Satyaki rescued Dhrishtadyumna! | Drona-Parva-Section-192 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 09)
பதிவின் சுருக்கம் : துரோணர் அழைத்தும், தோன்றாமல் போன தெய்வீக ஆயுதங்கள்; துரோணரின் ஆயுதங்கள் தீர்ந்து போனது; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான கடும் மோதல்; திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி; சாத்யகியின் வீரத்தை மெச்சிய அர்ஜுனன்; சாத்யகியின் ஆற்றலை இரு படைகளும் புகழ்ந்ததாகச் சொன்ன சஞ்சயன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பெருங்கவலையில் மூழ்கியிருப்பதையும், துயரால் கிட்டத்தட்ட உணர்வுகளை இழந்திருப்பதையும் கண்டவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி விரைந்து சென்றான்.(1) ஒரு பெரும் வேள்வியில், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனின் {அக்னியின்} மூலம், மனிதர்களின் ஆட்சியாளனான துருபதனால் அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} துரோணரின் அழிவுக்காகவே பெறப்பட்டான்.(2) துரோணரைக் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, வெற்றியைத் தரவல்லதும், உறுதிமிக்கதும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதும், பெரும் பலத்துடன் கூடிய நாண்கயிற்றைக் கொண்டதும், மீற முடியாததும், தெய்வீகமானதுமான வில்லொன்றை எடுத்தான். அவன் {திருஷ்டத்யும்னன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், நெருப்பின் காந்தியைக் கொண்டதுமான கடுங்கணை ஒன்றை அதில் பொருத்தினான்.
நெருப்பின் கடுந்தழல்களுக்கு ஒப்பானதும், அவனது வட்டமான வில்லுக்குள் அடங்கி இருந்ததுமான அந்தக் கணையானது, பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் உள்ள {பரிவேஷத்துடன் கூடிய} பெரும் காந்தியுடைய கூதிர் காலச் சூரியனுக்கு ஒப்பாக இருந்தது.(3-5) அந்தச் சுடர்மிக்க வில்லானது பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} பலத்துடன் வளைக்கப்படுவதைக் கண்ட துருப்புகள், (உலகின்) இறுதி நேரம் வந்துவிட்டது என்றே கருதினர்.(6) அந்தக் கணை தன்னை நோக்கிக் குறிவைக்கப்படுவதைக் கண்ட அந்த வீரப் பரத்வாஜ மகன் {துரோணர்}, தன் உடலின் இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்தார்.(7) அந்தக் கணையைக் கலங்கடிப்பதற்காக ஆசான் {துரோணர்} கவனமாகத் தயாரானார். எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மா கொண்டவரின் {துரோணரின்}ஆயுதங்கள், அவரது உத்தரவுக்குப் பிறகும் தோன்றாமல் போயின[1].(8)
[1] “அனைத்து தெய்வீக ஆயுதங்களும் தங்களை இருப்பு அழைக்கத் தெரிந்தவனின் உத்தரவுக்கேற்பத் தோன்றும் உயிர் கொண்டவையே ஆகும். எனினும், வழக்கமான சூத்திரங்களின் படி இருப்புக்கு அழைக்கப்பட்டாலும், மரணத்திற்கான நேரம் வந்த அந்த மனிதரை அவை கைவிட்டன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
நான்கு நாட்கள் மற்றும் இரவுகளாக அவர் இடையறாமல் தமது ஆயுதங்களை ஏவிக்கொண்டிருந்தாலும், அவை தீர்ந்துவிடவில்லை. எனினும், அந்த ஐந்தாம் நாளின் மூன்றாம் பகுதியில் அவரது ஆயுதங்கள் தீர்ந்தன.(9) தன் கணைகள் தீர்ந்து போனதைக் கண்டும், தமது மகனின் {அஸ்வத்தாமனின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டும், தன் உத்தரவுக்கு ஏற்பத் தோன்ற வேண்டிய தெய்வீக ஆயுதங்களின் விருப்பமின்மையின் காரணமாகவும்,(10) முனிவர்களின் வார்த்தைகளில் உந்தப்பட்டும் அவர் {துரோணர்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பினார். பெரும் சக்தியால் நிறைந்திருந்தாலும், அவரால் முன்பு போலப் போரிட முடியவில்லை.(11) பிறகு, அங்கிரஸ் முன்பு தமக்குக் கொடுத்திருந்த மற்றொரு தெய்வீக வில்லையும், பிராமணனின் சாபத்திற்கு ஒப்பான சில குறிப்பிட்ட கணைகளையும் எடுத்துக் கொண்ட அவர், திருஷ்டத்யும்னனுடன் போரிடுவதைத் தொடர்ந்தார்.(12) அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} அடர்த்தியான கணை மாரியால் மறைத்த அவர், சினத்தால் நிறைந்து, தமது கோபக்கார எதிரியைச் {திருஷ்டத்யும்னனை} சிதைத்தார்.(13) அவர் {துரோணர்} தன் கூரிய கணைகளைக் கொண்டு அந்த இளவரசனின், கணைகள், கொடிமரம் மற்றும் வில் ஆகியவற்றை நூறு துண்டுகளாக அறுத்தார். பிறகு அவர் {துரோணர்} தன் எதிராளியின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியை வீழ்த்தினார்.(14)
அப்போது திருஷ்டத்யும்னன், புன்னகைத்தபடியே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒரு கூரிய கணையால் துரோணரின் நடுமார்பைத் துளைத்தான்.(15) அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, அம்மோதலில் தன்னிலையை இழந்த அந்த வலிமைமிக்க வில்லாளி, பிறகு, அகன்ற தலை கொண்ட கூரிய கணை {பல்லம்} ஒன்றால் மீண்டும் திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தார்.(16) உண்மையில் அந்த வெல்லப்பட முடியாத துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் காதாயுதம் மற்றும் வாளைத் தவிர அவன் {திருஷ்டத்யும்னன்} கொண்டிருந்த ஆயுதம் மற்றும் விற்கள் அனைத்தையும் அறுத்தார்.(17) சினத்தால் நிறைந்த அவர் {துரோணர்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, எந்த எதிரியின் உயிரையும் எடுக்க வல்லவையான ஒன்பது கூரிய கணைகளால் கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் துளைத்தார்.(18)
அப்போது அளக்க முடியாத ஆன்மா {தைரியம்} கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தன் தேரின் குதிரைகளோடு தன் எதிரியின் குதிரைகளைக் கலக்கச் செய்தான்.(19) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சிவப்பு நிறம் கொண்டவையும், புறாக்களின் நிறத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகள் இப்படி ஒன்றோடொன்று கலந்தது மிக அழகாகத் தெரிந்தது.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் இப்படி ஒன்றோடொன்று கலந்த அந்தக் குதிரைகள் மழைக்காலங்களில் மின்னலின் சக்தியூட்டப்பட்டு முழங்கும் மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(21) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த இருபிறப்பாளர் {பிராமணரான துரோணர்}, திருஷ்டத்யும்னனுடைய தேரின் ஏர்க்கால் இணைப்புகளையும், சக்கர இணைப்புகளையும், தேரின் (பிற) இணைப்புகளையும் அறுத்தார்.(22)
தனது வில்லை இழந்து, தேரற்றவனாக, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், பெரும் துயரத்தில் விழுந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான்.(23) சினத்தால் நிறைந்தவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், அந்தக் கதாயுதம் தன் மீது வீசப்படத் தயாராக இருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கூரிய கணைகளால் அஃதை அறுத்தார்.(24) துரோணரின் கணைகளால் தன் கதாயுதம் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த மனிதர்களில் புலி (பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}), குறையற்ற ஒரு வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(25) அந்தச் சூழ்நிலையில், உயர் ஆன்மப் போர்வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஐயமறத் தீர்மானமாக இருந்தான்.(26) சில நேரங்களில் தேர்க்கூட்டில் பதுங்கியும், சிலநேரங்களில் தன் தேரின் ஏர்க்கால்களில் நின்றபடியும் இருந்த அந்த இளவரசன், தன் வாளை உயர்த்தியபடியும், பிரகாசமான தன் கேடயத்தைச் சுழற்றியபடியும் திரிந்து கொண்டிருந்தான்[2].(27) வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மடமையினால் ஒரு கடினமான சாதனையை அடைய விரும்பி, அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மார்பைத் துளைக்க எண்ணினான்.(28) அவன் {திருஷ்டத்யும்னன்}, சில நேரங்களில் நுகத்தடியிலும், சில நேரங்களில் துரோணருடைய சிவப்பு குதிரைகளின் இடுப்புக்குக் கீழும் இருந்தான். அவனது இந்த நகர்வுகளை {இயக்கங்களைத்} துருப்புகள் அனைத்தும் உயர்வாகப் பாராட்டின.(29) உண்மையில், அவன் நுகத்தடியின் கட்டுகளுக்கு மத்தியிலோ, அந்தச் சிவப்புக் குதிரைகளுக்குப் பின்புறமோ இருக்கையில், அவனைத் தாக்க எந்த வாய்ப்பையும் துரோணர் காணவில்லை. இவை யாவும் காண்பதற்கு மிக அற்புதமானவையாக இருந்தன.(30)
[2] வேறொரு பதிப்பில், “அவ்வாறு கத்தியையும் கேடகத்தையுங் கையிலெடுக்கின்ற பாஞ்சால ராஜகுமாரன் மகாத்மாவும் ஆசார்ய முக்கியருமான துரோணருடைய வதத்திற்கு ஸமயம் வந்ததென்று ஸம்சயமற்று நன்றாக எண்ணினான். அவன் கத்தியையும், தேஜஸுள்ள கேடகத்தையுங் கையிலெடுத்துத் தன் ரதத்தினுடைய ஏர்க்கால்வழியாக ரதமத்தியிலிருக்கின்ற துரோணரிடம் சென்றான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 26 மற்றும் 27ம் சுலோகங்கள், “இந்தச் சூழ்நிலையில் பாஞ்சால இளவரசன், சிறப்புமிக்கப் பெரும் வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பினான் என்பதில் ஐயமில்லை. பிறகு தன் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்து, அந்தத் தேரின் ஏர்க்காலில் பயணித்தபடியே தன் வாளையும், பிரகாசமான கேடயத்தையும் உயர்த்திக் கொண்டு, தமது தேரில் அமர்ந்திருந்த பின்னவரை {துரோணரை} அணுக முயன்றான்” என்றிருக்கிறது.
அந்தப் போரில் துரோணர் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் இயக்கங்களும், இறைச்சித் துண்டு ஒன்றிற்காக ஆகாயத்தில் திரியும் ஒரு பருந்துக்கு ஒப்பானவையாக இருந்தன.(31) அப்போது துரோணர், ஓர் ஈட்டியின் மூலமாகத் (தமக்குச் சொந்தமான) சிவப்புக் குதிரைகளைத் தாக்கிவிடாதவாறு, தன் எதிராளியின் வெண்குதிரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் துளைத்தார்[3].(32) திருஷ்டத்யும்னனுடைய அந்தக் குதிரைகள் உயிரையிழந்து பூமியில் விழுந்தன. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருடைய சிவப்புக் குதிரைகள், திருஷ்டத்யும்னனுடைய தேரில் சிக்கியிருந்த நிலையில் இருந்து விடுபட்டன.(33) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் தன் குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போராளிகளில் முதன்மையானவனுமான பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(34) அந்த வாள்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரை இழந்தாலும், தன் வாளை எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வினதையின் மகன் (கருடன்) ஒரு பாம்பின் மீது வேகமாகப் பாய்வதைப் போலத் துரோணரை நோக்கிப் பாய்ந்தான்.(35)
[3] இங்கே பம்பாய்ப் பதிப்பைப் பின்பற்றியிருப்பதாகக் கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “துரோணர், சிவப்பான குதிரைகளை விட்டுவிட்டுத் திருஷ்டத்யும்னனுடைய புறா நிறமுள்ள குதிரைகளெல்லாவற்றையும் தாழை மடல் போன்ற முனையுள்ள சக்தியினால் ஒவ்வொன்றாகப் பிளந்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அதன்பின்னர், பலமிக்கத் துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, தன் எதிராளியுடைய நீல நிறக் குதிரைகளை ஒரு சக்திவாய்ந்த கணையால் ஒன்றன்பின் ஒன்றாகக் கொன்றார்” என்றிருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அத்தருணத்தில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பழங்காலத்தில் ஹிரண்யகசிபுவைக் கொல்ல விரும்பிய விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருந்தான்.(36) மேலும் அவன் {திருஷ்டத்யும்னன்} பல்வேறு பரிணாமங்களைச் செய்தான். உண்மையில் அந்தப் பிருஷதன் மகன், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, நன்கு அறியப்பட்டவையும், பல்வேறு வகைகளிலான இருபத்தோரு நகர்வுகளையும் {இயக்கங்களையும்}[4] களத்தில் திரிந்தபடியே வெளிக்காட்டினான்.(37) வாள்தரித்துக் கையில் கேடயத்துடன் கூடிய அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் வாளை உயரச் சுழற்றி {பிராந்தம்}, பக்கத்தூண்டுதல்கள் செய்து {உத்ப்ராந்தம்}, முன்நகர்ந்து விரைந்து {ஆவித்தம்}, பக்கவாட்டில் ஓடி {ஆப்லுதம்}, உயரக் குதித்து {ப்ரஸ்ருதம்}, தன் எதிராளிகளின் பக்கங்களை {விலாப்புறங்களைத்} தாக்கி {ஸ்ருதம்}, பின்புறமாக விலகி {பரிவ்ருத்தம்}, எதிரியை நெருங்கியும் {நிவ்ருத்த சம்பாதம்} மற்றும் அவர்களைக் கடுமையாக அழுத்தியபடியும் {சமுதீர்ணம்} திரிந்து கொண்டிருந்தான். அவற்றை நன்றாகப் பயின்ற பிறகு, அவன் {திருஷ்டத்யும்னன்}, பாரதம், கௌசிகம், சாத்வதம் என்ற பரிமாணங்களையும் காட்டியபடியே துரோணருக்கு அழிவை உண்டாக்குவதற்காக அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான் [5].
[4] வாள்போரின் இருபத்தோரு முறைகள்:[5] வேறொரு பதிப்பில், “அந்தப் பார்ஷதன் கத்தியையுங் கேடகத்தையுங் கையிலெடுத்துக் கொண்டு 1.பிராந்தம், 2.உத்ப்ராந்தம், 3.ஆவித்தம், 4.ஆப்லுதம், 5.ப்ரஸ்ருதம், 6.ஸ்ருதம், 7.பரிவ்ருத்தம், 8.நிவ்ருத்த ஸம்பாதம், 9.ஸமுதீர்ணம், என்கிற மார்க்கங்களைக் காண்பித்தான். அவன் யுத்தத்தில் துரோணரைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்துடன் கைத்தேர்ச்சியினால் 1.பாரதம், 2.கௌசிகம், 3.ஸாத்வதம் என்கிற (கத்தி சுழற்றும்) வகைகளையுங் காண்பித்துக் கொண்டு சஞ்சரித்தான்” என்றிருக்கிறது.
கையில் வாளுடனும், கேடயத்துடனும் களத்தில் திரிந்து கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் அந்த அழகிய பரிணாமங்களைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மேலும் அங்கு இருந்த தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அப்போது மறுபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், அந்தப் போரின் நெருக்கத்தில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே, திருஷ்டத்யும்னனின் வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கேடயத்தையும் அறுத்தார். மிக அருகில் இருந்து போரிட்ட அந்தத் துரோணர் ஏவிய கணைகள் {வைஸ்திகங்கள்}, ஒரு முழம் அளவு நீளத்திற்கே இருந்தன[6].(38-42) அத்தகு கணைகள் நெருங்கிய போரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சரத்வான் மகன் (கிருபர்), பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோரைத் தவிர அவ்வகையிலான கணைகள் வேறு எவரிடமும் இல்லை.(43) அத்தகு கணைகளைப் பிரத்யும்னன், யுயுதானன் {சாத்யகி}, அபிமன்யு ஆகியோரும் வைத்திருந்தனர்.
[6] வேறொரு பதிப்பில், “நெருங்கி நின்று செய்யும் போரில் ஸமீபத்திலுள்ள பகைவர்களை நன்றாக அடிக்கும் திறமைவாய்ந்த பன்னிரண்டங்குல நீளமுள்ள “வைஸ்திகம்” என்னும் பாணங்கள் துரோணரிட்ம உள்ளன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
பிறகு அந்த ஆசான் {துரோணர்}, தம் சொந்த மகனைப் {அஸ்வத்தாமனைப்} போன்ற தமது அந்தச் சீடனைக் {திருஷ்டத்யும்னனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகம் கொண்ட வலிமையான கணையொன்றைத் தன் வில்லின் நாணில் பொருத்தினார். எனினும், உமது மகனும் {துரியோதனனும்}, உயர் ஆன்மக் கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணையைப் பத்து கணைகளால் வெட்டிய சாத்யகி, துரோணருக்கு அடிபணியும் தருவாயில் இருந்த திருஷ்டத்யும்னனைக் காத்தான்.(44-46) அப்போது கேசவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (குரு போர்வீரர்களின்) தேர்த்தடங்களில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவனும், துரோணர், கர்ணன் மற்றும் கிருபரின் கணைகள் தாக்கும் தொலைவில் இருந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியைக் கண்டனர். “நன்று, நன்று” என்று சொன்ன அவர்கள் இருவரும், அந்தப் போர்வீரர்கள் அனைவரின் தெய்வீக ஆயுதங்களையும் இப்படி அழித்துக் கொண்டிருந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகியை உரக்கப் பாராட்டினர். பிறகு கேசவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} குருக்களை நோக்கி விரைந்தனர்.(47-49)
கிருஷ்ணனிடம் பேசிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மது குலத்தைத் தழைக்க வைப்பவனும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, என்னையும், இரட்டையரையும் {நகுல-சகாதேவரையும்}, பீமரையும், மன்னர் யுதிஷ்டிரரையும் மகிழச் செய்யும் வகையில், ஆசான் மற்றும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(50-51) விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவனான சாத்யகி, பயிற்சியால் அடைந்த திறனுடனும், செருக்கில்லாமலும் போரில் திரிந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(52) போரில் வெல்லப்பட முடியாத அவனைக் {சாத்யகியைக்} கண்டு இந்தத் துருப்புகள் அனைத்தும், (வானிலிருக்கும்) சித்தர்களும் ஆச்சரியத்தால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவனைப் {சாத்யகியைப்} புகழ்கின்றனர்” என்றான் {அர்ஜுனன்}. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இருபடைகளைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், அந்தச் சாத்வத வீரனுடைய {சாத்யகியுடைய} சாதனைகளின் விளைவாக அவனைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(53)
--------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 192-ல் உள்ள சுலோகங்கள்: 53
--------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 192-ல் உள்ள சுலோகங்கள்: 53
ஆங்கிலத்தில் | In English |