Sanjaya Dhritarashtra dialogue! | Karna-Parva-Section-02 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணன் வீழ்ந்ததைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; திருதராஷ்டிரனின் புலம்பல்; திருதராஷ்டிரன் வருந்தக்கூடாது என்று சொன்ன சஞ்சயன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற இதயம் கொண்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான குதிரைகளில் அவ்விரவே நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(1) ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், ஆழ்ந்த கவலையால் நிறைந்த இதயத்துடன் கூடிய அவன் {சஞ்சயன்}, சொந்தங்களோ, நண்பர்களோ {அப்போது அங்கு} இல்லாதிருந்த திருதாரஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். துயரால் சக்தி அனைத்தையும் இழந்திருந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} கண்ட அவன் {சஞ்சயன்}, கூப்பிய கரங்களுடன், தலைவணங்கி அந்த ஏகாதிபதியின் பாதங்களை வழிபட்டான்.(3)
முறையாக மன்னன் திருதராஷ்டிரனை வணங்கிய அவன் {சஞ்சயன்}, கவலையால் கூவியபடியே சொல்லத் தொடங்கினான்,(4) "ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். நீர் மகிழ்ச்சியாக இல்லையா? உமது தவறுகளால் இத்தகு துயரத்தில் வீழ்ந்தாலும், நீர் மலைப்படைய மாட்டீர் என நான் நம்புகிறேன்.(5)
விதுரர், துரோணர், கங்கையின் மகன் {பீஷ்மர்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் உமது நன்மைக்கான ஆலோசனைகளைச் சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை நீர் மறுத்தத்தை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(6)
ராமர் {பரசுராமர்}, நாரதர், கண்வர் மற்றும் பிறராலும் உமது நன்மைக்கான ஆலோசனைகள் சபையில் வைத்துச் சொல்லப்பட்டன. அவை உம்மால் மறுக்கப்பட்டதை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(7)
உமது நன்மையிலேயே எப்போதும் ஈடுபட்ட நண்பர்களான பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரும் போரில் எதிரியால் கொல்லப்பட்டதை நினைத்து நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்" என்றான் {சஞ்சயன்}.(8)
கரங்களைக் கூப்பியபடி தன்னிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சூதன் மகனிடம் {சஞ்சயனிடம்}, துயரால் பீடிக்கப்பட்டு, நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே இருந்த அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9)
விதுரர், துரோணர், கங்கையின் மகன் {பீஷ்மர்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் உமது நன்மைக்கான ஆலோசனைகளைச் சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை நீர் மறுத்தத்தை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(6)
ராமர் {பரசுராமர்}, நாரதர், கண்வர் மற்றும் பிறராலும் உமது நன்மைக்கான ஆலோசனைகள் சபையில் வைத்துச் சொல்லப்பட்டன. அவை உம்மால் மறுக்கப்பட்டதை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(7)
உமது நன்மையிலேயே எப்போதும் ஈடுபட்ட நண்பர்களான பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரும் போரில் எதிரியால் கொல்லப்பட்டதை நினைத்து நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்" என்றான் {சஞ்சயன்}.(8)
கரங்களைக் கூப்பியபடி தன்னிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சூதன் மகனிடம் {சஞ்சயனிடம்}, துயரால் பீடிக்கப்பட்டு, நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே இருந்த அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கொண்ட போர்வீரரான அந்தக் கங்கை மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சியையும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரின் வீழ்ச்சியையும் கேட்டு என் இதயத்தில் பெரும் வலியை உணர்கிறேன்.(10) பெரும் சக்தி கொண்டவரும், வசுக்களால் பிறந்தவருமான எந்த வீரர் கவசம் பூண்டு கொண்டு ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொன்றாரோ,(11), பிருகுவின் மகன் {பரசுராமர்}, உயர்ஆன்மா கொண்ட எவரிடம் உயர்ந்த ஆயுதங்களைக் கொடுத்தாரோ, பிள்ளைப் பருவத்திலே எந்தப் போர்வீரர், ராமரால் {பரசுராமரால்} வில்லின் அறிவியல் பயிற்றுவிக்கப்பட்டாரோ, ஐயோ அவர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டவனும், யக்ஞசேனன் {துருபதன்} மகனுமான சிகண்டியால் கொல்லப்பட்டாரே. இதற்காக என் இதயம் பெரிதும் வலிக்கிறது[1].(12,13)
[1] "13ம் சுலோகத்தில் நீலகண்டர் துரோணரையல்லாமல் பீஷ்மரைக் குறிப்பிட்டுச் சரியாகவே விளக்கியிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு சில பதிப்புகளில் இந்தச் சுலோகம் துரோணரைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
எந்த வீரரின் அருளின் மூலம், வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் அரச மகன்களும், பூமியின் தலைவர்கள் பலரும் மகாரதர்கள்[2] ஆனார்களோ,(14) ஐயோ, துல்லியமான இலக்குக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளியான துரோணர், திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(15) அவ்விருவரும், நால்வகை ஆயுதங்களிலும் (ஆயுதங்களின் அறிவிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும்)[3] தங்களுக்கு ஒப்பாக எவனையும் கொண்டதில்லை. ஐயோ, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(16) எந்தப் போர்வீரர், ஆயுத அறிவில் தனக்கு நிகராக மூன்று உலகிலும் எவனையும் கொள்ளவில்லையோ, வீரரான அந்தத் துரோணரின் கொலையைக் கேட்டு என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(17)
[2] "ஒரு மகாரதன் என்பவன், பத்தாயிரம் வில்லாளிகளுடன் ஒரே நேரத்தில் போரிடக்கூடியவன் ஆவான் எனக் கங்குலி" இங்கே விளக்குகிறார்.[3] "முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம், யந்திரமுக்தம் என்பனவே அந்த நால்வகை ஆயுதங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். முக்தம் என்ற ஆயுதமானது கரங்களில் இருந்து வீசி எறிந்து போரிடப் பயன்படுவது; அமுக்தம் என்பது, ஒரு வாளைப் போல, கரங்களில் இருந்து வீசி எறியப்படாமல் போரிடப் பயன்படுவது; முக்தாமுக்தம் என்பது, ஒரு கதாயுதத்தைப் போல, சில வேளைகளில் வீசி எறியப்பட்டும், சில வேளைகளில் வீசி எறியப்படாமலும் போரிடப் பயன்படுவது; யந்திரமுக்தம் என்பது ஏதாவது ஓர் இயந்திரத்தில் இருந்து ஏவப்பட்டுப் போரிடப் பயன்படுவதும் ஆகும். முக்த ஆயுதங்கள் அனைத்தும் அஸ்திரங்கள் எனப்படுகின்றன. அமுக்த ஆயுதங்கள் சஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பாண்டுவின் உயர்ஆன்ம மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆற்றலுடன் முயன்று, பலமிக்கப் படையான சம்சப்தகர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிய பிறகு,(18) துரோணரின் புத்திசாலி மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நாராயண ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, (கௌரவப்) படைப்பிரிவுகள் தப்பி ஓடத் தொடங்கிய பிறகு, என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(19) துரோணரின் மரணத்திற்குப் பிறகு, தப்பி ஓடியவர்களும், துயரக் கடலில் மூழ்கியவர்களுமான என் துருப்பினரை, ஆழ்ந்த கடலின் நடுவே கப்பல் உடைந்த கடலோடிகளுக்கு ஒப்பாக நான் நினைக்கிறேன்.(20) ஓ! சஞ்சயா, குரு படைப்பிரிவுகள் களத்தில் இருந்து தப்பி ஓடிய போது, துரியோதனன், கர்ணன், போஜர்களின் தலைவனான கிருதவர்மன், மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், எஞ்சியிருக்கும் என் மகன்கள் மற்றும் பிறரின் முகங்கள் எவ்வண்ணத்தை ஏற்றன?(21,22) ஓ!கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் என் தரப்பின் போர்வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலை விளக்கியபடி, போரில் உண்மையாக நடந்தவாறே இவையாவற்றையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது தவறால், கௌரவர்களுக்கு ஏற்பட்ட அனைத்தையும் கேட்டு நீர் எந்த வேதனையும் அடைய வேண்டாம். ஞானியான எவனும், விதிகொண்டு வரும் எதற்காகவும், ஒருபோதும் வலியை உணர்வதில்லை {மனம் வருந்துவதில்லை}.(24) விதி வெல்லப்பட முடியாததாகையால், மனித காரியங்கள் அடையப்படுவதாகவும், அடையப்படாததாகவும் ஆகலாம். எனவே, ஞானியான ஒருவன், தான் விரும்பிய பொருட்களை அடைந்தாலோ, வேறுவிதமானாலோ ஒருபோதும் வலியை உணர்வதில்லை" (என்றான் சஞ்சயன்}.(25)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நான் வலியை உணரவில்லை. நான் இவை யாவற்றையும் விதியின் விளைவாகவே கருதுகிறேன். விரும்பியபடியே அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக" என்றான்.(26)
-----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 2-ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |