The fierce battle between Karna and Ghatotkacha! | Drona-Parva-Section-175 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 23)
பதிவின் சுருக்கம் : கடோத்கசனின் மேனி, கவசம், ஆயுதங்கள் மற்றும் தேர் ஆகியவை குறித்த வர்ணிப்பு; கர்ணனுக்கும் கடோத்கசனுக்கும் இடையிலான கடும் மோதல்; கடோத்கசன் வெளிப்படுத்திய மாயாசக்திகள்; கடோத்கசனின் மாயையை அழித்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்த கடோத்கசன்; கடோத்கசனின் மாயையை மீண்டும் அழித்த கர்ணன்; கர்ணனைக் கொல்லப்போவதாகச் சொன்ன கடோத்கசன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “உண்மையில், அந்த நள்ளிரவில், விகர்த்தனன் மகன் கர்ணனும், ராட்சசன் கடோத்கசனும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்தப் போர் எவ்வாறு நடந்தது?(1) அப்போது அந்தக் கடும் ராட்சசன் {கடோத்கசன்} என்ன தன்மையைப் பெற்றிருந்தான்? என்ன வகைத் தேரில் அவன் ஏறி வந்தான்? மேலும் அவனது குதிரைகள் மற்றும் ஆயுதங்களின் இயல்பு யாவை?(2) அவனது குதிரைகள், அவனது தேரின் கொடிமரம் மற்றும் அவனது வில்லின் அளவுகள் யாவை? என்ன வகைக் கவசத்தை அவன் அணிந்திருந்தான்? மேலும் அவன் என்ன வகையில் தலைப்பாகையை அணிந்திருந்தான்? ஓ! சஞ்சயா, உரைப்பதில் திறனுள்ள நீ, நான் கேட்கும் இவை யாவற்றையும் விரிவாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(3)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட கடோத்கசன், மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டிருந்தான். அவனது {கடோத்கசனது} முகம் தாமிரத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது. அவனது வயிறு ஒட்டி சரிந்திருந்தது. அவன் உடலின் மயிர்கள் அனைத்தும் மேல் நோக்கி விறைத்துக் கொண்டிருந்தன. அவனது தலை பச்சையாக இருந்தது [1] அவனது காதுகள் அம்புகளைப் போல இருந்தன. அவனது தாடை எலும்புகள் {மோவாய்} பருத்திருந்தன.(4) அவனது வாயானது, காதிலிருந்து {மற்றொரு} காதுவரை விரிந்திருந்தது. அவனது {கடோத்கசனது} பற்கள் கூர்மையாக இருந்தன, மேலும் அதில் நான்கு {பற்கள்} கூர்மையுடன் உயர்ந்திருந்தன. அவனது நாவும் உதடுகளும் மிக நீளமாகவும், தாமிர வண்ணத்திலும் இருந்தன. அவனது {கடோத்கசனது} புருவங்கள் நீண்டு பரந்திருந்தன. அவனது மூக்கு பருத்திருந்தது.(5) அவனது {கடோத்கசனது} உடல் நீலமாகவும், கழுத்து சிவப்பாகவும் இருந்தது. மலைபோல உயரமாக இருந்த அவன் {கடோத்கசன்} பார்ப்பதற்குப் பயங்கரமானவனாக இருந்தான். பெரும் உடற்கட்டு, பெரும் கரங்கள், பெரும் தலை ஆகியவற்றுடன் கூடிய அவன் பெரும் வலிமையைக் கொண்டிருந்தான்.(6)
[1] வேறொரு பதிப்பில் இங்கே “அவனது மீசை பசுமையாக இருந்தது” என்றிருக்கிறது.
அழகற்றவனும், {தீண்டுவற்குக்} கடும் அங்கங்கள் கொண்டவனுமான அவனது {கடோத்கசனது} தலையில் இருந்த மயிர் பயங்கர வடிவில் மேல்நோக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவனது இடை பெருத்திருந்தது, அவனது நாபி ஒடுங்கியிருந்தது. பெரும் உடற்கட்டைக் கொண்டிருந்தாலும் அவனது {கடோத்கசனது} உடலின் சுற்றளவு பெரிதாக {அவன் பருமனாக} இல்லை.(7) அவனது {கடோத்கசனது} கரங்களின் ஆபரணங்கள் சரியான அளவுகளில் இருந்தன. பெரும் மாயாசக்திகளைக் கொண்டிருந்த அவன் அங்கதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான். மலையின் சாரலில் ஒரு நெருப்புக் கோளத்தைப் போல, தன் மார்பில் அவன் மார்புக் கவசத்தை அணிந்திருந்தான்.(8) அவனது {கடோத்கசனது} தலையில், தங்கத்தாலானதும், பிரகாசமானதும், அழகானதும், அனைத்துப் பகுதிகளிலும் சரியான அளவுகளைக் கொண்டதும், ஒரு வளைவைப் போன்றதுமான ஓர் அழகிய கிரீடம் இருந்தது.(9) அவனது {கடோத்கசனது} காது குண்டலங்கள் காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன, அவனது மாலையானது, தங்கத்தாலானதும், மிகப் பிரகாசமானதாகவும் இருந்தது. அவன் {கடோத்கசன்}, தனது உடலில் பெரும் பிரகாசமுடையதும், பெரிய அளவு உடையதுமான ஒரு வெண்கலக் கவசத்தைக் கொண்டிருந்தான்.(10)
அவனது {கடோத்கசனது} தேரானது, நூறு கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரத்தச் சிவப்புடைய எண்ணற்ற கொடிகள் அவனது கொடிமரத்தில் அசைந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட அளவீடுகளைக் கொண்டதும், ஒரு நல்வம் {நானூறு சதுர முழம்} பரப்பளவு கொண்டதுமான அந்தத் தேர் கரடித் தோல்களால் மூடப்பட்டிருந்தது.(11) வலிமைமிக்க அனைத்து ஆயுதங்களையும் கொண்டிருந்த அது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஓர் உயரமான கொடிமரத்தையும், எட்டு சக்கரங்களையும் கொண்டிருந்தது. அதன் சடசடப்பொலி மேகங்களின் கர்ஜனைக்கு ஒப்பாக இருந்தது.(12) சிவந்த கண்களைக் கொண்ட அவனது {கடோத்கசனது} குதிரைகள், மத யானைகளைப் போல இருந்தன. மேலும் பயங்கரத் தன்மை கொண்டு பல்வேறு வண்ணங்களில் இருந்த அவை பெரும் வேகமும் வலிமையும் கொண்டவையாக இருந்தன.(13) களைப்பு அனைத்துக்கும் மேம்பட்டு, நீண்ட பிடரிமயிர்களால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கனைத்துக் கொண்டே இருந்த அவை அந்த வீரனைப் {கடோத்கசனைப்} போருக்குச் சுமந்து சென்றன.(14) அவனது {கடோத்கசனது} சாரதியாகச் செயல்பட்ட ஒரு ராட்சசன், பயங்கரமான கண்கள், நெருப்பு போன்ற வாய், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அந்தப் போரில் சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு அவற்றை {குதிரைகளைச்} செலுத்தினான்.(15) அருணனைச் சாரதியாகக் கொண்ட சூரியனைப் போல, அந்தச் சாரதியுடன் அவன் {கடோத்கசன்} போருக்கு வந்தான். பெரும் மேகங்களால் சூழப்பட்ட உயர்ந்த மலையைப் போலத் தெரிந்ததும், வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததுமான மிக உயரமான கொடிமரம் ஒன்று அவனது {கடோத்கசனது} தேரில் நிறுவப்பட்டிருந்தது.(16) இரத்தச் சிவப்பிலானதும், ஊனுண்ணுவதுமான பயங்கரக் கழுகொன்று அதில் அமர்ந்திருந்தது.(17)
இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலி கொண்டதும், மிகக் கடினமான நாணைக் கொண்டதும் நீளத்தில் பனிரெண்டு முழங்களும்[2], அகலத்தில் ஒரு முழமும் கொண்டதுமான தன் வில்லைப் பலமாக வளைத்தபடியே அவன் {கடோத்கசன்} வந்தான்.(18) ஒரு தேருடைய அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வீரர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியே அந்த இரவில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) தன் தேரில் செருக்குடன் நின்று கொண்டிருந்த அவன் {கடோத்கசன்}, தனது வில்லை வளைத்த போது, அந்த நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது.(20) அவனால் அச்சத்திற்குள்ளான துருப்புகள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பொங்கும் கடலின் அலைகளைப் போல நடுக்கத்தை அடைந்தன.(21) பயங்கரக் கண்களை உடையவனும், அச்சத்தை ஏற்படுத்துபவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்} தன்னை எதிர்த்து வருவதைக் கண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே அவனைத் தடுத்து எதிர்த்து நின்றான்.(22)
[2] “இங்கே குறிப்பிடப்படும் அரத்னி என்பது கை முட்டில் இருந்து சுண்டு விரல் நீளமுள்ள ஒரு முழ கொண்ட ஓர் அளவாகும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அந்த ராட்சசனை எதிர்த்துச் சென்ற கர்ணன், யானையை எதிர்க்கும் மற்றொரு யானை போலவோ, காளையை எதிர்க்கும் மற்றொரு காளையைப் போலவோ அவனை மிக அருகில் இருந்து பதிலுக்குத் தாக்கினான்.(23) கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கும் சம்பரனுக்கும் இடையில் நடந்த மோதலைப் போலப் பயங்கரத்தை அடைந்தது.(24) அவர்கள் ஒவ்வொருவரும் உரக்க நாணொலியெழுப்பும், உறுதி மிக்க விற்களை எடுத்துக் கொண்டு {தங்களில்} மற்றவனைப் பலமிக்கக் கணைகளால் மறைத்தனர்.(25) முற்று முழுதாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து நேரான கணைகளை ஏவிய அவர்கள், வெண்கலத்தால் ஆன அவர்களது கவசங்களைத் துளைத்து ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(26) தங்கள் பற்களைக் கொண்டோ, தந்தங்களைக் கொண்டோ சிதைத்த இரு புலிகளைப் போலவோ, வலிமைமிக்க யானைகளைப் போலவோ அவர்கள் அக்ஷங்களின் அளவைக் கொண்ட ஈட்டிகளாலும் கணைகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொள்வதைத் தொடர்ந்தனர்.(27)
ஒருவரையொருவர் கணைகளால் குறிபார்த்து, தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் சிதைத்துக் கொண்டும், கணை மேகங்களால் ஒருவரையொருவர் எரித்துக் கொண்டும் இருந்த அவர்கள், பார்க்கப்பட இயலாதவர்களானார்கள்.(28) கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன், குருதியோடையில் குளித்த அவர்கள், தங்கள் சாரல்களில் செஞ்சுண்ண சிற்றாறுகள் ஓடிக் கொண்டிருக்கும் இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(29) இந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மூர்க்கமாகப் போராடினாலும், கூர்முனை கணைகளால் அங்கங்களைத் துளைத்தாலும், ஒருவரையொருவர் நடுங்கச் செய்வதில் தோல்வியே கண்டனர்.(30) உயிரையே பணயம் வைத்து ஆடப்படும் விளையாட்டாகத் தெரிந்ததும், கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலானதுமான அந்த இரவு போரானது, நெடுநேரத்திற்குச் சமமாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. கூரிய கணைகளைக் குறிபார்த்து, அவற்றைத் தன் முற்று முழுதான பலத்துடன் ஏவிய கடோத்கசனுடைய வில்லின் நாணொலியானது நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் அச்சத்திற்குள்ளாக்கியது.(32)
அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனால் கடோத்கசனை விஞ்ச முடியவில்லை. ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {கர்ணன்}, இதைக் கண்டு, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான்.(33) கர்ணனால் தன் மீது குறிபார்க்கப்படும் தெய்வீக ஆயுதத்தைக் கண்டவனும், ராட்சசர்களில் முதன்மையானவனுமான கடோத்கசன், தன் ராட்சச மாயையை இருப்புக்கு அழைத்தான்.