The contrivances of Krishna! | Drona-Parva-Section-180 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 28)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் துக்கம்; கிருஷ்ணனின் மகிழ்ச்சி; தகாத தருணத்தில் மகிழ்வதன் காரணத்தைக் கிருஷ்ணனிடம் கேட்ட அர்ஜுணன்; கிருஷ்ணனின் பதில்; கிருஷ்ணன், பாண்டவர்களின் எதிரிகள் அனைவரையும், எவ்வாறு படிப்படியாகக் கொல்லச் செய்தான் என்பதை அவனே அர்ஜுனனுக்குச் சொல்வது; சூழ்ச்சியுடன் கொல்லப்பட்ட ராட்சசர்களின் பட்டியலில் கடோத்கசனையும் இணைக்கும் கிருஷ்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிளக்கப்பட்ட மலையைப் போலக் கொல்லப்பட்டுக் கிடக்கும் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைக்} கண்ட பாண்டவர்கள் அனைவரும் துயரால் நிறைந்து, கண்ணீரைச் சொரியத் தொடங்கினர்.(1) வாசுதேவன் {கிருஷ்ணன்} மட்டுமே மகிழ்ச்சியான போக்கைக் கடைப்பிடித்துப் பாண்டவர்களைத் துயருறச் செய்யும் வகையில், சிங்க முழக்கங்கள் செய்யத் தொடங்கினான்.(2) உண்மையில் அவன் {கிருஷ்ணன்}, உரக்க முழங்கிக் கொண்டே அர்ஜுனனைத் தழுவி கொண்டான். குதிரைகளின் கடிவாளங்களைக் கட்டிவிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்தபடியே(3) அவன் {கிருஷ்ணன்}, புயலால் அசைக்கப்பட்ட மரத்தைப் போல மகிழ்ச்சியான போக்கில் கூத்தாடத் தொடங்கினான். பிறகு மீண்டும் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டும், மீண்டும் மீண்டும் தன் கக்கங்களைத் தட்டிக் கொண்டும் இருந்தவனும்,(4) பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான அச்யுதன் {கிருஷ்ணன்}, தேர்த்தட்டில் நின்று கொண்டு மீண்டும் முழங்கத் தொடங்கினான்.
கேசவன் {கிருஷ்ணன்} வெளிப்படுத்திய அந்த மகிழ்ச்சிக் குறிகளைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்},(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத் துயரத்துடன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உண்மையில், சற்றும் தகாத இந்நேரத்தில், அதுவும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} இறந்ததால் கவலையில் இருக்கும் இத்தருணத்தில், பெரும் மகிழ்ச்சியை நீ காட்டுகிறாயே.(6) கடோத்கசன் கொல்லப்பட்டதைக் கண்ட நமது துருப்புகள் அனைத்தும் ஓடுகின்றன.(7) நாங்களும், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்திருக்கோம். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இத்தகு நேரத்தில் நீ இத்தகு மகிழ்ச்சியை அடைவதால், அதற்கு மிக முக்கியக் காரணமேதும் இருக்க வேண்டும்.(8) எனவே, ஓ! உண்மைநிறைந்த மனிதர்களில் முதன்மையானவனே, என்னால் கேட்கப்படும் நீ, (எது காரணம் என்பதில்} எனக்கு உண்மையைச் சொல்வாயாக. உண்மையில், அது ரகசியம் இல்லை என்றால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அதை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(9) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்று உன் கனத்தை {பெருமையை [அ] குணத்தை} அழிப்பது எது என்பதை எனக்குச் சொல்வாயாக. உனது இச்செயலானது, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த உனது இதய மகழ்ச்சியானது, வறண்ட கடலைப் போலவோ, இடம்பெயர்ந்த மேருவையைப் போலவோ எனக்குத் தெரிகிறது” என்றான் {அர்ஜுனன்}.(10)
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “நான் உணரும் மகிழ்ச்சி பெரியதாக இருக்கிறது. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} கேட்பாயாக. நான் உனக்குச் சொல்லப் போவது உன் துயரத்தை உடனே விலக்கி, உன் இதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.(11) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கடோத்கசனின் மூலம் தன் ஈட்டி {சக்தி ஆயுதம்} கலங்கடிக்கப்பட்ட அந்தக் கர்ணன், போரில் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறிந்து கொள்வாயாக.(12) அந்த ஈட்டியுடன் {சக்தி ஆயுதத்துடன்}, போரில் கார்த்திகேயனைப் {முருகனைப்} போலத் தெரியும் அந்தக் கர்ணனின் எதிரில் நிற்கக் கூடிய மனிதன் எவனும் இவ்வுலகில் இல்லை[1].(13) அவனது {கர்ணனது} (இயற்கையான) கவசம் வாங்கப்பட்டது நற்பேறாலேயே. பொய்க்காத அவனது ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனின் மூலம் இப்போது கலங்கடிக்கப்பட்டதும் நற்பேறாலேயே.(14) (இயற்கையான) தனது கவசத்தைப் பூண்டவனும், (இயற்கையான) தனது காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான கர்ணனால், தேவர்களுடன கூடிய மூன்று உலகங்களையும் தனியாகவே வென்றுவிட முடியும்.(15) வாசவனோ {இந்திரனோ}, குபேரனோ, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ, யமனோ கூட அவனை {கர்ணனை} அணுகத் துணிய முடியாது.(16) உண்மையில், அந்த மனிதர்களில் காளை {கர்ணன்}, தனது கவசத்தையும், காது குண்டலங்களையும் கொண்டிருந்தால், காண்டீவத்தை வளைக்கும் உன்னாலோ, சுதர்சனம் என்றழைக்கப்படும் என் சக்கரத்தை உயர்த்தும் என்னாலோ கூடப் போரில் அவனை {கர்ணனை} வெல்ல முடியாது[2].(17)
[1] வேறொரு பதிப்பில், “தனஞ்சய, இந்தச் சக்தியைக் கடோத்கசனிமித்தம் நழுவச் செய்து விட்டதனால் இப்பொழுதே கர்ணன் கொல்லப்பட்டானென்று நீ அறிந்து கொள். யுத்தத்தில் கிருத்திகாகுமாரனான சுப்ரம்மண்யரைப் போன்ற சக்தியைக் கையில் கொண்ட கர்ணனுக்கு எதிரில் நிற்கின்ற மனிதன் எவன் இந்த உலகத்தில் இருக்கிறான்” என்று இருக்கிறது.
மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ பெருங்காந்தி கொண்டவனே, கடோத்கசனுக்க எதிராகத் தன் சக்தியைப் பயன்படுத்திவிட்டதால், கர்ணன் போரில் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டான் என்று கருதுவாயாக. கார்த்திகேயனைப் போலக் கையில் அந்த ஈட்டியுடன் போரில் கர்ணன் நின்றிருந்தால், எவனாலும் அவனை எதிர் கொண்டிருக்க முடியாது.” என்று இருக்கிறது. மன்மதநாதத்தரின் வரிகள் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.[2] வேறொரு பதிப்பில், “சக்தியுடன் கூடியவனும், புருஷசிரேஷ்டனுமான கர்ணனைக் காண்டீவத்தைக் கையில் கொண்டவனான நீயும், சுதர்சனம் என்கிறத சக்கரத்தைக் கையில் கொண்டவனான நானும் கூட ரணகளத்தில் ஜயிப்பதற்கு சக்தியுள்ளவர்களல்லோம்” என்றிருக்கிறது.
மன்மதநாததத்தரின் பதிப்பில், “அந்த மனிதர்களில் முதன்மையானவன், தன் இயற்கையான கவசத்தையும், காது குண்டலங்களையும் கொண்டிருந்தால், காண்டீவதாரியான நீயோ, சுதர்சனச் சக்கரத்தை உயர்த்தும் நானோ கூடப் போரில் அவனை வீழ்த்த முடியாது” என்றிருக்கிறது. அர்ஜுனன் இதற்கு முன்பு இரு முறை கர்ணனை வீழ்த்தியிருக்கிறான் என்பதும், பீமன் ஒரே நாளில் கர்ணனை பல முறை வீழ்த்தியிருக்கிறான் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.
மாயையின் உதவியோடு கூடிய சக்ரனால் {இந்திரனால்}, உனது நன்மைக்காகவே, கர்ணன் காது குண்டலங்களை இழக்கச் செய்யப்பட்டான். அதுபோலவே பகை நகரங்களை அடக்குபவனான அவன் {கர்ணன்}, தனது (இயற்கை) கவசத்தையும் இழக்கச் செய்யப்பட்டான். உண்மையில், கர்ணன் தன் (இயற்கை) கவசத்தை வெட்டி எடுத்துச் சக்ரனிடம் {இந்திரனிடம்} கொடுத்ததாலேயே அவன் வைகர்த்தனன் என்று அழைக்கப்படலானான்[3].(19) இப்போது, மந்திரத்தால் கடும் நஞ்சு முறிக்கப்பட்ட கோபக்காரப் பாம்பைப் போலவோ, மென் தழல்களைக் கொண்ட நெருப்பைப் போலவோ கர்ணன் எனக்குத் தெரிகிறான்.(20) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உயர் ஆன்ம சக்ரன் {இந்திரன்}, கர்ணனின் காதுகுண்டலங்களுக்கும், தெய்வீக கவசத்திற்கும் மாற்றாக {தற்போது} கடோத்கசனைக் கொன்ற அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எப்போது பின்னவனுக்கு {கர்ணனுக்குக்} கொடுத்தானோ, எப்போது அதை விருஷன் {கர்ணன்} பெற்றானோ, அந்த நேரத்தில் இருந்து போரில் கொல்லப்பட்டவனாகவே நான் {அர்ஜுனனான} உன்னைக் கருதினேன்[4].(21,22) ஆனால், ஓ! பாவமற்றவனே, இப்போதும் அந்த வீரன் {கர்ணன்}, உன்னைத் தவிர வேறு எவனாலும் கொல்லத்தகாதவனாகவே இருக்கிறான் என்பதை நான் உனக்குச் சத்தியமாகச் சொல்கிறேன்.(23}
[3] “சற்றே அழகுமிக்க இந்தச் சொற்பிறப்பை நான் முந்தைய குறிப்பொன்றில் சொல்லியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வைகர்த்தனன் என்றால் அறுத்துக் கொடுத்தவன் என்ற பொருளும் உண்டு; விகர்த்தனான சூரியனின் மகன் என்ற பொருளும் உண்டு.[4] வேறொரு பதிப்பில், “மகாத்மாவான இந்திரன் (கர்ணனுடைய) இரண்டு குண்டலங்களையும், திவ்யமான கவசத்தையும் பெற்றுக் கொண்டு அவற்றுக்குப் பிரதியாக அவன் கர்ணனுக்குக் கொடுத்ததும் (இப்பொழுது) கடோத்கசன் மீது பிரயோகிக்கப்பட்டதுமான சக்தியைத் தர்மவானான கர்ணன் அடைந்த நாள் முதல் யுத்தத்தில் உன்னைக் கொல்லப்பட்டவனாகவே எப்போதும் கருதியிருந்தான்” என்றிருக்கிறது.
என்னிடம் இருக்கும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தக் குறிப்பிட்ட பக்கமும், இதற்கடுத்த சில பக்கங்களும் கிழிந்து காணாமல் போயிருக்கின்றன. அதனால் இவ்வரிகளை அந்தப் பதிப்போடு ஒப்பு நோக்க முடியவில்லை. இங்கே கங்குலி அர்ஜுனனைக் கொல்லப்பட்டவனாகக் கிருஷ்ணன் கருதினான் என்கிறார். வேறொரு பதிப்பிலோ அப்படிக் கர்ணனே கருதினான் என்றிருக்கிறது.
பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, உண்மை நிறைந்த பேச்சு, தவ ஈடுபாடு, நோன்புகள் நோற்பு, எதிரிகளிடமும் அன்புடன் இருப்பது போன்ற இந்தக் காரணங்களுக்காகவே கர்ணன் விருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(24) போரில் வீரத்துடனும், வலிமைமிக்கக் கரங்களுடனும், எப்பொதும் உயர்த்தப்பட்ட வில்லுடனும் கூடிய கர்ணன், காட்டில் யானைக்கூட்டத்தின் தலைமை யானைகளைக் கொல்லும் சிங்கத்தைப் போல, எப்போதும் போர்க்களத்தில் பெரும் தேர்வீரர்களின் செருக்கை அழித்து, யாராலும் பார்க்க முடியாத நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாக இருக்கிறான்.(25,26) உனது படையின் போர்வீரர்களில் முதன்மையானோர் மற்றும் சிறப்புமிக்கோர் அனைவருடனும் போரிடும் கர்ணன், ஓ! மனிதர்களில் புலியே, தன் கணை மாரியை ஏவுகையில் ஆயிரம் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலத் தெரிகிறான்.(27) உண்மையில், கோடையின் முடிவில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரிகளை இடையறாமல் பொழியும் கர்ணன், தெய்வீக ஆயுதங்களைப் பொழியும் மேகத்தைப் போலத் தெரிகிறான்.(28) அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியைப் பொழியும் அவன் {கர்ணன்}, போரில் தேவர்களாலேயே வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். அவன் {கர்ணன்}, தேவர்களுடன் போரிட்டால், அவர்களின் சதையும், இரத்தமும் களத்தில் அபரிமிதமாக விழும் அளவுக்கு அவர்களைச் சிதைத்துவிடுவான்.(29)
எனினும் ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, தன் கவசங்களையும், காதுகுண்டலங்களையும் இழந்து, வாசவனால் {இந்திரனால்} அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியையும் {சக்தி ஆயுதத்தையும்} இழந்து இருக்கும் கர்ணன் இப்போது ஒரு {சாதாரண} மனிதன் போன்றவனே (இனியும் அவன் தேவனைப் போன்றவன் அல்ல).(30) அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும். அவனது {கர்ணனது} தேர்ச்சக்கரங்கள் பூமியில் புதையும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நீ, கவனமாக முயன்று, மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் அவனை {கர்ணனை}, அந்தப் பரிதாபகரமான நிலையில் கொல்ல வேண்டும். முன்பாகவே நான் அதை உனக்குச் சைகையால் உணர்த்துவேன். அதனால் எச்சரிக்கையடைந்து {விழிப்படையும்} நீ செயல்பட வேண்டும்.(31) {அசுரன்}பலனை வென்றவனும், வஜ்ரத்தைத் தரிப்பவனுமான அந்த வீரர்களில் முதன்மையானவனே {இந்திரனே கூட}, கையில் ஆயுதத்துடன் நிற்பவனும் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணனைக் கொல்ல இயலாது. உண்மையில், ஓ! அர்ஜுனா, ஜராசந்தன், சேதிகளின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சிசுபாலன்}, ஏகலவ்யன் என்ற பெயரும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த நிஷாதன் ஆகியோரைப் பல்வேறு சூழ்ச்சிகளின் துணை கொண்டு [5], உனது நன்மைக்காகவே ஒருவர்பின் ஒருவராக நான் கொன்றேன். {அப்படியே}, ஹிடிம்பன், கிர்மீரன், ராட்சசர்களில் முதன்மையான பகன், எதிரி துருப்புகளைக் கலங்கடிக்கும் அலாயுதன், எதிரிகளை நசுக்குபவனும், கடும் செயல்களைச் செய்பவனுமான கடோத்கசன் [6] ஆகிய பிற பெரும் ராட்சசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றான் {கிருஷ்ணன்}.(32,33)
---------------------------------------------------------------------------[5] வேறொரு பதிப்பில், “மகாபலசாலியான ஜராசந்தன், சேதிதேசத்தரசனான சிசுபாலன், மகாபாகுபலமுள்ள வேடனான ஏகலவ்யன் ஆகிய இவர்கள் அனைவரும் உன்னுடைய நன்மையின் பொருட்டே அந்த அந்த உபாயங்களால் என்னாலே ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டார்கள்” என்றிருக்கிறது. கங்குலியில் சூழ்ச்சி எனச் சொல்லப்பட்டிருப்பது, வேறொரு பதிப்பில் உபாயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.[6] கடோத்கசனின் பெயரை ஏன் இங்கே கிருஷ்ணன் இணைக்கிறான்? அடுத்தப் பகுதியில் இதற்கான விடை இருக்கிறது.
துரோணபர்வம் 180-ல் உள்ள சுலோகங்கள்: 32
ஆங்கிலத்தில் | In English |