Duryodhana incited the enthusiasm of his force! | Karna-Parva-Section-03 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் முகவாட்டத்தைக் கண்டு, கலங்கி நின்ற படைவீரர்கள்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; கர்ணனின் பெருமைகளைச் சொன்ன துரியோதனன்; அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட்டதைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பெரும் வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், நிறம் மங்கியவர்களாகி, உற்சாகமற்றவர்களாகி தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(1) ஆயுதங்கள் தரித்திருந்தவர்களான அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தலையைத் தொங்கப்போட்டனர். துயரால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், முற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.(2) இவ்வாறு பீடிக்கப்பட்ட முகத்தோற்றத்துடன் கூடிய அவர்களைக் கண்ட உமது துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துயரால் மனங்கலங்கி மேல்நோக்கியபடி வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்களில் பலரின் ஆயுதங்கள், இரத்தக் கறைகளுடன் அவர்களது கைகளில் இருந்து விழுந்தன.(4) மேலும், ஓ! பாரதரே, படைவீரர்களின் பிடியில் இருந்த எண்ணற்ற ஆயுதங்களும், வானத்தில் இருந்து விழும் விண்கோள்களுக்கு ஒப்பாகத் தொங்கிக் கொண்டிருந்தன[1].(5)
[1] "இந்தச் சுலோகத்தை நீலகண்டர் சரியாக விளக்கியிருக்கிறார் என நான் நினைக்கிறேன். நக்ஷத்திரானி Nakshatrani என்பதை விழும் விண்கோள்களாகப் பொருள் கொள்ளாவிடில், அந்த ஒப்பீடு பொருளற்றதாகவும், அபத்தமானதாகவும் ஆகிவிடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பிடிக்கப்பட்டவைகளும், நழுவுகின்றவைகளுமான அந்த ஆயுதங்கள், ஆகாயத்திலிருந்து விழுகின்றவையும் அமங்களத்தைத் தெரிவிக்கின்றவையுமான நக்ஷத்திரங்கள் போலக் காணப்பட்டன" என்றிருக்கிறது.
அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி, முடக்கப்பட்டு உயிரற்றவர்களைப் போல இப்படி நின்று கொண்டிருந்த உமது அந்தப் படையைக் கண்டு,(6) "உங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நான் பாண்டவர்களைப் போருக்கு அழைத்து, இந்த ஆயுத வழியைத் தொடக்கினேன்.(7) எனினும், துரோணர் வீழ்ந்ததும், {நமக்கான} வாய்ப்பு மகிழ்ச்சியற்றதாகத் தெரிகிறது. போரில் ஈடுபடும் போர்வீரர்கள் அனைவரும் போரில் சாகிறார்கள்.(8) போரில் ஈடுபடுவதால், ஒரு போர்வீரன் வெற்றியையோ, மரணத்தையோ அடைவான். இதில் (துரோணரின் மரணத்தில்) என்ன வினோதமிருக்கிறது? ஒவ்வொரு திசையை நோக்கியும் முகத்தைத் திருப்பிப் போரிடுவீராக.(9) வலிமையும், பலமும், உயர் ஆன்மாவும் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான விகர்த்தனன் மகன் கர்ணன், தனது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே போரில் திரிவதை இப்போது காண்பீராக.(10)
போரில் அந்தப் போர்வீரன் {கர்ணன்} மீது கொண்ட அச்சத்தாலேயே, கோழையான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிங்கத்தைக் கண்ட சிறு மானைப் போல எப்போதும் பின்வாங்குகிறான்.(11) அவனே {கர்ணனே}, பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்ட வலிமைமிக்கப் பீமசேனனை, சாதாரண மனிதப் போர் முறைகளாலேயே அந்தப் பரிதாப நிலையை அடையச் செய்தான்.(12) ஆயிரக்கணக்கான மாயைகளைக் கொண்டவனும், தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான கடோத்கசனை உரக்க முழங்கியபடியே, வெல்லப்படமுடியாத தனது ஈட்டியால் கொன்றவன் அவனே {கர்ணனே}.(13) இலக்கில் துல்லியமும், வெல்லப்பட முடியாத சக்தியும் கொண்ட அந்தப் புத்திசாலி போர்வீரனின் {கர்ணனின்} வற்றாத ஆயுத வலிமையை இன்று காண்பீராக.(14) விஷ்ணுவுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பான அஸ்வத்தாமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரின் ஆற்றலையும் அந்தப் பாண்டுவின் மகன்கள் இன்று காணட்டும்[2].(15) போரில் பாண்டுவின் மகன்களையும், அவர்களது துருப்புகளையும் தனித்தனியாகவே உங்கள் அனைவராலும் கொல்ல முடியும். அப்படியிருக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உங்களால் அடைய இயலும் சாதனை எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்? பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான நீங்கள், இன்று பெரும்பணிகளைச் சாதித்தபடியே ஒருவரையொருவர் காணப் போகிறீர்கள்" என்றான் {துரியோதனன்}.(16)
[2] "15வது சுலோகத்தின் இரண்டாவது வரியானது சில உரைகளில் வேறு விதமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன், தனது தம்பிகளுடன் கூடி கர்ணனை (குரு படையின்) படைத்தலைவனாக்கினான்.(17) படைத்தலைமையை ஏற்றவனும், போரில் மிகக் கடுமையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன் உரத்த முழக்கங்களைச் செய்தபடியே எதிரியோடு போரிட்டான்.(18) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள் மற்றும் விதேஹர்களுக்கு மத்தியில் அவன் {கர்ணன்} பேரழிவை ஏற்படுத்தினான்.(19) ஒன்றின் {ஒரு கணையின்} சிறகுக்கு {புங்கத்திற்கு} மிக நெருக்கமாக, வண்டுகளின் கூட்டங்களைப் போல எண்ணற்ற சரக் கணைகள் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டன. பெரும் சுறுசுறுப்புடன் கூடிய பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் பீடித்து, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற அவன் {கர்ணன்}, இறுதியாக அர்ஜுனனால் கொல்லப்பட்டான்" {என்றான் சஞ்சயன்}.(21)
--------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 3-ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |