Ghatotkacha killed Jatasura’s son! | Drona-Parva-Section-174 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 22)
பதிவின் சுருக்கம் : கௌரவ முகாமுக்கு ஜடாசுரன் மகன் அலம்புசனின் {அலம்பலனின்} வருகை; அலம்புசனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற கடோத்கசன், அலம்புசனின் தலையைத் துரியோதனனின் தேரின் மீது வீசியது; துரியோதனனிடம் பேசிய கடோத்கசன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கடோத்கசனானவன், சூதனின் மகனான கர்ணனைப் போரில் கொல்வதற்காக, அவனது தேரை நோக்கிச் செல்வதைக் கண்ட உமது மகன் துரியோதனன்,(1) {தன் தம்பியான} துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு அவனை எதிர்த்துப் போரிட வேகமாகச் செல்கிறான்.(2)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கடோத்கசனைத்} தடுப்பாயாக. விகர்த்தனன் {சூரியன்} மகனான வலிமைமிக்கக் கர்ணன், போரில் அந்த ராட்சசனுடன் எங்கே மோதுகிறானோ அந்த இடத்திற்குப் பெரும்படை சூழச் செல்வாயாக.(3) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துச்சாசனா}, துருப்புகள் சூழ மூர்க்கமாக முயன்று, போரில் கர்ணனைக் காப்பாயாக.(4) நமது கவனக்குறைவால் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான்.(5)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கடோத்கசனைத்} தடுப்பாயாக. விகர்த்தனன் {சூரியன்} மகனான வலிமைமிக்கக் கர்ணன், போரில் அந்த ராட்சசனுடன் எங்கே மோதுகிறானோ அந்த இடத்திற்குப் பெரும்படை சூழச் செல்வாயாக.(3) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துச்சாசனா}, துருப்புகள் சூழ மூர்க்கமாக முயன்று, போரில் கர்ணனைக் காப்பாயாக.(4) நமது கவனக்குறைவால் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான்.(5)
அதே வேளையில், தாக்குபவர்களில் முதன்மையான ஜடாசுரனின் வலிமைக்க மகன் {அலம்புசன் / அலம்பலன்}, துரியோதனனை அணுகி, அவனிடம், “ஓ! துரியோதனா, உன்னால் ஆணையிடப்படும் நான், போரில் எளிதில் வெல்லப்பட முடியாத போர்வீரர்களும், புகழ்பெற்ற உன் எதிரிகளுமான பாண்டவர்களையும், அவர்களைப் பின்தொடர்வோரையும் கொல்ல விரும்புகிறேன். ராட்சசர்களில் முதன்மையானவரும் வலிமைமிக்கவருமான ஜடாசுரரே என் தந்தையாவார். முன்பொரு சமயம்,(6,7) பிருதையின் {குந்தியின்} அற்ப மகன்கள், ராட்சசர்களைக் கொல்லும் சில மந்திரங்களைச் சொல்லி அவரைக் {ஜடாசுரரைக்} கொன்றனர் [1]. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இறந்து போன என் தந்தைக்கு {ஜடாசுரருக்கு}, அவரது எதிரிகளின் குருதியையும்,(8) இறைச்சியையும் காணிக்கையளித்து அவரை வழிபட விரும்புகிறேன். {என் தந்தையின் கொலைக்காக நான் பாண்டவர்களைப் பழி வாங்க விரும்புகிறேன்}. {இதற்கு} எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அலம்புசன்}.
[1] வன பர்வம் பகுதி 156ல் ஜடாசுரன் வதம் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துரியோதனன்}, மிகவும் மகிழ்ந்து, அவனிடம் {அந்த ஜடாசுரன் மகனான அலம்புசனிடம்}, “துரோணர், கர்ணன் மற்றும் பிறரின் துணையுடன் என் எதிரிகளை வெல்லத்தக்கவனாகவே நான் இருக்கிறேன். எனினும், ஓ! ராட்சசா {அலம்புசா}, என்னால் உத்தரவிடப்படும் நீ, மனிதனுக்குப் பிறந்தவனும், கடுஞ்செயல்களைச் செய்யும் ராட்சசனும், பாண்டவர்களின் நலனில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், எப்போதும் ஆகாயத்தில் நின்று கொண்டு, எங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களைப் போரில் கொல்பவனுமான கடோத்கசனிடம் போரிட்டு, அப்போரில் அவனைக் கொல்வாயாக.(10,11) ஓ! அவனை {கடோத்கசனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவாயாக” என்றான் {துரியோதனன்}.
