Kripa spoke to Ashwatthama! | Drona-Parva-Section-194 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டு கௌரவர்கள் ஓடியபோது, அஸ்வத்தாமன் மட்டுமே ஓடாமல் இருந்தது; அஸ்வத்தாமனுக்கு உண்மையைத் தெரிவிக்கும்படி கிருபரிடம் சொன்ன துரியோதனன்; துரோணரின் மரணம் குறித்து அஸ்வத்தாமனிடம் சொன்ன கிருபர்; துரோணரின் மரணத்தைக் கேட்ட அஸ்வத்தாமனின் சீற்றம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் வீழ்ந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களால் பீடிக்கப்பட்ட குருக்கள், தங்கள் தலைவரை இழந்து, அணி பிளந்து, முறியடிக்கப்பட்டு துயரால் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(1) தங்கள் எதிரிகள் (பாண்டவர்கள்) தங்களைவிட விஞ்சி நிற்பதைக் கண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் நடுங்கினர். அவர்களது கண்கள் கண்ணீரால் நிரம்பின; இதயங்கள் அச்சங்கொண்டன. ஓ! மன்னா, துயரின் மூலம் சக்தியை இழந்த அவர்கள், துக்கத்தை அடைந்து, உற்சாகத்தை இழந்து, முயற்சியற்றவர்களானார்கள்.(2,3) புழுதியால் மறைக்கப்பட்டு, (அச்சத்தால்) நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் வெறுமையாகப் பார்த்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் கூடிய அவர்கள், பழங்காலத்தில் ஹிரண்யாக்ஷனின் வீழ்ச்சிக்குப் பிறகான தைத்தியர்களுக்கு ஒப்பாக இருந்தனர்.(4) சிறு விலங்குகளைப் போன்ற அவர்கள் அனைவராலும் சூழப்பட்ட உமது மகனோ {துரியோதனனோ}, அவர்களுக்கு மத்தியில் நிற்கமுடியாமல் அங்கிருந்து சென்றான்.(5)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பசியாலும் தாகத்தாலும் பீடிக்கப்பட்டு, சூரியனால் சுடப்பட்ட உமது போர்வீரர்களோ மிகவும் உற்சாகமற்றவர்களாக ஆனார்கள்.(6) சூரியன் பூமியில் விழுவதையோ, பெருங்கடல் வற்றிப் போவதையோ, மேரு தடம்புரள்வதையோ, வாசவனின் {இந்திரனின்} தோல்வியையோ போன்ற அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} வீழ்ச்சியைக் கண்டு, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாத கௌரவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் ஏற்பட்ட பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள்.(7,8)
தங்கத் தேரைக் கொண்ட துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட காந்தாரர்களின் ஆட்சியாளன் (சகுனி), தன் படைப்பிரிவைச் சேர்ந்த தேர்வீரர்களுடன் சேர்ந்து, பெரும் வேகத்துடன் தப்பி ஓடினான்.(9)
சூதனின் மகனும் {கர்ணனும்} கூட, கொடிமரங்கள் அனைத்துடன் கூடியதும், பெரும் வேகத்துடன் பின்வாங்கிக் கொண்டிருந்ததுமான தனது பரந்த படைப்பிரிவையும் அழைத்துக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினான்.(10)
மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியனும் கூட, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்த தனது படைப்பிரிவை அழைத்துக் கொண்டு, சுற்றிலும் வெறுமையாகப் பார்த்தபடியே அச்சத்தால் தப்பி ஓடினான்.(11)
தங்கத் தேரைக் கொண்ட துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட காந்தாரர்களின் ஆட்சியாளன் (சகுனி), தன் படைப்பிரிவைச் சேர்ந்த தேர்வீரர்களுடன் சேர்ந்து, பெரும் வேகத்துடன் தப்பி ஓடினான்.(9)
சூதனின் மகனும் {கர்ணனும்} கூட, கொடிமரங்கள் அனைத்துடன் கூடியதும், பெரும் வேகத்துடன் பின்வாங்கிக் கொண்டிருந்ததுமான தனது பரந்த படைப்பிரிவையும் அழைத்துக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினான்.(10)
மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியனும் கூட, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்த தனது படைப்பிரிவை அழைத்துக் கொண்டு, சுற்றிலும் வெறுமையாகப் பார்த்தபடியே அச்சத்தால் தப்பி ஓடினான்.(11)
சரத்வானின் மகனான கிருபரும் கூட, பெரும்பகுதி கொல்லப்பட்டிருந்த தனது யானைப்படைப்பிரிவையும், காலாட்படைப்பிரிவையும் அழைத்துக் கொண்டு, "ஐயோ, ஐயோ" என்று சொல்லிக் கொண்டே தப்பி ஓடினார்.(12)
கிருதவர்மனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது போஜ, கலிங்க, ஆரட்ட, பாஹ்லீக துருப்புகளில் எஞ்சியோரால் சூழப்பட்டு வேகமாகச் செல்லும் குதிரைகளில் தப்பி ஓடினான்.(13)
உலூகனும், ஓ! மன்னா, துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காலாட்படைவீரர்களுடைய பெரும்பகுதியின் துணையோடு பெரும் வேகத்துடன் தப்பி ஓடினான்.(14)
அழகனும், இளமை கொண்டவனும், துணிச்சலுக்காக அறியப்பட்டவனுமான துச்சாசனனும் கூட, தனது யானைப்படையால் சூழப்பட்டுப் பெரும் துயரத்துடன் தப்பி ஓடினான்.(15)
தன்னுடன் பத்தாயிரம் தேர்களையும், மூவாயிரம் யானைகளையும் அழைத்துச் சென்ற விருஷசேனன், துரோணரின் வீழ்ச்சியைக் கண்ட மாத்திரத்தில் வேகமாகத் தப்பி ஓடினான்.(16)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது யானைகள், குதிரை, தேர்கள் ஆகியவற்றின் துணையுடன் கூடியவனும், காலாட்படை வீரர்களால் சூழப்பட்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனும் தப்பி ஓடவே செய்தான்.(17)
துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட {திரிகர்த்த மன்னன்} சுசர்மன், ஓ! மன்னா, அர்ஜுனனால் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த சம்சப்தகர்களை அழைத்துக் கொண்டு தப்பி ஓடினான்.(18)
கிருதவர்மனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது போஜ, கலிங்க, ஆரட்ட, பாஹ்லீக துருப்புகளில் எஞ்சியோரால் சூழப்பட்டு வேகமாகச் செல்லும் குதிரைகளில் தப்பி ஓடினான்.(13)
உலூகனும், ஓ! மன்னா, துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காலாட்படைவீரர்களுடைய பெரும்பகுதியின் துணையோடு பெரும் வேகத்துடன் தப்பி ஓடினான்.(14)
அழகனும், இளமை கொண்டவனும், துணிச்சலுக்காக அறியப்பட்டவனுமான துச்சாசனனும் கூட, தனது யானைப்படையால் சூழப்பட்டுப் பெரும் துயரத்துடன் தப்பி ஓடினான்.(15)
தன்னுடன் பத்தாயிரம் தேர்களையும், மூவாயிரம் யானைகளையும் அழைத்துச் சென்ற விருஷசேனன், துரோணரின் வீழ்ச்சியைக் கண்ட மாத்திரத்தில் வேகமாகத் தப்பி ஓடினான்.(16)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது யானைகள், குதிரை, தேர்கள் ஆகியவற்றின் துணையுடன் கூடியவனும், காலாட்படை வீரர்களால் சூழப்பட்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனும் தப்பி ஓடவே செய்தான்.(17)
துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட {திரிகர்த்த மன்னன்} சுசர்மன், ஓ! மன்னா, அர்ஜுனனால் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த சம்சப்தகர்களை அழைத்துக் கொண்டு தப்பி ஓடினான்.(18)
தங்கத்தேர் கொண்ட துரோணர் கொல்லப்பட்டதைக் கண்ட கௌரவப் போர்வீரர்கள் அனைவரும், யானைகளிலும், தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி, களத்தில் இருந்து தப்பி ஓடினர்.(19) சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் தாய்மாமன்களையும், சிலர் தங்கள் மகன்களையும், சிலர் தங்கள் நண்பர்களைத் தூண்டியபடியே அந்தக் கௌரவர்கள் தரப்பில் தப்பி ஓடினர்.(20) தங்கள் சகோதரர்களையோ, தங்கள் சகோதரிகளின் மகன்களையோ, தங்கள் சொந்தங்களையோ ஆயுதமெடுக்கத் தூண்டிய பிறர் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(21) கலைந்த கேசங்களுடனும், ஆடைகள் தளர்ந்த நிலையிலும், ஒன்றாகச் சேர்ந்து ஓடும் இருவர் என எவரும் தென்படாதவகையில் அவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். “குரு படை முற்றாக அழிந்தது” என்பதே அனைவரின் நம்பிக்கையாகவும் இருந்தது.(22) உமது துருப்புகளில் பிறர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கவசங்களை வீசி எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் உரக்க அழைத்த படைவீரர்கள்,(23) “நில்லுங்கள், நில்லுங்கள், ஓடாதீர்கள்” என்றனர். ஆனால் அப்படிச் சொன்னவர்களில் கூட எவரும் களத்தில் நிற்கவில்லை. ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களையும் தேர்களையும் கைவிட்ட போர்வீரர்கள்,(24) குதிரைகளில் ஏறியோ, தங்கள் கால்களைப் பயன்படுத்தியோ பெரும் வேகத்துடன் தப்பி ஓடினர்.
சக்தியை இழந்த துருப்புகள் இப்படிப் பெரும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த போது,(25) நீரோட்டத்தை எதிர்த்து வரும் பெரும் முதலையொன்றைப் போலத் துரோணரின் மகனான அஸ்வத்தாமன் மட்டுமே தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். சிகண்டியின் தலைமையிலான போர்வீரர்கள் பலர், பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் மற்றும் கைகேயர்கள் ஆகியோருக்கும் அவனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையில் கடும்போர் நடைபெற்றது. எளிதில் வீழ்த்தமுடியாத பாண்டவப் படையின் போர்வீரர்கள் பலரைக் கொன்று,(27) போரின் நெருக்கத்தில் இருந்து கடினத்துடன் தப்பித்தவனும், யானையின் நடையைக் கொண்டவனுமான அந்த வீரன் {அஸ்வத்தாமன்}, தப்பி ஓடுவதில் தீர்மானமாக இருந்த (அந்தக் கௌரவப்) படையானது ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(28)
துரியோதனனை நோக்கிச் சென்ற அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் குரு மன்னனை அணுகி, “ஓ! பாரதா {துரியோதனா}, அச்சத்திலிருப்பதைப் போலத் துருப்புகள் ஏன் ஓடுகின்றன?(29) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவர்கள் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் நீ அவர்களை அணிதிரட்டாமல் இருக்கிறாயே. ஓ! மன்னா {துரியோதனா}, நீயே கூட வழக்கமான மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.(30) ஓ! ஏகாதிபதி, தேர்வீரர்களில் சிங்கமான எவர் கொல்லப்பட்டதால் உனது படை இப்படிப் பீதியடைந்திருக்கிறது? ஓ! கௌரவா {துரியோதனா}, இதை நீ எனக்குச் சொல்வாயாக.(31) கர்ணனால் தலைமைதாங்கப்பட்ட இவர்கள் அனைவரும் (கூட) களத்தில் நிற்கவில்லையே. இதற்கு முன் மோதிய எந்தப் போரிலும் இந்தப் படை இப்படி ஓடியதில்லையே. ஓ! பாரதா, உனது துருப்புகளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்திருக்கிறதா?” என்று கேட்டான் {அஸ்வத்தாமன்}.
அந்தச் சந்தர்ப்பத்தில் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், மன்னர்களில் காளையுமான துரியோதனன்,(33) அந்தத் துக்கச் செய்தியைச் சொல்ல இயலாதவனாகத் தன்னை உணர்ந்தான். உண்மையில் உமது மகன் {துரியோதனன்}, துன்பக்கடலில் மூழ்கும் ஒரு படகைப் போலவே காணப்பட்டான்.(34) துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அவனது தேரில் கண்ட மன்னன் {துரியோதனன்} கண்ணீரால் குளித்தவனானான். அவமானத்தால் நிறைந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சரத்வானின் மகனிடம் {கிருபரிடம்},(35) “நீர் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் படை ஏன் இப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பிறருக்கு முன்னிலையில் சொல்வீராக” என்றான். பிறகு சரத்வானின் மகன் {கிருபர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் மீண்டும் பெரும் கவலையையடைந்து, துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} அவனது தந்தை {துரோணர்} எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதைச் சொன்னார்.(36)
கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “பூமியின் தேர்வீரர்களில் முதன்மையான துரோணரை எங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாஞ்சாலர்களோடு மட்டுமே நாங்கள் போரிடத் தொடங்கினோம்.(37) போர் தொடங்கியபோது, குருக்களும், சோமகர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து, ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி, தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தத் தொடங்கினர்.(38) அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, தார்தராஷ்டிரர்கள் குறையத் தொடங்கினர். இதைக் கண்ட உன் தந்தை {துரோணர்}, சினத்தால் நிறைந்து ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்பு அழைத்தார்.(39) உண்மையில், மனிதர்களில் காளையான அந்தத் துரோணர், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றார்[1].(40)
[1] “மந்திரங்களால் இருப்புக்கு அழைக்கப்படும் தெய்வீக ஆயுதங்களைக் குறித்து முந்தைய குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அழைப்பவர் விரும்பியபடி அனைத்து வகைகளிலான உறுதியான ஆயுதங்களை உண்டாக்கும் சக்திகளே தெய்வீக ஆயுதங்கள். இங்கே இந்தப் பிரம்மாயுதம், அகன்ற தலைக் கணைகளின் {பல்லங்களின்} வடிவை ஏற்றது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
விதியால் உந்தப்பட்ட பாண்டவர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவனே {அஸ்வத்தாமனே}, துரோணரை அணுகி அழியத் தொடங்கினர்.(41) துரோணர், தமது பிரம்மாயுதத்தைக் கொண்டு, துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் ஓராயிரம் பேரையும், ஈராயிரம் குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தார்.(42) கரிய நிறத்தவரும், காதுவரை தொங்கிக் கொண்டிருக்கும் நரைத்த குழல்களைக் கொண்டவரும், முழுமையாக எண்பத்தைந்து வயதான கிழவருமான[2] அந்தத் துரோணர், பதினாறு வயது இளைஞனைப் போலப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(43) எதிரியின் துருப்புகள் பீடிக்கப்பட்டு மன்னர்கள் இப்படிக் கொல்லப்பட்ட போது, பாஞ்சாலர்கள் பழிதீர்க்கும் விருப்பத்தால் நிறைந்திருந்தாலும், போரில் புறமுதுகிட்டனர்.(44) எதிரி புறமுதுகிட்டு ஒரு பகுதியில் தங்கள் நிலையை இழந்த போது, அந்த எதிரிகளை வெல்பவர் (துரோணர்), தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தார்.(45)
[2] வேறொரு பதிப்பில், “காதுவரையில் நரைத்தவரும், கரிய நிறமுடையவரும், நானூறு பிராயமுள்ளவரும் கிழவருமான துரோணர் பதினாறு வயதுள்ள வாலிபன் போல யுத்தத்தில் நான்குபுறத்திலும் சஞ்சரித்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. முந்தைய பகுதியிலும் துரோணரின் வயது பற்றிய குறிப்பு வருகிறது. அங்கேயும் இந்தப் பதிப்புகளில் இதுபோன்ற வேறுபாடுகளே இருக்கின்றன.
உண்மையில், வீரமிக்க உன் தந்தை {துரோணர்}, பாண்டவர்களின் மத்தியை அடைந்து, தன்னில் எழுந்த கதிர்களைப் போன்ற கணைகளுடன், எவராலும் பார்க்கப்பட முடியாத நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாக இருந்தார். சுடர்மிக்கச் சூரியனால் எரிக்கப்படுவதைப் போலத் துரோணரால் எரிக்கப்பட்ட அவர்கள் தங்கள் உற்சாகத்தை இழந்து, தங்கள் சக்தியையும், புலன் உணர்வுகளையும் இழந்தனர்.(47) துரோணரின் கணைகளால் இப்படிப் பீடிக்கப்படும் அவர்களைக் கண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, பாண்டு மகன்களின் வெற்றியை விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(48) “ஆயுதந்தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், தேர்ப்படைத் தலைவர்களின் தலைவருமான இவர் {துரோணர்}, விருத்திரனைக் கொன்றவனாலேயே {இந்திரனாலேயே} கூடப் போரில் வெல்லப்பட முடியாதவராவார். பாண்டுவின் மகன்களே, தங்கத் தேர் கொண்ட துரோணர், போரில் உங்கள் அனைவரையும் கொல்ல முடியாதவாறு, அறத்தை விட்டுவிட்டு வெற்றியில் கவனம் கொள்வீராக. அஸ்வத்தாமனின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர் போரிடமாட்டார் என்று நான் நினைக்கிறேன். போரில் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்று எவனாவது ஒருவன் அவரிடம் பொய் சொல்லட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)
இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை ஏற்கவில்லை. எனினும், மற்ற அனைவரின் ஏற்பையும், ஏன் சிறிது கடினத்துடன் {தயக்கத்துடன்} யுதிஷ்டிரனுடைய ஏற்பையே கூட அவை பெற்றன.(52) பிறகு, மருந்தளவே நாணம் கொண்ட பீமசேனன், உனது தந்தையிடம் {துரோணரிடம்}, “அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்றான். எனினும் உனது தந்தையோ அவனை {பீமனை} நம்பவில்லை.(53) அந்தச் செய்தி தவறானது என ஐயங்கொண்டவரும், உன்னிடம் மிகுந்த பாசத்தைக் கொண்டவருமான உனது தந்தை {துரோணர்}, நீ உண்மையில் இறந்துவிட்டாயா? இல்லையா? என்று யுதிஷ்டிரனிடம் விசாரித்தார்.(54) பொய் சொல்லும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனும், அதே வேளையில் வெற்றியை வேண்டியவனுமான யுதிஷ்டிரன், மாலவத் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்று அழைக்கப்பட்டதும், மலை போன்று பெரியதுமான வலிமைமிக்க யானையொன்றைக் களத்தில் பீமன் கொல்வதைக் கண்டு, துரோணரை அணுகி அவரிடம்,(55,56) “எவனுக்காக நீர் ஆயுதம் தரித்திருக்கிறீரோ, எவனுக்காக நீர் வாழ்ந்து கொண்டிருக்கிறீரோ, எப்போதும் அன்புக்குரியவனான அந்த உமது மகன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்.(57) உயிரை இழந்த அவன், இளம் சிங்கத்தைப் போல வெறுந்தரையில் கிடக்கிறான்” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}. பொய்மையின் தீய விளைவுகளை முற்றாக அறிந்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, (அஸ்வத்தாமன் என்ற) யானையைத் தெளிவில்லாமல் சேர்த்து, இந்த வார்த்தைகளை அந்தப் பிராமணர்களில் சிறந்தவரிடம் {துரோணரிடம்} சொன்னான்[3].
[3] துரோண பர்வம் பகுதி 194ல் பீமன் சொன்னதாக உள்ள வார்த்தைகள் இங்கே யுதிஷ்டிரன் சொல்வதாக வருகின்றன. நாம் ஒப்பிட்டு வரும் மூன்று பதிப்புகளிலும் இப்படியே சொல்பவர்களின் பெயர்கள் பகுதிக்குப் பகுதி முரண்பட்டே இருக்கின்றன. மேற்கண்ட வார்த்தைகளில் யானை என்ற வார்த்தைகளைக் கலந்து சொன்னால் துரோணரால் அஃதை எப்படி நம்பியிருக்க முடியும்? எனவே இங்கே சொற்கள் குழம்பியிருக்கின்றன என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை மேற்கண்ட வாக்கியங்கள் கீழ்க்கண்டவாறு, “பொய் சொல்லும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனும், அதே வேளையில் வெற்றியை வேண்டியவனுமான யுதிஷ்டிரன், மாலவத் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்று அழைக்கப்பட்டதும், மலை போன்று பெரியதுமான வலிமைமிக்க யானையொன்றைக் களத்தில் பீமன் கொல்வதையும், அவன் {பீமன்} துரோணரை அணுகி அவரிடம்,(55,56) “எவனுக்காக நீர் ஆயுதம் தரித்திருக்கிறீரோ, எவனுக்காக நீர் வாழ்ந்து கொண்டிருக்கிறீரோ, எப்போதும் அன்புக்குரிய அந்த உமது மகன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்.