Dhrishtadyumna cuts off Drona’s head! | Drona-Parva-Section-193 | Mahabharata In Tamil
(துரோணவத பர்வம் – 10)
பதிவின் சுருக்கம் : துரியோதனன், கர்ணன் மற்றும் கிருபரோடு மோதிய சாத்யகி; துரோணரை எதிர்த்து விரையுமாறு தன் துருப்புகளைத் தூண்டிய யுதிஷ்டிரன்; தன்னைத் தாக்குபவர்களைப் பெரும் வீரத்தோடு எதிர்கொண்ட துரோணர், பிரம்மாஸ்திரத்தை மீண்டும் பயன்படுத்தியது; அஸ்வத்தாமனின் மரணம் குறித்துத் துரோணரிடம் மீண்டும் நினைவூட்டிய பீமன்; துயரடைந்த துரோணர், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்தில் கரைவது; சொர்க்கத்திலுள்ள சுடர்மிக்க ஒளிக்குள் நுழையும் துரோணர்; உயிரற்ற துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்; ஆசானை உயிருடன் அழைத்துவருமாறு கதறிய அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} சாதனைகளைக் கண்ட துரியோதனனும், பிறரும், சினத்தால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(1) கிருபர், கர்ணன் மற்றும் உமது மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரனை வேகமாக அணுகி, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(2) பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், பிற பாண்டவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், பெரும் வலிமை கொண்ட பீமசேனனும், (பாதுகாப்பதற்காக) சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(3) கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர், துரியோதனன் மற்றும் பிறர் அனைவரும் சாத்யகியின் மீது கணை மாரியைப் பொழிந்து அவனைத் தடுத்தனர்.(4) எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தத் தேர்வீரர்கள் அனைவரோடும் போரிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் திடீரென உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணைப் பொழிவைக் கலங்கடித்தான்.(5) உண்மையில் சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் தன்னை நோக்கிக் குறி வைக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமே முறையாகத் தடுத்தான்.(6)
அரசப் போராளிகளுக்குள்ளான மோதலில் அந்தப் போர்க்களமானது, பழங்காலத்தில் சினத்தால் நிறைந்த ருத்ரன், உயிரினங்கள் அனைத்தையும் அழித்த காட்சிக்கு ஒப்பாகப் பல கொடூரக் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதக் கரங்கள் மற்றும் தலைகள், (தேர்களில்) விழுந்த குடைகள், சாமரங்கள் ஆகியன,(8) அந்தப் போர்க்களத்தில் குவியலாகக் கிடப்பது காணப்பட்டது. உடைந்த தேர்கள் மற்றும் சக்கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்ட பெருங்கரங்கள் ஆகியவையும், உயிரையிழந்தவர்களான துணிச்சல்மிக்கக் குதிரை வீரர்களும் அந்தப் பூமியில் அடர்த்தியாகப் பரவிக் கிடந்தனர். ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில், கணைகளின் பாய்ச்சலில் சிதைந்து போன பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள்,(9,10) உருளுவதோ, வலியால் தரையில் புரளுவதோ, மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருப்பதோ காணப்பட்டது.
பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தன் போர்வீரர்களுடன் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், “பெரும் தேர்வீரர்களே, உங்கள் திறன் அனைத்தையும் வெளிப்படுத்தியபடியே குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து விரைவீராக.(12) அதோ பிருஷதனின் வீரமகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரிடம் போரிடுகிறான். தன் வலிமையால் இயன்ற அளவுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல முயல்கிறான்.(13) இந்தப் பெரும்போரில் அவன் வெளிப்படுத்தும் தன்மைகளைக் கண்டால், சினத்தால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்}, இன்று துரோணரை வீழ்த்துவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) அனைவரும் ஒன்று சேர்ந்து குடத்தில் பிறந்தவரோடு {துரோணரோடு} போரிடுவீராக” என்றான். யுதிஷ்டிரனால் இப்படி ஆணையிடப்பட்ட சிருஞ்சயர்கள் அனைவரும்,(15) அந்தப் பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கொல்வதற்காகப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.
வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தாம் இறக்கப் போகிறோம் என்பதை உறுதியாக அறிந்தாலும், முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களை எதிர்த்து வேகமாக விரைந்தார். துல்லிய இலக்கைக் கொண்ட அந்தத் துரோணர் இப்படிச் சென்ற போது பூமியானது பயங்கரமாக நடுங்கியது.(16,17) (பகைவரின்) படையணிகளுக்குள் அச்சத்தைத் தூண்டும் வகையில் கடுங்காற்று வீசத் தொடங்கியது. சூரியனில் இருந்து வெளியே வருவதாகத் தெரிந்த பெரும் விண்கற்கள்,(18) பெரும் பயங்கரங்களை முன்னறிவித்துக் கொண்டு கடுமையாகச் சுடர்விட்டபடியே கீழே விழுந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன.(19) தேர்கள் உரத்த சடசடப்பொலியை உண்டாக்குவதும், குதிரைகள் கண்ணீரை உதிர்ப்பதும் காணப்பட்டது. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் தன் சக்திகளை இழந்தவராகவே காணப்பட்டார்.(20) அவரது இடது கண்ணும், இடது கையும் துடிக்கத் தொடங்கின. தம் முன்னே நிற்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீண்டும் கண்டும், தாம் உலகத்தை விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன முனிவர்களின் வார்த்தைகளை மனத்தில் கொண்டும் அவர் {துரோணர்} உற்சாகமிழந்தவரானார். பிறகு அவர் {துரோணர்}, நேர்மையாகப் போரிட்டு உயிரை விட விரும்பினார்.(21,22)
துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களைக் கொன்றபடியே அந்தப் போரில் திரியத் தொடங்கினார்.(23) இருபத்துநாலாயிரம் {24,000} க்ஷத்திரியர்களைக் கொன்றவரான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர், தமது கூர்முனைக் கணைகளால் பத்து மடங்களவு பத்தாயிரம் பேரை {ஒரு லட்சம் பேரை} யமனுலகுக்கு அனுப்பிவைத்தார்[1].(24) கவனத்துடன் முயற்சி செய்த அவர், புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் நின்று கொண்டிருந்தார். பிறகு அவர் {துரோணர்}, க்ஷத்திரிய குலத்தையே முற்றாக அழிப்பதற்காகப் பிரம்மாயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} உதவியை நாடினார்.(25) அப்போது வலிமைமிக்கப் பீமன், சிறப்புமிக்கவனும், பொறுத்துக்கொள்ளப்பட முடியாதவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் இருப்பதைக் கண்டு, அவனை நோக்கி வேகமாகச் சென்றான்.(26) துரோணருக்கு மிக அருகில் இருந்து தாக்கிக் கொண்டிருந்த அவனைக் {திருஷ்டத்யும்னனைக்} கண்ட அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, அந்தத் திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, அவனிடம்,(27) “உன்னைத் தவிர ஆசானுடன் {துரோணருடன்} போரிட வேறு எந்த மனிதனும் துணியமாட்டான். அவரைக் கொல்வதைத் துரிதப்படுத்துவாயாக. அவரைக் கொல்லும் சுமை {பொறுப்பு} உன்னிடமே இருக்கிறது” என்றான்.(28)
[1] வேறொரு பதிப்பில், “பகைவர்களை அழிக்கிறவராகிய அவர் கூர்மையுள்ள பாணங்களால் இருபதினாயிரம் க்ஷத்திரியர்களையும், லக்ஷம் யானைகளையும் கொன்றார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “இருபதாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்ற அந்த எதிரிகளை நொறுக்குபவர், கூர்முனைகளைக் கொண்ட கூரிய கணைகளால் மேலும் நூறாயிரம் பேரைக் கொன்றார்” என்று இருக்கிறது.
