The fruits of Drona Parva! | Drona-Parva-Section-204 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : துரோண பர்வத்தைத் தினமும் படிப்பதனாலோ, கேட்பதனாலோ ஒருவருக்குக் கிடைக்கும் பலன்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து நாட்கள் கடுமையாகப் போரிட்டவரும், பெரும் பலம் கொண்டவருமான அந்தப் பிராமணர் (துரோணர்) வீழ்ந்த பிறகு பிரம்ம லோகத்தை அடைந்தார்.(1) வேதங்களைப் படிப்பதனால் எழும் கனிகள் {பலன்கள்}, இந்தப் பர்வத்தைப் படிப்பதனாலும் கிடைக்கும். துணிவுமிக்க க்ஷத்திரியர்களின் பெரும் சாதனைகள் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன.(2) எவன் இந்த {துரோண} பர்வத்தைத் தினமும் படிப்பானோ, உரைப்பதைக் கேட்பானோ, அவன் கொடிய பாவங்களில் இருந்தும், தன் வாழ்வின் மிகக் கொடூரமான செயல்களில் இருந்தும் விடுபடுவான்.(3) பிராமணர்கள் இதிலிருந்து வேள்வியின் கனிகளை எப்போதும் பெறலாம். க்ஷத்திரியர்கள் இதிலிருந்து கடும்போரில் வெற்றியை அடையலாம். பிற வகைகள் (வைசியரும், சூத்திரரும்) விரும்பத்தக்க மகன்களையும், பேரர்களையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடையலாம்” {என்றான் சஞ்சயன்}[1].(4)
[1] வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி, முந்தைய பகுதியான 203லேயே தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே முடிகிறது. மேலும், மேற்கண்ட வாசகங்கள் முழுமையையும் வைசம்பாயனர், ஜனமேஜயனிடம் சொல்லப்பட்டுள்ளதாக இருக்கிறது. அது பின்வருமாறு: "சூத குலத்திற்பிறந்தவனான சஞ்சயன் அரசனுக்கு இவை அனைத்தையும் உரைத்துவிட்டுக் கர்ணனுடைய வதத்தைப் பார்ப்பதற்காகச் சேனை தங்கியிருக்கும் இடத்தைக் குறித்தே சென்றான். ஜனமேஜய மகாராஜரே, மஹாபலவானான பிராம்மணர் ஐந்து நாள் முழுதும் மிக்க கோரமான யுத்தத்தைச் செய்து கொல்லப்பட்டுப் பிரம்மலோகத்தை அடைந்தார். வேதமானது நன்றாக அத்தியயனம் செய்யப்பட்டால் எந்தப் பலனுண்டோ அந்தப் பலன் இந்தப் பர்வத்தைப் படிப்பதாலுண்டாகும். இந்தப் பர்வத்தைப் படித்தலால் பயமற்றவர்களான க்ஷத்திரியர்களுக்குப் பெரிதும் தகுந்ததுமான கீர்த்தியானது உண்டாகிறது. எந்த மனிதன் இந்தப் பர்வத்தை நித்தியம் படிப்பானோ, அல்லது கேட்பானோ அவன் மஹாபாபங்களினின்றும் தன்னால் செய்யப்பட்ட கோரமான கர்மாக்களினின்றும் விடுபடுகிறான்; பிராம்மணனுக்கு யக்ஞம் செய்தால் எந்தப் பலனுண்டாமோ அந்தப் பலன் உண்டாகிறது; க்ஷத்திரியர்களுக்குக் கோரமான யுத்தங்களில் கீர்த்தி உண்டாகிறது; மற்ற இரண்டு வர்ணத்தார்களும் இஷ்டமான காமத்தையும், புத்திரர்களையும, பௌத்திரர்களையும் அவ்வாறே அபீஷ்டங்களையும் நித்தியமாக அடைகிறார்கள்" என்று வைசம்பாயனர் கூறினார்" என்றிருக்கிறது. துரோண பர்வத்தின் பலன்களை சஞ்சயன் சொல்லியிருக்க முடியாது என்பதால் மேற்கண்டது போல இவற்றை வைசம்பாயனர் இவற்றை ஜனமேஜயனிடம் சொன்னார் என்பதே சரியானதாக இருக்க வேண்டும்.
********* நாராயணாஸ்த்ரமோக்ஷ உப பர்வம் முற்றும் *********
********* துரோண பர்வம் முற்றிற்று *********
ஆங்கிலத்தில் | In English |