(34) வேல்கள், பெரும்பாறைகள், மலைகள், தண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தவர்களும், பயங்கரத் தோற்றங்களைக் கொண்டவர்களுமான ராட்சசர்களின் பெரும்படையால் சூழப்பட்டவனாக அவன் {கடோத்கசன்} தெரிந்தான்.(35) கடுமையான தன் மரணத்தண்டத்தை ஏந்திவருபவனும், உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனான காலனைப் போலத் (தன் கரங்களில்) உயர்த்திப் பிடிக்கப்பட்ட வலிமைமிக்க ஆயுதத்துடன் முன்னேறி வருபவனுமான கடோத்கசனைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தாக்கப்பட்டனர்.(36) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்களால் அச்சமடைந்த யானைகள் சிறுநீரைக் கழித்தன; போராளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர்.(37)
அப்போது, அந்த நள்ளிரவின் விளைவால் பெரும் பலத்தை அடைந்த அந்த ராட்சசர்களால் இடையறாமல் பொழியப்பட்ட பாறைகள் மற்றும் கற்களின் அடர்த்தியான மழையானது அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தது[3].(38) இரும்புச் சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதக்னிகள், கோடரிகள் ஆகியனவும் இடையறாமல் தொடர்ச்சியாக விழுத்தொடங்கின.(39). கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள் அனைவரும், உமது மகன்களும், பிற போராளிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(40) அவர்களில், தன் ஆயுத சக்தியில் செருக்குடையவனும், உன்னதமான பெருமையை உணர்ந்தவனுமான கர்ணன் மட்டுமே நடுங்காதிருந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, கடோத்சகசனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்த மாயையைத் தன் கணைகளால் அழித்தான்.(41) தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சினத்தால் நிறைந்து, அந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, மரணக் கணைகளை ஏவத் தொடங்கினான்.(42) குருதியில் குளித்த அந்தக் கணைகள், அந்தப் பயங்கரப் போரில் கர்ணனின் உடலின் ஊடாகத் துளைத்துச் சென்று, கோபக்காரப் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(43)
[3] “குறிப்பிட்ட நேரங்களில் ராட்சசர்கள் பெரும்பலத்தை அடைவதாக நம்பப்படுகிறது” என இங்கே கங்குலி விளக்குகிறார்.
பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் கரநளினத்தைக் கொண்டவனுமான அந்த வீரச் சூதமகன் {கர்ணன்}, கடோத்கசனை விஞ்சி, பத்து கணைகளால் பின்னவனை {கடோத்கசனைத்} துளைத்தான்.(44) அப்போது கடோத்கசன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட ஒரு தெய்வீகச் சக்கரத்தை எடுத்துக் கொண்டான்.(45) அந்தச் சக்கரத்தின் முனையானது கத்தியைப் போலக் கூர்மையாக இருந்தது. காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டவனும், ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அஃதை அவன் மீது வீசினான்.(46) அந்தச் சக்கரம் பெரும் சக்தி கொண்டதாக இருப்பினும், அது பெரும் வலிமையுடன் வீசப்பட்டு இருப்பினும், பேறில்லா மனிதனின் நம்பிக்கைகளையும், காரியங்களையும் போல நோக்கங்கள் கலங்கடிக்கப்பட்டு, கர்ணனின் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.(47) தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த கடோத்கசன், சூரியனை மறைக்கும் ராகுவைப் போலக் கணைமாரியால் கர்ணனை மறைத்தான்.(48) எனினும், ருத்ரன், அல்லது இந்திரனின் தம்பி {விஷ்ணு}, அல்லது இந்திரனின் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிறகுபடைத்த கணைகளால் கடோத்கசனின் தேரை அச்சமில்லாமல் ஒரு கணத்தில் மறைத்தான்.(49)
அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றிய கடோத்கசன், அதைக் கர்ணனின் மீது வீசினான். எனினும் கர்ணன், தன் கணைகளால் வெட்டி அதைக் கீழே விழச் செய்தான்.(50) பிறகு வானத்திற்குப் பறந்து சென்று, மேகத்திரள்களைப் போல ஆழ முழங்கியவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் இருந்து மரங்களின் மழையைச் சரியாகப் பொழிந்தான்.(51) பிறகு கர்ணன், மேகத்திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போல, மாயைகளை அறிந்தவனும், வானத்தில் இருந்தவனும், பீமசேனனின் மகனுமான கடோத்கசனைத் தன் கணைகளால் துளைத்தான்.(52) பிறகு கடோத்கசனின் குதிரைகள் அனைத்தையும் கொன்று, அவனது தேரையும் நூறு துண்டுகளாக வெட்டிய கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளைப் பொழியத் தொடங்கினான்.(53) கர்ணனின் கணைகளால் துளைக்கப்படாத இடம் எனக் கடோத்கசனின் உடலில் இரண்டு விரல்கட்டை அகலம் கூட {இடம்} இல்லை. விரைவில் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் முட்கள் விறைத்து நிற்கும் முள்ளம்பன்றி ஒன்றைப் போலத் தெரிந்தான்.(54) கடோத்கசனின் குதிரைகளோ, தேரோ, கொடிமரமோ, ஏன் கடோத்கசனோ கூட எங்களுக்குத் தெரியாத அளவுக்கு அவன் முழுமையாகக் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தான்.(55)
அப்போது, மாய சக்திகளைக் கொண்ட கடோத்கசன் தன் ஆயுதத்தால் கர்ணனின் தெய்வீக ஆயுதத்தை அழித்து, தன் மாயா சக்திகளின் துணையுடன், அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடத் தொடங்கினான்.(56) உண்மையில், மாயா சக்தியின் துணையுடனும், பெரும் சுறுசுறுப்பை வெளிப்படுத்திக் கொண்டும் அவன் {கடோத்கசன்} கர்ணனோடு போரிடத் தொடங்கினான். ஆகாயத்தில் கண் காணா இடத்திலிருந்து கணைமாரி பொழிந்தது.(57) பிறகு, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சக்திகளின் துணையோடு, கடும் வடிவை ஏற்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்களை மலைப்படையச் செய்யத் தொடங்கினான்.(58) அந்த வீர ராட்சசன் {கடோத்கசன்}, உக்கிரமான கடும் தலைகள் பலவற்றை ஏற்று {பல தலைகளுடையவனாக மாறி}, சூதன் மகனின் {கர்ணனின்} தெய்வீக ஆயுதங்களை விழுங்கத் தொடங்கினான்.(59) மீண்டும் விரைவில், அந்தப் பெரும் உடல் படைத்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் நூற்றுக்கணக்கான காயங்களுடன், உற்சாகமற்றுக் கிடப்பவனைப் போலவும், களத்தில் இறந்து கிடப்பவனைப் போலவும் தெரிந்தான்.(60)
அப்போது கடோத்கசன் இறந்துவிட்டான் என்று கருதிய கௌரவக் காளையர், (மகிழ்ச்சியால்) உரக்க முழங்கினர். எனினும், விரைவில் அவன் {கடோத்கசன்}, புதிய வடிவங்களை ஏற்று, அனைத்துப் பக்கங்களிலும் திரிவது காணப்பட்டது.(61) பிறகு மீண்டும் அவன் நூறு தலைகளுடனும், நூறு வயிறுகளுடனும் கூடிய மகத்தான வடிவத்தை ஏற்று, மைநாக மலையைப் போலத் தெரிந்தான்[4].(62) மீண்டும் அவன் ஒரு கட்டை விரலின் அளவுக்குச் சிறிய வடிவத்தை எடுத்துப் பொங்கும் கடலின் அலைகளைப் போல முன்னும் பின்னும் நகரவும், உயரப் பறக்கவும் செய்தான்.(64) பிறகு ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கிய அவன், தன் மாயா சக்திகளின் துணையுடன் திசைகளின் அனைத்துப் புள்ளிகளிலும், வானத்திலும், பூமியிலும் திரிந்து, {பிறகு} கவசம் தரித்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நிற்பவனாகத் தெரிந்தான்.(65)
[4] “ஹிமவானின் {இமயத்தின்} மகன் மைநாகன் நூறு தலைகளைக் கொண்டவனாவான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிறகு தன் காது குண்டலங்கள் அங்கும் இங்கும் ஆடக் கர்ணனின் தேரை அணுகிய கடோத்கசன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} அச்சமற்ற வகையில்,(66) “ஓ! சூதனின் மகனே {கர்ணரே} சற்றும் பொறுப்பீராக. என்னைத் தவிர்த்துவிட்டு, உம்மால் உயிருடன் எங்கே செல்ல முடியும்? உமது போரிடும் ஆசையை நான் இன்று இந்தப் போர்க்களத்தில் தணிப்பேன்” என்றான்.(67) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கொடூர ஆற்றலைக் கொண்டவனும், கோபத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வானத்தில் பறந்து சென்று உரக்கச் சிரித்தான்.(68) ஒரு சிங்கமானது, யானைகளின் இளவரசனைத் தாக்குவதைப் போல அவன் {கடோத்கசன்} ஒரு தேருடைய அக்ஷத்தின் அளவிலான தன் கணைகளின் மழையைப் பொழிந்து கர்ணனைத் தாக்கத் தொடங்கினான்.(69) உண்மையில் அவன், மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தேர்வீரர்களில் காளையான அந்தக் கர்ணனின் மீது கணை மாரியைப் பொழிந்தான். கர்ணனோ அந்தக் கணைமாரியைத் தொலைவிலிருந்தே அழித்தான்.(70)
கர்ணனால் தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு மாயையை உண்டாக்கி காணப்பட முடியாதவனாக மறைந்தான்.(71) பிறகு, நெடுமரங்கள் நிறைந்ததும், பல சிகரங்களைக் கொண்டதுமான ஓர் உயரமான மலையாக ஆனான். அந்த மலையில் இருந்து, வேல்கள், சூலங்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் ஓடையானது இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தது.(72) ஆகாயத்தில், கடும் ஆயுதங்களின் ஓடையுடன் கூடிய கரிய மை-குவியலுக்கு ஒப்பான அந்த மலையைக் கண்ட கர்ணன், அதனால் சற்றும் கலக்கமடையவில்லை.(73) சிரித்துக் கொண்டே இருந்த கர்ணன், ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அந்த ஆயுதத்தால் வெட்டப்பட்ட அந்தப் பெரும் மலை அழிக்கப்பட்டது.(74) பிறகு சீற்றமிக்கக் கடோத்கசன், வானவில்லுடன் கூடிய ஒரு நீல மேகமாகி, அந்தச் சூதனின் மகன் {கர்ணனின்} மீது கற்களின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(75)
விருஷன் என்றும் அழைக்கப்பட்டவனும், ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், ஒரு வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, அந்தக் காளமேகத்தை அழித்தான்.(76) பிறகு திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எண்ணற்ற கணைகளால் மறைத்த அவன் {கர்ணன்}, கடோத்கசனால் தன் மீது குறிபார்க்கப்பட்ட ஓர் ஆயுதத்தை அழித்தான்.(77) அப்போது பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்கு எதிராக மிகச் சக்தி வாய்ந்த ஒரு மாயையை மீண்டும் இருப்புக்கு அழைத்தான்.(78) சிங்கங்கள், புலிகள், மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் ஆற்றலுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்களும், யானைகளில் ஏறிய சிலரும், தேர்களில் சிலரும், குதிரைகளின் முதுகில் சிலரும்(79-80) எனப் பல்வேறு ஆயுதங்களையும், கவசங்களையும், பல்வேறு வகைகளிலான ஆபரணங்களையும் தரித்து வந்தவர்களுமான அந்தப் பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள் சூழ, மருத்தர்களால் சூழப்பட்ட வாசவனை {இந்திரனைப்} போலத் தன்னை அச்சமில்லாமல் அணுகுபவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கடோத்கசனை மீண்டும் கண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் அவனுடன் {கடோத்கசனுடன்} மூர்க்கமாகப் போரிடத் தொடங்கினான்.(81) அப்போது கடோத்கசன், ஐந்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, மன்னர்கள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் உரக்க முழங்கினான்.(82)