“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனைப் போருக்கு அழைத்த(12) அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்}, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அந்தப் பீமசேனன் மகனை {கடோத்கசனை} மறைத்தான். எனினும், அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்தாலும், மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அலசம்புசனையும் [2], கர்ணனையும், பரந்த குரு படையையும் கலங்கடிக்கத் தொடங்கினான். (கடோத்கச) மாயையின் சக்தியைக் கண்ட அந்த ராட்சசன் அலம்புசன்,(13,14) பல்வேறு வகைகளிலான கணைமாரிகளால் கடோத்கசனை மறைத்தான். பீமசேனன் மகனை {கடோத்கசனைப்} பல கணைகளால் துளைத்த அலம்புசன்,(15) நேரம் எதையும் இழக்காமல், தன் கணைகளால் பாண்டவப் படையைப் பீடிக்கத் தொடங்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனால் {அலம்புசனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள்,(16) சூறாவளியால் விரட்டப்படும் மேகங்களைப் போல அந்த நள்ளிரவில் அணிபிளந்து தப்பி ஓடின. அதே போலவே, கடோத்கசனின் கணைகளால் சிதைக்கப்பட்ட உமது படையும்,(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் தங்கள் தீப்பந்தங்களைக் கீழே வீசிவிட்டு ஆயிரக்கணக்கில் தப்பி ஓடினர்.
[2] வேறொரு பதிப்பில் இவனது {இந்த அலம்புசனின்} பெயர் அலம்பலன் என்று சொல்லப்பட்டுள்ளது. துரோண பர்வம் பகுதி 108ல் அலம்புசன் என்ற பெயர் கொண்ட வேறொரு ராட்சசனையும் கடோத்கசன் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 139ல் அலம்புசன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவனைச் சாத்யகி கொன்றான்.
அப்போது பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், யானையைத்தாக்கும் பாகனைப் போல, அந்தப் பயங்கரப் போரில் பீமசேனன் மகனை {கடோத்கசனைக்} கணைகள் பலவற்றால் தாக்கினான். பிறகு கடோத்கசன், தனது எதிரியின் {அலம்புசனின்} தேர், சாரதி, மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டி, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரித்தான். அப்போது கடோத்கசன், மேருவின் மலைகளில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கர்ணன், அலம்புசன் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் மீதும் கணைமாரிகளைப் பொழிந்தான். அந்த ராட்சசனால் பீடிக்கப்பட்ட குரு {கௌரவப்} படையானது மிகவும் கலங்கிப் போனது.(18-21) நால்வகைப்படையணிகளையும் கொண்ட உமது படையானது, ஒன்றையொன்று நெருக்கி நசுக்கத் தொடங்கியது. அப்போது தேரற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் இருந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(22) கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் தன் கைமுட்டிகளால் கடோத்கசனைத் தாக்கினான். இப்படித் தாக்கப்பட்ட கடோத்கசன்,(23) மரங்கள், கொடிகள், புற்களுடன் கூடிய மலையானது, நிலநடுக்கத்தின் போது நடுங்குவதைப் போல நடுங்கினான்.
பிறகு, சினத்தால் வெறிகொண்ட பீமசேனன் மகன் {கடோத்கசன்}, பரிகத்துக்கு {முட்களுடன் கூடிய கதாயுத்துக்கு} ஒப்பானதும், எதிரியைக் கொல்வதுமான தன் கரத்தை உயர்த்தி, அந்தச் ஜடாசுரன் மகனை {அலம்புசனைக்} கடுமையாகக் குத்தினான். சினத்தால் அவனை {அலம்புசனை} நசுக்கிய அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, விரைவாக அவனைக் கீழே தூக்கி எறிந்து,(24,25) இரண்டு கரங்களாலும் அவனைப் {அலம்புசனைப்} பற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். பிறகு, கடோத்கசனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்த அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(26) பெரும் மூர்க்கத்துடன் கடோத்கசனைத் தாக்கினான். அந்த அலம்புசனும், ராட்சசனான கடோத்கசனை அந்தப் போரில் இழுத்து கீழே வீசியெறிந்து, சினத்துடன் அவனைப் பூமியின் பரப்பில் நசுக்கத் தொடங்கினான்.
முழங்கிக் கொண்டிருந்தவர்களும், ராட்சசப் போர்வீரர்களுமான கடோத்கசன் மற்றும் அலசம்புசன் ஆகிய அந்த இருவருக்கிடையில் நடந்த போரானது மிகக் கடும் நிலையை அடைந்து, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தங்கள் மாய சக்திகளின் மூலம் ஒருவரையொருவர் விஞ்ச முயன்றவர்களும், செருக்குமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள்,(27-29) இந்திரனையும் விரோசனன் மகனையும் போலப் பெரும் சக்தியுடன் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். நெருப்பு மற்றும் கடலாகவும், மேலும், கருடன் மற்றும் தக்ஷகனாகவும்,(30) மேலும், மேகம் மற்றும் சூறாவளியாகவும், பிறகு இடி மற்றும் பெரும் மலையாகவும், மீண்டும் யானை மற்றும் புலியாகவும், பிறகு ராகு மற்றும் சூரியனாகவும்(31) மாறி மாறி, ஒருவரையொருவர் அழிக்க வேண்டி, இப்படியே நூறு வகைகளிலான மாயைகளை வெளிப்படுத்தினர். உண்மையில், அலம்புசனும், கடோத்கசனும், பரிகங்கள், கதாயுதங்கள், வேல்கள், உலக்கைகள், கோடரிகள், குறுகதைகள் {முத்கரங்கள்} மற்றும் மலைச்சிகரங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கி அற்புதமாகப் போரிட்டனர்.(32,33) பெரும் மாய சக்திகளைக் கொண்டவர்களான அந்த ராட்சசர்களில் முதன்மையானோர் இருவரும், குதிரையின் முதுகில் ஏறியோ, யானையிலோ, காலிலோ, தேரிலோ சென்று ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(34)
அப்போது அலம்புசனைக் கொல்ல விரும்பிய அந்தக் கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்துடன் உயரப் பறந்து, பிறகு ஒரு பருந்தைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான்.(35) தன்னுடன் இப்படிப் போராடிக் கொண்டிருந்தவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சச இளவரசனான அலம்புசனைப் பிடித்து, போரில் (அசுரன்) மயனைக் கொன்ற விஷ்ணுவைப் போல அவனைப் பூமியில் நசுக்கினான்.(36) அளவற்ற ஆற்றலைக் கொண்ட கடோத்கசன், அற்புதத் தோற்றத்துடன் கூடிய ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, சீற்றமும், வலிமையும் கொண்டவனான தன் எதிரியினுடையதும், பயங்கரமாக அலறிக் கொண்டே இருந்ததுமான அவனுடைய {அலம்புசனின்} பயங்கரத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(37,38) குருதியில் நனைந்த அந்தத் தலையை மயிரோடு பற்றிக் கொண்ட கடோத்கசன், விரைவாகத் துரியோதனனின் தேரை நோக்கிச் சென்றான். (குரு மன்னனை) அணுகிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்} சிரித்துக் கொண்டே, பயங்கர முகமும், மயிரும் கொண்ட அந்தத் தலையைத் துரியோதனனின் தேரில் வீசினான்.(40)
அப்போது, மழைக்கால மேகங்களைப் போல ஆழமான கடும் முழக்கம் செய்த அவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரியோதனனிடம்,(41) “நீர் எவனுடைய ஆற்றலைப் பார்த்துக் கொண்டிருந்தீரோ அந்த உமது கூட்டாளி {அலம்புசன் [அலம்பலன்]} இப்போது கொல்லப்பட்டான். மேலும் கர்ணன் மற்றும் உமது கொலையையும் நீர் காண்பீர்.(42) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றையும் நோற்பவன் எவனும், மன்னன் ஒருவனையோ, பிராமணன் ஒருவனையோ, பெண் ஒருத்தியையோ வெறுங்கையுடன் காண {செல்லக்} கூடாது[3].(43) கர்ணனை நான் கொல்லும் வரையில் மகிழ்ச்சியாக வாழ்வீராக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {கடோத்கசன்} நூற்றுக்கணக்கான கூரிய கணைகளைக் கர்ணனின் தலையில் ஏவியபடியே அந்தக் கர்ணனை நோக்கிச் சென்றான்.(44) அதன் பிறகு, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {கர்ணனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(45)
---------------------------------------------------------------------------------------------[3] “இதன் காரணமாகவே உம்மைக் காண இந்தத் தலையை நான் காணிக்கையாகக் கொண்டு வந்தேன் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
துரோண பர்வம் பகுதி 174-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 45
ஆங்கிலத்தில் | In English |