"Thou thinkest Arjuna was worn out?" said Drona! | Drona-Parva-Section-185 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 02)
பதிவின் சுருக்கம் : துரோணரை அணுகிய துரியோதனன், தகாத நேரத்தில் பாண்டவப் படையிடம் அவர் காட்டும் கருணையைக் கோபத்துடன் கண்டிப்பது; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகத் துரோணர் உறுதி கூறுவது; அர்ஜுனனின் வலிமையையும், ஆற்றலின் அளவையும் துரியோதனனுக்கு விளக்கிய துரோணர்; கோபமுற்ற துரியோதனன் அர்ஜுனனைத் தானே கொல்லப்போவதாகச் சொல்வது; துரியோதனனைப் பரிகசித்து, சகுனியைக் கேலி செய்த துரோணர், அஞ்சாமல் அர்ஜுனனுடன் மோதி அவனால் கொல்லப்பட்டுப் புகழை அடையும்படி துரியோதனனிடம் சொன்னது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நேரத்தில், கோபத்தின் ஆதிக்கத்தில் இருந்த துரியோதனன், துரோணரை அணுகி அவரது மகிழ்ச்சியை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், அவரது கோபத்தைத் தூண்டவும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1) துரியோதனன், "இலக்கில் துல்லியமான நம் எதிரிகள் உற்சாகமற்றவர்களாக, கடுமையான உழைப்பால் களைத்தவர்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் கருணையும் காட்டப்பட்டிருக்கக்கூடாது.(2) உமக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியதால், அவர்களை அப்படியே விட்டு நாம் அவர்களுக்குக் கருணை காட்டினோம். எனினும், களைத்துப் போயிருந்த பாண்டவர்கள் (ஓய்வெடுத்த பிறகு) இப்போது வலிமையடைந்திருக்கின்றனர்.(3) நம்மைப் பொறுத்தவரை, அனைத்து வகையிலும் நம் சக்தியையும், பலத்தையும் தற்போது நாம் இழந்து வருகிறோம். பாண்டவர்களோ, உம்மால் பாதுகாக்கப்பட்டு இடையூறின்றிச் செழிப்பை ஈட்டுகிறார்கள்.(4) தெய்வீகமான ஆயுதங்கள் அனைத்தும், பிரம்மனுக்கு உரியவை {ஆயுதங்கள்} அனைத்தும் உம்மிடம் இருக்கின்றன.(5) பாண்டவர்களோ, நாங்களோ, உலகின் வேறு எந்த வில்லாளியோ போரில் ஈடுபடும் உமக்கு ஈடாகமாட்டார்கள் என்று நான் உண்மையாகச் சொல்கிறேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {துரோணரே}, நீர் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவராவீர். உமது தெய்வீக ஆயுதங்களின் மூலம் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் அடங்கிய (மூன்று) உலகங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவர் நீர் என்பதில் ஐயமில்லை.(7) பாண்டவர்கள் அனைவரும் உம்மைக் கண்டு அஞ்சுகின்றனர். எனினும், அவர்களை உமது சீடர்களாக நினைவுகூர்ந்தோ, ஒரு வேளை என் தீப்பேற்றாலோ அவர்களை நீர் மன்னிக்கிறீர் {பொறுத்துக் கொள்கிறீர்}" என்றான் {துரியோதனன்}.(8)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படி உமது மகனால் {துரியோதனனால்} கண்டிக்கப்பட்டுக் கோபப்படுத்தப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(9) "கிழவனே என்றாலும், ஓ! துரியோதனா, நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தி இன்னும் போரில் முயன்று கொண்டே இருக்கிறேன். இம்மனிதர்கள் அனைவரும் ஆயுதங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானோ அவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறேன். வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், இம்மனிதர்களை நான் கொன்றேன் என்றால், {அதைவிட} நான் செய்வதற்கு வேறு எந்த இழிசெயலும் இருக்காது. எனினும், என் மனத்தில் எது இருக்கிறதோ, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, அது நல்லதோ, அல்லதோ உன் ஆணையின் பேரில் அதை நான் சாதிப்பேன்.(10,11) அது வேறுவகையாகாது. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்றபிறகே நான் என் கவசத்தைக் களைவேன். இதை நான் உனக்கு உண்மையாகவே உறுதியளிக்கிறேன்.
குந்தியின் மகனான அர்ஜுனன் போரில் களைப்படைந்துவிட்டான் என்றா நீ நினைக்கிறாய்?(12,13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கௌரவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} உண்மையான ஆற்றலை என்னிடம் கேட்பாயாக. சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கோபம் தூண்டப்பட்டால், கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, ராட்சசர்களாலோ கூட அவனை {அவனது சக்தியைத்} தாங்கிக் கொள்ள முடியாது. காண்டவத்தில் {காண்டவன் என்ற காட்டில்} அவன் தேவர்களின் தெய்வீகத் தலைவனிடமே {இந்திரனிடமே} மோதியிருக்கிறான்.(14,15) அந்தச் சிறப்புமிக்க அர்ஜுனன், ஆயுதங்களைப் பொழிந்து கொண்டிருந்தவனான இந்திரனையே தன் கணைகளால் கலங்கடித்திருக்கிறான். யக்ஷர்களும், நாகர்களும், தைத்தியர்களும், தங்கள் வலிமையில் செருக்குமிக்கோர் பிறர் அனைவரும் அந்த மனிதர்களில் முதன்மையானவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர்.(16) அதுவும் நீ அறிந்ததே.
பசுக்களைக் கணக்கெடுக்கும் நிகழ்வின் {கோஷ யாத்திரையின்} போது, சித்திரசேனனின் தலைமையிலான கந்தர்வர்களும், பிறரும் அவனால் வெல்லப்பட்டனர்.(17) கந்தர்வர்களால் நீ கடத்தப்பட்ட போதும், அந்த உறுதிமிக்க வில்லாளியே {அர்ஜுனனே} உன்னை மீட்டான். தேவர்களின் எதிரிகளும், போரில் தேவர்களாலேயே கொல்லப்பட முடியாதவர்களுமான நிவாதகவசர்களும், அந்த வீரனால் வெல்லப்பட்டனர். ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரக்கணக்கான தானவர்களும், அந்த மனிதப் புலியால் வெல்லப்பட்டனர். அப்படியிருக்கையில் மனிதர்களால் எவ்வாறு அவனை {அர்ஜுனனை} எதிர்த்து நிற்க முடியும்? ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் படைகள் எவ்வளவுதான் வீரமாக முயன்றாலும் அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அழிவடைந்ததை உன் கண்களாலேயே நீயும் கண்டிருக்கிறாய்" என்றார் {துரோணர்}.(18-20)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படி அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்த துரோணரிடம் கோபம் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை மீண்டும் சொன்னான்:(21) "நானும், துச்சாசனன், கர்ணன், என் தாய்மாமன் சகுனி ஆகியோரும் சேர்ந்து இந்தப் பாரதப் படையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு (அதில் ஒன்றை எங்களுடன் வைத்துக் கொண்டு), இன்றைய போரில் அர்ஜுனனைக் கொல்வோம்" என்றான் {துரியோதனன்}.(22)
அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} சிரித்துக் கொண்டே அந்த மன்னனின் {துரியோதனனின்} பேச்சை அங்கீகரித்து, "உனக்கு என் ஆசிகள்.(23) க்ஷத்திரியர்களில் காளையும், கொல்லப்பட முடியாதவனும், சக்தியால் சுடர்விட்டெரியும் வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்லவல்ல க்ஷத்திரியன் எவன் இருக்கிறான்?(24) கருவூலங்களின் தலைவனோ {குபேரனோ}, இந்திரனோ, யமனோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ கூட ஆயுதம்தரித்த அர்ஜுனனைக் கொல்ல முடியாது.(25) ஓ! பாரதா {துரியோதனா}, மூடர்கள் மட்டுமே நீ சொன்னது போன்ற வார்த்தைகளைச் சொல்வார்கள். போரில் அர்ஜுனனுடன் மோதிய பிறகு வீட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்பக்கூடியவன் எவன் இருக்கிறான்?(26)
உன்னைப் பொருத்தவரை, நீயொரு பாவி, கொடூரன் மற்றும் அனைவரையும் சந்தேகப்படுபவன். உன் நன்மையில் ஈடுபடுவோரையும் இது போல நிந்திக்க எப்போதும் நீ தயாராகவே இருக்கிறாய்.(27) உன் பொருட்டுக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} எதிர்கொள்ள, நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக. நீயோ நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியன். போரிடவும் முயல்கிறாய்.(28) குற்றமிழைக்காத இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் நீ ஏன் கொல்லச் செய்கிறாய்? இந்தப் பகைமைக்கு நீயே ஆணிவேராவாய். எனவே, நீயே அர்ஜுனனை எதிர்த்துச் செல்வாயாக.(29)
இந்த உனது தாய்மாமனோ {சகுனியோ}, ஞானம் கொண்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமாவான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, சூதுக்கு அடிமையான இவன் {சகுனி} போரில் அர்ஜுனனை எதிர்த்துச் செல்லட்டும்.(30) பகடையில் வல்லவனும், வஞ்சகம் கொண்டவனும், சூதுக்கு அடிமையானவனும், தந்திரம் மற்றும் வஞ்சங்களை நன்கு பழகியவனும், வஞ்சிக்கும் வழிகளை நன்கறிந்தவனுமான இந்தச் சூதாடிதான் {சகுனிதான்} போரில் பாண்டவர்களை வெல்லப் போகிறான்.(31)
கர்ணனை உன் துணையாகக் கொண்ட நீ, மூடத்தனத்தாலும், வெற்று அறிவினாலும் மகிழ்ச்சியாக அடிக்கடி தற்புகழ்ச்சி செய்து கொண்டே, திருதராஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கும்போது, "ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வோம்" என்று சொன்னாய். இந்த உனது தற்புகழ்ச்சி ஒவ்வொரு சபைக்கூட்டத்திலும் கேட்கப்பட்டது. உன் சபதத்துக்கு உண்மையாக இருந்து அதை இப்போது சாதிப்பாயாக.(34)
அதோ உன் மரண எதிரியான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உன் எதிரிலேயே நிற்கிறான். ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பாயாக. ஜயனின் {அர்ஜுனனின்} கைகளால் நீ கொல்லப்பட்டால், அனைத்துப் புகழுக்கும் நீ தகுந்தவனாவாய்.(35) நீ ஈகை பயின்றவனாவாய். (நீ விரும்பிய அனைத்தையும் எப்போதும்) உண்ணவும் செய்திருக்கிறாய். நீ விரும்பிய அளவிற்குச் செல்வத்தையும் அடைந்திருக்கிறாய். உனக்குக் கடன்கள் ஏதுமில்லை. ஒருவன் {ஒரு மனிதன்} செய்ய வேண்டிய அனைத்தையும் நீ செய்திருக்கிறாய். அஞ்சாதே. பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} இப்போதே போரிடுவாயாக"[1] என்றார் {துரோணர்}.(36) அந்தப் போரில் துரோணர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார். (பாரதப்) படையானது இரண்டாகப் பகுக்கப்பட்டது, போரும் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.(37)
[1] இங்கே காணப்படும் 35 மற்றும் 36 ஆகிய ஸ்லோகங்களின் பொருள் வேறொரு பதிப்பில் பின்வருமாறு காணக்கிடைக்கிறது, "இதோ உனக்குச் சத்துருவான பாண்டவன் பயமற்று எதிரில் நிற்கிறான். க்ஷத்திரிய தர்மத்தை ஆலோசி. உனக்கு ஜயத்தைக் காட்டிலும் வதமே சிறந்தது. (பொருள்களைக்) கொடுத்தாய்; நீயும் அனுபவித்தாய்; அத்யயனத்தையும் செய்தாய். நீ விரும்பிய அதிகாரம் உன்னால் அடையப்பட்டது. நீ கிருதகிருத்யனாகவும் கடனில்லாதவனாகவும் இருக்கிறாய். பயப்படாதே. பண்டவனைக் குறித்து யுத்தம் செய்" என்று இருக்கிறது. இவ்விரண்டு பதிப்புகளுக்கும் இடையில் ஜயம் என்பதற்குப் பொருள் கொண்ட விதம் மாறுபட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 185-ல் உள்ள சுலோகங்கள்: 37
துரோணபர்வம் பகுதி 185-ல் உள்ள சுலோகங்கள்: 37
ஆங்கிலத்தில் | In English |