(57) உயிரை இழந்த அவன், இளம் சிங்கத்தைப் போல வெறுந்தரையில் கிடக்கிறான்” என்ற வார்த்தைகளை {பீமன்} சொல்வதையும் கண்டான் {யுதிஷ்டிரன்}. பொய்மையின் தீய விளைவுகளை முற்றாக அறிந்த அந்த மன்னன், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரிடம் (அஸ்வத்தாமன் என்ற) யானையைத் தெளிவில்லாமல் சேர்த்துப் பேசினான்” என அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தமது மகனின் {அஸ்வத்தாமனின்} வீழ்ச்சியைக் கேட்ட அவர் {துரோணர்}, துயரால் பீடிக்கப்பட்டு உரக்க ஓலமிடத் தொடங்கினார்.(58,59) தன் தெய்வீக ஆயுதங்களை (அவற்றின் சக்தியைக்) குறைத்துக் கொண்ட அவர் {துரோணர்}, முன்பு போலப் போரிடவில்லை. கவலையால் நிறைந்து, துயரால் கிட்டத்தட்ட தமது புலன் உணர்வுகளை இழந்திருந்த அவரைக் கண்டவனும்,(60) கொடூரச் செயல்களைச் செய்பவனுமான பாஞ்சால மன்னன் மகன் {திருஷ்டத்யும்னன்}, அவரை நோக்கி விரைந்தான். தம்மைக் கொல்ல விதிக்கப்பட்டவனான அந்த இளவரசனைக் கண்டவரும், மனிதர்கள் மற்றும் பொருட்களைக் குறித்த உண்மைகள் அனைத்தையும் அறிந்தவருமான துரோணர்,(61) தமது தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டுப் போர்க்களத்தில் பிராயத்தில் அமர்ந்தார்.
அப்போது துரோணரின் தலையைத் தன் இடது கையால் பிடித்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, வீரர்கள் அனைவரின் உரத்த அறிவுரைகளையும் அலட்சியம் செய்துவிட்டு அந்தத் தலையை வெட்டினான். “துரோணர் கொல்லப்படக்கூடாது” என்பதே அனைத்துப் பக்கங்களிலும் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தன.(62,63) அதே போல அர்ஜுனனும், தன் தேரில் இருந்து கீழே குதித்து, பிருஷதன் மகனை நோக்கி கரங்களை உயர்த்திக்கொண்டு வேகமாக ஓடிய படியே,(64) “ஓ! அறநெறிகளை அறிந்தவனே {திருஷ்டத்யும்னனே}, ஆசானை உயிருடன் கொண்டுவா, கொல்லாதே” என்று மீண்டும் மீண்டும் சொனான். கௌரவர்களாலும், அர்ஜுனனாலும் இப்படித் தடுக்கப்பட்டாலும்,(65) ஓ! மனிதர்களில் காளையே {அஸ்வத்தாமனே}, கொடூரனான திருஷ்டத்யும்னனால் உனது தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். இதனால் அச்சத்தில் பீடிக்கப்பட்ட துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடுகின்றன. அதே காரணத்திற்காகவே, ஓ! பாவமற்றவனே {அஸ்வத்தாமனே}, உற்சாகத்தை மிகவும் இழந்த நாங்களும் கூட அதையே செய்கிறோம் {ஓடுகிறோம்}” என்றார் {கிருபர்}.(66)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரில் தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, காலால் மிதிபட்ட பாம்பொன்றைப் போலக் கடுங்கோபத்தை அடைந்தான்.(67) சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பெரும் அளவு விறகுகளால் எரியும் நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான்.(68) தன் கரங்களைப் பிசைந்தும், தன் பற்களை நற நறவெனக் கடித்தும், பாம்பொன்றைப் போல மூச்சுவிட்டுக் கொண்டும் இருந்த அவனது கண்கள் குருதியைப் போலச் சிவப்பாகின” {என்றான் சஞ்சயன்}.(69)
----------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 194-ல் உள்ள சுலோகங்கள்: 69
துரோணபர்வம் பகுதி 194-ல் உள்ள சுலோகங்கள்: 69
ஆங்கிலத்தில் | In English |