Arjuna permitted the armies to sleep! | Drona-Parva-Section-184 | Mahabharata In Tamil
(துரோணவதப் பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : துரோணரைத் தடுக்க, திருஷ்டத்யும்னனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; துரோணரை எதிர்த்து பாண்டவத் தலைவர்கள் அனைவரும் விரைவது; துரியோதனனும், பிறரும் துரோணரைக் காக்க வருவது; இரு படைகளுக்கும் இடையிலான கடும் போர்; போர்வீரர்களைத் தூங்க அனுமதித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் இந்தக் கருணைக்கு அவனை வாழ்த்திய கௌரவத் துருப்புகள்; போராளிகள் அனைவரும் போர்க்களத்திலேயே உறங்குவது; சந்திரன் உதித்து இருளை விலக்கியது; உறக்கத்தில் இருந்து எழுந்த இரு படைகளும் போருக்குத் தயாராவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியாசரால் இப்படிச் சொல்லப்பட்டவனும், நீதிமானுமான வீர மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தானே சென்று கொல்லும் முயற்சியில் இருந்து விலகினான்.(1) எனினும், அவ்விரவில் சூதன் மகனால் {கர்ணனால்} கடோத்கசன் கொல்லப்பட்டதன் விளைவால், துயராலும், கோபத்தாலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} நிறைந்தான்.(2)
உமது பரந்த படையானது பீமனால் தடுக்கப்பட்டதைக் கண்ட யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், "குடத்தில் பிறந்தவரை {துரோணரைத்} தடுப்பாயாக.(3) ஓ! எதிரிகளை எரிப்பவனே, கவசம்பூண்டவனாக, வில், கணைகள் மற்றும் வாள் தரித்தவனாகத் துரோணரின் அழிவுக்காகவே நீ நெருப்பில் இருந்து உதித்தாய்.(4) உற்சாகத்துடன் போரிட விரைவாயாக, உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. ஜனமேஜயன்[1], சிகண்டி, துர்முகனின் மகன், யசோதரன்[2] ஆகியோர்(5) குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து அனைத்துப்பக்கங்களிலும் விரையட்டும். நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(6) மகன்கள் மற்றும் சகோதரர்களுடன் கூடிய துருபதரும், விராடரும், சாத்யகி, கைகேயர்கள், பாண்டவர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்},(7) ஆகியோர் அனைவரும் பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்லும் விருப்பத்தோடு அவரை எதிர்த்து வேகமாக விரையட்டும். நமது தேர்வீரர்கள் அனைவரும், நாம் கொண்டுள்ள யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், நமது காலாட்படைவீரர்கள் அனைவரும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் வீழ்த்தட்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
[1] இவன், இந்நிகழ்வுகளை வைசம்பாயனரிடம் கேட்டுக் கொண்டிருக்கும் பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் அல்லன்.[2] வேறொரு பதிப்பில் "துர்முகனின் மகனான யசோதரன்" என்றிருக்கிறது. கங்குலியில் இப்பெயர்கள் வெவ்வேறான இருவருடைய பெயர்களாகச் சுட்டப்படுகின்றன. எனினும் துர்முகனின் மகனான யசோதரன் என்பதே சரியாக இருக்க வேண்டும்.
இப்படிப் பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அவர்கள் அனைவரும்,(9) குடத்தில் பிறந்தவரை {துரோணரைக்} கொல்ல விரும்பி, அவரை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர். எனினும் ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன்னை நோக்கித் திடீரெனப் பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் விரைந்து வந்த அந்தப் பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் போரில் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது துரோணரின் உயிரைக் காக்க விரும்பியவனும், கோபத்தால் நிறைந்தவனுமான மன்னன் துரியோதனன், பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கிய குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது. இரு படைகளின் விலங்குகளும், போர்வீரர்களும் மிகவும் களைத்திருந்தனர். போர் முயற்சியால் களைத்துப் போய் உறக்கத்தால் கண்கள் மூடும் நிலையில் இருந்த பெரும் தேர்வீரர்களும் கூட, அப்போது என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். ஒன்பது மணி நேரம்[3] கொண்ட அந்த இரவானது மிகப் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும், உயிரினங்களுக்கு அழிவைத் தருவதாகவும், நீடித்துக் கொண்டே[4] இருந்தது.(10-14)
[3] "திரையாமா Triyaamaa என்பது மூன்று ஜாமங்களைக் கொண்டது. ஒரு ஜாமம் Yaamaa என்பது மூன்று மணி நேரங்களைக் கொண்டது. இரவின் முதல் ஒன்றைரை மணிநேரமும், இரவின் கடைசி ஒன்றரை மணிநேரமும் சந்திப் பொழுதுகளாகப் கருதப்படுகின்றன. புராதன இந்துக்களின் இரவு ஒன்பது சாமங்களைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "ஆயிரம் ஜாமங்கள் அளவுக்கு நீடித்துக் கொண்டே இருப்பவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் [3] மற்றும் [4] அடங்கிய இவ்வரி, "மூன்று சாமநேரமுள்ள அவ்விரவு கோரமாகவும், பயங்கரமாகவும் ஆயிரம் சாமங்களுள்ள இரவுக்குச் சமமாகவும், பிராணன்களை அபகரிக்கின்றனதாகவும் இருந்தது.