மீண்டும் ஓர் அஞ்சலிகாயுதத்தை ஏவிய கடோத்கசன், கர்ணனால் ஏவப்பட்ட கணைமாரியுடன் சேர்த்து, பின்னவனின் {கர்ணனின்} கையில் இருந்த வில்லையும் விரைவாக அறுத்தான். பிறகு உறுதிமிக்கதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், இந்திரனின் வில்லைப் போன்று பெரிதாக இருப்பதுமான மற்றொரு வில்லை எடுத்த கர்ணன் அதைப் பெரும் பலத்துடன் வளைத்தான். அப்போது கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரியைக் கொல்பவையுமான சில கணைகளை அந்த வானுலாவும் ராட்சசர்களின் மீது ஏவினான். அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படையானது, சிங்கத்தால் பீடிக்கப்படும் காட்டுயானைகளின் கூட்டத்தைப் போலக் கலக்கமடைவதாகத் தெரிந்தது.(83-86) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சசர்களைத் தன் கணைகளால் அழித்த பலமிக்கக் கர்ணன், அண்ட அழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் தெய்வீக அக்னியைப் போலத் தெரிந்தான்.(87) அந்த ராட்சசப் படையை அழித்த சூதன் மகன் {கர்ணன்}, (அசுரர்களின்) முந்நகரத்தை {திரிப்புரத்தை} எரித்து விட்டு, சொர்க்கத்தில் இருக்கும் தேவன் மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(88)
பாண்டவத் தரப்பைச் சேர்ந்த அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களில், ஓ! ஐயா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},(89) பயங்கர சக்தியும், பலமும் கொண்டவனும், சினத்தால் தூண்டப்பட்டு யமனைப் போலத் தெரிந்தவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்த வலிமைமிக்கக் கடோத்கசனைத் தவிர வேறு எவராலும் கர்ணனைக் {கண்ணால்} காணவும் முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்ட அவனது விழிகள், இரண்டு தீப்பந்தங்களில் இருந்து விழும் சுடர்மிக்க எண்ணெய்யைப் போல, நெருப்பின் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது.(90,91) உள்ளங்கையால் உள்ளங்கையைத் தட்டி, தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்},(92) யானைகளைப் போலத் தெரிபவையும், பிசாசங்களின் முகத்தைக் கொண்டவையுமான எண்ணற்ற {கோவேறு} கழுதைகள் பூட்டப்பட்டதும், தன் மாயையால் உண்டாக்கப்பட்டதுமான அந்தத் தேரில் மீண்டும் காணப்பட்டான்.(93) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கடோத்கசன்} தன் சாரதியிடம், “சூதன் மகனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்வாயாக” என்றான். பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} மீண்டும் தனிப்போரில் ஈடுபடுவதற்காகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தத் தேரில் சென்றான்.(94)
அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, ருத்ரனின் கைவண்ணத்தில் ஆனதும், பயங்கரமானதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான அசனி ஒன்றை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(95) தன் வில்லைத் தன் தேரில் கிடத்திய கர்ணன், பூமியில் கீழே குதித்து அந்த அசனியைப் பிடித்து மீண்டும் அதைக் கடோத்கசனின் மீதே வீசினான்.(96) எனினும் பின்னவன் {கடோத்கசன்}, (அவ்வாயுதம் தன்னை அடையும் முன்பே) தன் தேரில் இருந்து வேகமாகக் குதித்தான். அதே வேளையில் பெரும் பிரகாசமுடைய அந்த அசனியானது, குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்துடன் கூடிய அந்த ராட்சசனின் தேரைச் சாம்பலாக்கி,(97) தேவர்களும் ஆச்சரியத்தால் நிறையும்படி பூமியின் குடல்களுக்குள் {ஆழத்திற்குள்} சென்று மறைந்தது. தன் தேரில் இருந்து குதித்து அந்த அசனியைப் பிடித்த கர்ணனை அனைத்து உயிரினங்களும் பாராட்டின. அந்தச் சாதனையை அடைந்த கர்ணன் மீண்டும் தனது தேரில் ஏறினான்.(98,99) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} தன் கணைகளை ஏவத் தொடங்கினான். உண்மையில், ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்ட சாதனையானது உயிரினங்கள் அனைத்திலும் எவராலும் சாதிக்க முடியாததாக இருந்தது.
