“Bhima deflowered Hidimva!” said Alayudha! | Drona-Parva-Section-176 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 24)
பதிவின் சுருக்கம் : அலாயுதனின் வருகை; பகன், கிர்மீரன், ஹிடிம்பன் ஆகியோரின் கொலைக்காகப் பீமனைப் பழிவாங்கப் போவதாகத் துரியோதனனிடம் சொன்ன அலாயுதன்; அலாயுதனின் தோற்றம், ஆயுதங்கள் மற்றும் அலங்காரம் குறித்த விவரிப்பு…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போர் நடந்து கொண்டிருந்தபோது, ராட்சசர்களின் இளவரசனான வீர அலாயுதன் (களத்தில்) அங்கே தோன்றினான்.(1) ஒரு பெரும் படையின் துணையுடன் அவன் {அந்த அலாயுதன்} துரியோதனனை அணுகினான். உண்மையில், பல்வேறு வடிவங்களையும், பெரும் வீரத்தையும் கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கர ராட்சசர்கள் பலரால் சூழப்பட்ட அவன் {அலாயுதன்}, (பாண்டவர்களுடனான) பழைய சச்சரவை நினைவு கூர்ந்து (அந்தக் களத்தில்) தோன்றினான்.(2) {முன்பொரு காலத்தில்} அவனது {அலாயுதனின்} உறவினனும், பிராமணர்களை உண்டுவந்தவனுமான {ராட்சசன்} வீர பகன், பெரும் சக்தி படைத்த கிர்மீரன், அவனது நண்பன் ஹிடிம்பன் ஆகியோர் {பீமனால்} கொல்லப்பட்டனர்[1]. அவன் {அந்த அலாயுதன்}, தன் பழைய சச்சரவை அடைகாத்தபடியே நீண்ட காலம் காத்திருந்தான்.(3,4) இரவு போரொன்று இப்போது நடைபெறுவதை அறிந்த அவன் {அலாயுதன்}, பீமனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மதங்கொண்ட ஒரு யானையைப் போலவோ, கோபக்காரப் பாம்பைப் போலவோ அங்கே வந்தான்.(5)
[1] ஆதிபர்வம் 156ல் ஹிடிம்ப வதத்தையும், ஆதிபர்வம் பகுதி 165ல் பகன் வதத்தையும், வன பர்வம் பகுதி 11ல் கிர்மீரன் வதத்தையும் காணலாம்.
போரை விரும்பிய அவன் {அலாயுதன்}, துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் உறவினர்களான பகன், கிர்மீரன் மற்றும் ஹிடிம்பன் ஆகிய ராட்சசர்கள் பீமனால் கொல்லப்பட்டனர் என்பது நீ அறிந்ததே. முன்பு எங்களையும், பிற ராட்சசர்களையும் அலட்சியம் செய்த அவனால் {பீமனால்}, கன்னிப்பெண்ணான ஹிடிம்பை கற்பழிக்கப்பட்டாள்[2] எனும்போது இன்னும் நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?(6,7) ஓ! மன்னா {துரியோதனா} அந்தப் பீமனைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும், அவனது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சேர்த்து அவனையும் {பீமனையும்}, அந்த ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்}, அவனது நண்பர்களையும் கொல்லவே நான் இங்கே வந்தேன். நான் இன்று குந்தியின் மகன்கள் அனைவரையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அவர்களுக்கு முன்பு நடந்து வருபவர்களையும் கொல்வேன், அவர்களைப் பின்தொடர்ந்து வருவோர் அனைவருடன் சேர்த்து அவர்களை நான் விழுங்கப் போகிறேன். உன் துருப்புகள் அனைத்தையும் போரில் இருந்து விலகிக் கொள்ள ஆணையிடுவாயாக. பாண்டவர்களோடு நாங்கள் போரிடப் போகிறோம்” என்றான் {அலாயுதன்}.(8-10)
[2] வேறொரு பதிப்பில், “அந்தப் பீமன் மற்ற ராட்சசர்களையும், எங்களையும் அலட்சியம் செய்து கன்னிகையாயிருந்த ஹிடிம்பையையும் முன்பு அனுபவித்தான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “கடந்து போன நாட்களில் அவன் எங்கள் மகள் ஹிடிம்பையைக் கற்பழித்தான்” என்றிருக்கிறது. கங்குலியில் “Deflowered” என்ற வார்த்தையும், மன்மதநாததத்தரின் பதிப்பில், “Ravished” என்ற வார்த்தையும் கையாளப்பட்டிருக்கிறது. அலாயுதனின் இந்தக் குற்றச்சாட்டு, ஆதிபர்வம் பகுதி 157க்கு முரணாக உள்ளது.
அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தன் தம்பியர்கள் அனைவரும் சூழ இருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ராட்சசனின் {அந்த அலாயுதனின்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு,(11) “உன்னை முன்னிலையில் நிறுத்திக் கொண்டு, நாங்களும் எதிரியோடு போர்புரிவோம். எனது துருப்புகளின் பகை உணர்ச்சி இன்னும் தணியாததால், அவர்கள் அக்கறையில்லாத பார்வையாளர்களாக நிற்க மாட்டார்கள்” என்றான்.(12) அந்த ராட்சசக் காளை {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, மனித ஊனுண்ணும் தன் படையின் துணையுடன் பீமனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(13)
சுடர்மிக்க வடிவம் கொண்ட அந்த அலாயுதன், சூரியப் பிரகாசம் கொண்ட தேரில் ஏறி வந்தான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரானது, கடோத்கசனின் தேரைப் போன்றே இருந்தது.(14) அலாயுதனுடைய தேரின் சடசடப்பொலியும் கடோத்கசனுடையதைப் போலவே ஆழமானதாக இருந்தது; மேலும் அது பல வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய தேர் கரடித் தோல்களால் மறைக்கப்பட்டிருந்தது; மேலும் அஃது {அந்த தேர்} ஒரு நல்வம் {நானூறு முழம்} அளவைக் கொண்டிருந்தது.(15) அவனது குதிரைகள், கடோத்கசனுடையவையைப் போன்றே, பெரும் வேகம் கொண்டவையாகவும், வடிவில் யானைகளுக்கு, குரலில் கழுதைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இறைச்சியும், குருதியும் உண்டு வாழ்பவையும் பெரும் வடிவைக் கொண்டவையுமான அவைகளைப் போன்ற நூறு உயிரினங்கள் அவனது {அலாயுதனின்} வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன.(16) உண்மையில் அந்தத் தேரின் சடசடப்பொலியானது, கடோத்கசனுடையதைப் போலவே பெருமேகத்தின் ஆழமான முழக்கத்தைக் கொண்டிருந்தது.
அவனது வில்லும், அவனது எதிராளியுடையதை {கடோத்கசனுடையதைப்} போலவே பெரியதாகவும், வலிமையானதாகவும் இருந்தது, மேலும் அதனுடைய நாண்கயிறும் கடினமானதாக இருந்தது.(17) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அவனது கணைகளும், கடோத்கசனுடையவையைப் போன்றே பெரிதானவையாகவும், {தேர்களுடைய} அக்ஷங்களின் அளவுள்ளவையாகவும் இருந்தன. வீர அலாயுதன், கடோத்கசன் அளவுக்கு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனாக இருந்தான்;(18) சூரியன் அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அவனது தேரின் கொடிமரத்தில், கடோத்கசனுடையதைப் போலவே கழுகுகளும், அண்டங்காங்ககைகளும் அமர்ந்திருந்தன[3]. வடிவில் அவன் கடோத்கசனைவிட அழகாக இருந்தான்; (கோபத்தில்) கலங்கியிருந்த அவனது முகமானது சுடர்மிக்கதாகத் தெரிந்தது.(19) சுடர்மிக்க அங்கதங்கள், சுடர்மிக்கக் கிரீடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள், தலைப்பாகை, வாள் ஆகியவற்றோடு, கதாயுதம், புசுண்டிகள், குறுங்கதாயுதங்கள் {உலக்கைகள்}, கலப்பைகள், வில், கணைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, யானையைப் போன்ற கடினமான கருந்தோலுடன்,(20) நெருப்பின் காந்தி கொண்ட தேரில் ஏறி வந்த அவன் {அலாயுதன்}, பாண்டவப் படையைப் பீடித்து முறியடித்துக் கொண்டிருந்த போது, மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு வானத்தில் திரியும் மேகத்தைப் போலத் தெரிந்தான்.(21) (அந்த அலாயுதன் போரிட வந்த போது), பெரும் வலிமை கொண்டவர்களும், (வாள் மற்றும்) கேடயம் தரித்துக் கவசம் பூண்டவர்களுமான பாண்டவப் படையின் முக்கிய மன்னர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் போரில் ஈடுபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(22)
---------------------------------------------------------------------------------------[3] வேறொரு பதிப்பில், “அவனது கொடியும் நரிக்கூட்டங்களால் நான்கு புறத்திலும் காக்கப்பட்டதாகவும் நெருப்புக்கும் சூரியனுக்கு ஒப்பாகவுமிருந்தது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
துரோண பர்வம் 176-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 22
ஆங்கிலத்தில் | In English |