The Friendship of Satyaki and Duryodhana! | Drona-Parva-Section-189 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 07)
பதிவின் சுருக்கம் : துச்சாசனனை வென்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட கிருதவர்மனும், அவனது மூன்று தம்பியரும்; துரோணரை நோக்கிச் சென்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் காக்க விரைந்த துரியோதனன்; துரியோதனனை நோக்கி விரைந்த சாத்யகி; சாத்யகியிடம் பேசிய துரியோதனன், தன்னைத்தானே பழித்துக் கொண்டது; சாத்யகியின் பதில்; துரியோதனனைப் பாதுகாக்க விரைந்த கர்ணன்; தேர்வீரர்களைக் காக்க தன் போர்வீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களும், குதிரைகள், யானைகள் ஆகியவையும் பயங்கரமாகக் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனுடன் துச்சாசனன் மோதினான்.(1) தன் தங்கத் தேரில் ஏறிவந்தவனும், துச்சாசனனின் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்டவனும், கோபத்துடன் கூடியவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துச்சாசனனின்} குதிரைகள் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} கணைகளால் மறைக்கப்பட்டதும், கொடியுடனும், சாரதியுடனும் கூடிய துச்சாசனனின் தேரானது விரைவில் கண்ணுக்குப் புலப்படாததாகியது.(3) அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்க அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} முன்பு நிற்க இயலாதவனானான்.(4) தன் கணைகளின் மூலம் துச்சாசனனைப் புறமுதுகிடச் செய்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மேலும் தன் கணைகளை இறைத்தபடியே அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.(5)
அந்த நேரத்தில், ஹிருதிகன் மகனான கிருதவர்மன், தன் தம்பிகள் மூன்று பேருடன் சேர்ந்து காட்சியில் தோன்றி, திருஷ்டத்யும்னனை எதிர்க்க முயன்றான்.(6) எனினும், மனிதர்களில் காளையரான இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), சுடர்மிக்க நெருப்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்து சென்று, அவனைப் பாதுகாக்கத் தொடங்கினர்.(7) பிறகு வலிமையுடன் கூடிய அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சினத்தால் தூண்டப்பட்டு, மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(8) தூய ஆன்மாவும், தூய நடத்தையும் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, நேர்மையான வழிமுறைகளில் போரிட்டனர்.(9) களங்கமற்ற குலத்தில் தோன்றியவர்களும், களங்கமற்ற செயல்கள் மற்றும் பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள், சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரோடொருவர் நேர்மையாகப் போரிட்டனர்.(10)
அந்தப் போரில் நியாயமற்றதென்று ஏதுமில்லை, மேலும் நியாயமற்றதாகக் கருதப்பட்ட ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவுமில்லை. முள்பதித்த கணைகளையோ {கர்ணிகளையோ}, நாளீகங்கள் என்று அழைக்கப்பட்டவற்றையோ, நஞ்சூட்டப்பட்டவற்றையோ {லிப்தகங்களோ}, கொம்புகளால் செய்யபட்ட தலைகளைக் கொண்டவையோ {பஸ்திகமங்களையோ}, கூரிய பல தலைகள் கொண்டவற்றையோ {சூசிகளையோ, கபிசங்களையோ}, காளைகள் மற்றும் யானைகளின் எலும்புகளாலானவையோ {சூளிகளையோ}, இரு தலைகள் கொண்டவையோ {பலிசங்களையோ}, துருப்பிடித்த தலை கொண்டவையோ {யமிகளையோ}, நேராகச் செல்லாதவையோ {பாசகங்களையோ}, என இவற்றில் எதையும் அவர்கள் பயன்படுத்தவில்லை[1].(11,12) புகழையும், நேர்மையாகப் போரிடுவதால் கிடைக்கும் பேரருள் உலகங்களையும் வெல்ல விரும்பிய அவர்கள் யாவரும் எளிமையான, நியாயமான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.(13) உமது படையின் அந்த நான்கு போர்வீரர்களுக்கும் {கிருதவர்மன், அவனது மூன்று தம்பியர் ஆகியோருக்கும்}, பாண்டவத்தரப்பின் அந்த மூன்று பேருக்கும் {திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, நியாயமற்ற எதையும் கொண்டிருக்காவிடினும் மிகப் பயங்கரமானதாகவே இருந்தது[2].(14)
[1] "இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கணைகள் யாவும் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தவல்லவையும், எளிதில் பிடுங்கப்பட முடியாதவையுமாகும். நேராகச் செல்லாமல் கோணலாகச் செல்லக்கூடிய கணைகளைப் பொறுத்தவரை, போராளிகளால் அவற்றை எளிதில் கலங்கடிக்க முடியாது என்பதாலும், அவை எங்கே பாயும் என்பதை யாராலும் அறிய முடியாது என்பதாலும் அவை கண்டிக்கப்படுகின்றன" என இங்கே விளக்குகிறார் கங்குலி.[2] வேறொரு பதிப்பில், "எல்லா வீரர்களும் நல்ல யுத்தத்தினாலே பரலோகங்களையும், கீர்த்தியையும் எண்ணங்கொண்டவர்களாக நேர்மையும், பரிசுத்தமுமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். உம்முடைய நான்கு யுத்தவீரர்களுக்கும், அந்த மூன்று பாண்டவர்களோடு அப்பொழுது எல்லாத் தோஷங்களற்றதும் கைகலந்ததுமான யுத்தம் நடந்தது" என்றிருக்கிறது.
அப்போது, ஆயுதப் பயன்பாட்டில் மிகுந்த வேகம் கொண்ட திருஷ்டத்யும்னன், துணிச்சல்மிக்கவர்களான உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இரட்டையரால் (நகுலனாலும், சகாதேவனாலும்) தடுக்கப்படுவதைக் கண்டு துரோணரை நோக்கிச் சென்றான்.(15) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தடுக்கப்பட்ட அந்த நான்கு போர்வீரர்களும், (தங்கள் வழியில் நிற்கும்) இரு மலைகளைத் தாக்கும் காற்றைப் போல முன்னவர்களுடன் மோதினார்கள்.(16) பெரும் தேர்வீரர்களான அந்த இரட்டையரில் ஒவ்வொருவரும், இரண்டு எதிராளிகளுடன் போரிட்டனர். அதே வேளையில், திருஷ்டத்யும்னன் துரோணரின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(17) வெல்லப்பட முடியாதவனான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரை எதிர்த்துச் செல்வதையும், (தன் படையின்) நான்கு வீரர்கள் இரட்டையருடன் போரிடுவதையும் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரனிடம்}, குருதியைக் குடிக்கும் கணைமாரியை இறைத்தபடியே அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். இதைக் கண்ட சாத்யகி, குரு மன்னனை {துரியோதனனை} வேகமாக அணுகினான்.(18,19) குரு மற்றும் மது குலங்களின் வழித்தோன்றல்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி, போரில் ஒருவரையொருவர் தாக்க விரும்பினர்.(20) குழந்தைப் பருவத்தில் ஒருவரோடு ஒருவர் நடந்து கொண்ட விதங்களை மனதில் நினைத்து, அதைக் குறித்து மகிழ்ச்சியாகச் சிந்தித்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அவர்கள் மீண்டும் மீண்டும் புன்னகைத்தனர்.(21)
தன் நடத்தையை (மனதில்) பழித்துக் கொண்ட மன்னன் துரியோதனன், எப்போதும் தனது அன்புக்குரிய நண்பனான சாத்யகியிடம்,(22) "ஓ! நண்பா, கோபத்திற்கு ஐயோ!, பழிவுணர்ச்சிக்கு ஐயோ! {கோபத்தையும், பழி உணர்ச்சியையும் நிந்திக்க வேண்டும்}. நீ என் மீது உன் ஆயுதங்களைக் குறிவைப்பதாலும், நான் உன் மீது குறி வைப்பதாலும், ஓ! சிநி குலத்துக் காளையே {சாத்யகி}, க்ஷத்திரியத் தொழிலுக்கு ஐயோ!, வலிமை மற்றும் ஆற்றலுக்கும் ஐயோ! அந்நாட்களில் நீ எனக்கு உயிரினும் அன்புக்குரியவனாக இருந்தாய், நானும் உனக்கு அவ்வாறே இருந்தேன்.(23,24) ஐயோ, குழந்தைப் பருவத்தில் நீயும், நானும் நடந்து கொண்ட விதங்களும், செய்த செயல்களும் என் நினைவில் இருக்கின்றன. அவையாவும் போர்க்களத்தில் ஒன்றுமில்லாதவை ஆகினவே.(25) ஐயோ, ஓ !சாத்வத குலத்தோனே, இங்கே கோபம் மற்றும் பேராசையால் உந்தப்பட்டு, இன்று நாம் ஒருவரோடு ஒருவர் போரிட இருக்கிறோமே" என்றான் {துரியோதனன்}.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அவனிடம் {துரியோதனனிடம்}, சில கூரிய கணைகளை எடுத்துக் கொண்டே புன்னகைத்தவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனுமான சாத்யகி, "ஓ! இளவரசே {துரியோதனா}, முன்னர் நாம் ஒன்றாகக் கூடி விளையாடிய இடங்களைப் போல, ஓ! இளவரசே, இது சபையோ, நமது ஆசானின் வசிப்பிடமோ அல்ல" என்றான்.(26,27) துரியோதனன், "ஓ! சிநி குலத்தோனே {சாத்யகியே}, நம் குழந்தைப் பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் எங்கே போயின? ஐயோ, இப்போதைய இந்தப் போரானது நம் மீது எவ்வாறு விழுந்தது? காலத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட முடியாதது என்பதாகவே தெரிகிறது.(28) (நாம் உந்தப்பட்டிருப்பதைப் போல) செல்வத்தின் மீது கொண்ட ஆசை என்ன பயனைத் தரப்போகிறது? எவ்வளவுதான் நாம் செல்வத்தைக் கொண்டிருந்தாலும், செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலேயே போரிடுவதற்கு நாம் இப்போது ஒன்று கூடியிருக்கிறோம்" என்றான்.{துரியோதனன்}.(29)
சஞ்சயன் சொன்னான், "இவ்வாறு சொன்ன மன்னன் துரியோதனனிடம் சாத்யகி, "இதுவே க்ஷத்திரியத் தொழில், அவர்கள் தங்கள் ஆசானுடன் கூடப் போரிட வேண்டியிருக்கிறது.(30) நான் உனது அன்புக்குரியவனாக இருந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, தாமதமேதும் செய்யாமல் என்னைக் கொல்வாயாக. ஓ! பாரத் குலத்தின் காளையே, உன் மூலமாக நான் நல்லோரின் உலகங்களை அடைவேன்.(31) உன் வலிமை மற்றும் ஆற்றல் அனைத்தையும் தாமதியாமல் வெளிப்படுத்துவாயாக. நண்பர்களுக்கிடையேயான இந்தப் பெரும் துயரைக் காண நான் விரும்பவில்லை" என்றான் {சாத்யகி}.(32)
இவ்வாறு மறுமொழி கூறிய சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதிக்கும்படி அச்சமற்ற வகையில் துரியோதனனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(33) அவன் {சாத்யகி} முன்னேறிவருவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} அவனை எதிர்கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன், அந்தச் சிநி குலத்தோன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(34) பிறகு, குரு மற்றும் மது குலங்களின் சிங்கங்களான அவர்களுக்கு இடையில், யானைக்கும், சிங்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதலுக்கு ஒப்பான ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(35)
இவ்வாறு மறுமொழி கூறிய சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதிக்கும்படி அச்சமற்ற வகையில் துரியோதனனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(33) அவன் {சாத்யகி} முன்னேறிவருவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} அவனை எதிர்கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன், அந்தச் சிநி குலத்தோன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(34) பிறகு, குரு மற்றும் மது குலங்களின் சிங்கங்களான அவர்களுக்கு இடையில், யானைக்கும், சிங்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதலுக்கு ஒப்பான ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(35)
