Duryodhana caused Nakula to turn back! | Drona-Parva-Section-187 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : துரோணரும், அர்ஜுனனும் தங்கள் தங்கள் படைகளின் பாதுகாவலர்களாகத் திகழ்வது; துரியோதனன் நகுலனுடனும், கர்ணன் பீமனுடனும், துரோணர் அர்ஜுனனுடனும், துச்சாசனன் சகாதேவனுடனும் மோதுவது; நகுலனை வீழ்த்திய துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் கவசம்பூண்ட போர்வீரர்கள், காலையில் உதித்த ஆயிரங்கதிரோனான ஆதித்யனை {சூரியனை} வணங்கினார்கள்.(1) புடம்போட்ட தங்கம்போலப் பிரகாசமான காந்தியுடன் கூடிய அந்த ஆயிரங்கதிர் ஒளிக்கோள் உதித்த போது, உலகம் ஒளியூட்டப்பட்டு, மீண்டும் போர் தொடங்கியது.(2) சூரிய உதயத்திற்கு முன்னர், ஒருவரோடொருவர் மோதிய அதே படைவீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருவரோடொருவர் போரிட்டனர்.(3) குதிரைவீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் குதிரைவீரர்களோடும், காலாட்படைவீரர்கள் யானைகளோடும், குதிரை வீரர்கள் குதிரைவீரர்களோடும், காலாட்படையினர், காலாட்படையினரோடும் போரிட்டனர்.(4) மேலும் ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும் போரிட்டனர். சில நேரங்களில் சேர்ந்தும், சில நேரங்களில் தனித்தனியாகவும் அந்தப் போரில் போர்வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தனர்.(5)
இரவில் மூர்க்கமாகப் போரிட்ட பலர், உழைப்பால் களைத்து, பசியாலும், தாகத்தாலும் பலவீனமடைந்து தங்கள் புலன்களை இழந்தவர்களானார்கள்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சங்குகள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்களாலும், யானைகளின் பிளிறலாலும், பலமாக வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளாலும் உண்டான ஆரவாரமானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கங்களையே எட்டின. விரைந்து செல்லும் காலாட்படை, ஆயுதங்களின் பாய்ச்சல், குதிரைகளின் கனைப்பொலிகள், உருளும் தேர்கள், கூச்சலிட்டு முழங்கும் போர்வீரர்கள் ஆகியோரால் உண்டாக்கப்பட்ட ஒலியானது மகத்தானதாக இருந்தது.(7-9) ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்த அந்தப் பேரொலி, சொர்க்கங்களையே எட்டின. விழுந்து கொண்டிருப்பவர்களும், விழுந்துவிட்டவர்களுமான காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியோரின் முனகல்களும், வலியால் உண்டான ஓலங்களும், அக்களத்தில் கேட்பதற்குப் பரிதாபமாகவும், பெரும் ஒலியோடும் இருந்தது.(10,11) அந்த மோதல் இயல்பானதாக இருந்த போதே, ஒருவரையொருவர் கொன்று கொண்ட இரு தரப்பும் தங்கள் சொந்த மனிதர்களையும், விலங்குகளையும் கூடக் கொன்றன.(12)
வீரர்களின் கைகளில் இருந்து போர்வீரர்கள் மற்றும் யானைகளின் மீது வீசப்பட்ட வாள்களின் குவியலானது, சலவை செய்யும் இடத்தில் குவிந்து கிடக்கும் துணிகளுக்கு ஒப்பாகக் களத்தில் காட்சியளித்தது.(13) வீரர்களின் கைகளில் உயர்த்தி வீசப்பட்ட வாள்களின் ஒலியானது துணிகளைச் சலவை செய்ய அடித்துத் துவைக்கும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது.(14) வாள்கள், கத்திகள், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிய அந்த மோதலின் இயல்பு பயங்கரத்தை அடைந்தது.(15) பிறகு வீரப்போராளிகள் இறந்தோரின் உலகங்களை நோக்கிப் பாயும் ஆறு ஒன்றை அங்கே உண்டாக்கினார்கள். யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதிகள் அதன் நீரோட்டமாக அமைந்தன. ஆயுதங்கள் அதன் அபரிமிதமான மீன்களாகின. குருதியாலும், சதையாலும் அது சகதியாக இருந்தது. துயர் மற்றும் வலி ஆகியவற்றால் எழுந்த ஓலங்கள் அதன் முழக்கங்களாக அமைந்தன. கொடிகளும், துணிகளும் அதன் {அந்த ஆற்றின்} நுரைகளாகின.(16,17) கணைகள் மற்றும் ஈட்டிகளால் பீடிக்கப்பட்டு, (முந்தைய) இரவைக் கடின உழைப்பில் கழித்ததால் களைப்படைந்து, மிகவும் பலவீனமடைந்த யானைகளும், குதிரைகளும், முற்றிலும் அங்கங்கள் அசையாத நிலையில் களத்தில் நின்று கொண்டிருந்தன.(18)
(அழகான தன்மைகள் கொண்ட) தங்கள் கரங்களுடனும், தங்கள் அழகிய கவசங்களுடனும், அழகிய காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் கூடியவர்களான போர்வீரர்கள், போர்க்கருவிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்[1].(19) அந்நேரத்தில், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியவை, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர் ஆகியோரின் விளைவால் களமெங்கும் தேர் செல்வதற்கான பாதையேதும் இருக்கவில்லை. கணைகளால் பீடிக்கப்பட்டவையும், நல்ல இனத்தில் பிறந்தவையும், திறன் மிகுந்தவையும், (அளவு மற்றும் பலத்தில்) யானைகளுக்கு ஒப்பானவையுமான குதிரைகள், பெரும் முயற்சியோடு உழைத்துக் களைத்ததால் பூமியில் புதைந்த சக்கரங்களைக் கொண்ட தங்கள் வாகனங்களை {தேர்களை} நடுக்கத்துடன் இழுத்துக் கொண்டிருந்தன. துரோணரையும், அர்ஜுனனையும் தவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடலுக்கு ஒப்பான அந்தப் பரந்த படை முழுவதும் கலக்கமடைந்து, பீடிக்கப்பட்டு, பயங்கரத்தை அடைந்திருந்தது. இந்த இருவரே தங்கள் தங்கள் தரப்புகளின் போர்வீரர்களுக்குப் புகலிடமாகவும், பாதுகாவலர்களாகவும் திகழ்ந்தனர்.(20-23) இவ்விருவருடன் மோதிய பிறர் யமலோகம் சென்றனர். அப்போது குருக்களின் அந்தப் பரந்த படை மிகவும் கலக்கமடைந்து, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்குப் பாஞ்சாலர்களுடன் ஒன்றாகக் கலந்திருந்திருந்தன.
[1] “இந்தச் சுலோகத்தின் முதல் வரியில் பம்பாய் உரையைப் பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “வீரர்கள் நன்றாக வாய்வறண்டவர்களாகி அழகிய குண்டலங்களோடு கூடின தலைகளோடும், இன்னும் மற்ற யுத்தத்திற்குரிய பொருள்களோடும் ஆங்காங்கு விளங்கினார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஒளிகுன்றிய முகங்களோடும், அழகிய காது குண்டலங்களுடன் கூடிய தலைகளோடும், போருக்குத் தேவையான கருவிகளைத் தரித்துக் கொண்டும் வீரர்கள் மிகப் பிரகாசமாகத் தோன்றினர்” என்றிருக்கிறது.
பூமியில் க்ஷத்திரியர்களின் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், சுடலையை {சுடுகாட்டைப்} போலத் தெரிந்ததுமான அந்தப் போர்க்களத்தில், ஒவ்வொருவரும் துருப்புகளுடன் கலந்து புழுதிமேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால், ஓ !மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனோ, துரோணரோ அர்ஜுனனோ, யுதிஷ்டிரனோ,(24-26) பீமசேனனோ, இரட்டையரோ {நகுலன் மற்றும் சகாதேவனோ}, பாஞ்சால இளவரசனோ {திருஷ்டத்யும்னனோ}, சாத்யகியோ, துச்சாசனனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துரியோதனனோ, சுபலனின் மகனோ {சகுனியோ},(27) கிருபரோ, மத்ர ஆட்சியாளனோ {சல்லியனோ}, கிருதவர்மனோ, பிறரோ, நானோ, பூமியோ, திசைகளின் புள்ளிகளோ(28) அங்கே காணப்படவில்லை. கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடக்கையில் புழுதி மேகம் எழுந்த போது,(29) மீண்டும் இரவே வந்துவிட்டதென அனைவரும் நினைத்தனர். கௌரவர்களையோ, பாஞ்சாலர்களையோ, பாண்டவர்களையோ,(30) திசைப்புள்ளிகளையோ, ஆகாயத்தையோ பூமியையோ, சமமான, சமமற்ற பூமியையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை விரும்பிய போர்வீரர்கள், எதிரிகளையும், நண்பர்களையும், உண்மையில், தங்கள் கரங்களின் தீண்டலால் தாங்கள் காணக்கூடிய அனைவரையும் கொன்றனர். பூமியில் எழுந்த அந்தப் புழுதியானது, விரைவில் வந்த காற்றாலும், சிந்தப்பட்ட குருதியால் நனைந்ததாலும் விலகியது. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படைவீரர்கள் ஆகியோர்,(31-33) குருதியில் குளித்திருந்ததால், (தேவர்களின்) பாரிஜாத காட்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.
அப்போது, துரியோதனன், கர்ணன், துரோணர், துச்சாசனன்(34) ஆகிய நான்கு (கௌரவப்) போர்வீரர்களும், நான்கு பாண்டவப் போர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். துரியோதனனும், அவனது தம்பிமாரும் இரட்டையருடன் (நகுலன் மற்றும் சகாதேவனுடன்) மோதினர்.(35) ராதையின் மகன் {கர்ணன்} விருகோதரனோடும் {பீமனோடும்}, அர்ஜுனன் பரத்வாஜர் மகனோடும் {துரோணரோடும்} போரிட்டுக் கொண்டிருந்தனர். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அனைத்துத் துருப்புகளும் அந்தப் பயங்கர மோதல்களைக் கண்டு கொண்டிருந்தன.(36) பல்வேறு இனிய பரிணாமங்களைச் செய்து காட்டிய தங்கள் அழகிய தேரில் ஏறி வந்தவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், கடுமையானவர்களுமான அந்த முதன்மையான தேர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட மோதலான அந்த அழகிய போரை (அமைதியாக இருந்த இரு படையின்) தேர்வீரர்கள் கண்டனர். பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், மிகத் தீவிரமாகப் போராடுபவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும்,(37,38) கோடையின் முடிவில் வரும் (மழைத்தாரைகளைப் பொழியும்) மேகங்களைப் போலக் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர். சூரியப் பிரகாசம் கொண்ட தங்கள் தேர்களில் ஏறி வந்த அந்த மனிதர்களில் காளையர்,(39) கூதிர்கால வானத்தில் கூடித் திரண்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து பழிதீர்க்க விரும்பிய போர்வீரர்களான(40) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், யானைக்கூட்டங்களின் மதங்கொண்ட தலைமை யானைகளைப் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் அறைகூவி அழைத்தபடியே விரைந்தனர்.(41)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அந்தப் போரில் அழியாததால், நேரம் வரும்வரை மரணம் நேராது என்பது உண்மையே[2].(42) வெட்டப்பட்ட கரங்கள், கால்கள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள், விற்கள், கணைகள், வேல்கள் {பராசங்கள்}, கத்திகள், போர்க்கோடரிகள், (பிற வகையிலான) கோடரிகள், நாளீகங்கள், கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, ஈட்டிகள், சூலங்கள், பல்வேறுவிதங்களிலான அழகிய கவசங்கள், உடைந்து போன அழகிய தேர்கள், கொல்லப்பட்ட யானைகள், நகரங்களைப் போலத் தெரியும் கொடிகளற்ற தேர்கள், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சாரதியற்றவையும், பெரும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவையுமான குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிவுமிக்கவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள், வீழ்ந்து கிடந்த சாமரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமணமிக்க மலர்மாலைகள், தங்கச் சங்கிலிகள், மகுடங்கள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், மார்பிலணியும் நகைகள், மார்புக்கவசங்கள், கழுத்துப்பட்டைகள், தலைப்பாகைகளை அலங்கரித்த ரத்தினங்கள் ஆகியன இறைந்து கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(43-49)
[2] இந்த 42ம் சுலோகம் வங்கப் பதிப்புகளில் வேறுவிதமாக இருப்பதாகவும், அது சரியாகத் தோன்றாததால், தாம் பம்பாய் பதிப்பை இதற்குப் பயன்படுத்தியிருப்பதாகவும் சொல்லும் கங்குலி, "இந்த வாக்கியத்தின் பொருள் யாதெனில், 'அந்தப் பயங்கரப் போர் எவ்வாறு இருந்ததெனில், போர் வீரர்கள் அனைவரும் நிச்சயம் உடனே அழிந்துவிடுவார்கள் என்ற அளவுக்கு இருந்தது. ஆனால், அவர்களில் யாரும் மாளவில்லை என்ற செய்தியானது, சரியான நேரம் வரும்வரை மரணம் ஏற்படாது என்ற உண்மையையே நிரூபிக்கிறது' என்பதாகும்" என இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இது, "மன்னரே, யுத்தகளத்தில் எல்லா மகாரதர்களும் ஒரே சமயத்தில் சிதறும்படி செய்யப்படவில்லையாதலால் ஒருவருக்கும் முடிவுக்காலம் வராமலிக்கும் சமயத்தில் தேகம் அழிவதில்லையென்பது நிச்சயம்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஓ மன்னா, ஓ ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் கடினமாகப் போரிட்டாலும் ஒட்டுமொத்தமாகக் கொல்லப்படாததால், உடல் கொண்ட உயிரினங்கள் தக்க நேரம் வரும்வரை தங்கள் உடல்களைக் கைவிடலாகாது என்பது உண்மையே" என்றிருக்கிறது. இதில் கங்குலியின் பதிப்பும், மன்மதநாததத்தரின் பதிப்பும் ஒத்த கருத்துடையவையாக இருக்கின்றன.
அப்போது, கோபத்தால் நிறைந்தவனும், பழிதீர்க்க விரும்பியவனுமான துரியோதனனுக்கும், அதே போன்ற உணர்ச்சிகளால் நிறைந்திருந்த நகுலனுக்கும் இடையில் மோதல் நேர்ந்தது.(50) அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடி உமது மகனை {துரியோதனனைத்} தனக்கு வலப்புறத்தில் நிறுத்தினான்[3]. அதன் பேரில் அவனுக்காக {நகுலனுக்காக} உரத்த ஆரவாரம் எழுந்தது.(51) கோபத்தில் இருந்த தன் தம்பியால் {நகுலனால்} வலப்புறத்தில் நிறுத்தப்பட்டவனும், உமது மகனுமான மன்னன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, அந்தப் பக்கத்தில் இருந்தே நகுலனை எதிர்த்து அற்புதமாகப் போரிட்டான்.(52) அதன்பேரில், பெரும் சக்தி கொண்டவனும், (தேரை நடத்திச் செல்வதில்) பல்வேறு வழிமுறைகளை அறிந்தவனுமான நகுலன், தன் வலப்புறத்தில் இருந்து, தன்னை எதிர்த்துக் கொண்டிருக்கும் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், கணைமாரிகளால் நகுலனைப் பீடித்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தடுத்த துரியோதனன், அவனை {நகுலனைப்} புறமுதுகிடச் செய்தான்.(53,54) (உமது மகனின்) அந்தச் சாதனையைத் துருப்புகள் அனைத்தும் மெச்சின. அப்போது நகுலன், உமது தீய ஆலோசனைகளால் உண்டான தன் துன்பங்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து, "நில்லும், நிற்பீராக" என்று உமது மகனிடம் சொன்னான்" {என்றான் சஞ்சயன்}.(55)
----------------------------------------------------------------------------------------[3] வேறொரு பதிப்பில், "நகுலன் சந்தோஷத்துடன் நூற்றுக்கணக்கான பாணங்களை இறைத்துக் கொண்டு, உமது புத்திரனை இடப்பக்கத்தில் இருப்பவனாகச் செய்தான்" என்று இருக்கிறது. மேலும் இந்த வரிக்கு விளக்கமாக, "சத்ருவை அப்பிரதக்ஷிணமாகச் சுற்றினால் சத்துரு தோல்வியடைந்ததாகக் குறிப்பு" என்றும் குறிப்பொன்றும் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
துரோணபர்வம் 187-ல் வரும் சுலோகங்கள்: 55
ஆங்கிலத்தில் | In English |