். அந்தக் கர்ணனாலே சர்ப்பங்களுக்கொப்பான அனேக அம்புகளால் அடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், பிறகு யுதிஷ்டிரருடைய சேனையை நோக்கிக் கால்களாலேயே நடந்து சென்றான். ஐயா! திருஷ்டத்யும்னன் தர்மபுத்திரராலே தடுக்கப்படும் கர்ணனை எதிர்த்துச் செல்ல விரும்பி ஸஹதேவனுடைய ரதத்தின் மீது ஏறினான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
அப்போது, பெரும் சக்தி கொண்ட கர்ணன், தன் சிங்கமுழக்கங்களுடன் கலந்த உரத்த நாணொலியைத் தன் வில்லில் எழுப்பி, பெரும் சக்தியுடன் தன் சங்கையும் முழக்கினான். பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} போரில் வெல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான(9,10) பாஞ்சாலர்களும், சோமகர்களும், சினத்தால் தூண்டப்பட்டு, அனைத்து வகை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, மரணத்தையே தங்கள் இலட்சியமாகக் கொண்டு, கர்ணனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை நோக்கிச் சென்றனர். அதே வேளையில், கர்ணனின் சாரதியானவன், சங்கு போல வெண்மையாக இருந்தவையும், பெரும் வேகம் கொண்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நல்ல பலம்கொண்டவையுமான வேறு பிற குதிரைகளைத் தன் தலைவனின் {கர்ணனின்} தேரில் பூட்டினான்.(11,12) துல்லியமான குறியைக் கொண்ட கர்ணன், வீரத்துடன் போராடி, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பாஞ்சாலர்களைத் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாஞ்சாலப் படையானது, சிங்கத்தால் அச்சமடைந்த பெண் மானைப் போல, அச்சத்துடன் தப்பி ஓடியது.(13,14)
குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்து விழுவது அங்கே காணப்பட்டது, யானைப் பாகர்கள் தங்கள் யானைகளில் இருந்தும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தனர். அந்தப் பயங்கரப் போரில் கர்ணன், ஓடிக் கொண்டிருக்கும் போராளிகளின் கரங்கள் மற்றும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சிரங்கள் ஆகியவற்றைத் தன் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், அல்லது குதிரைகளின் முதுகுகள், அல்லது பூமியில் இருந்த பிறரின் தொடைகளையும் அவன் {கர்ணன்} அறுத்தான்.(15-17) அந்தப் போரில் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்கள் ஓடுகையில் தங்கள் உறுப்புகளை இழந்ததையோ, தங்கள் விலங்குகள் காயமடைந்ததையோ கூட உணரவில்லை. பயங்கரக் கணைகளால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் (அவர்கள் கொண்ட பேரச்சத்தால்) அது கர்ணன் என்றே எடுத்துக் கொண்டனர்.(18,19) தங்கள் உணர்வுகளை இழந்த அந்தப் போர்வீரர்கள், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களையே கர்ணன் என்று நினைத்து, அவர்களிடம் இருந்து அச்சத்தால் விலகி ஓடினர். கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அணிபிளந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றான். உண்மையில், அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்து ஓடிக் கொண்டிருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.(20-22) சிறப்புமிக்க வீரனான அந்தக் கர்ணனின் வலிமைமிக்க ஆயுதங்களால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களால் எந்த நிலையையும் ஏற்க {எங்கும் நிற்க} இயலவில்லை.(23) துரோணரால் பார்க்க மட்டுமே செய்யப்பட்ட பிறர், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர் {துரோணரின் பார்வையைக் கண்டே பிறர் ஓடிவிட்டனர்}.
அப்போது தன் படை ஓடுவதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(24) பின்வாங்குவதே அறிவுடைமை என்று கருதி பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “வில்லுடன் கூடிய ருத்ரனைப் போல அங்கே நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்க வில்லாளியான கர்ணனைப் பார்.(25) உக்கிர காலமான இந்த நள்ளிரவில், சுடர்மிக்கச் சூரியனைப் போல அனைத்தையும் அவன் {கர்ணன்} எரித்துக் கொண்டிருப்பதைப் பார். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களுமான உன் நண்பர்களின் ஓலங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிபார்ப்பது மற்றும் தன் கணைகளை விடுவது ஆகிய கர்ணனின் இரண்டு செயல்களுக்கிடையில் எந்த இடைவெளியையும் காணமுடியவில்லை. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவன் {கர்ணன்} நம் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிடுவான். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன் தீர்மானத்தின் படி அடுத்து செய்யப்பட வேண்டியதும், செய்யப்படும் நேரம் வாய்த்துவிட்டதுமான கர்ணனின் கொலைக்குத் தேவையானவற்றை இப்போதே செய்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
(யுதிஷ்டிரனால்) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம்,(26-29) “தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரர்}, இன்று கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சுகிறார். கர்ணனின் படைப்பிரிவானது (நம்மிடம்) மீண்டும் மீண்டும் இப்படியே நடந்து கொள்ளும்போது, எவ்வழி பின்பற்றப்பட வேண்டுமோ அதை விரைவாகப் பின்பற்றுவாயாக. நமது படை ஓடுகிறது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, துரோணரால் பிளக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், கர்ணனால் அச்சுறுத்தப்பட்டும் உள்ள நமது துருப்புகளால் நிற்கவும் இயலவில்லை. கர்ணன் அச்சமற்றுத் திரிவதை நான் காண்கிறேன்.(30-32) நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் ஓடுகின்றனர். கர்ணன் தன் கூரிய கணைகளை இறைக்கிறான். மனிதனால் உடலில் மிதிக்கப்பட்டு அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாம்பொன்றைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தின் புலியே {கிருஷ்ணா}, போரின் முன்னணியில் என் கண்களுக்கு முன்பாகவே இவன் {கர்ணன்} இப்படித் திரிவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஒன்று நான் அவனைக் {கர்ணனைக்} கொல்வேன், அல்லது அவன் {கர்ணன்} என்னைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.(33,34)
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மனிதர்களில் புலியும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொண்ட போர்வீரனுமான கர்ணன், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே போரில் திரிவதை நான் காண்கிறேன்.(35) ஓ! தனஞ்சயா, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உன்னையும், ராட்சசன் கடோத்கசனையும் தவிரப் போரில் அவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்ல வல்லவர் எவரும் இல்லை.(36) எனினும், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, போரில் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} நீ மோதக்கூடிய நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.(37) வாசவனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பெரும் விண்கல்லுக்கு ஒப்பானதும், சூதன் மகனால் {கர்ணனால்} உனக்காகவே கவனமாக வைக்கப்பட்டிருப்பதுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்னும் அவனிடம் {கர்ணனிடம்} இருக்கிறது.(38) தன்னிடம் அந்த ஈட்டியைக் கொண்டுள்ள அவன் {கர்ணன்}, இப்போது பயங்கர வடிவை ஏற்றிருக்கிறான் [2]. கடோத்கசனைப் பொறுத்தவரை, அவன் எப்போதும் உனக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், உன் நன்மையை விரும்புபவனுமாக இருக்கிறான்.(39) வலிமைமிக்கக் கடோத்கசனே {இப்போது} அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்லட்டும். தெய்வீக ஆற்றலைக் கொண்ட அவன் {ராட்சசன் கடோத்கசன்} வலிமைமிக்கப் பீமனால் பெறப்பட்டவனாவான்.(40) தெய்வீக ஆயுதங்களும், ராட்சசர்களும், அசுரர்களும் பயன்படுத்தும் ஆயுதங்களும் அவனிடம் {கடோத்கசனிடம்} இருக்கின்றன. அவன் {கடோத்கசன்} கர்ணனை வெல்வான். அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை” என்றான் {கிருஷ்ணன்}.(41)
[2] வேறு ஒரு பதிப்பில், “சூதபுத்திரனிடத்தில் பிரகாசிக்கின்ற பெரிதான எரிநட்சத்திரம் போல இந்திரனால் கொடுக்கப்பட்ட ஒரு சக்தியாயுதம் இருக்கின்றது. புஜபலமிக்கவனே, யுத்தத்தில் உன்னைக் கொல்வதற்காகவே இந்தச் சக்தியாயுதமானது கர்ணனால் காப்பாற்றப்பட்டு வருகிறது. அது பயங்கர உருவமுள்ளது” என்று உள்ளது. இதில் ஆயுதமே பயங்கரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அவன் அந்தச் சக்தியை {ஈட்டியைப்} பாதுகாக்கிறான்; எனவே, இப்போது அவன் பயங்கரத் தன்மையை அடைந்திருக்கிறான்” என்று, கர்ணன் பயங்கரத்தன்மையை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் “பயங்கரம்” என்ற தன்மை கர்ணனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது {now) பயங்கரத்தை அடைந்திருக்கிறது / அடைந்திருக்கிறான் என்ற சொற்பயன்பாடும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கது.
(கிருஷ்ணனால்) இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த ராட்சசனை {கடோத்கசனை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பின்னவன் {கடோத்கசன்}, கவசந்தரித்துக் கொண்டும், வாள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டும் விரைவில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்பு வந்து நின்றான்.(42) கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வணங்கிய அவன் {கடோத்கசன்} பெருமையுடன், “இதோ நான் இருக்கிறேன், எனக்கு ஆணையிடுவீராக” என்றான். அப்போது தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சுடர்மிக்க வாய் {முகம்}, நெருப்பு போன்ற கண்கள், மேகங்களின் நிறத்திலான உடல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஹிடிம்பையின் மகனுமான அந்த ராட்சசனிடம் {கடோத்கசனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ! கடோத்கசா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. {இப்போது} உன் ஆற்றலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. வேறு யாருக்குமில்லை.(45) {துன்பக்கடலில்} மூழ்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் போரில் நீ படகாவாயாக. பல்வேறு ஆயுதங்களும், பல வகைகளிலான ராட்சச மாயைகளும் உன்னிடம் இருக்கின்றன.(46) ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, மந்தையாளனால் {இடையனால்} அடிக்கப்படும் மாட்டு மந்தையைப் போல, போர்க்களத்தில் பாண்டவர்களின் படை கர்ணனால் அடிக்கப்படுகிறது.(47) அதோ, பெரும் நுண்ணறிவும், உறுதியான ஆற்றலும் கொண்ட வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரித்து வருகிறான்.(48)
வலிமைமிக்கக் கணைகளைப் பொழியும் அந்த உறுதிமிக்க வில்லாளியின் {கர்ணனின்} முன்பு, நெருப்பு போன்ற அவனது கணைகளால் பீடிக்கப்படும் பாண்டவ வீரர்களால் நிலைக்க முடியவில்லை.(49) இந்த நள்ளிரவில் சூதன் மகனின் {கர்ணனின்} கணை மழையால் பீடிக்கப்படும் பாஞ்சாலர்கள், சிங்கத்தால் பீடிக்கப்படும் மான் கூட்டத்தைப் போல ஓடுகின்றனர்.(50) ஓ! பயங்கர ஆற்றலைக் கொண்டவனே {கடோத்கசா}, போரில் இப்படி ஈடுபட்டுவரும் சூதன் மகனை {கர்ணனைத்} தாக்குப் பிடிக்க உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(51) உன் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, உன் தாய்வழி குலத்திற்கும், உனது தந்தைமாரின் குலத்திற்கும் தகுந்ததைச் சாதிப்பாயாக.(52) இதற்காகவே, ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, இடுக்கண்களில் காக்கப்படவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள். இப்போது நீ உன் இரத்த உறவினர்களைக் காப்பாயாக.(53) ஓ! கடோத்கசா, தங்கள் நோக்கங்களை அடைவதற்காகவே தந்தைமார் மகன்களை விரும்புகின்றனர். நன்மையின் தோற்றுவாயான பிள்ளைகள், இங்கேயும், இதன் பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} தங்கள் தந்தைமாரைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.(54) நீ சிறப்புமிக்கவன், போரில் உன் வலிமை பயங்கரமானதும் ஒப்பற்றதுமாகும். போரில் ஈடுபடுகையில் உனக்கு இணையானவர்கள் எவரும் இல்லை.(55)
ஓ! எதிரிகளை எரிப்பவனே {கடோத்கசா}, இவ்விரவில் கர்ணனின் நேரான கணைகளால் முறியடிக்கப்படுபவர்களும், தார்தராஷ்டிரக் கடலில் இப்போது மூழ்கிக் கொண்டிருப்பவர்களுமான பாண்டவர்கள் கரையைப் பாதுகாப்பாக அடைவதற்கு ஏதுவான வழியாக {படகாக} அவர்களுக்கு இருப்பாயாக.(56) இரவில் ராட்சசர்கள், அளவிலா ஆற்றல் கொண்டவர்களாகவும், பெரும் வலிமையும், பெரும் துணிவும் கொண்டவர்களாக இருக்கின்றனர். (அத்தகு நேரத்தில்) அவர்கள் பெரும் வீரமிக்கவர்களும், வீழ்த்தக் கடினமானவர்களுமான போர்வீரர்களாக ஆகின்றனர்.(57) இந்த நள்ளிரவில் உன் மாயைகளின் துணை கொண்டு போரில் கர்ணனைக் கொல்வாயாக. பார்த்தர்களும், திருஷ்டத்யும்னனும் துரோணரை அகற்றுவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(58)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான ராட்சசன் கடோத்கசனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(59) “ஓ! கடோத்கசா, நீயும், நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, பாண்டுவின் மகனான பீமர் ஆகிய மூவரும், நம் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பது என் தீர்மானம்.(60) இந்த இரவில் சென்று கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி உனது பின்புறத்தைப் பாதுகாப்பான். (தேவர்ப்படைத் தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} துணையோடு, பழங்காலத்தில் தாரகனைக் கொன்ற இந்திரனைப் போல இந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைத்} துணையாகக் கொண்டு, போரில் துணிவுமிக்கக் கர்ணனை நீ கொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(62)
கடோத்கசன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதரே {அர்ஜுனரே} கர்ணருக்கோ, துரோணருக்கோ, ஆயுதங்களில் சாதித்த சிறப்புமிக்க எந்த க்ஷத்திரியனுக்கோ நான் இணையானவனே.(63) இந்த இரவில் நான் சூதன் மகனுடன் {கர்ணருடன்} மோதப் போகும் போரானது, இவ்வுலகம் நீடித்து உள்ள வரையில் பேசத்தக்கதாக இருக்கும்.(64) இன்றிரவு, துணிச்சல் மிக்கவர் எவரையும், மருட்சியுடையோர் எவரையும், கூப்பிய கரங்களோடு வேண்டுவோர் எவரையும் விட்டு விடாமல், ராட்சச நடைமுறையைக் கைக்கொண்டு, அனைவரையும் கொல்வேன்” என்றான் {கடோத்கசன்}.(65)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, துருப்புகளை அச்சுறுத்தியபடியே அந்தப் பயங்கரப் போரில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(66) மனிதர்களில் புலியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சுடர்மிக்க வாயையும் {முகத்தையும்}, சுடர்மிக்கக் குழல்களையும் {கேசத்தையும்} கொண்ட அந்தக் கோபக்காரப் போர்வீரனை {கடோத்கசனை} இன்முகத்துடன் வரவேற்றான்.(67) ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிய கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(68)
---------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி: 173-ல் வரும் சுலோகங்கள் : 68
---------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி: 173-ல் வரும் சுலோகங்கள் : 68
ஆங்கிலத்தில் | In English |