The battle between Drona and Arjuna! | Drona-Parva-Section-188, 189 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 05, 06)
பதிவின் சுருக்கம் : துச்சாசனனின் சாரதியைக் கொன்ற சகாதேவன்; சகாதேவனிடம் வீழும் நிலையை அடைந்த துச்சாசனன்; கர்ணன் குறுக்கிட்டது; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; நகுலனின் தேரில் ஏறிக் கொண்ட பீமன்; துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்தர்களும் முனிவர்களும் அந்த இரு போர்வீரர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் இயல்பு நிலையை அடைந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, தன் தேரின் கடும் வேகத்தால் பூமியை நடுங்கச் செய்தபடி சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) எனினும், எதிரிகளை நசுக்குபவனான மாத்ரியின் மகன் {நகுலன்}, தன்னை எதிர்த்து வரும் எதிராளியின் சாரதியுடைய தலைப்பாகையுடன் கூடிய தலையை அகன்ற தலை கொண்ட கணை யொன்றால் {பல்லத்தால்} விரைவாக வெட்டினான்.(2) சகாதேவனால் சாதிக்கப்பட்ட இந்தச் செயல் வேகத்தால் துச்சாசனனோ, துருப்புகளில் ஏதுமோ சாரதியின் தலை வெட்டப்பட்டதை அறியவில்லை.(3) கடிவாளங்கள் எவராலும் இழுத்துப் பிடிக்கப்படாததால் குதிரைகள் தங்கள் விருப்பப்படி ஓடின. அப்போதுதான் துச்சாசனன் தன் சாரதி கொல்லப்பட்டதை அறியவந்தான்.(4) குதிரைகளை நடத்த அறிந்தவனான அந்த முதன்மையான தேர்வீரன் {துச்சாசனன்}, தானே அந்தப் போரில் தன் குதிரைகளை நடத்திக்கொண்டு, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டான்.(5) சாரதியற்ற தேரில் அந்தப் போரில் அச்சமில்லாமல் சென்ற அந்த அவனது {துச்சாசனனது} செயலை நண்பர்களும், எதிரிகளும் பாராட்டினர்.(6)
அப்போது சகாதேவன், அந்தக் குதிரைகளைக் கூரிய கணைகளால் துளைத்தான். அக்கணைகளால் பீடிக்கப்பட்ட அவை அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடின.(7) அவன் {துச்சாசனன்} கடிவாளங்களைப் பிடிப்பதற்காக வில்லைக் கீழே வைக்கவும், பிறகு வில்லைப் பயன்படுத்துவதற்காகக் கடிவாளத்தைக் கீழே வைக்கவும் செய்தான்.(8) அந்தச் சந்தர்ப்பங்களில் மாத்ரியின் மகன் {சகாதேவன்} கணைகளால் அவனை {துச்சாசனனை} மறைத்தான். அப்போது கர்ணன், உமது மகனை {துச்சாசனனைக்} காக்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான்.(9) அதன்பேரில் விருகோதரன் {பீமன்}, பெரும் கவனத்தோடு முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கர்ணனின் மார்பையும் கரங்களையும் துளைத்தான்.(10) தடியால் அடிபட்ட பாம்பு போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன், கூரிய கணைகளை ஏவியபடி பீமசேனனைத் தடுத்து நின்றான்.(11) அதன்பேரில், பீமனுக்கும், ராதையின் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு கடும்போர் நடைபெற்றது. அந்த இருவரும் காளைகளைப் போல முழங்கினர். அவ்விருவரின் கண்களும் (சினத்தால்) விரிந்திருந்தன.(12)
கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்துடன் ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே அவர்கள் விரைந்து சென்றனர். போரில் திளைப்பவர்களான அவ்விருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நிலையை அடைந்தனர். ஒருவரை நோக்கி மற்றவர் கணைகளை எளிதாக ஏவமுடியாத அளவுக்கு அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். அதன்பேரில், கதாயுதப் போர் நிகழ்ந்தது. பீமசேனன் வேகமாகக் கர்ணனுடைய தேரின் கூபரத்தைத் தன் கதாயுதத்தால் நொறுக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனது} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பீமனுடைய தேரின் மீது வீசினான். எனினும், அதைப் பீமன், தனது கதாயுதத்தால் நொறுக்கினான். பிறகு மீண்டும் ஒரு கனமான கதாயுத்தை எடுத்துக் கொண்ட பீமன், அஃதை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(13-16) கர்ணன், அழகிய சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு அந்தக் கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் தாக்கி, மீண்டும் இன்னும் பிற கணைகளால் தாக்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கதாயுதமானது, மந்திரங்களால் பீடிக்கப்பட்ட பாம்பைப் போலப் பீமனை நோக்கித் திரும்பியது. அந்தக் கதாயுதத்தின் எதிர்வீச்சால் பீமனின் பெரும் கொடிமரம் ஒடிந்து விழுந்தது.(17,18) அதே கதாயுதத்தினால் தாக்கப்பட்ட பீமனின் சாரதியும் உணர்வுகளை இழந்தான்.
பிறகு சினத்தால் வெறிக் கொண்ட பீமன், கர்ணன் மீதும்,(19) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {கர்ணனின்} கொடிமரம், வில் மற்றும் தோலுறை ஆகியவற்றின் மீதும் எட்டு கணைகளை ஏவினான். பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் கர்ணனின் கொடிமரம், வில் மற்றும் தோலுறைகளைப் பெரும் கவனத்தோடு அறுத்தான். பிறகு வெல்லப்படமுடியாததும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கரடியின் நிறத்தில் இருந்த பீமனின் குதிரைகளையும், அவனது {பீமனது} பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் வேகமாகக் கொன்றான்.(20-22) இப்படித் தனது தேருக்குத் தீங்கேற்பட்டதும், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், மலைச்சிகரத்தில் இருந்து கீழே குதிக்கும் சிங்கத்தைப் போல, நகுலனின் தேரில் வேகமமாகக் குதித்தான்.(23)
அதே வேளையில், தேர்வீரர்களில் முதன்மையானோரும், ஆசான் சீடனுமானோரும், ஆயுதங்களில் திறம் பெற்றோருமான துரோணரும், அர்ஜுனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்டு,(24) ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் நளினம், இலக்கில் உறுதி, தேர்களின் நகர்வுகள் ஆகியவற்றால் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் மலைப்படையச் செய்தனர்.(25) இதுவரை என்றும் நடக்காததைப் போல ஆசானுக்கும் {துரோணருக்கும்}, சீடனுக்குமிடையில் {அர்ஜுனனுக்கும்} நடந்த இதுபோன்றதொரு போரைக் கண்ட போர்வீரர்கள் பிறர், ஒருவரோடொருவர் போரிடுவதை நிறுத்தி நடுக்கத்தை அடைந்தனர்.(26) அவ்வீரர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தேர்களின் அழகிய பரிணாமங்களை வெளிக்காட்டியபடியே அடுத்தவரைத் தன் வலப்புறத்தில் நிறுத்த விரும்பினர்[1].(27)
[1] வேறொரு பதிப்பில், “சேனையின் மத்தியில் விசித்திரமான ரதகதிகளில் சென்று கொண்டு அவ்வீரர்களிருவரும் அப்பொழுது ஒருவரையொருவர் இடமாகச் செல்வதற்கு விரும்பினார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பிறகு அந்த இரு வீரர்களும், போர்க்களத்தில் தங்கள் தேர்களின் பல்வேறு நகர்வுகளை வெளிக்காட்டியபடியே, ஒருவரையொருவர் தங்கள் வலதில் விட்டுச் செல்ல முயன்றனர்” என்றிருக்கிறது.
அங்கே இருந்த போர்வீரர்கள், அவர்களது ஆற்றலைக் கண்டு ஆச்சரியத்தால் நிரம்பினர். உண்மையில், துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் பெரும்போரானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓர் இறைச்சித் துண்டுக்காக வானில் மோதிக் கொள்ளும் இரண்டு பருந்துகளுக்கு ஒப்பாக இருந்தது. குந்தியின் மகனை {அர்ஜுனனை} வெல்வதற்காகத் துரோணரால் செய்யப்பட்ட சாதனைகள் அனைத்தும்,(28,29) அதே போன்ற சாதனைகளைச் செய்த அர்ஜுனனால் எதிர்க்கப்பட்டது. துரோணர், பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விஞ்சுவதில் தவறியபோது, ஆயுதங்கள் அனைத்தின் வழிமுறைகளை அறிந்த போர்வீரரான அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, ஐந்திரம், பாசுபதம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(30,31) அந்த ஆயுதங்கள் துரோணரின் வில்லில் இருந்து வெளிப்பட்டதும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை வேகமாக அழித்தான். இப்படித் தன் ஆயுதங்களை முறையாகத் தன் ஆயுதங்களால் அர்ஜுனன் அழித்தபோது,(32) தெய்வீக ஆயுதங்களில் வலிமைமிக்க ஓர் ஆயுதத்தைக் கொண்டு, துரோணர் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மறைத்தார். பார்த்தனை {அர்ஜுனனை} வெல்லும் விருப்பத்தால் பார்த்தன் மீது அதைத் துரோணர் ஏவினாலும், அவன் பதிலுக்குத் தாக்கி அதைக் கலங்கடித்தான். தன் ஆயுதங்கள் அனைத்தும், குறிப்பாக தெய்வீக ஆயுதங்களும் கூட அர்ஜுனனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், பின்னவனைத் {அர்ஜுனனைத்} தன் இதயத்தால் பாராட்டினார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, அர்ஜுனனைத் தன் சீடனாகக் கொண்டதன் விளைவால், இவ்வுலகில் ஆயுதங்களை அறிந்தோர் அனைவரைக் காட்டிலும் தம்மை மேன்மையானவராகக் கருதிக் கொண்டார். அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தடுக்கப்பட்ட துரோணர்,(33-36) தீவிரமாகப் போராடி, ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாக (பதிலுக்கு) அர்ஜுனனைத் தடுத்தார்.
அப்போது, ஆயிரக்கணக்கான தேவர்களும், கந்தர்வர்களும்,(37) முனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்களும் அனைத்துப் பக்கங்களிலும் தென்பட்டனர். (அவர்களும், அவர்களோடு கூடிய) அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோராலும்(38) நிறைந்திருந்த அந்த ஆகாயமானது, மேகங்கள் திரண்டு மீண்டும் இருண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. துரோணரையும், உயர் ஆன்ம பார்த்தனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்து கொண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத குரல் ஒன்று ஆகாயமெங்கும் மீண்டும் மீண்டும் கேட்டது. துரோணர் மற்றும் பார்த்தன் ஆகியோரால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக அனைத்துப் பக்கங்களும் ஒளியால் சுடர்விட்டு எரிந்த போது,(39,40) அங்கே இருந்த சித்தர்களும் முனிவர்களும், “இது மனிதப் போரோ, அசுரப்போரோ, ராட்சசப் போரோ, தெய்வீகப் போரோ, கந்தர்வப் போரோ அல்ல. உயர்வான பிரம்ம மோதலே இஃது என்பதில் ஐயமில்லை. இந்தப்போர் மிக அழகானது; ஆச்சரியகரமானது. இதைப் போன்ற ஒன்றை நாம் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(41-42) சில நேரங்களில் ஆசான் {துரோணர்} பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, சில நேரங்களில் பாண்டுவின் மகன் துரோணரையும் விஞ்சி நிற்கின்றனர். அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் எவனாலும் காண முடியாது.(43) ருத்ரன் தன்னையே இரு பாகங்களாகப் பகுத்துக் கொண்டு, தானே தன்னுடன் போரிட்டால், அஃது இது போன்ற நிகழ்வுக்கு ஒப்பாகலாம். இதற்கு ஒப்பாக வேறொரு நிகழ்வை வேறு எங்கும் காண முடியாது.(44) அறிவியலானது, ஒன்றாகத் திரண்டு ஆசானிடம் {துரோணரிடம்} இருக்கிறது. அறிவியலும், வழிமுறைகளும் {தொழில்நுட்பமும்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} உள்ளது.(45) இந்தப் போர்வீரர்களில் எவரையும் எந்த எதிரிகளாலும் போரில் எதிர்க்க முடியாது. இவ்விருவரும் விரும்பினால் தேவர்களுடன் கூடிய அண்டத்தையே இவர்களால் அழித்துவிட முடியும்” என்றனர்.(46) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் உயிரினங்கள் அனைத்தும், மனிதர்களில் காளையரான இவ்விருவரையும் கண்டு இவ்வார்த்தைகளைச் சொல்லின.(47)
அந்தப் போரில் உயர் ஆன்மத் துரோணர், பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள் அனைத்தையும் பீடித்தபடியே பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார்.(48) அதன் பேரில் மலைகள், நீர்நிலைகள், மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். கடுமையான காற்று வீசத்தொடங்கியது. கடல்கள் ஆர்ப்பரித்துப் பொங்கின.(49) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர் {துரோணர்}, ஆயுதத்தை உயர்த்திய போது, குரு மற்றும் பாண்டவப் படைகளின் போராளிகளும் அச்சமடைந்தனர்; இன்னும் பிற உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்தன.(50) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்ற வகையில் தனது பிரம்மாயுதத்தைக் கொண்டு அந்த ஆயுதத்தைக் கலங்கடித்ததால், இயற்கையின் கலக்கம் விரைவாகத் தணிந்தது.(51) இறுதியாக அவர்களில் எவராலும் தன் எதிராளியைத் தனிப்போரில் வெல்ல இயலாத போது, களத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பத்தால் இரு படைகளுக்கும் இடையில் இயல்பான மோதலே நடந்தது.(52) துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் அந்தப் பயங்கரப் போர் (மேலும் இருபடைகளின் இயல்பான போரும்) நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(53) மேகத் திரள்களால் மறைக்கப்பட்டதைப்போல அடர்த்தியான கணை மழையால் ஆகாயம் மறைக்கப்பட்டது, வானுலாவும் உயிரினத்தாலும், அந்தப் பூதத்தின் {வானத்தின்} ஊடாக ஒரு பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. {ஆகாயத்தில் பறவையேதும் பறக்கவில்லை}” {என்றான் சஞ்சயன்}.(54)
Sacred Texts வலைத்தளத்தில் 188 மற்றும் 189 ஆகியவை ஒன்றாகக் கலந்திருக்க வேண்டும் என்ற ஐயப்பாட்டைத் தெரிவித்து, 189ம் பகுதியைத் தவிர்த்துள்ளார்கள். எனவே நாம் இந்தப் பதிவையே 188 மற்றும் 189 ஆகக் கருத்தில் கொள்கிறோம். அடுத்தது பகுதி 190
Sacred Texts வலைத்தளத்தில் 188 மற்றும் 189 ஆகியவை ஒன்றாகக் கலந்திருக்க வேண்டும் என்ற ஐயப்பாட்டைத் தெரிவித்து, 189ம் பகுதியைத் தவிர்த்துள்ளார்கள். எனவே நாம் இந்தப் பதிவையே 188 மற்றும் 189 ஆகக் கருத்தில் கொள்கிறோம். அடுத்தது பகுதி 190
ஆங்கிலத்தில் | In English |