மழைத்தாரைகளால் தாக்கப்படும் மலையைப் போலக் கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கடோத்கசன்,(100,101) வானத்தில் உருகும் ஆவி வடிவங்களைப் போலக் காட்சியில் இருந்து மீண்டும் மறைந்தான். இம்முறையில் போரிட்டவனும், பெரும் உடல்படைத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் சுறுசுறுப்பின் மூலமாகவும், மாயா சக்திகளின் மூலமும், கர்ணனின் தெய்வீக ஆயுதங்களை அழித்தான். மாயா சக்திகளின் துணையுடன் அந்த ராட்சசனால் தன் ஆயுதங்கள் அழிக்கப்படுவதைக் கண்ட கர்ணன்,(102,103) அச்சத்தையடையாமல் அந்த மனித ஊனுண்ணியிடம் {கடோத்கசனிடம்} தொடர்ந்து போரிட்டான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்},(104) தன்னையே பல பகுதிகளாப் பிரித்து (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். பிறகு அந்தப் போர்க்களத்தில் சிங்கங்களும், புலிகளும், கழுதைப்புலிகளும், {சிறுத்தைகளும்},(105) தீநாவுகளைக் கொண்ட பாம்புகளும், இரும்பு அலகுகளைக் கொண்ட பறவைகளும் வந்து சேர்ந்தன. கடோத்கசனைப் பொறுத்தவரை, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்டவனும்,(106) மலைகளின் இளவரசனை (இமயத்தைப்) போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருவடிவ ராட்சசன் {கடோத்கசன்} அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(107)
பிறகு பல ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்களும்[5], பயங்கர முகங்களைக் கொண்டவையும் பெரும் எண்ணிக்கையிலானவையுமான நரிகளும், சிறுத்தைகளும் கர்ணனை விழுங்குவதற்காக அவனை நோக்கி விரைந்தன.(108) இவையாவும் சூதனின் மகனை {கர்ணனை} அச்சுறுத்துவதற்காகப் பயங்கரமாக அலறிக் கொண்டே அவனை {கர்ணனை} அணுகின. அந்தப் பயங்கரமானவைகள் ஒவ்வொன்றையும், அவற்றின் குருதியைக் குடிப்பவையும், வேகமாகச் செல்ல உதவும் இறகுகளைக் கொண்டவையுமான பயங்கரமான கணைகள் பலவற்றால் துளைத்தான். இறுதியாக அவன் {கர்ணன்} ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்த ராட்சசனின் மாயையை அழித்தான்.(109,110) பிறகு அவன் {கர்ணன்} நேரானவையும், கடுமையானவையுமான சில கணைகளால் கடோத்கசனின் குதிரைகளைத் தாக்கினான். உடைந்த சிதைந்த அங்கங்களுடன் கூடிய அவை {குதிரைகள்}, அந்தக் கணைகளால் தங்கள் முதுகுகள் வெட்டப்பட்டு,(111) கடோத்கசன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கீழே பூமியில் விழுந்தன. அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்டு, மீண்டும் தன்னைக் காண முடியாதவனாக்கிக் கொண்டு, விகர்த்தனன் மகனான கர்ணனிடம், “நான் இப்போது உம்மை அழிக்கப் போகிறேன்” என்று சொன்னான்”{என்றான் சஞ்சயன்}.(112)
-------------------------------------------------------------------------------------[5] குரங்கு, நரி, நாய் என்று வேறொருபதிப்பில் யாதுதானர்களைக் குறித்து விளக்கப்படுகிறது.
துரோண பர்வம் 175-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 112
ஆங்கிலத்தில் | In English |