“ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நல்லோருடன் நல்லோர் கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகளின் சொல்கின்றனர்”
- கர்ணனிடம் பீஷ்மர், துரோண பர்வம் பகுதி 4
துரோண வதத்தை மொழிபெயர்த்த போது, நான் நன்கறிந்த ஒரு மனிதரை இழந்தது போன்ற உணர்வை துரோணாச்சாரியரின் மறைவு எனக்குத் தந்தது. கதைகள், வரலாறுகள், புராணங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போது, அவற்றில் வரும் கதாப்பாத்திரங்களோடு ஒன்றி, அவர்களை நம்மில் ஒருவராக எண்ணுவது மானுட மனத்தின் இயல்பே. அவ்வகையில் துரோணர், மகாபாரதக் கால இளவரசர்களுக்கு மட்டுமல்ல; காலங்கள் நெடுகத் தோன்றிய மொத்த பாரத மனங்களுக்கும் ஆசானே என்றால் அது மிகையல்ல. துரோணரின் வதம் முடிந்த சில நாட்களுக்குள் நேர்ந்த திரு.சோ ராமசாமி அவர்களின் மறைவும், ஓர் ஆசானை இழந்த வலியையே தந்தது. கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதத்தைப் படிக்கத்தூண்டியது, திரு.சோ ராமசாமி அவர்கள் எழுதிய “மஹாபாரதம் பேசுகிறது” புத்தகமே. அதனுடன் ஒன்றிப்போனவனாக இருப்பினும், இவ்வளவு நாளும் அவரோடு பேச வேண்டும் என்று கூட நான் நினைத்ததில்லை. நல்லோனாகி, மேற்கண்ட பீஷ்மரின் சொற்களை இனியாவது என் வாழ்நாளில் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த ஞாயிறன்று துரோண பர்வம் பகுதி 203-ஐ மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் வந்தார். மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்ச நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். ரூ.2000/- தாள்கள் சிலவற்றை எடுத்தார். “நாடெல்லாம் பணப்பற்றாக்குறைனு சொல்றாங்க. கஷ்டப்பட்டு எடுத்திருப்பீங்களே” என்று கேட்டேன். “ரெண்டு வாரத்துக்கு முன்ன இருந்தே ஒவ்வொரு நாளும் ஏடிஎம்க்குப் போய் 2000, 2000மா எடுத்தேன்” என்றார். “நேரடியா பேங்குக்கே போனா மொத்தமா எடுக்க முடியாதா?” என்று கேட்டேன். “எடுக்கலாமா இருக்கும். இருந்தாலும் யாருங்க அவ்வளவு பெரிய கியூவுல நிப்பாங்க?” என்றார். “ஏடிஎம்லையும் பெரிய கியூதானே நிக்குது?” என்று கேட்டேன். “அந்தக் கியூவுக்கு இந்தக் கியூ எவ்வளவோ பரவாயில்லைங்க” என்று சொல்லிக் கொண்டே ரூ.20,400/-ஐ என்னிடம் கொடுத்தார். துரோண பர்வத்தின் தொடக்கத்தில் பீஷ்மர், “ஆறுகளுக்குப் பெருங்கடலும், ஒளிக்கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும், விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் இருப்பது போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக” என்று கர்ணனிடம் சொல்வதாக இருக்கிறது. அந்த வாக்கியத்திற்குச் சாலப் பொருந்துபவர் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் என்றால் அது மிகையல்ல. இன்று {21.12.2016} அவருடைய பிறந்தநாள். வாழ்த்துகள் நண்பரே.
ஆதிபர்வத்தின் முதல் பகுதியான அனுக்ரமானிகா உபபர்வத்தில், மகாபாரதம் மரமென்றால், துரோண பர்வம் அதன் இலைகளைப் போன்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஐந்து நாள் போரை எவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் பர்வம் என்பது பிரம்மிப்பையே ஏற்படுத்துகிறது. போர்க்களத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடந்த தனிப்போர்களையும், ஒவ்வொரு போராளியின் உணர்வுகளையும் நுணுக்கமாகச் சொல்கிறது. ஒரு முறை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, “அப்பாடா, கடைசில கொன்னுட்டீங்களா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அருகில் இருந்து அப்படி ஆச்சரியமடைந்தது என் மனைவி லட்சுமி என்பதை அறிந்து, “ஏன்? என்னாச்சு?” என்றேன். “ஜெயத்ரதனக் கொல்லப்போறேன்னு சொல்லிக் கிளம்புன அர்ஜுனன், போறான், போறான் போயிகிட்டே இருக்கானேன்னு நினைச்சேன். கடைசியா கொன்னிட்டீங்களே?” என்றாள். அவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஜெயத்ரதவத பர்வம். அதுபோலவே துரோண பர்வம் முழுமையும்.
துரோண பர்வத்தில் 170 பகுதிகளும், 8,909 சுலோகங்களும் உள்ளன என்றும் ஆதிபர்வத்தின் சங்கிரக உபபர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது மொழிபெயர்ப்பில் இந்தப் பர்வம் 204 பகுதிகளைக் கொண்டிருக்கிறது, சுலோகங்களை இன்னும் எண்ணவில்லை. கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கின்றன. துரோண பர்வத்தின் பகுதி 131ல் இருந்து, ஒவ்வொரு பகுதியிலும் சுலோக எண்கள் குறிக்கப்படுகின்றன. Sacred Texts வலைத்தளத்தில் உள்ள கங்குலியில் பதிப்பை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு வலைத்தளத்தில் கங்குலியின் புத்தகமே பிடிஎப் கோப்பாகக் கிடைத்தது. இரண்டாம் பதிப்பான அப்புத்தகத்தில் சுலோக எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. சுலோக எண்களுடன் இருப்பது, பிற்காலத்தில் மூலத்துடன் ஒப்பு நோக்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக, அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடியே சுலோக எண்களைக் குறித்து வருகிறேன். துரோண பர்வம் முழுமைக்கும் சுலோக எண்களைப் பின்னர்க் குறிக்க வேண்டும்.
துரோண பர்வத்தின் இடையில் பீமனிடமும், சாத்யகியிடமும் கர்ணன் பலமுறை பின்வாங்குவதைப் படித்துவிட்டு, அதைக் கண்டித்துச் சிலர் மின்னஞ்சல்களை அனுப்பினர்; சிலர் முகநூல் பின்னூட்டங்களில் அதைத் தெரிவித்தனர். கர்ணன்தான் பெரிய வீரன் என்றும், அர்ஜுனன் கோழை என்றும் பொருள்படும்படியாக அவற்றின் சாரம் இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவர்களில் சிலர் மகாபாரதமே பொய் என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். அந்த அளவில் கர்ணன் பாராட்டுக்குரியவனே. பெரும்பாடு என்னவென்றால், இருப்பதைத் தான் நான் மொழிபெயர்க்கிறேன் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அடுத்து வரப் போவது கர்ண பர்வம். கர்ணனின் சிறப்புகள் பலவற்றைச் அதில் சொல்லியிருந்தாலும், சில இடங்களில் கர்ணன் பின்வாங்கும் சம்பவங்களும் இருக்கின்றன. விமர்சனங்களும் வரத்தான் போகின்றன. எனினும், அப்படி விமர்சிப்பவர்களும் கூட, இந்த மொழிபெயர்ப்பின் உண்மைத்தன்மையை நிச்சயம் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
ஆதிபர்வம் இன்னும் பிழைதிருத்தம் முடியவில்லை. அதனால் அச்சுக்கு இன்னும் செல்லவில்லை. ஆடியோ கோப்புகளைப் பொறுத்தவரை திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்களின் பணிச்சுமையின் காரணமாக அது சற்றுத் தொய்வடைந்திருக்கிறது. துரோண பர்வத்தின் முழுப் பகுதிகளையும் நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் தொகுத்து அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதைப் பிடிஎப் ஆக்கி பதிவிறக்கத்திற்குக் கொடுக்க வேண்டும். முழு மஹாபாரதம் 7 பர்வங்களையும் சேர்த்து இதுவரை 1228 பகுதிகள் நிறைவடைந்திருக்கின்றன. எஞ்சியவை இன்னும் 887 பகுதிகள். அதில் பெரிய பர்வங்களாகச் சாந்தி பர்வம் 345 பகுதிகளும், அனுசாசன பர்வம் 145 பகுதிகளும் இருக்கின்றன.
அடுத்து வரப் போகும் கர்ண பர்வம் 96 பகுதிகளைக் கொண்டது. விரைவில் மொழிபெயர்க்கத் தொடங்க வேண்டும். டிசம்பர் மாதம் 24 & 25ம் தேதி கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும், 2016ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது விழாவுக்குச் செல்லப் போகிறேன். அங்குச் சென்று திரும்பியதும் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அனைத்தும் பரமன் சித்தம்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2016
பின்குறிப்பு: கர்ண பர்வம் மொழிபெயர்ப்பு அனுமன் ஜெயந்தியான இன்று தொடங்கப்படுகிறது.
28.12.2016