இப்படி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொன்று வருகையில்,(15) அவர்களது கண்களில் உறக்கம் கனமாக குடிகொண்ட போது நடு இரவு ஆகிவிட்டது. க்ஷத்திரியர்கள் அனைவரும் உற்சாகமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் {இரக்கமற்றவர்களாகவும்} ஆகிவிட்டனர்.(16) உமது துருப்புகளிடமும், எதிரியுடையவைகளிடமும் மேலும் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பணிவும், சக்தியும் கொண்டு, தங்கள் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்று வந்த (இரு படைகளின் பெரும்பாலான) போர்வீரர்களும், இப்படியே தங்கள் நேரத்தைக் கடத்தினாலும் தங்கள் படைப்பிரிவுகளைக் கைவிடவில்லை. உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கத்தில் இருந்த} பிறர், தங்கள் ஆயுதங்களைக் எறிந்துவிட்டு படுத்துக் கொண்டனர்.(17,18) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} சிலர் யானைகளின் முதுகிலும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளின் முதுகிலும் படுத்தனர். உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கமடைந்த} அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்றிலும் அசைவற்றவர்கள் ஆனார்கள்.(19) அந்தப் போரில் (விழித்திருந்த) பிற போர்வீரர்கள், அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிறர், தங்கள் புலனுணர்வுகளை இழந்து, குறை தூக்க நிலையில் கனவு கண்டு, அனைவரையும் தங்கள் எதிரிகளாக நினைத்துக் கொண்டு தங்கள் எதிரிகளைப் போலவே தங்கள் சொந்த தோழர்களையே கொல்லத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு கூச்சல்களை எழுப்பிக் கொண்டே போரிட்டனர்.(20,21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது படையின் வீரர்கள் பலர், எதிரியோடு தொடர்ந்து போரிட விரும்பி, உறக்கத்தால் மயங்கிய கண்களுடனேயே நின்றிருந்தனர்.(22) கருக்கிருட்டான அந்தப் பயங்கர வேளையில், சில துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உறக்கத்தால் குருடாகியிருந்தாலும், அந்தப்போரில் களத்தில் திரிந்து ஒருவரையொருவர் கொன்று வந்தனர்.(23) எதிரிக்கு மத்தியில் பலர், உறக்க மயக்கத்தால் முழுதாக மலைப்படைந்து (தங்களை நித்தியத்திற்குள் அழைத்துச் சென்ற ஆயுத வெட்டுக்களை உணராமல்) சுயநினைவில்லாத நிலையிலேயே கொல்லப்பட்டனர்.(24)
படைவீரர்களின் இந்நிலையைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உரத்த குரலில் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(25) “உங்கள் விலங்குகளுடன் சேர்த்து நீங்கள் அனைவரும், களைத்துப் போய் உறக்கத்தால் குருடாகியிருக்கிறீர்கள் {தூக்க மயக்கத்தை அடைந்திருக்கிறீர்கள்}. வீரர்களே, நீங்கள் இருட்டாலும், புழுதியாலும் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்.(26) எனவே, உங்களுக்கு விருப்பமுண்டானால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இங்கே இந்தப் போர்க்களத்திலேயே சற்று நேரம் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.(27) குருக்களே {கௌரவர்களே}, பாண்டவர்களே, உறங்கி ஓய்வெடுத்த பிறகு, சந்திரன் உதயமாகையில் சொர்க்கத்தை அடையும் பொருட்டு நீங்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளலாம்” என்றான் {அர்ஜுனன்}.(28)
அறம் சார்ந்த அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அறம் சார்ந்த அந்தப் போர்வீரர்கள், அந்தப் பரிந்துரையை ஏற்று, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு,(29) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! துரியோதன மன்னா, போரை நிறுத்துவீர். பாண்டவப் படை நம்மைத் தாக்குவதை நிறுத்திவிட்டது” என்று உரக்கச் சொன்னார்கள்.(30) பிறகு பல்குனனால் {அர்ஜுனனால்} உரக்கச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையும், உமது படையும், போரில் இருந்து விலகின.(31) உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த உன்னத வார்த்தைகள், தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், மகிழ்ச்சி அடைந்த படைவீரர்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டன.(32) அந்த அன்பான வார்த்தைகளைப் பாராட்டிய அனைத்துத் துருப்புகளும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, களைத்துப் போய் {அங்கேயே} படுத்து உறங்கினார்கள்.(33)
அப்போது உமது அந்தப் படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிடைக்கப்போகும் ஓய்வு மற்றும் உறக்கத்தால் மகிழ்ந்து, {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் வேதங்களும், அனைத்து ஆயுதங்களும் உள்ளன. உன்னிடம் நுண்ணறிவும், ஆற்றலும் உள்ளன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, உன்னிடம் நீதியும் {அறமும்}, அனைத்து உயிர்களிடம் கருணையும் உள்ளன. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஆறுதலளிக்கப்பட்டதால், நாங்கள் உனக்கு நன்மையை விரும்புகிறோம். செழுமை உனதாகட்டும். ஓ! வீரா, உன் இதயத்துக்கு விருப்பமான பொருள்கள் {நீ விரும்பும் நோக்கங்கள்} அனைத்தும் உனக்கு விரைவில் கிடைக்கட்டும்” என்று சொல்லி அர்ஜுனனை உண்மையாக வாழ்த்தினர்.(34-36) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அவனை {அர்ஜுனனை} வாழ்த்திய அந்தப் பெரும் தேர்வீரர்கள், உறக்கத்தால் மயக்கமடைந்து அமைதியடைந்தனர்.(37) சிலர் குதிரைகளின் முதுகுகளிலும், சிலர் தேர்க்கூடுகளிலும், சிலர் யானைகளின் கழுத்துகளிலும், சிலர் வெறுந்தரையிலும் படுத்துக் கொண்டனர்.(38) தங்கள் ஆயுதங்கள், கதாயுதங்கள், வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள், ஆகியவற்றுடனும், தங்கள் கவசங்களுடனும் கூடிய பல மனிதர்கள் உறங்குவதற்காக அங்கே தனித்தனியாகப் படுத்துக் கிடந்தனர்.(39)
ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த யானைகள், புழுதி படிந்தவையும், பாம்பு போன்றவையுமான தங்கள் துதிக்கை நாசித்துளைகளின் மூச்சுக்காற்றால் பூமியைக் குளிரச் செய்தன.(40) உண்மையில், தரையில் மூச்சுவிட்டுக்கிடந்த அந்த யானைகள், சீறுகின்ற பெரும் பாம்புகளோடு கீழே சிதறிக் கிடக்கும் மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(41) தங்கப் பூட்டாங்கயிறுகளைக் கொண்டவையும், நுகத்தடிகளோடு தங்கள் பிடரி மயிர் கலந்தவையுமான குதிரைகள், சமமான தரையைத் தங்கள் குளம்படிகளால் சமமற்றவையாகச் செய்தன.(42) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொருவனும் தான் ஏறி வந்த விலங்குடனே அங்கே உறங்கினான். இப்படியே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிகவும் களைத்துப் போயிருந்த குதிரைகள், யானைகள் ஆகியனவும், போர்வீரர்களும் போரைத் தவிர்த்து உறங்கத் தொடங்கினர். (43) அப்படி உறங்கிக் கிடந்த படையானது, புலனுணர்வை இழந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சி, ஓவியம் தீட்டும் திரைச்சீலையில் திறன்மிக்க ஓவியர்களால் வரையப்பட்ட அற்புதமான ஓவியத்தைப் போலத் தெரிந்தது.(44) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், இளமையுடன் கூடியவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடையவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், அழகிய மங்கையரின் பருத்த முலைகளில் கிடப்பதைப் போல, யானைகளின் மத்தகங்களில் படுத்து உறக்கத்தில் மூழ்கினர்.(45)
கண்களுக்கு இனியவனும், அழகிய மங்கையின் கன்னங்களைப் போன்ற வெண்ணல்லிமலர்களின் {ஆம்பல் மலர்களின்} தலைவனுமான சந்திரன், இந்திரனால் ஆளப்படும் திசையை {கிழக்கை} அலங்கரித்தபடியே உதித்தான்[4].(46) உண்மையில், உதய மலைகளின் சிங்கம் ஒன்றைப் போல, பிரகாசமான மஞ்சள் பிடரிமயிர்களுடன் கூடிய தன் கதிர்களை, கிழக்கில் உள்ள தன் குகையில் இருந்து வெளியிட்ட அவன் {சந்திரன்}, யானைகளின் பெருங்கூட்டத்திற்கு ஒப்பான அந்த இரவின் அடர்த்தியான இருளைத் துண்டுகளாகக் கிழித்தெறிந்தான்[5].(47) மகாதேவனுடைய {சிவனுடைய} சிறப்புமிக்கக் காளையின் உடலைப் போன்ற பிரகாசமானவையும், காமனின் வில்லைப் போன்ற ஒளி பொருந்தியவையும், நாணமிக்க மணப்பெண்ணின் உதட்டுப் புன்னகையைப் போல அழகானவையுமான (உலகில் உள்ள) அல்லிக்கூட்டங்கள் அனைத்திற்கும் தலைவன் {சந்திரன்} ஆகாயத்தில் அப்போது மலர்ந்தான்.(48)
[4] “சூரியோதயத்தின் போது தாமரை மலர்வதன் காரணத்தால் சூரியன் தாமரைகளின் தலைவன் என்று அழைக்கப்படுவதைப் போல, சந்திரோதயத்தின் போது அல்லிமலர் {ஆம்பல்} மலர்வதால், சந்திரன் அல்லிகளின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான். இந்திரனால் ஆளப்படும் திசையானது கிழக்காகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] “தச தாக்ஷ ககுபம் Dasatakasha-kkupa, என்றால் ஆயிரம் கண்களைக் கொண்டோனால் ஆளப்படும் திசை என்பது பொருளாகும்; எனவே இது கிழக்குத் திசையைக் குறிக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தெய்வீகத் தலைவன் {சந்திரன்}, தன் பிரகாசமான கதிர்களைச் சுற்றிலும் பொழிந்தபடி சிவப்பாகத் தன்னை வெளிக்காட்டினான்.(49) உண்மையில், அதன் பிறகு சந்திரன், தங்கத்தின் காந்திக்கு ஒப்பானதும் நெடுந்தொலைவை அடைவதுமான பிரகாசமான ஒளிவட்டத்தைப் படிப்படியாக வெளியிட்டான்.(50) அப்போது அந்த ஒளிக்கோளின் கதிர்கள் தங்கள் காந்தியால் இருளை விலக்கி, மெதுவாக ஆகாயத்திலும், பூமியிலும், திசைப்பகுதிகள் அனைத்திலும் தங்களை மெதுவாகப் பரப்பிக் கொண்டன.(51) எனவே விரைவில் உலகம் ஒளியூட்டப்பட்டது. அனைத்தையும் மறைத்துவைத்திருந்த சொல்லப்பட முடியாத இருள் வேகமாக விலகியது.(52)
இப்படிக் கிட்டத்தட்ட பகல்வெளிச்சத்தைப் போலச் சந்திரனால் உலகம் ஒளியூட்டப்பட்டபோது [6], இரவில் உலவும் விலங்குகளில் சில தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தன; சில ஒதுங்கிச் சென்றன.(53) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரனின் கதிர்களால் விழிப்படைந்த அந்தப் படையினர், சூரியனின் கதிர்களால் விரிந்த தாமரைக்கூட்டங்களைப் போல (உயிர்ப்புடன்) மலர்ந்தனர்.(54) உண்மையில், சந்திரன் உதிக்கும்போது, ஆர்ப்பரிக்கும் அலைகளால் பொங்கும் கடலைப் போல அந்த ஒளிக்கோளின் {சந்திரனின்} உதயத்தால் அந்தக் கடல் போன்ற துருப்புகள் விழிப்பையடைந்தன.(55) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மக்கள் தொகையை அழிப்பதற்காகச் சொர்க்கத்தை அடைய விரும்பிய மனிதர்களுக்கு இடையில் பூமியில் மீண்டும் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(56)
--------------------------------------------------------------------------------------------[6] போர் அமாவாசையில் தொடங்கியது… 14 நாளாயிற்று…. இவ்விரவு பௌர்ணமியாக இருந்திருக்க வேண்டும்.
துரோணபர்வம் பகுதி 184-ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |