The last breath of Ghatotkacha! | Drona-Parva-Section-179 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 27)
பதிவின் சுருக்கம் : கர்ணனுடன் மீண்டும் மோதிய கடோத்கசன்; கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று காட்சியில் இருந்து மறைந்த கடோத்கசன்; கடோத்கசனின் பயங்கரமான இறுதி மாயை; கடோத்கசனால் துரியோதனின் படைக்கு ஏற்பட்ட பேரழிவு; மீண்டும் கர்ணனின் குதிரைகளைக் கொன்ற கடோத்கசன்; வெல்லப்பட முடியாத சக்தி ஆயுதத்தை ஏவி கடோத்கசனைக் கொல்லுமாறு கர்ணனைத் தூண்டிய கௌரவர்கள் சக்தி ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கொல்லப்பட்டான் கடோத்கசன்; தன் பெருவுடலுடன் கீழே விழுந்த கடோத்கசன் தன் இறுதி மூச்சிலும் ஓர் அக்ஷௌஹிணி கௌரவத் துருப்புகளைக் கொன்றது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அலாயுதனைக் கொன்ற ராட்சசன் கடோத்கசன் மகிழ்ச்சியால் நிறைந்தான். படையின் முன்னணியில் நின்று கொண்டு பல்வேறு வகைகளில் அவன் {கடோத்கசன்} முழக்கமிடத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யானைகளையே நடுங்கச் செய்த அந்த உரத்த முழக்கங்களைக் கேட்ட உமது போர்வீரர்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} அலாயுதனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(3) தன் வில்லை முழுமையாக வளைத்த அவன் {கர்ணன்}, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரையும் உறுதியான, நேரான பத்து கணைகளால் துளைத்தான்.(4) பிறகு, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பெரும் எண்ணிக்கையிலான வேறு பலமான கணைகளால் யுதாமன்யு, உத்தமௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நடுங்கச் செய்தான்.(5)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்தப் போர்வீரர்கள் கர்ணனைத் தாக்கிக் கொண்டிருந்த போது, வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது விற்களும் காணப்பட்டன.(6) அந்த இரவில், அவர்களது நாண்கயிறுகளின் நாணொலியும், அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், (ஒன்றாகக் கலந்து) கோடையின் முடிவிலான மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான பேரொலியாக இருந்தன.(7) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரவுப்போரானது மேகத் திரள்களின் குவியலுக்கு ஒப்பாக இருந்தது. நாண்கயிறுகளின் நாணொலியும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் அதன் {மேகக்குவியலின்} முழக்கமாக இருந்தன. (போர்வீரர்களின்) விற்கள் அதன் மின்னல் கீற்றுகளாகவும்; கணைமாரிகள் அதன் மழைப்பொழிவாகவும் இருந்தன.(8) மலையைப் போல அசையாமல் நின்றவனும், மலைகளின் இளவரசனுடைய பலத்தைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், விகர்த்தனன் {சூரியனின்} மகனுமான அந்தக் கர்ணன், தன் மீது ஏவப்பட்ட அற்புதமான கணைமழையை அழித்தான்.(9) உமது மகன்களின் நன்மையில் அர்ப்பணிப்புக் கொண்ட அந்த உயர் ஆன்ம வைகர்த்தனன் {கர்ணன்}, அந்தப் போரில் இடியின் சக்தி கொண்ட வேல்களாலும், அழகிய தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளாலும் தன் எதிரிகளைத் தாக்கத் தொடங்கினான்.(10) விரைவில் சிலரது கொடிமரங்கள் கர்ணனால் வெட்டப்பட்டன, வேறு சிலரின் உடல்கள் துளைக்கப்பட்டுக் கூரிய கணைகளைக் கொண்டு அவனால் {கர்ணனால்} சிதைக்கப்பட்டன; விரைவில் சிலர் சாரதிகளை இழந்தனர், சிலர் தங்கள் குதிரைகளை இழந்தனர்.(11)