பீமனால் இப்படிச் சொல்லப்பட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருஷ்டத்யும்னன், வலியதும், புதியதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான ஒரு மேன்மையான வில்லை விரைவாக எடுத்துக் கொண்டான்.(29) சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவரான துரோணரின் மீது தன் கணைகளை ஏவிய திருஷ்டத்யும்னன், ஆசானை {துரோணரை} எதிர்த்து நிற்க விரும்பி அவரை மறைத்தான்.(30) போர்க்கள ரத்தினங்களும், போராளிகளில் முதன்மையானோருமான அவ்விருவரும், சினத்தால் நிறைந்து பிரம்மாயுதத்தையும், பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் இருப்புக்கு அழைத்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் திருஷ்டத்யும்னன் வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் துரோணரை மறைத்தான். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அனைத்து ஆயுதங்களையும் அழித்தவனும், மங்காப் புகழ் கொண்ட போர்வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்},(32) துரோணரைப் பாதுகாத்தவர்களான வஸாதிகள், சிபிக்கள், பாஹ்லீகர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோரைக் கொல்லத் தொடங்கினான்.(33) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவிய திருஷ்டத்யும்னன், அந்த நேரத்தில் ஆயிரங்கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(34) எனினும், அந்த இளவரசனின் வில்லை மீண்டும் அறுத்த துரோணர், கணைகள் பலவற்றால் அவ்விளவரசனின் முக்கிய அங்கங்களையும் துளைத்தார். இப்படித் துளைக்கப்பட்ட அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்} பெரும் வலியை உணர்ந்தான்.(35)
அப்போது பெரும் கோபம் கொண்ட பீமன், துரோணரின் தேரைப் பிடித்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவரிடம் இந்த வார்த்தைகளை மெதுவாகச் சொன்னான்,(36) “{ஓ! பிராமணரே}, தங்கள் வகைக்கான தொழில்களில் நிறைவடையாதவர்களும், ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்களில் இழிந்தவர்கள் {ப்ரஷ்டப் பிராம்மணர்கள்} போரிடாமல் இருந்திருந்தால், க்ஷத்திரிய வகையினர் இப்படி அழிய மாட்டார்கள்.(37) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமல் இருப்பதே அறங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிராமணனே அவ்வறத்தின் ஆணிவேராவான். உம்மைப் பொறுத்தவரை, பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவர் நீர்.(38) ஓ! பிராமணரே {துரோணரே}, தங்கள் மகன்களுக்கும், மனைவியருக்கும் நன்மை செய்வதற்காகச் செல்வத்தை விரும்பி, தங்களுக்குரிய முறையான {க்ஷத்திரிய} தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்த மிலேச்சர்கள் அனைவரையும், பிற வீரர்களையும், உமது மகன் {அஸ்வத்தாமன்} ஒருவனுக்காக மட்டுமே, அறியாமையிலும், மடமையிலும் உந்தப்பட்டுக் கொல்லும் நீர் வெட்கத்தை ஏன் உணரவில்லை[2]?(39,40) எவனுக்காக நீர் ஆயுதங்களை எடுத்தீரோ, எவனுக்காக நீர் வாழ்கிறீரோ, அவன் {அஸ்வத்தாமன்} இன்று உயிரையிழந்து, நீர் அறியாதவாறு உமது முதுகுக்குப் பின்னால் போர்க்களத்தில் கிடக்கிறான்.(41) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இஃதை உமக்குச் சொன்னார். இந்த உண்மையில் ஐயங்கொள்வது உமக்குத் தகாது” என்றான் {பீமன்}. பீமனால் இப்படிச் சொல்லப்பட்டதும், துரோணர் தன் வில்லைக் கீழே வைத்தார்.(42)
[2] வேறொரு பதிப்பில், “அறிந்தவர்கள் கூட அவிவேகிகள் போல அஜ்ஞானத்தால் மோகித்தவர்களாகிச் சண்டாளன் போல் மிலேச்சர்களுடைய கூட்டங்களையும், பற்பலவகையான மற்றவர்களையும் கொன்று மக்களையும் மனைவியையும் போஷிக்கிறார்கள். பிராம்மணரே, நீர் மூடன் போல அறியாமையினாலே புத்திரன், மனைவி, பொருள் இவற்றிலுள்ள ஆசையால் உமக்குரியனவல்லாத காரியங்களில் நிலைபெற்று அதர்மவித்தையினால் உம்முடைய புத்திரன் ஒருவன் க்ஷேமமடைவதற்காகத் தமக்குரிய செய்கைகளில் நிலைபெற்றவர்களான அனேகவீரர்களைக் கொன்று ஏன் வெட்கமடையாமலிருக்கிறீர்?” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “தங்கள் வகைக்கான தொழில்களைச் செய்வதில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற மிலேச்சர்களையும், பிற போர்வீரர்கள் பலரையும் கொல்லும் ஒரு சண்டாளனைப் போல, ஓ பிராமணரே, மடமையிலும், அறியாமையிலும் உந்தப்பட்டு, உமது குடும்பத்திற்கும், உமது மகனுக்கும் நன்மை செய்ய விரும்பி, உண்மையில், உமது ஒரே மகனுக்காக மட்டுமே விரும்பி, தன் கடமைகளை அறியாத ஒருவன் அனைவரையும் கொல்வதைப் போல உமது சொந்த தொழிலை அலட்சியம் செய்யும் நீர் ஏன் வெட்கத்தை உணரவில்லை?” என்றிருக்கிறது. “சண்டாளன்” என்ற சொல் கங்குலியில் இல்லை.
தமது ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வைக்க விரும்பியவரும், அற ஆன்மா கொண்டவருமான பரத்வாஜர் மகன் {துரோணர்}, “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! கிருபரே, ஓ! துரியோதனா,(43) போரில் கவனமாக முயற்சி செய்ய நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். பாண்டவர்களால் நீங்கள் எந்தக் காயமும் அடைய வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, நான் என் ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன்” என்று உரக்கச் சொன்னார்.(44) இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் அஸ்வத்தாமனின் பெயரைச் சொல்லி உரக்க அலறினார். அந்தப் போரில் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, தமது தேர்த்தட்டில் அமர்ந்து கொண்டு,(45) யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அவர் {துரோணர்}, அனைத்து உயிரினங்களின் அச்சங்களை விலக்கி அவற்றுக்கு உறுதியை அளித்தார்.
அந்த வாய்ப்பைக் கண்ட திருஷ்டத்யும்னன் தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கொண்டான்.(46) வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் இருந்த தன் உறுதிமிக்க வில்லைத் தன் தேரில் வைத்த அவன் {திருஷ்டத்யும்னன்}, ஒரு வாளை எடுத்துக் கொண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(47) மனிதர்களும், மனிதர் அல்லாதவர்களுமான உயிரினங்கள் அனைத்தும், திருஷ்டத்யும்னனின் ஆளுகைக்குள் இப்படிக் கொண்டுவரப்பட்ட துரோணரைக் கண்டு துன்பக் குரலுடன் அலறினர்.(48) “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும், “ச்சீச்சீ!” என்றும் உரத்த அலறல்கள் அங்கே எழுந்தன. துரோணரைப் பொறுத்தவரை, தன் ஆயுதங்களைக் கைவிட்ட அவர் {துரோணர்}, உயர்ந்த அமைதியான நிலையை அப்போது அடைந்தார்.(49) பெரும் பிரகாசமும், உயர்ந்த தவத்தகுதியும் கொண்ட அவர் {துரோணர்}, உயர்ந்தவனும், பழமையானவனுமான விஷ்ணுவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்[3].(50)
[3] வேறொரு பதிப்பில், “மிக்கத் தவமுடையவரான துரோணரும், சஸ்திரங்களை விட்டுவிட்டு உத்தமமான ஸாங்கியவித்தையை நாடி (உரிய மந்திரத்தை) அவ்வாறு உச்சரித்து யோகத்தை அனுஷ்டித்து ஜ்யோதிர்மயமாகிவிட்டார். புராதனரும், ஸர்வாந்தர்யாமியும் பரமாத்துமாவுமான ஸ்ரீ மகாவிஷ்ணுவை மனத்திலே தியானித்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பெரும் காந்தியும், தவத்தகுதியும் கொண்ட அவர் தம் இதயத்தைப் பழமையானவனும், தலைமையானவனுமான விஷ்ணுவில் நிலைநிறுத்தினார்” என்றிருக்கிறது.
சற்றே தம் முகத்தைக் கீழே சாய்த்து, தமது மார்பை முன்நிமிர்த்தி, கண்களை மூடி, நற்குணத்தில் நிலைத்து, ஆழ்ந்த சிந்தனையில் தமது இதயத்தை ஆழ்த்தி,(51) பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் ஓம் என்ற ஓரசைச் சொல்லை நினைத்து, வல்லமையும், உயர்வும், அழியாத் தன்மையும் கொண்ட தேவர்களின் தேவனை நினைவுகூர்ந்தவரும், (குருக்கள் மற்றும் பாண்டவர்களின்) ஆசானுமான ஒளிமிக்கத் துரோணர், இறையுணர்வுமிக்கோராலும் அடைவதற்கு மிகக் கடினமான சொர்க்கத்தை அடைந்தார். உண்மையில், துரோணர் இப்படிச் சொர்க்கத்திற்குச் சென்ற போது, ஆகாயத்தில் இரு சூரியன்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது.(52,53) சூரியப் பிரகாசம் கொண்டவரும், சூரியனைப் போன்றவருமான பரத்வாஜர் {துரோணர்} வானத்திற்கு உயர்ந்த போது, சீரான ஒளியுடன் கூடிய ஒரே பெரிய பரப்பான மொத்த ஆகாயமும் எரிவது போலத் தெரிந்தது.(54) எனினும் கண்ணிமைப்பதற்குள்ளாக அந்த மொத்த பிரகாசமும் மறைந்து போனது. இப்படித் துரோணர் பிரம்மலோகத்திற்குச் சென்ற போது, அதை முற்றிலும் உணராதவனாக அவருக்கு அருகில் திருஷ்டத்யும்னன் நின்று கொண்டிருந்தபோது, மகிழ்ச்சி அடைந்த தேவர்களால் உதிர்க்கப்படும் குழப்பமான {கிலா கிலா என்ற} மகழ்ச்சியொலிகள் கேட்கப்பட்டன.
யோகத்தில் ஆழ்ந்த உயர் ஆன்மத் துரோணர் உயர்ந்த அருளுலகத்தை அடைவதை மனிதர்களில் நாங்கள் ஐவர் மட்டுமே கண்டோம்.(54-56) நானும் {சஞ்சயனான நானும்} , பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனான அஸ்வத்தாமன், விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோருமே அந்த ஐவர். உண்மையில் மனிதர்கள் அனைவரும், அனைத்திலும் உயர்ந்ததும், தேவர்களுக்கே புதிரானதும், மிக உயர்ந்த உலகமுமான பிரம்ம லோகத்தை ஆசான் அடைந்ததை அறியாதவர்களாகவே இருந்தனர். உண்மையில், கணைகளால் தமது உடல் சிதைக்கப்பட்டவரும், குருதியில் குளித்தவருமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்து, முனிவர்களில் முதன்மையானோர் துணையுடன் பிரம்ம லோகத்திற்குச் சென்றதை அவர்களில் ஒருவராலும் காண முடியவில்லை.(57-61)
பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்தவரை, அனைவரும் அவனை நோக்கி நிந்தித்தாலும், துரோணரின் உயிரற்ற தலையில் தன் பார்வையைச் செலுத்தி அஃதை இழுக்கத் தொடங்கினான்.(62) பிறகு, இவ்வளவு நேரமும் பேச்சற்றவராக இருந்த தன் எதிரியின் {துரோணரின்} உடலில் இருந்து அந்தத் தலையைத் தன் வாளால் வெட்டினான். பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொன்று பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த திருஷ்டத்யும்னன்,(63) தன் வாளைச் சுழற்றியபடியே சிங்க முழக்கமிட்டடான். கரிய நிறத்தவரும், தமது காதுகள் வரை தொங்கும் வெண்குழல்களைக் கொண்டவரும், எண்பத்தைந்து {85} வயதையுடைவருமான[4] அந்தக் கிழவர் {துரோணர்}, உமக்காக மட்டுமே போர்க்களத்தில் பதினாறு வயது இளைஞனின் சுறுசுறுப்புடன் திரிந்து வந்தார். (துரோணரின் தலை வெட்டப்படுவதற்கு முன்) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்},(64,65) “ஓ! துருபதர் மகனே {திருஷ்டத்யும்னனே}, ஆசானை {துரோணரை} உயிருடன் கொண்டு வா, அவரைக் கொல்லாதே” என்றான். துருப்புகள் அனைத்தும் கூட “அவர் கொல்லப்படலாகாது” என்றே கதறின.(66) அதிலும் குறிப்பாக அர்ஜுனன், பரிதாபகரமாக உருகியபடி மீண்டும் மீண்டும் அலறினான்.
[4] வேறொரு பதிப்பில், "காதுவரையில் நரைத்த மயிருள்ளவரும், கறுத்த நிறமுடையவரும், நானூறு பிராயஞ்சென்றவருமான துரோணாசாரியர் யுத்தத்தில் உமது நிமித்தமாகப் பதினாறு வயதுள்ள யுவாவைப் போல சஞ்சரித்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே எண்பத்தைந்து வயது என்றே இருக்கிறது.
எனினும், அர்ஜுனனின் அலறல்களையும், அந்த மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்த திருஷ்டத்யும்னன்,(67) மனிதர்களில் காளையான அந்தத் துரோணரை அவரது தேர்த்தட்டில் கொன்றான். துரோணரின் குருதியில் நனைந்த திருஷ்டத்யும்னன், பிறகு அந்தத் தேரில் இருந்து கீழே தரையில் குதித்தான்.(68) அப்போது அவன் மிகக் கடுமையானவனாகச் சூரியனைப் போலச் சிவப்பாகத் தெரிந்தான். இப்படியே அந்தப் போரில் துரோணர் கொல்லப்படுவதைத் துருப்புகள் கண்டன.(69) அப்போது, பெரும் வில்லாளியான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அந்தப் பெரிய தலையை உமது படையின் போர்வீரர்கள் முன்பு கீழே வீசினான்.(70) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் தலையைக் கண்ட உமது படைவீரர்கள், தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, அனைத்துத் திசைகளிலும் ஓடினர்.(71)
அதே வேளையில் வானத்திற்கு உயர்ந்த துரோணர், நட்சத்திரங்களின் பாதைக்குள் நுழைந்தார். சத்தியவதியின் மகனான முனிவர் கிருஷ்ணரின் (துவைபாயனரின்) {கிருஷ்ண துவைபாயனரின்_வியாசரின்} அருளால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மரணத்தை (அது குறித்த உண்மையான சூழ்நிலைகளைச்) நான் சாட்சியாகக் கண்டேன். அந்தச் சிறப்புமிக்கவர் வானத்திற்கு உயர்ந்த பிறகு, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய புகையற்ற தீப்பந்தத்தைப் போலச் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உற்சாகத்தை இழந்த குருக்கள், பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் அனைவரும் பெரும் வேகத்துடன் ஓடினர்.(72-74) பிறகு உமது படை பிளந்தது. கூரிய கணைகளால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் காயம்பட்டனர்.(75) துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு (குறிப்பாக) உமது போர்வீரர்கள் உயிரை இழந்தவர்களைப் போலக் காணப்பட்டனர். தோல்வியடைந்து, எதிர்காலம் குறித்த அச்சத்தால் ஈர்க்கப்பட்ட குருக்கள்,(76) இரண்டு உலகங்களையும் இழந்தவர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டனர்[5]. உண்மையில் அவர்கள் தற்கட்டுப்பாடுகள் அனைத்தையும் இழந்தனர்.
[5] “அவர்கள் தோல்வியடைந்ததால் இவ்வுலகை இழந்தனர், களத்தில் இருந்து தப்பி ஓடியதால் பாவமிழைத்த அவர்கள் அடுத்த உலகையும் இழந்தனர் என்பது இங்கே பொருள்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
தலையற்ற ஆயிரக்கணக்கான உடல்களால் நிறைந்த களத்தில் பரத்வாஜர் மகனுடைய {துரோணருடைய} உடலைத் தேடிய மன்னர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றியையும், எதிர்காலத்தில் புகழைத்தரும் பெரும் சிறப்புகளையும் ஈட்டிய பாண்டவர்கள்,(77,78) தங்கள் கணைகளாலும், சங்குகளாலும் பேரொலிகளை உண்டாக்கத் தொடங்கி, சிங்க முழக்கங்களைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும்,(79) ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்ட நிலையில் (பாண்டவப்) படைக்கு மத்தியில் காணப்பட்டனர். பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய எதிரிகளை எரிப்பவனான பீமன்,(80) “இழிந்தவனான சூதன் மகனும் {கர்ணனும்}, மற்றொரு இழிந்தவனான துரியோதனனும் போரில் கொல்லப்படும் போது, வெற்றி மகுடம் சூடுபவனாக மீண்டும் நான் உன்னைத் தழுவிக் கொள்வேன்” என்றான்.(81) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், மகிழ்ச்சிப்போக்கில் நிறைந்து தன் தோள்களைத் தட்டியபடியே பூமியை நடுங்கச் செய்தான்.(82) அவ்வொலியால் அஞ்சிய உமது துருப்பினர் தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, க்ஷத்திரியக் கடமைகளை மறந்து போரில் இருந்து ஓடினர்.(83) வெற்றியாளர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் தங்கள் எதிரிகளின் அழிவால் கிடைத்த பெரும் இன்பத்தை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சியையடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(84)
துரோணவத பர்வம் முற்றும்[6]
[6] மன்மதநாததத்தரின் பதிப்பிலும், வேறொரு பதிப்பிலும் துரோணவத பர்வம் இங்கே முற்று பெறுகிறது. Sacred Texts வலைத்தளத்திலும், புத்தக வடிவத்திலும் உள்ள கங்குலியின் பதிப்புகளில் துரோணவதபர்வம் இங்கே முற்று பெறவில்லை. அடுத்தது நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் வரவேண்டும்.... ஆனால், இந்த உப பர்வம் கங்குலியில் பிரிக்கப்படவில்லை. உப பர்வ பிரிப்பைத் தவிர்க்க வேண்டாமே என்ற எண்ணத்தில் நாமும் இங்கே துரோணவத பர்வத்தை முடித்து, அடுத்த பகுதியில் நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வத்தைத் தொடங்குவோம்.
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி 193-ல் உள்ள சுலோகங்கள் : 84
ஆங்கிலத்தில் | In English |