“I myself would have slain Ghatotkacha!” said Krishna | Drona-Parva-Section-181 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 29)
பதிவின் சுருக்கம் : முன்பே பலராமனால் ஜராசந்தனின் கதாயுதம் அழிக்கப்பட்டதையும், அவனது வளர்ப்புத்தாயான ஜரை கொல்லப்பட்டதையும் சொன்ன கிருஷ்ணன்; கபடமாக ஏகலவ்யன் கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டது, சிசுபாலன் கொல்லப்பட்டது, ஹிடிம்பன் முதலான ராட்சசர்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; கடோத்கசன் செய்த தீமைகளைச் சொல்லி, தானே அவனைக் கொல்ல வேண்டியிருந்த அவசியத்தை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எங்களுக்கு நன்மை செய்யும்பொருட்டு, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பூமியின் தலைவர்களான அந்த ஜராசந்தனும், பிறரும் எந்த வழிமுறைகளில் எவ்வாறு கொல்லப்பட்டனர்?” என்று கேட்டான்.(1)
அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாத மன்னனின் {ஹிரண்யதனுசின்} வலிமைமிக்க மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் கொல்லப்பட்டாமல் இருந்திருந்தால், அவர்கள் {நமக்குப்} பயங்கரமானவர்களாக இருந்திருப்பார்கள்.(2) துரியோதனன், (தன் தரப்பைத் தழுவும்) அந்த முதன்மையான தேர்வீரர்களைத் தேர்ந்தெடுத்திருப்பான், என்பதில் ஐயமில்லை. அவர்கள் நம்முடன் எப்போதும் பகைமையுடனே இருந்தனர், மேலும் அவர்கள் அனைவரும் கௌரவர்களின் தரப்பையே அடைந்திருப்பார்கள்.(3) அவர்கள் அனைவரும், வீரர்களாகவும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளாகவும், போரில் உறுதிமிக்கவர்களாகவும் இருந்தனர். (ஆற்றலில்) தேவர்களைப் போன்ற அவர்கள், திருதராஷ்டிரரின் மகனை {துரியோதனனைப்} பாதுகாத்திருப்பார்கள்.(4). உண்மையில், சூதன் மகன் {கர்ணன்}, ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாதன் மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் சுயோதனனின் {துரியோதனனின்} தரப்பை அடைந்து, மொத்த உலகையும் வெற்றி கொண்டிருப்பார்கள்.(5) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எந்த வழிமுறைகளால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்பாயாக. உண்மையில் வழிமுறைகளுடன் {உபாயங்களுடன்} செயல்படாவிட்டால், தேவர்களே கூடப் போரில் அவர்களை வெல்ல முடியாது.(6) அவர்களில் ஒவ்வொருவரும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, லோகபாலர்களின் பாதுகாப்பில் இருக்கும் தேவர்களின் மொத்த படையுடனும் போரிடக் கூடியவர்கள் ஆவர்.(7)
(ஒரு சந்தர்ப்பத்தில்) பலதேவரால் {பலராமரால்} தாக்கப்பட்ட ஜராசந்தன், கோபத்தால் தூண்டப்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் கொல்லவல்ல கதாயுதம் ஒன்றை எங்களை அழிப்பதற்காக {எங்கள் மீது} வீசினான்.(8) நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, சக்ரனால் {இந்திரனால்} வீசப்பட்ட வஜ்ரத்தின் மூர்க்கத்துடன், பெண்களின் கூந்தலைப் பிரிக்கும் வகிட்டைப் போல ஆகாயத்தைப் பிரித்துக் கொண்டு, எங்களை நோக்கி {மூர்க்கமாக} வந்து கொண்டிருந்தது.(9) எங்களை நோக்கி அப்படி வந்து கொண்டிருந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட ரோஹிணியின் மகன் {பலராமர்}, அதைக் கலங்கடிப்பதற்காக ஸ்தூணகர்ணம் என்று அழைக்கப்படும் ஆயுதத்தை வீசினார்.(10) பலதேவருடைய ஆயுதத்தின் சக்தியால் வலுவிழந்த அந்தக் கதாயுதம், பூமியில் விழுந்து மலைகளையே நடுங்கச் செய்தபடி (அதன் வலிமையால்) அவளை {பூமியைப்} பிளந்தது.(11)
அப்போது ஜரை என்ற பெயரில் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு பயங்கர ராட்சசி இருந்தாள். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவளே {அந்த ஜரையே} அந்த எதிரிகளைக் கொல்பவனை {ஜராசந்தனை} ஒருங்கிணைத்தவளாவாள். எனவே, பின்னவன் ஜராசந்தன் என்று அழைக்கப்பட்டான்.(12) ஜராசந்தன் ஒரு குழந்தையின் இரு பாகங்களால் ஆனவனாவான். அந்த இரு பாகங்களையும் ஜரை ஒருங்கிணைத்தாள் என்பதாலேயே அவன் ஜராசந்தன்[1] என்று அழைக்கப்படலானான்.(13) அப்போது பூமிக்குள் இருந்த அந்த ராட்சசப் பெண் {ஜரை}, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தக் கதாயுதம் மற்றும் ஸ்தூணகர்ணம் என்ற ஆயுதம் ஆகியவற்றின் மூலம், தன் மகன் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டாள்.(14) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அந்தப் பெரும்போரில் தன் கதாயுதத்தை இழந்த[2] ஜராசந்தன், பின்னர் உன் முன்னிலையில் பீமசேனரால் கொல்லப்பட்டான்.(15) அந்த வீர ஜராசந்தன் தன் கதாயுதத்துடன் நின்றால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்திரனின் தலைமையிலான தேவர்களாலேயே கூடப் போரில் அவனைக் {ஜராசந்தனைக்} கொல்ல முடியாது.(16)
[1] “ஜரையால் இணைக்கப்பட்டவன் என்பது பொருள்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. இரு தாய்மார்களால் தனித்தனியான இரு பகுதிகளாகப் பெற்றெடுக்கப்பட்டு, ஜரையினால் ஒன்றுசேர்க்கப்பட்டவன் ஜராசந்தன்.[2] “{இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும்} சகதயா Sagadaya என்ற ஒரு சொல் ’ராட்சசத் தன்மையை இழந்தது” என்றும், “கதாயுதத்தை இழந்தது’ என்றும் பொருளைக் தருகிறது என்று நீலகண்டர் நினைக்கிறார். இது வலிந்து பெறப்படும் பொருளாகவே தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பெரிய யுத்தத்தில் கதையில்லாமலிருந்த அந்த ஜராசந்தன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீமசேனனால் கொல்லப்பட்டான்" என்றிருக்கிறது.
கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட நிஷாதன் மகனும் {ஏகலவ்யனும்}, அவனது ஆசானின் நிலையை ஏற்ற துரோணரால் உனது நன்மைக்காகவே கபடமாகத் தனது கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டான்.(17) செருக்கும், நிலையான ஆற்றலும் கொண்ட அந்த நிஷாதன் மகன் {ஏகலவ்யன்}, கையில் தோலுறைகளைப் பூட்டிக் கொண்டு, இரண்டாவது ராமனை {பரசுராமனைப் போலப்} பிரகாசமாகத் தெரிந்தான்.(18) கட்டைவிரலை இழக்காத ஏகலவ்யன், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, {ஒன்றாகச் சேர்ந்திருக்கும்} தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், உரகர்கள் ஆகியோராலும் போரில் வெல்லப்பட முடியாதவனாவான்.(19) உறுதியான பிடி கொண்டவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், இரவும் பகலும் இடையறாமல் கணையேவக்கூடியவனுமான அவன் {ஏகலவ்யன்}, சாதாரண மனிதர்களால் பார்க்கப்படக்கூட முடியாதவனாக {பார்க்கப்பட முடியாத அளவுகு சக்தியைக் கொண்டு} இருந்தான்.(20) உனது நன்மைக்காவே போர்க்களத்தில் என்னால் அவன் {ஏகலவ்யன்} கொல்லப்பட்டான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, உன் கண் முன்பாகவே என்னால் கொல்லப்பட்டான்.(21) அவனும் {சிசுபாலனும்}, ஒன்றுசேர்ந்த தேவர்களாலும், அசுரர்களாலும் போரில் வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உலகத்தின் நலனை விரும்பி, அவனையும் {சிசுபாலனையும்}, தேவர்களின் பிற எதிரிகளையும் உன் உதவியுடன் கொல்லவே நான் பிறப்பை எடுத்தேன். ஹிடிம்பன், பகன், கிர்மீரன் ஆகியோர் அனைவரும் பீமசேனரால் கொல்லப்பட்டனர்.(23) அந்த ராட்சசர்கள் அனைவரும் ராவணனின் பலத்தைக் கொண்டவர்களாகவும், பிராமணர்கள் மற்றும் வேள்விகளை அழிப்பவர்களாகவும் இருந்தனர். அதே போல, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதனும் ஹிடிம்பையின் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டான்.(24)
ஈட்டியுடன் {சக்திஆயுதத்துடன்} கூடிய கர்ணனின் மூலம் நானே வழிமுறைகளுடன் செயல்பட்டு ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்} கொன்றேன். இந்தப் பெரும்போரில் தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு கர்ணன் அவனைக் {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தால்,(25) பீமசேனர் மகனான கடோத்கசனை நானே கொல்ல வேண்டி இருந்திருக்கும். உனக்கு நன்மை செய்ய விரும்பியே நான் முன்பே அவனை {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தேன்.(26) அந்த ராட்சன் {கடோத்கசன்}, பிராமணர்களுக்கும், வேள்விகளுக்கும் எதிரியாக இருந்தான். அவன் {கடோத்கசன்} வேள்விகளை அழிப்பவனாகவும், பாவகர ஆன்மாக் கொண்டவனாகவும் இருந்த காரணத்தால் தான் இவ்வாறு கொல்லப்பட்டான்.(27) ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, அந்தச் செயல்பாட்டையே {கடோத்கசனின் கொலையையே ஒரு} வழிமுறையாகக் கொண்டு, சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்ட ஈட்டியும் {சக்தி ஆயுதமும்} பயனற்றதாகச் செய்யப்பட்டது.
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீதியை {அறத்தைக்} கொல்பவர்கள் யாவரும் என்னால் கொல்லத்தக்கவர்களாவர்.(28) நீதியை {அறத்தை} நிலைநிறுத்துவதற்காகவே என்னால் அச்சபதம் செய்யப்பட்டது. வேதங்கள், உண்மை {சத்தியம்}, தற்புலனடக்கம், தூய்மை, நீதி {அறம்}, பணிவு, செழுமை, அறிவு {ஞானம்}, பொறுமை ஆகியவற்றை எங்கே எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறதோ,(29) அங்கே எப்போதும் நான் இருப்பேன். கர்ணனைக் கொல்வது குறித்து நீ கவலைகொள்ளத் தேவையில்லை. அவனை {கர்ணனை} நீ கொல்லும் வழிமுறைகளை நான் உனக்குச் சொல்வேன். விருகோதரும் {பீமரும்} சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வதில் வெல்வார்.(31) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அதை அடைய வேண்டிய வழிமுறைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அதே வேளையில் {இதோ பார்}, பகைவரின் படையால் உண்டாக்கப்படும் ஆரவாரமானது அதிகரித்து வருகிறது.(32) உனது துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றன. தங்களது நோக்கங்கள் நிறைவேறிய கௌரவர்கள் உன் படையை அழித்து வருகின்றனர். உண்மையில், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் போரில் நம்மை எரித்து வருகிறார்” என்றான் {கிருஷ்ணன்}” {என்றான் சஞ்சயன்}.(33)
------------------------------------------------------------------------------
துரோணபர்வம் 181-ல் உள்ள சுலோகங்கள் : 33
துரோணபர்வம் 181-ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |