Drona killed Drupada and Virata! | Drona-Parva-Section-186 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 03)
பதிவின் சுருக்கம் : முழு ஆற்றலையும் பயன்படுத்தும்படி அர்ஜுனனைத் தூண்டிய பீமன்; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; துரோணர் போர்க்களத்தின் வடக்குத் திசைக்குச் செல்வது; துருபதனின் மூன்று பேரர்களைக் கொன்ற துரோணர்; துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்; துரோணரை அன்றே கொல்லச் சபதம் ஏற்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் கடுமையாகத் தாக்கிய பாஞ்சாலர்கள்; திருஷ்டத்யும்னனிடம் கோபத்துடன் பேசிய பீமசேனன்; துரோணரின் படைப்பிரிவைத் தாக்கிய பீமனும், திருஷ்டத்யும்னனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவின் நான்கில் மூன்று {முக்கால்} பாகம் கழிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது. இரு தரப்பினரும் மகிழ்ச்சி கிளர்ந்தெழுந்தவர்களாக இருந்தனர்.(1) விரைவில், சந்திரனின் காந்தியைக் குறைத்து, ஆகாயத்தைத் தாமிர வண்ணம் ஏற்கச் செய்தபடியே சூரியனின் தேரோட்டியான அருணன் தோன்றினான்.(2) வட்டமான தங்கத் தட்டுக்கு ஒப்பான சூரியனின் செங்கதிர்களால் கிழக்கு சிவப்பானது. பிறகு குரு மற்றும் பாண்டவப் படைகளின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் சுமக்கப்பட்டும் வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து கீழே இறங்கி, சூரியனை நோக்கிக் குவிந்த கரங்களுடன் நின்று (நாளின் முதல்) சந்திப்பொழுதுக்கான தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர்[1].(4) இரண்டாகப் பகுக்கப்பட்ட குருபடையானது, துரோணருடனும், அவருக்கு முன்பு நின்ற துரியோதனனுடனும், சோமகர்கள், பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்றது.(5)
[1] வேறொரு பதிப்பில், “கௌரவப் பாண்டவ ஸேனா வீரர்களனைவரும் தேர்களையும், குதிரைகளையும், மனுஷ்யவாகனங்களையும் விட்டு விட்டுச் சூரியனுக்கு எதிராக நின்று கொண்டு கைகளைக் குவித்து, ஸந்தியோபாஸ்தி செய்து ஜபம் செய்தார்கள்” என்றிருக்கிறது.
குரு படையானது இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “உன் எதிரிகளை உனக்கு இடப்பக்கமாகக் கொண்டு, (துரோணரால் தலைமை தாங்கப்பட்ட) இந்தப் படைப்பிரிவை உனக்கு வலப்பக்கத்தில் கொள்வாயாக” {என்றான்}.(6) குருக்களைக் குறித்த மாதவனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அந்த இரு வலிமைமிக்க வில்லாளிகளின் இடது பக்கமாக நகர்ந்து சென்றான்[2].(7) கிருஷ்ணனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பீமசேனன், போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8) பீமசேனன், “ஓ! அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, ஓ! பீபத்சு, இந்த என் வார்த்தைகளைக் கேட்பாயாக. எந்த நோக்கத்திற்காக க்ஷத்திரியப் பெண்கள் மகன்களை ஈன்றெடுக்கிறார்களோ, அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது.(9) இத்தகு நேரத்தில் நீ செழிப்பை வெல்ல முயலவில்லையெனில், மெய்யான பாதகனைப் போலவே அற்பமாகச் செயல்பட்டவனாவாய்.(10) உன் ஆற்றலை வெளிப்படுத்தி, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, செழிப்புக்கும், அறத்திற்கும், புகழுக்கும் நீ பட்டிருக்கும் கடனைச் செலுத்துவாயாக. ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, இந்தப் படைப்பிரிவை உனது வலப்பக்கத்தில் கொண்டு பிளப்பாயாக” என்றான்.(11)
[2] வேறொரு பதிப்பில் மேற்கண்ட 6 மற்றும் 7ம் சுலோகங்களின் பொருள், “கௌரவச் சேனை இரண்டாக வகுக்கப்பட்டதைக் கண்டு மாதவர் அர்ஜுனனைப் பார்த்து, “ஸவ்யஸாசியே, பகைவர்களான இந்தக் கௌரவர்களை இடப்பக்கத்தில் விட்டுச் செல்” என்று சொன்னார். தனஞ்சயன் மாதவரை நோக்கி, “அப்படியே செய்யும்” என்று அனுமதி கொடுத்து, மகாவில்லாளிகளான துரோணர், கர்ணன் இவ்விருவரையும் இடமாகச் சுற்றி வந்தான்” என்றிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப் பீமனாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, துரோணரையும், கர்ணனையும் விஞ்சி சுற்றிலும் இருந்த எதிரிகளைத் தடுக்கத் தொடங்கினான்.(12) (குருக்கள் மத்தியில் உள்ள) க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தினாலும், காட்டுத்தீயைப் போலத் தன் எதிரிகளில் முதன்மையானோரை எரித்தபடியே முன்னேறி வந்து கொண்டிருந்த அர்ஜுனனைத் தாக்குப்பிடிப்பதில் தவறினார்கள். அப்போது, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர்,(13,14) குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கணைமாரியால் மறைத்தனர். அவ்வீரர்கள் அனைவரின் ஆயுதங்களைக் கலங்கடித்தவனும், ஆயுதங்களில் நன்கு திறன் பெற்றவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பதிலுக்குத்) தன் கணைகளால் அவர்களை மறைத்தான். தன் ஆயுதங்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைக் குறி பார்த்தவனும், (அவை யாவையும் இப்படிக் கலங்கடித்தவனும்), பெரும் கரநளினம் கொண்டவனும், தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான அர்ஜுனன்,(15,16) பத்துக் கூர்முனைக் கணைகளால் அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.
அப்போது ஆகாயமானது புழுதியால் மறைக்கப்பட்டது. அடர்த்தியான கணைமாரி பொழிந்தது. இருள் சூழ்ந்தது, உரத்த பயங்கர ஆரவாரமும் எழுந்தது. இப்படிப்பட்ட நிலை இருக்கையில், ஆகாயத்தையோ, பூமியையோ, திசைகளின் புள்ளிகளையோ அதற்கு மேலும் பார்க்க முடியவில்லை.(17,18) புழுதியால் மலைப்படைந்த துருப்புகள் அனைத்தும் குருடாகின. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியாலோ, நம்மாலோ, ஒருவரையொருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(19) இக்காரணத்தால் அந்த மன்னர்கள் ஊகத்தையும், அவர்கள் உச்சரித்த பெயர்களையும் வழிகாட்டியாகக் கொண்டு போரிடத் தொடங்கினர். தங்கள் தேர்களை இழந்த தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதி, ஒழுங்குகள் அனைத்தையும் இழந்து, குழம்பிய திரளாக மாறினர். தங்கள் குதிரைகளும், சாரதிகளும் கொல்லப்பட்ட அவர்களில் பலர், செயலின்மையை அடைந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு மிகவும் அச்சத்திலிருப்பவர்களாகத் தெரிந்தனர். உயிரையிழந்த சாரதிகளோடு கூடிய கொல்லப்பட்ட குதிரைகள், மலைச்சாரல்களில் படர்ந்து கிடப்பன போலக் கொல்லப்பட்ட யானைகளின் மீது கிடப்பது காணப்பட்டது.
அப்போது துரோணர், அந்தப் போரில் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கேயே தன் நிலையை ஏற்று, புகையற்ற நெருப்புக்கு ஒப்பாகக் காணப்பட்டார். அந்தப் போரில் அவர் வடக்கு நோக்கி நகர்ந்ததைக் கண்ட பாண்டவத் துருப்புகள்,(20-24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கின. உண்மையில், பிரகாசமானவரும், அழகானவரும், சக்தியால் சுடர்விடுபவருமான துரோணரைக் கண்டு அஞ்சிய எதிரிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒளியிழந்து களத்தில் நடுங்கத் தொடங்கினர். எதிரிப் படையைப் போருக்கு அழைக்கையில், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த அவரைக் கண்ட எதிரிகள்(25,26) வாசவனை {இந்திரனை} வெல்வதில் நம்பிக்கையற்ற தானவர்களைப் போல அவரை வெல்வதில் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களில் சிலர் முற்றாக உற்சாகமிழந்தனர், சக்தி கொண்ட சிலர் கோபத்தால் தூண்டப்பட்டனர்.(27) சிலர் ஆச்சரியத்தால் நிறைந்தனர், சிலரோ (அந்த அறைகூவலை) பொறுத்துக் கொள்ள முடியாதவர்களானார்கள். சில மன்னர்கள் தங்கள் கைகளைப் பிசைந்தனர்,(28) சினத்தால் புலனுணர்வை இழந்த சிலரோ தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களைச் சுழற்றினர், சிலரோ தங்கள் கரங்களை {தோள்களைத்} தேய்த்துக் கொண்டனர்.(29) பெரும் சக்தியும், முழுதும் கட்டுப்பட்ட ஆன்மாவும் கொண்ட சிலர் துரோணரை எதிர்த்து விரைந்தனர். குறிப்பாகத் துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வலியால் துன்புற்றாலும், போரில் மோதுவதைத் தொடர்ந்தனர்.
அப்போது அந்தப் போரில், களத்தில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவரும், வெல்லப்பட முடியாத போர்வீரரருமான துரோணரை எதிர்த்து, துருபதனும், விராடனும் முன்னேறினர். பிறகு ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் மூன்று பேரர்களும்,(31,32) வலிமைமிக்க வில்லாளிகளான சேதிகளும், அம்மோதலில் துரோணரை எதிர்த்து முன்னேறினர். துரோணர், மூன்று கூரிய கணைகளைக் கொண்டு துருபதனின் மூன்று பேரர்களுடைய உயிரை எடுத்தார். அந்த இளவரசர்களும் உயிரை இழந்து பூமியில் விழுந்தனர். அடுத்ததாக அந்தப் போரில் சேதிகள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களையும் துரோணர் வென்றார்.(33,34) பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மத்ஸ்யர்கள் அனைவரையும் வென்றார். அப்போது கோபத்தால் நிறைந்த துருபதனும், விராடனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மீது கணைமாரியை ஏவினர். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்தக் கணைமாரியைக் கலங்கடித்து,(35,36) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தார்.
துரோணரால் மறைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், சினத்தால் வெறிகொண்டு, அந்தப் போர்க்களத்தில் தங்கள் கணைகளால் அவரைத் துளைக்கத் தொடங்கினர். பிறகு துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து, பழிதீர்க்க விரும்பி,(37,38) அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள்} இரண்டைக் கொண்டு, தன் எதிராளிகள் இருவரின் விற்களையும் வெட்டினார். அப்போது கோபத்தால் நிறைந்த விராடன், அம்மோதலில் துரோணரைக் கொல்ல விரும்பி, பத்து வேல்களையும் {தோமரங்களையும்}, பத்து கணைகளையும் ஏவினான். கோபத்தில் இருந்த துருபதனும், இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான ஒரு பயங்கர ஈட்டியை துரோணரின் தேர்மீது வீசினான். பெரும் எண்ணிக்கையிலானவையும், கூரியவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகள் {பல்லங்கள்} பலவற்றால் (விராடனின்) அந்தப் பத்து வேல்களை வெட்டிய துரோணர்,(39-41) தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த (துருபதனின்) அந்த ஈட்டியைக் குறிப்பிட்ட சில கணைகளைக் கொண்டு வெட்டினார். பிறகு எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு,(42) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் யமனுலகு அனுப்பினார்.
விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் வீழ்ந்து, கைகேயர்கள்,(43) சேதிகள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டு, துருபதனின் பேரர்களான அந்த மூன்று வீரர்களும் வீழ்ந்ததும்,(44) துரோணரின் அந்தச் சாதனைகளைக் கண்ட உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், சினத்தாலும், துயரால் நிறைந்து, தேர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில் இப்படிச் சொல்லி உறுதியேற்றான்.(45) அவன் {திருஷ்டத்யும்னன்}, “துரோணர் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்பித்தாலோ, என்னை வீழ்த்துவதில் அவர் வென்றாலோ, என் அறச் செயல்கள் அனைத்தின் தகுதிகளையும், என் க்ஷத்திரிய மற்றும் பிரம்ம சக்திகளையும் நான் இழப்பேனாக” என்றான்[3].(46) வில்லாளிகள் அனைவருக்கு மத்தியிலும் இந்தச் சபதத்தைச் செய்தவனும், பகைவர்களைக் கொல்லும் வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் சொந்தப் படையால் ஆதரிக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்து முன்னேறினான்.(47). பிறகு ஒரு பக்கத்தில் இருந்து பாஞ்சாலர்களும், மறு பக்கத்தில் இருந்து அர்ஜுனனும் துரோணரைத் தாக்கத் தொடங்கினர். (அங்கிருந்த) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரும்,(48) துரியோதனனுடன் பிறந்த அவனது தம்பிகளும் தங்கள் தேர்வுக்கேற்ப போரில் துரோணரைப் பாதுகாக்கத் தொடங்கினர். இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் போரில் இப்படித் துரோணர் பாதுகாக்கப்பட்டபோது,(49) மிகத் தீவிரமாகப் போராடினாலும் பாஞ்சாலர்களால் அவரைப் {துரோணரைப்} பார்க்கக்கூட முடியவில்லை.
[3] “நான் இதை மிகச் சாதாரணமாக உரைத்திருக்கிறேன். இந்தச் சபதத்தின் வடிவம் இதுதான், ’எவனிடம் இருந்து துரோணர் இன்று உயிருடன் தப்புவாரா, எவனை இன்று துரோணர் வெல்வாரோ, அவன் இவ்விவற்றையெல்லாம் இழந்து போகட்டும்’ என்பதாம்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “எவனிடத்தில் இருந்து இப்பொழுது துரோணர் விடப்படுவரோ, அல்லது எவனைத் துரோணர் அவமதிப்பரோ அவன் இஷ்டா பூர்த்தங்களுடைய பலனில் இருந்தும், க்ஷத்திரியதேஜஸினின்றும், பிராம்மண்யத்தினின்றும் நசிந்து போகக்கடவன் என்று சபதம் செய்தான்” என்றிருக்கிறது. இங்கே இஷ்டம் என்பது யாகம் ஹோமம் முதலானவை என்றும், பூர்த்தம் என்பது நிலம் தோட்டம் முதலானவை என்றும் விளக்கப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “எவனிடம் இருந்து துரோணர் தப்புவாரோ, எவனைப் போரில் வீழ்த்துவாரோ அந்த மனிதன் இஷ்டம், பூர்த்தம், க்ஷத்ரம், பிராம்மண்யம் ஆகியவற்றில் உள்ள தன் தகுதிகளை {புண்ணியங்களை} இழந்து போகட்டும்” என்றிருக்கிறது.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனிடம் மிகவும் கோபமடைந்த அந்தப் பாண்டுவின் மகன் பீமசேனன், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனை இந்தக் கடும் வார்த்தைகளால் துளைத்தான்.(50) பீமசேனன், “க்ஷத்திரியன் என்று கருதப்படுபவனும், துருபதன் குலத்தில் பிறந்தவனும், ஆயுதங்களின் அறிவைக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான எந்த மனிதன்தான் தன் எதிரே நிலைகொண்டிருக்கும் தன் எதிரியை இப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பான்?(51) தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்டவனும், மன்னர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சபதத்தை ஏற்றவனுமான எந்த மனிதன்தான் இப்படித் தன் எதிரியை அலட்சியம் செய்வான்?(52) தன் சக்தியால் பெருகும் நெருப்பைப் போல அதோ துரோணர் நின்று கொண்டிருக்கிறார். உண்மையில், வில்லையும் கணைகளையும் எரிபொருளாக {விறகாகக்} கொண்ட அவர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கிறார்.(53) விரைவில் அவர் பாண்டவப் படையை அழித்துவிடுவார். (பார்வையாளனாக மட்டும்) நீ நின்று கொண்டே, என் அருஞ்செயலைப் பார்ப்பாயாக. துரோணரை எதிர்த்து நானே செல்வேன்” என்றான் {பீமன்}.(54)
இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, துரோணரின் படைப்பிரிவுக்குள் ஊடுருவி, தன் வில்லை முழுதாக வளைத்து, கணைகளை ஏவி, அந்தப் படையைப் பீடித்து, முறியடிக்கத் தொடங்கினான்.(55) பிறகு பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும், அந்தப் பெரும்படைக்குள் ஊடுருவி துரோணருடன் போரில் ஈடுபட்டான். அந்தப் போர் மூர்க்கமடைந்தது.(56) அந்த நாளின் சூரிய உதயத்தின் போது நடந்த இந்த மோதலானது, இதுவரை நாம் பார்க்காத அளவுக்கு, கேள்விப்படாத அளவுக்குக் கடுமையானதாக இருந்தது.(57) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தன. உடல்கொண்ட உயிரினங்கள் உயிரை இழந்து களமெங்கும் சிதறிக் கிடந்தன.(58) களத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்ற சிலர், வழியிலேயே பிறரால் தாக்கப்பட்டனர். சிலர் தப்பி ஓடும்போது, அவர்களது முதுகுகளும் சிலரின் விலாப்புறங்களும் தாக்கப்பட்டன.(59) இயல்பான அம்மோதல் இப்படிக் கடுமையாகவே தொடர்ந்தது. எனினும், விரைவில் காலைச் சூரியன் உதித்தான் [4]” {என்றான் சஞ்சயன்}.(60)
--------------------------------------------------------------------------------[4] வேறொரு பதிப்பில், “க்ஷணத்திற்குள் சூரியன் சந்தியாகாலத்தை அடைந்தான்” என்றிருக்கிறது.
துரோணபர்வம் பகுதி 186-ல் உள்ள சுலோகங்கள்: 60
ஆங்கிலத்தில் | In English |