Yudhishthira’s car touched the earth! | Drona-Parva-Section-191 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : துரோணரால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு; துரோணரைக் கொல்வதில் அறத்தைக் கைவிடுமாறு பாண்டவர்களைத் தூண்டிய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் ஆலோசனையைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; அர்ஜுனன் அஃதை ஏற்காதது; அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைப் பீமன் கொல்வது; அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகத் துரோணரிடம் சொன்ன பீமன்; பீமனை நம்பாத துரோணர், பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது; துரோணரை நிந்தித்த முனிவர்கள்; அஸ்வத்தாமனைக் குறித்து யுதிஷ்டிரனிடம் விசாரித்த துரோணர்; யுதிஷ்டிரன் சொன்ன பொய்; யுதிஷ்டிரனின் தேர் மண்ணைத் தொட்டது; கவலையில் மூழ்கிய துரோணர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பழங்காலத்தில் தானவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கிய சக்ரனை {இந்திரனைப்} போலப் பாஞ்சாலர்களுக்கு மத்தியில் துரோணர் பேரழிவை ஏற்படுத்தினார்.(1) வலிமையும், சக்தியும் கொண்ட பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்கள், துரோணரின் ஆயுதங்களால் கொல்லப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரைக் கண்டு அஞ்சவில்லை.(2) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரும் துரோணருடன் போரிடுவதற்காக, அவரை எதிர்த்து விரைந்தனர்.(3) துரோணரைச் சூழ்ந்து கொள்வதற்காக அவரை நோக்கி விரைந்து, அவரது கணைகளாலும், ஈட்டிகளாலும் கொல்லப்பட்ட அவர்களது ஓலங்களின் பேரொலி கடுமையானதாக இருந்தது.(4) அந்தப் போரில் சிறப்புமிக்கத் துரோணரால் பாஞ்சாலர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், அவரது ஆயுதங்கள் அனைத்துப் பக்கங்களையும் நிறைப்பதைப் பார்த்தும், பாண்டவர்களின் இதயத்துக்குள் அச்சம் நுழைந்தது.(5) அந்தப் போரில் குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பயங்கரமான பேரழிவைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் வெற்றியில் நம்பிக்கையற்றவர்களானார்கள்.(6)
அவர்கள் (தங்களுக்குள் ஒருவருக்கொருவர்), “வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த போர்வீரரான இந்தத் துரோணர், இளவேனில் காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் காட்டுத் தீயைப் போல நம் அனைவரையும் எரித்து விடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?(7) போரில் அவரைப் பார்ப்பதற்குக் கூட எவரும் தகுந்தவரல்லர். அறநெறிகளின் வழிகளை அறிந்த அர்ஜுனனோ, (அவன் மட்டுமே அவருக்கு இணையானவன் என்றாலும்) அவருடன் போரிட மாட்டான்” என்று சொல்லிக் கொண்டனர்.(8) துரோணரின் கணைகளால் பீடிக்கப்படும் குந்தியின் மகன்களைக் கண்டு அச்சத்தால் ஈர்க்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், அவர்களின் நலத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(9) “வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான இவரை, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களால் கூடப் போரில் பலத்தால் வெல்ல முடியாது.(10) எனினும், இவர் {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், மனிதர்களால் கொல்லப்படத்தக்கவர் ஆவார். பாண்டுவின் மகன்களே, தங்கத்தேரைக் கொண்ட துரோணர், போரில் நம் அனைவரையும் கொல்ல முடியாத வகையில், வெற்றியை ஈட்டுவதற்காக அறத்தை விட்டு, இப்போது சிறு சூழ்ச்சியை நீங்கள் பின்பற்ற வேண்டும்[1]. (தம் மகனான) அஸ்வத்தாமனின் வீழ்ச்சியில் அவர் போரிடுவதை நிறுத்துவார் என நான் நினைக்கிறேன்.(11,12) எனவே, ஏதாவதொரு மனிதன், போரில் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக அவரிடம் {துரோணரிடம்} சொல்லட்டும்” என்றான் {கிருஷ்ணன்}. எனினும், ஓ! மன்னா, இந்த அறிவுரையைக் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏற்கவில்லை.(13) பிறர் இஃதை ஏற்றனர். ஆனால், யுதிஷ்டிரனோ பெருங்கடினத்துடன் {பெரும் தயக்கத்துடனே} இஃதை ஏற்றுக் கொண்டான்[2].
[1] வேறொரு பதிப்பில், “பொற்றேருள்ள இந்தத் துரோணர், எல்லோரையும் யுத்தத்தில் கொல்லாமலிருக்கத்தக்க ஜயோபாயாத்தைத் தர்மத்தை விட்டும் நீங்கள் செய்ய வேண்டும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “எனவே, தங்க நிற குதிரைகளால் இழுக்கப்படும் துரோணர் நம் அனைவரையும் கொல்வதற்கு முன்னர், ஓ பாண்டுவின் மகன்களே, அறத்தைக் கைவிட்டுப் போரில் வெற்றி அடைவதற்காக இப்போது சூழ்ச்சிகளைக் கைக்கொள்வீராக.” என்றிருக்கிறது. சூழ்ச்சி, ஜயோபாயம், சூழ்ச்சிகள் என்று மூன்று பதிப்புகளிலும் மூன்று விதமாக இருக்கிறது.[2] வேறொரு பதிப்பில், “அரசரே, இந்த விஷயத்தைப் பற்றிக் குந்திபுத்திரனான தனஞ்சயன் பிரியப்படவில்லை. மற்றவர்களனைவரும் பிரியப்பட்டார்கள். அதிகப் பிரயாஸத்தினாலே யுதிஷ்டிரர் சம்மதித்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஆனால், ஓ மன்னா, கிருஷ்ணனின் இந்த அறிவுரையைக் குந்தியின் மகனான அர்ஜுனன் ஏற்கவில்லை. பிறர் அஃதை ஏற்றனர். யுதிஷ்டிரனோ, பெரும் தயக்கத்துடன் அஃதை ஏற்றுக் கொண்டான்” என்றிருக்கிறது.
பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்லும் பயங்கரமான கதாயுதம் ஒன்றால், தன் படையைச் சேர்ந்ததும், மாலவர்களின் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்டதுமான பெரும் யானையைக் கொன்றான்[3].(14,15) பிறகு அந்தப் போரில் சற்றே நாணத்தோடு துரோணரை அணுகிய பீமசேனன், “அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்று உரக்கக் கூவினான்.(16) அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட அந்த யானை இப்படிக் கொல்லப்பட்டிருந்தாலும், பீமன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொன்னான். உண்மைச் செய்தியைத் தன் மனத்தில் கொண்டு, உண்மையற்றதையே அவன் {பீமன்} சொன்னான்.(17) ஏற்றுக் கொள்ள முடியாத பீமனின் அந்த வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்த துரோணரின் அங்கங்கள் நீரில் கரையும் மண்ணைப் போல் கரைவதாகத் தெரிந்தது.(18) எனினும், விரைவில் தன் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலை நினைவுகூர்ந்த அவர் {துரோணர்}, அதைத் தவறான செய்தி என்று கருதினார். எனவே அவனது கொலையைக் கேட்ட அவர் தைரியத்தை இழக்காதவராக இருந்தார்.(19) உண்மையில், விரைவாக உணர்வுகள் மீண்ட அவர் {துரோணர்}, எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவன் தமது மகன் {அஸ்வத்தாமன்} என்பதை நினைவுகூர்ந்து ஆறுதலை அடைந்தார்.(20)
[3] இங்கே பீமசேனன் தன் சொந்தப் படையைச் சேர்ந்த யானையைக் கொன்றதாக இருக்கிறது. ஆனால், மாலவர்களோ கௌரவப் படையை ஆதரித்தவர்களாவர். வேறொரு பதிப்பில் இது "மஹாபாகுபலமுள்ளவனான பீமசேனன், சேனையிலுள்ள அஸ்வத்தாமா என்கிற பேருடையதும், பகைவர்களை நாசம் செய்வதும், கோரமானதும், மாலவ தேசத்தரசனான இந்திரவர்மாவினுடையதுமான பெரிய யானையைக் கதையினாலே நாசம் செய்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், ஓ ஏகாதிபதி, மகத்தானதும், எதிரிகளை நொறுக்குவதும், அஸ்வத்தாமன் என்று அழைக்கப்படுவதும், மாலவர்களின் ஆட்சியாளன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதுமான யானையைத் தன் கதாயுதத்தால் கொன்றான்" என்றிருக்கிறது. இம்மூன்று பதிப்புகளில் மன்மதநாததத்தரின் பதிப்பே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.
பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்து, தம்மைக் கொல்வதற்காக விதிக்கப்பட்ட அந்த வீரனைக் கொல்ல விரும்பிய அவர் {துரோணர்}, கங்க இறகுகளைக் கொண்ட ஆயிரம் கூரிய கணைகளால் அவனை மறைத்தார்.(21) பிறகு, பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலத் தேர்வீரர்கள் இருபதாயிரம் {20,000} பேர், போரில் இப்படித் திரிந்து கொண்டிருந்த அவரைத் தங்கள் கணைகளால் மறைத்தனர்.(22) மழைக்காலங்களில் மேகங்களால் மறைக்கப்படும் சூரியனுக்கு ஒப்பாக, ஓ! ஏகாதிபதி, அந்தக் கணைகளால் முழுமையாக மறைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரரை அதற்கு மேலும் எங்களால் காண முடியவில்லை.(23) கோபத்தால் நிறைந்தவரும், அந்தத் துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்களுக்கு அழிவை உண்டாக்க விரும்பியவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தத் துரோணர் பாஞ்சாலர்களின் அந்தக் கணைகள் யாவையும் விலக்கி, பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். அந்நேரத்தில் துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தார்.(24,25) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சோமகர்கள் அனைவரையும் கொன்று, பெரும் காந்தியுடன் கூடியவராகத் தெரிந்தார்.(26)
அச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கரப் போரில், பாஞ்சாலர்களின் தலைகளை வீழ்த்திய அவர் {துரோணர்}, முள்பதித்த கதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அவர்களின் பருத்த கரங்களையும் அறுத்தார்.(27) உண்மையில் அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} போரில் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், புயலால் வேரோடு சாய்ந்த மரங்களைப் போல விழுந்து பூமியில் சிதறிக் கிடந்தனர்.(28) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்து கிடந்த குதிரைகள் மற்றும் யானைகளால், குருதியும், சதையும் கலந்து சேறாக இருந்த பூமியானது கடக்கமுடியாததாக இருந்தது.(29) அந்தப் போரில் இருபதாயிரம் பாஞ்சாலத் தேர்வீரர்களைக் கொன்ற துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தார்.(30) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன், அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால், வசுதானனின் [4] தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார்.(31) மீண்டும் அவர், ஐநூறு {500} மத்ஸ்யர்களையும், ஆறாயிரம் {6,000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} குதிரைகளையும் கொன்றார்.(32)
[4] இந்த வசுதானன் பன்சு {பங்சு, பம்சு} நாட்டின் மன்னனாவான். இந்த மன்னன் யுதிஷ்டிரனின் இந்திரப்பிரஸ்த சபை உறுப்பினராகவும் இருந்தவனாவான். சபாபர்வம் பகுதி 51ல் இவன் யுதிஷ்டிரனுக்கு 26 யானைகளையும், இரண்டாயிரம் குதிரைகளையும் பரிசாக அளிக்கிறான். உத்யோக பர்வம் பகுதி 152 மற்றும் 172, துரோண பர்வம் பகுதி 23 ஆகியவற்றிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. வசுதேவன் {வசுதானன்} என்ற பெயரில் பாஞ்சால இளவரசன் ஒருவனும் இருந்தான். அவன் துரோண பர்வம் பகுதி 21ல் துரோணரால் கொல்லப்பட்டான்.
க்ஷத்திரிய குலத்தை முற்றாக அழிப்பதற்காகக் களத்தில் நின்று கொண்டிருந்த துரோணரைக் கண்ட முனிவர்கள் விஸ்வாமித்ரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், கசியபர், அத்ரி, ஸிகதர்கள் {லிகதர்கள்}, பிருஸ்னிகள், கர்க்கர் {கர்க்கர்கள்}, வாலகில்யர்கள், மரீசிபர்கள், பிருகுவின் வழித்தோன்றல்கள், அங்கிரஸ் {அங்கிரசர்கள்} ஆகியோரும், நுண்ணிய வடிவங்களைக் கொண்ட {மெலிந்த உடலைக் கொண்ட} இன்னும் பிற முனிவர்களும், துரோணரை பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பி, வேள்விக்காணிக்கைகளைச் சுமப்பவனை {அக்னியைத்} தங்கள் தலைமையில் கொண்டு அங்கே விரைந்து வந்து,(33-35) போர்க்கள இரத்திமானத் துரோணரிடம், “நீ நேர்மையற்ற வகையில் {அநீதியாகப்} போரிடுகிறாய். உன் மரணத்திற்கான நேரம் வந்துவிட்டது.(36) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, ஓ! துரோணா, இங்கே நிற்கும் எங்களைக் காண்பாயாக. இதற்கு மேலும், இது போன்ற மிகக் கொடூரமான செயல்களைச் செய்வது உனக்குத் தகாது.(37) வேதங்களையும், அதன் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்தவன் நீ. உண்மைக்குக் கட்டுப்படும் கடமைகளில் {செயல்களில்} அர்ப்பணிப்புள்ளவன் நீ. குறிப்பாக, நீ ஒரு பிராமணனுமாவாய். இது போன்ற செயல்கள் உனக்குத் தகாது.(38) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, உன்னை மறைத்துக் கொண்டிருக்கும் குற்றத்திரையை விலக்குவாயாக. அழிவற்ற பாதையை இப்போது பின்பற்றுவாயாக. மனிதர்களின் உலகில் நீ வசிக்க வேண்டிய காலம் இப்போது முழுமையடைந்துவிட்டது.(39) இப்பூமியின் ஆயுதங்கள் குறித்து அறியாத மனிதர்களைப் பிரம்மாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு நீ எரித்துவிட்டாய். ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, நீ செய்த இந்தச் செயல் நேர்மையானதல்ல {நீதிக்குக் கட்டப்பட்டது அல்ல}.(40) ஓ! துரோணா, தாமதமில்லாமல் போரில் ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக. பூமியில் நீண்ட காலம் காத்திருக்காதே. ஓ! மறுபிறப்பாளா, இது போன்ற பாவச்செயலை மீண்டும் செய்யாதே” என்றனர்.(41)
அவர்களது இந்த வார்த்தைகளையும், பீமசேனனின் வார்த்தைகளையும் கேட்ட, துரோணர், தன் எதிரே திருஷ்டத்யும்னன் நிற்பதைக் கண்டு, போரில் உற்சாகத்தை மிகவும் இழந்தார்.(42) துயரால் எரிந்து, மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {துரோணர்} குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் தன் மகன் (அஸ்வத்தாமன்) கொல்லப்பட்டானா, இல்லையா என்பது குறித்து விசாரித்தார்.(43) மூவுலகங்களின் அரசுரிமைக்காகக் கூட யுதிஷ்டிரன் பொய்யேதும் பேச மாட்டான் என்று துரோணர் உறுதியாக நம்பினார்.(44) இக்காரணத்திற்காகவே, அந்தப் பிராமணக் காளை {துரோணர்} வேறு யாரிடமும் கேட்காமல் யுதிஷ்டிரனிடம் கேட்டார். அவர், யுதிஷ்டிரனின் குழந்தைப் பருவத்திலிருந்தே, பின்னவனிடமே உண்மையை எதிர்பார்த்திருந்தார்.(45)
அதே வேளையில், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாண்டவர்கள் அனைவரையும் பூமியின் பரப்பில் இருந்து துடைத்து விடக்கூடியவர் என்பதை அறிந்த கோவிந்தன் {கிருஷ்ணன்} பெரும் கவலை கொண்டான். யுதிஷ்டிரனிடம் பேசிய அவன் {கிருஷ்ணன்},(46) “துரோணர், சினத்தால் நிறைந்த நிலையில் அரை நாள் போரிட்டாலும் உமது படை நிர்மூலமாக்கப்படும் என்பதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்.(47) துரோணரிடம் இருந்து எங்களைப் பாதுகாப்பீராக. இத்தகு சூழ்நிலையில், உண்மையை விடப் பொய்மையே சிறந்தது. ஒருவனின் உயிரைக் காப்பதற்காக உண்மையற்றதைச் சொல்வதால், பாவம் அவனைத் தீண்டாது.(48) பெண்களிடமோ, திருமணங்களிலோ, பசுவைக் காப்பதற்கோ, ஒரு பிராமணரைக் காப்பதற்கோ உண்மையற்றதைச் சொல்வதில் எந்தப் பாவமும் இல்லை[5]” என்றான்.(49) கோவிந்தனும் யுதிஷ்டிரனும் இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது (மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசிய) பீமசேனன், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம துரோணர் கொல்லப்படத்தக்க வழிமுறைகளைக் கேட்ட உடனேயே,(50) போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, சக்ரனின் யானைக்கு {ஐராவதத்துக்கு} ஒப்பானதும், மாலவர்களின் தலைவனான இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், உமது படைக்குள் இருந்ததுமான ஒரு வலிமைமிக்க யானையைக் கொன்றேன். பிறகு துரோணரிடம் சென்ற நான், அவரிடம், “ஓ! பிராமணரே, அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான். போரிடுவதை நிறுத்துவீராக” என்று சொன்னேன்.(51,52) ஓ! மனிதர்களில் காளையே, என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஆசான் நம்பவில்லை. வெற்றியில் விருப்பமுள்ள நீர், கோவிந்தனின் அறிவுரையை ஏற்பீராக.(53) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சரத்வான் மகளுடைய மகன் {அஸ்வத்தாமன்} மாண்டான் என்று துரோணரிடம் சொல்வீராக. உம்மால் {இப்படிச்} சொல்லப்பட்டால், அந்தப் பிராமணர்களில் காளை ஒருபோதும் போரிடமாட்டார்.(54) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, மூவுலகங்களில் உண்மை நிறைந்தவரென்ற மதிப்பை நீர் பெற்றிருக்கிறீர்” என்றான் {பீமன்}.(55)
[5] “பம்பாய்ப் பதிப்பில் இந்தச் சுலோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும், இதன் உண்மைத்தன்மையில் எந்த ஐயமும் இருக்க முடியாது” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பிலும் இது தவிர்க்கப்பட்டே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தச் சுலோகம் கங்குலியில் உள்ளதைப் போலவே இடம்பெற்றிருக்கிறது.
பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டும், கிருஷ்ணனின் ஆலோசனைகளால் தூண்டப்பட்டும், தவிர்க்கப்பட முடியாத விதியின் காரணத்தாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தான் என்ன சொல்ல வேண்டும் என்று {தன் தரப்பால்} விரும்பப்படுகிறதோ அதை யுதிஷ்டிரன் மனத்தால் ஏற்றான். உண்மையற்ற ஒன்றைச் சொல்ல அஞ்சியவனும், வெற்றியடையும் விருப்பத்தாலான ஆர்வத்தோடு கூடியவனுமான யுதிஷ்டிரன்,(56) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்பதைத் துல்லியமாகவும், யானை என்ற வார்த்தையைத் துல்லியமில்லாமலும் (பெயருக்குப் பின்னால்) சேர்த்துச் சொன்னான்[6]. அதுவரை பூமியின் பரப்பில் இருந்து நான்கு விரல்கட்டை அளவு உயரத்தில் யுதிஷ்டிரனின் தேர் நின்றிருந்தது.(57) எனினும், அவன் {யுதிஷ்டிரன்} அந்த உண்மையற்றதை {பொய்யைச்} சொன்ன பிறகு, அவனது (வாகனம் மற்றும்) விலங்குகள் பூமியைத் தொட்டன. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், யுதிஷ்டிரனிடம் இருந்து அவ்வார்த்தைகளைக் கேட்டதும்,(58) தன் மகன் {அஸ்வத்தாமன்} மாண்ட ({மாண்டான் என்ற} நம்பிக்கையில்) துயரால் பீடிக்கப்பட்டு, மனத்தளர்வின் வசமடைந்தார். முனிவர்களின் வார்த்தைகளை மீண்டும் நினைத்த அவர், உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராகப் பெரிய குற்றத்தைச் செய்தவராகத் தன்னைக் கருதினார். தன் மகனின் மரணத்தைக் குறித்து இப்போது கேட்டதும், அவர் முற்றிலும் உற்சாகமற்றவராக ஆனார்; திருஷ்டத்யும்னனைக் கண்டதால் கவலையில் நிறைந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவரால் {துரோணரால்} அதற்கு மேலும் முன்பு போலப் போரிட முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}.(59-60)
----------------------------------------------------------------------------------------------[6] “அஸ்வத்தாமாஹத: குஞ்சர:” என்பது மூலம். இங்கே “அஸ்வத்தாமாஹத: {அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்} என்ற வார்த்தைகளை உரக்கச் சொன்ன யுதிஷ்டிரன், குஞ்சரம் {யானை} என்ற சொல்லை மெல்ல {மென்மையாகச்} சொன்னான்“ என்பது பொருள். கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் என்ற யானை; அல்லது அஸ்வத்தாமனே கொல்லப்பட்ட யானை என்ற தொனியில் யுதிஷ்டிரன் சொல்லியிருக்க வேண்டும்.
துரோணபர்வம் பகுதி 191-ல் உள்ள சுலோகங்கள் : 60
ஆங்கிலத்தில் | In English |