அப்போது கோபத்தால் நிறைந்த துரியோதனன், தன் வில்லை முற்று முழுதாக வளைத்து, கூரிய கணைகளை ஏவி, வெல்லப்பட முடியாத சாத்யகியைத் துளைத்தான்.(36) சாத்யகியும், குரு இளவரசனை {துரியோதனனை} அந்தப் போரில் ஐம்பது கூரிய கணைகளால் விரைவில் துளைத்து, மீண்டும் இருபதாலும், பிறகு மீண்டும் பத்து கணைகளாலும் துளைத்தான்.(37) பிறகு அம்மோதலில் உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா, புன்னகைத்துக் கொண்டே, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து, முப்பது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான்.(38) பிறகு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தை} ஏவிய அவன் {துரியோதனன்}, கணை பொருத்தப்பட்டிருந்த சாத்யகியின் வில்லை இரண்டாக அறுத்தான். பெரும் கரநளினம் கொண்ட பின்னவன் {சாத்யகி} மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, உமது மகனின் மீது கணை மாரியை ஏவினான். துரியோதனனைக் கொல்லச் சென்ற அந்தக் கணைகளின் சரத்தைப் பின்னவன் {துரியோதனன்},(39,40) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் உரக்க முழங்கச் செய்யும்படி துண்டுகளாக வெட்டினான். பெரும் வேகத்தைக் கொண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் ஊறவைத்தவையும், முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று கணைகளால் சாத்யகியைப் பீடித்தான்.
அப்போது, துரியோதனனின் கணைகள் யாவற்றையும், அவற்றுடன் சேர்த்துக் கணை பொருத்தப்பட்ட அவனது {துரியோதனனின்} வில்லையும் சாத்யகி வேகமாக வெட்டினான்.(41,42) பிறகு அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தன் எதிராளியின் மீது கணைமாரியைப் பொழிந்தான். சாத்யகியால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த துரியோதனன், ஓ! மன்னா, பெரும் துயரத்துடன் மற்றொரு தேரில் அடைக்கலம் தேடினான். சிறிது நேரம் இளைப்பாறி புத்துணர்வை அடைந்த உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் சாத்யகியை எதிர்த்துச் சென்று,(43,44) பின்னவனுடைய தேரின் மீது கணைமாரியை ஏவினான். ஓ! மன்னா, சாத்யகியோ சிரித்துக் கொண்டே, துரியோதனனின் தேரின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இடையறாமல் ஏவினான். இருவரின் கணைகளும் ஆகாயத்தில் ஒன்றோடொன்று கலந்தன. இப்படி ஏவப்பட்ட அந்தக் கணைகளின் அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பாய்ந்ததன் விளைவால், பெரும் காட்டை எரிக்கும்போது நெருப்பினால் உண்டாகும் ஒலியைப் போன்றே அங்கே பேரொலி எழுந்தது. இருவராலும் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமியானது அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(45-47) ஆகாயமும் அப்படியே நிறைந்தது.
தேர்வீரர்களில் முதன்மையான அந்த மதுகுலத்து வீரன் {சாத்யகி}, துரியோதனனை விட வலிமைமிக்கவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், (48) உமது மகனை மீட்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான். எனினும், வலிமைமிக்கப் பீமசேனனால் கர்ணனின் அம்முயற்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(49) எனவே, அவன் கர்ணனை எதிர்த்து வேகமாகமாகச் சென்று, எண்ணற்ற கணைகளை ஏவினான். பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் மிக எளிதாக வெட்டிய கர்ணன்,(50) தன் கணைகளால் பீமனின் வில், கணைகள் ஆகியவற்றையும் மற்றும் அவனது சாரதியையும் வெட்டினான். பாண்டுவின் மகனான பீமன், சினத்தால் நிறைந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு,(51) தன் எதிராளியின் வில், கொடிமரம் மற்றும் சாரதியை அம்மோதலில் நொறுக்கினான். அந்த வலிமைமிக்கப் பீமன், கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றையும் நொறுக்கினான்.(52) எனினும் கர்ணன், ஒரு சக்கரம் உடைந்த அந்தத் தேரிலேயே மலைகளின் அரசனை (மேருவைப்) போல அசையாமல் நின்றான். ஒரு சக்கரத்தை மட்டுமே கொண்ட அவனது அழகிய தேரானது, ஒரு சக்கரத்தையே உடைய சூரியனின் தேர் ஏழு தெய்வீகக் குதிரைகளால் இழுக்கப்படுவதைப் போல அவனது குதிரைகளால் இழுக்கப்பட்டது. பீமசேனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாத கர்ணன், பல்வேறு வகைகளிலான கணைகளையும், பிற ஆயுதங்களையும் அம்மோதலில் அபரிமிதமாகப் பயன்படுத்தியபடியே பின்னவனுடன் {பீமனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான். பீமசேனனும், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான்.(53-55)
அந்தப் போரானது இயல்பையடைந்து குழம்பியபோது, அந்தத் தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யப் போர்வீரர்களில் முதன்மையானோர் யாவரிடமும்,(56) “யாவர் நமக்கு உயிரோ, யாவர் நமக்குத் தலைவர்களோ, யாவர் நம்மில் பெரும்பலம் கொண்டவர்களோ, அப்படிப்பட்ட மனிதர்களில் காளையர் அனைவரும், தார்தராஷ்டிரர்களிடம் போர்புரிகின்றனர்.(57) உணர்வுகளை இழந்து மலைப்படைந்தவர்களைப் போல நீங்கள் ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என் படையின் அந்தத் தேர்வீரர்கள் போரிடும் இடத்திற்குச் செல்வீராக.(58) வெற்றி அடைவது, அல்லது கொல்லப்படுவது ஆகியவற்றால் நீங்கள் விரும்பிய இலக்குகளை அடைவீர்கள் என்பதால், உங்கள் அச்சங்களை விரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொள்வீராக (போரில் ஈடுபடுவீராக).(59) நீங்கள் வெற்றியாளர்கள் என நிரூபித்தால், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளை நீங்கள் செய்யலாம். மறுபுறம் நீங்கள் கொல்லப்பட்டாலோ, தேவர்களுக்கு இணையானவர்களாகி, அருள் உலகங்கள் பலவற்றை நீங்கள் வெல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(60)
இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கவர்களும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவர்களுமான அந்த வீரத் தேர்வீரர்கள், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்து போரில் ஈடுபட்டனர்.(61) அப்போது ஒரு புறத்தில இருந்து பாஞ்சாலர்கள் எண்ணற்ற கணைகளால் துரோணரைத் தாக்கினர், அதே வேளையில் பீமசேனனின் தலைமையிலான பிறர் மற்றொரு புறத்தில் இருந்து அவரைத் தடுத்தனர்.(62) பாண்டவர்கள் தங்களுக்கு மத்தியில், நேர்மையற்ற மனம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான மூவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் பீமசேனனும், இரட்டையரும் (நகுலனும், சகாதேவனும்) ஆவர் [3]. இவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(63) “ஓ! அர்ஜுனா, வேகமாக விரைந்து சென்று துரோணரின் அருகில் உள்ள குருக்களை விரட்டுவாயாக. ஆசானின் {துரோணரின்} பாதுகாவலர்களை அவர் இழந்தால், பாஞ்சாலர்களால் அவரை எளிதில் கொல்ல முடியும்” என்று உரக்கச் சொன்னார்கள்.(64) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கௌரவர்களை எதிர்த்து திடீரென விரைந்தான், அதே வேளையில் திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் துரோணரை எதிர்த்து விரைந்தனர். உண்மையில், (துரோணரின் தலைமையிலான) அந்த ஐந்தாம் நாளில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரப் போராளிகள் கலங்கடிக்கப்பட்டு, பெரும் வேகத்துடன் (அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்}) நொறுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(65)
[3] வேறொரு பதிப்பில், "ஒழுங்கில்லாதவர்களும், மகாரதர்களுமான பீமன், நகுலன், ஸஹதேவன் என்கிற மூன்று பாண்டு புத்திரர்கள் இருந்தார்களே அவர்கள் தனஞ்சயனைக் குறித்து" என்றிருக்கிறது.
------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 190-ல் உள்ள சுலோகங்கள் :65
துரோணபர்வம் பகுதி 190-ல் உள்ள சுலோகங்கள் :65
ஆங்கிலத்தில் | In English |