அந்தப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} மிகவும் பீடிக்கப்பட்ட பலர், யுதிஷ்டிரனின் படைக்குள் நுழைந்தனர். அவர்கள் அணிபிளக்கப்பட்டுப் புறமுதுகிடக் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்ட கடோத்கசகன் சினத்தால் வெறிகொண்டவனானான்.(12) தங்கத்தாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவன் {கடோத்கசன்} உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை அணுகி, இடியின் சக்தி கொண்ட கணைகளால் அவனைத் துளைத்தான்.(13) அவர்கள் இருவரும், முள்பதித்த கணைகள் {கர்ணிகள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, தவளைமுகக் கணைகள் {சிலீமுகங்கள்}, நாளீகங்கள், தண்டங்கள், அசனிகள், கன்றின் பல் {வத்ஸதந்தங்கள்}, அல்லது பன்றியின் காது போன்ற தலை கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள், விபாண்டங்கள்}, கொம்புகள் போன்ற கூரிய கணைகள் {சிருங்கங்கள்}, கத்திகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பிற கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் ஆகாயத்தை மறைக்கத் தொடங்கினர்.(14)
அந்தக் கணைமாரியால் மறைந்த ஆகாயமானது, அதனூடாகத் தங்கச் சிறகுகளையும், சுடரும் காந்தியையும் கொண்ட கணைகள் கிடைமட்டமாகச் சென்றதன் விளைவால், அழகிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலக் காட்சியளித்தது.(15) சம ஆற்றல் கொண்ட அவர்கள் ஒவ்வொருவரும், பலமிக்க ஆயுதங்களால் சமமாகவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அந்தப் போரில் அவ்வீரர்கள் இருவரில் ஒருவரிடமும் {ஒருவர் மேல் ஒருவர்} ஆதிக்கமடைவதற்கான அறிகுறியை எவரும் காணவில்லை.(16) உண்மையில், சூரியன் மகனுக்கும் {கர்ணனுக்கும்}, பீமனின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, அடர்த்தியான, கனமான ஆயுத மழையால் வகைப்படுத்தப்பட்டு மிக அழகாகத் தெரிந்தது. மேலும் ஆகாயத்தில் ராகுவுக்கும், சூரியனுக்கும் இடையில நடக்கும் கடும் மோதலைப் போன்ற ஒப்பற்ற காட்சியை அஃது அளித்தது.”(17)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயுதமறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தக் கடோத்கசன், கர்ணனைத் தன்னால் விஞ்சமுடியவில்லை என்பதைக் கண்ட போது, கடுமையானதும், வலிமையானதுமான ஆயுதம் ஒன்றை அவன் {கடோத்கசன்} இருப்புக்கு அழைத்தான்.(18) அந்த ஆயுதத்தால், அந்த ராட்சசன் {கடோத்கசன்} முதலில் கர்ணனின் குதிரைகளையும், பிறகு பின்னவனின் {கர்ணனின்} சாரதியையும் கொன்றான். அந்தச் சாதனையை அடைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} விரைவில் கண்ணுக்குப் புலப்படாதவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(19)
அப்போது திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வஞ்சக வழிகளில் போரிட்டுக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்} இப்படி மறைந்த போது, ஓ! சஞ்சயா, என் படையின் போர்வீரர்கள் என்ன நினைத்தனர்?” என்று கேட்டான்.(20)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த ராட்சசன் மறைவதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், “வஞ்சகமாகப் போரிடும் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அடுத்துத் தோன்றும்போது நிச்சயம் கர்ணனைக் கொன்றுவிடுவான்” என்று உரக்கச் சொன்னார்கள்.(21) ஆயுதப் பயன்பாட்டில் அற்புத நளினத்தைக் கொண்ட கர்ணன், அப்போது கணைமாரிகளால் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தான். அந்த அடர்த்தியான கணைமாரியால் உண்டான இருளானது, ஆகாயத்தை மறைத்ததால் உயிரினங்கள் அனைத்தும் கண்களுக்குப் புலனாகாதவையாக ஆகின.(22) அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, எப்போது தன் விரல்களால் தனது அம்பறாத்தூணிகளைத் தீண்டினான்? எப்போது நாண்கயிற்றில் தன் அம்புகளைப் பொருத்தினான்? எப்போது குறி பார்த்து அவற்றை ஏவினான்? என்பனவற்றை எவரும் காணமுடியாத அளவுக்கு அவன் {கர்ணன்} வெளிப்படுத்திய கர நளினம் மிகப்பெரியதாக இருந்தது. அப்போது மொத்த ஆகாயமும் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.(23)
பிறகு அந்த ராட்சசனால், கடுமையான, பயங்கரமான ஒரு மாயை ஆகாயத்தில் உண்டாக்கப்பட்டது. சுடர்மிக்க நெருப்பின் கடுந்தழலுக்கு ஒப்பாகத் தோன்றிய சிவப்பு மேகங்களின் திரளை நாங்கள் வானத்தில் கண்டோம்.(24) அந்த மேகத்திலிருந்து, ஓ! குரு மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளும், சுடர்மிக்கப் பந்தங்கள் பலவும் வெளிவந்தன. ஆயிரம் பேரிகைகள் ஒரே சமயத்தில் முழக்கப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான ஒலி அதனில் இருந்து வெளிவந்தது.(25) தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகள் பலவும், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள், கனமான தண்டங்கள் {உலக்கைகள்}, அதே போன்ற பிற ஆயுதங்கள், போர்க்கோடரிகள், எண்ணெயில் கழுவப்பட்ட {எண்ணெயில் தீட்டப்பட்ட} கத்திகள், சுடர்மிக்க முனைகளைக் கொண்ட கோடரிகள், சூலங்கள்,(26) ஒளிரும் கதிர்களை வெளியிடும் முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, இரும்பாலான அழகிய கதாயுதங்கள், கூர்முனைகளைக் கொண்ட நீண்ட ஈட்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இழைகளால் சுற்றிலும் பின்னப்பட்ட கனமான கதாயுதங்கள், சதக்னிகள் ஆகியன அதனில் இருந்து சுற்றிலும் பாய்ந்தன.(27) பெரும் பாறைகள் அதனில் இருந்து விழுந்தன. உரத்த வெடிச்சத்தம் கொண்ட ஆயிரக்கணக்கான வஜ்ரங்களும், நெருப்பின் காந்தியைக் கொண்ட நூற்றுக்கணக்கான சக்கரங்களும், கத்திகளும் அதனில் இருந்து பாய்ந்தன.(28)
கணைமாரிகளை ஏவிக்கொண்டிருந்த கர்ணன், அடர்த்தியானதும், சுடர்மிக்கதுமான ஈட்டிகள், வேல்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் மழையை அழிக்கத் தவறினான்.(29) அந்தக் கணைகளால் கொல்லப்பட்டு விழுந்த குதிரைகளாலும், வஜ்ரத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்க யானைகளாலும், பிற ஆயுதங்களால் உயிரை இழந்த பெரும் தேர்வீரர்களாலும் ஏற்பட்ட பெரும் ஆரவாரமானது பேரொலியாக இருந்தது.(30) அந்தக் கணை மாரியைக் கொண்டு கடோத்கசனால் சுற்றிலும் பீடிக்கப்பட்ட துரியோதனின் படையானது, பெரும் வலியோடு களத்தில் திரிவது காணப்பட்டது.(31) மிகவும் உற்சாகமற்று, “ஓ”, “ஐயோ” என்ற கதறல்களுடன் திரிந்து கொண்டிருந்த அந்தப் படை அழிவடையும் தருணத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எனினும் தலைவர்கள் தங்கள் இதயத்தின் உன்னதத்தன்மையால், களத்தில் முகம் திருப்பித் தப்பி ஓடாமல் இருந்தனர்.(32) அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மாயையால் உண்டாக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதும் அஞ்சத்தக்கதுமான அந்த வலிமையான ஆயுதங்களின் மழை களத்தில் பாய்வதைக் கண்டும், பரந்த தங்கள் படை இடையறாமல் கொல்லப்படுதவதைக் கண்டும் உமது மகன்கள் பேரச்சம் கொண்டனர்.(33)
நெருப்பைப் போன்ற சுடர்மிக்க நாக்குகளுடன், பயங்கரமாகக் கூச்சலிடும் நரிகள் ஊளையிடத் தொடங்கின. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூச்சலிடும் ராட்சசர்களைக் கண்ட (கௌரவப்) போர்வீரர்கள் உற்சாகத்தைப் பெரிதும் இழந்தனர்.(34) தீ நாவுகளையும், சுடர்மிக்க வாய்களையும், கூரிய பற்களையும், மலை போன்ற பெரிய வடிவங்களையும் கொண்டு ஆகாயத்தில் ஈட்டிகளைப் பிடித்து நின்ற அந்தப் பயங்கர ராட்சசர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தெரிந்தனர்.(35) அந்தக் கடுங்கணைகளாலும், ஈட்டிகள், வேல்கள், கதாயுதங்கள், சுடர்மிக்கக் காந்தி கொண்ட பரிகங்கள், வஜ்ரங்கள், பினாகங்கள், அசனிகள், சக்கரங்கள், சதக்னிகள் ஆகியவற்றாலும் அந்த (கௌரவத்) துருப்புகள் தாக்கப்பட்டு, நசுக்கப்பட்டு விழத் தொடங்கன.(36) அந்த ராட்சசர்கள், உமது மகனுடைய {துரியோதனனுடைய} போர்வீரர்களின் மீது நீண்ட ஈட்டிகளையும் {சூலங்களையும்}, பாகுகளையும், சதக்னிகளையும், உருக்காலானதும், சணல் இழைகளால் பின்னப்பட்டதுமான ஸ்தூணங்களையும் பொழியத் தொடங்கினர். அப்போது போராளிகள் அனைவரும் மலைப்பை அடைந்தனர்.(37) ஆயுதங்கள் உடைந்து, அல்லது தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்த நிலையை அடைந்த வீரப் போர்வீரர்கள், தங்கள் தலைகளை இழந்தும், அல்லது தங்கள் அங்கங்கள் உடைந்தும், போர்க்களத்தில் விழத்தொடங்கினர். பாறைகள் விழுந்ததன் விளைவால், குதிரைகள், யானைகள் மற்றும் தேர்கள் ஆகியன நசுங்கத் தொடங்கின.(38) கடோத்கசனின் மாயா சக்தியால் உண்டான பயங்கர வடிவிலான யாதுதானர்கள், பயந்தவர்களையோ, தஞ்சம் கேட்டவர்களையோ கூட விடாமல் [1] வலிமைமிக்க அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தனர்.(39)
[1] வேறொரு பதிப்பில், “அவ்விடத்தில் கடோத்கசனாலே உண்டுபண்ணப்பட்ட மாயைகள் கெஞ்சுகிறவனையும், பயந்தவனையும் விடவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப்போலவே இருக்கிறது.
காலனால் நடத்தப்பட்ட குருவீரர்களின் அந்தக் கொடூரமான படுகொலையின்போது, அந்த க்ஷத்திரியர்களின் அழிவின் போது, திடீரென அணிபிளந்து வேகமாகத் தப்பி ஓடிய கௌரவப் போர்வீரர்கள்,(40) “கௌரவர்களே ஓடுங்கள். யாவும் தொலைந்தன. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களே பாண்டவர்களுக்காக நம்மைக் கொல்கின்றனர்” என்று உரக்கக் கூச்சலிட்டனர். அந்நேரத்தில் மூழ்கும் பாரதத் துருப்புகளைக் காக்க எவரும் இருக்கவில்லை.(41) அந்தக் கடும் ஆரவாரம், முறியடிப்பு மற்றும் கௌரவர்களின் அழிவின் போது, எத்தரப்பு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு {படை} முகாம்கள் தங்கள் தனித்தன்மைகளை இழந்தன.(42) உண்மையில்,படைவீரர்கள் ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் பார்க்காத அந்தப் பயங்கர அழிவின் போது, களத்தின் எந்தத் திசையைக் கண்டாலும், அது வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் மட்டுமே அந்த ஆயுத மழையில் மூழ்கிய நிலையில் அங்கே தெரிந்தான்.(43)
அப்போது கர்ணன் அந்த ராட்சசனின் தெய்வீக மாயையுடன் மோதி தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான். பணிவுள்ளவனும், மிகக் கடினமான சாதனைகளைச் செய்பவனும், உன்னதச் செயல்களைப் புரிபவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் தன் உணர்வுகளை இழக்காதிருந்தான்.(44) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்த கர்ணனை, சைந்தவர்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர். ராட்சசனின் {கடோத்கசனின்} வெற்றியைக் கண்டவாறே {கண்டாலும்}, அவர்கள் அனைவரும் அவனை {கர்ணனை} வழிபட்டனர்.(45) பிறகு, கடோத்கசனால் ஏவப்பட்டதும், சக்கரங்களுடன் கூடியதுமான ஒரு சதக்னியானது, கர்ணனின் நான்கு குதிரைகளையும் அடுத்தடுத்துக் கொன்றது. உயிர், பற்கள், கண்கள் மற்றும் நாவுகளை இழந்த அவை, மூட்டுகள் மடங்கிப் பூமியில் விழுந்தன.(46) அப்போது குதிரைகளற்ற தன் தேரில் இருந்து கீழே குதித்த கர்ணன், கௌரவப் படை ஓடுவதையும், அந்த ராட்சச மாயையால் தன் தெய்வீக ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதையும் கண்டு, தன் உணர்வுகளை இழக்காமல், மனத்தை உள்முகமாகத் திருப்பி, அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினான்.(47)
அந்த நேரத்தில் கர்ணனையும் (ராட்சசனால் உண்டாக்கப்பட்ட) அந்தப் பயங்கர மாயையையும் கண்ட கௌரவர்கள் அனைவரும், “ஓ! கர்ணா, உனது ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு இந்த ராட்சசனை விரைந்து கொல்வாயாக. இந்தக் கௌரவர்களும், தார்தராஷ்டிரர்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர்.(48) பீமனும், அர்ஜுனனும், நம்மை என்ன செய்வார்கள்? இந்த நள்ளிரவில் நம் அனைவரையும் எரிக்கும் இந்தப் பொல்லாத ராட்சசனைக் கொல்வாயாக. இந்தப் பயங்கர மோதலில் இன்று தப்புபவர்களே போரில் பார்த்தர்களோடு போரிடுவார்கள்.(49) எனவே, வாசவன் {இந்திரன்} உனக்கு அளித்த அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} இந்தப் பயங்கர ராட்சசனை இப்போது கொல்வாயாக. ஓ! கர்ணா, இந்தப் பெரும்போர்வீரர்கள், இந்தக் கௌரவர்கள், இந்திரனுக்கு ஒப்பான இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் இந்த இரவு போரில் அழியாதிருக்கட்டும்” என்று கூச்சலிட்டனர்.(50) அந்த நள்ளிரவில், கர்ணன், அந்த ராட்சசன் {கடோத்கசன்} உயிரோடிருப்பதையும், குரு படை அச்சத்தில் பீடிக்கப்பட்டிருப்பதையும் கண்டும், பின்னவர்களின் உரத்த ஓலங்களையும் கேட்டும், தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏவுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(51)
கோபக்கார சிங்கம் ஒன்றைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டவனும், அந்த ராட்சசர்களின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான கர்ணன், கடோத்கசனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி, வெற்றியைத் தரும் வெல்லப்பட முடியாத ஈட்டிகளில் {சக்திகளில்} முதன்மையான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்துக் கொண்டான்.(52) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக வருடக்கணக்கில் சூதன் மகனால் {கர்ணனால்} வழிபடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததும், ஈட்டிகளில் முதன்மையானதும், பின்னவனின் {கர்ணனின்} காது குண்டலங்களுக்கு மாற்றாகச் சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும்,(53) இழைகளால் பின்னப்பட்டுச் சுடர்விடும் பயங்கரமான ஏவுகணையும், குருதி தாகம் கொண்டதாகத் தெரிந்ததும், அந்தகனின் நாக்கைப் போன்றதும், அல்லது மிருத்யுவின் சகோதரியைப் போன்றதும், பயங்கரமானதும், பிரகாசமானதுமான அந்த ஈட்டியையே {சக்தி ஆயுதத்தை}, இப்போது வைகர்த்தனன் {கர்ணன்}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மீது ஏவினான்.(54)
அற்புதமானதும், சுடர்மிக்கதும், எதிரிகள் ஒவ்வொருவரின் உடலையும் துளைக்கவல்லதுமான அந்த ஆயுதத்தைச் சூதன் மகனின் {கர்ணனின்} கரங்களில் கண்ட ராட்சசன் {கடோத்கசன்}, விந்திய மலைகளின் காலைப் போன்ற பெரும் உடல் அளவை ஏற்று, அச்சத்துடன் தப்பி ஓடத் தொடங்கினான்.(55) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் கரங்களில் அந்த ஈட்டியைக் கண்டவையும், வானத்தில் இருந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும் உரக்கக் கூச்சலிட்டன. காற்று சீற்றத்துடன் பாயத் தொடங்கியது, உரத்த வெடிச்சத்தத்துடன் கூடிய இடிகள் பூமியின் மீது விழத் தொடங்கின.(56) கடோத்கசனின் சுடர்மிக்க மாயையை அழித்து, சரியாக அவனது மார்பைத் துளைத்துச் சென்ற அந்தப் பிரகாசமான ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, அந்த இரவில் வானத்தில் உயரப் பறந்து வான்வெளியின் நட்சத்திரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது.(57) பல்வேறு அழகிய தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தி, ராட்சச வீரர்கள் பலருடனும், மனிதப் போர்வீரர்களுடனும் போரிட்ட அந்தக் கடோத்கசன், பயங்கரமாகப் பல்வேறு வகையில் அலறி, சக்ரனின் அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} உயிரிழந்து கீழே விழுந்தான்.(58)
அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிரிகளின் அழிவுக்காக மற்றொரு அற்புத சாதனையைச் செய்தான்; அந்நேரத்தில், அந்த ஈட்டியால் இதயம் பிளக்கப்பட்ட அவன் {கடோத்கசன்}, ஒரு வலிமைமிக்க மலையைப் போன்றோ, மேகங்களின் குவியலைப் போன்றோ பிரகாசித்தான்.(59) உண்மையில், பயங்கரச் செயல்களைப் புரியும் அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அச்சந்தரும் அந்தப் பயங்கர வடிவை ஏற்ற பிறகே கீழே விழுந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் மடிகையில் உமது படையின் ஒரு பகுதியின் மேல் விழுந்து, அந்தத் துருப்புகளைத் தன் உடலின் கனத்தால் நசுக்கினான்.(60) வேகமாகக் கீழே விழுந்தவனும், மேலும் விரிவடைந்து கொண்டிருந்த பெரும் உடலுடன் கூடியவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன் இறுதி மூச்சிலும் ஒரு முழு அக்ஷௌஹிணி அளவிலான உமது துருப்புகளைக் கொன்றான்.(61) அப்போது சிங்க முழக்கங்களாலும், சங்கு முழக்கங்களாலும், பேரிகைகள் மற்றும் முரசுகளின் ஒலியாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது. உண்மையில், கௌரவர்கள், அந்த ராட்சசனின் மாயை அழிக்கப்பட்டதையும், ராட்சசன் கொல்லப்பட்டதையும் கண்டு மகிழ்ச்சியால் பேராரவாரம் செய்தனர்.(62) பிறகு கர்ணன், (அசுரன்} விருத்திரனைக் கொன்ற சக்ரன் {இந்திரன்} மருத்தர்களால் வழிபடப்பட்டது போலக் குருக்களால் வழிபடப்பட்டு, உமது மகனின் {துரியோதனனின்} தேரில் ஏறி, அனைவராலும் பார்க்கப்பட்டவாறே குரு படைக்குள் நுழைந்தான்" {என்றான் சஞ்சயன்}.(63)
-------------------------------------------------------------------------------
துரோணபர்வம் 179-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 63
-------------------------------------------------------------------------------
துரோணபர்வம் 179-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 63
ஆங்கிலத்தில் | In English |