Janamejaya's enquiry! | Karna-Parva-Section-01 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : துரோணர் இறந்த பிறகு, துரியோதனனும், பிற மன்னர்களும் அவரது மகனிடம் சென்றது; கர்ணனைத் தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு போரிடச் சென்றது; இரண்டு நாட்கள் கடும் போருக்குப் பிறகு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவது ஆகியவற்றை வைசம்பாயனர் சொல்வது; போரை விவரமாகச் சொல்லும்படி ஜனமேஜயன் கேட்டுக் கொண்டது…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரோணர் கொல்லப்பட்டதும், துரியோதனன் தலைமையிலான (கௌரவப் படையின்) அரசப் போர்வீரர்கள் அனைவரும், இதயம் நிறைந்த பெருங்கவலையுடன், துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்றனர்.(1) துரோணரின் இழப்பால் அழுதபடியே இருந்த தங்கள் உற்சாகமற்ற நிலையின் விளைவால், சக்தியை இழந்து, துயரால் பீடிக்கப்பட்ட அவர்கள், சரத்வான் மகளின் {கிருபியின்} மகனை {அஸ்வத்தாமனைச்} சுற்றி அமர்ந்தனர்.(2) சாத்திரங்களில் காணப்படும் கருத்துகளால் சற்று ஆறுதலடைந்த அந்தப் பூமியின் ஆட்சியாளர்கள், இரவு வந்ததும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.(3)
எனினும், ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, தங்கள் வசிப்பிடங்களில் இருந்த அந்தப் பூமியின் தலைவர்களால் எந்த மகிழ்ச்சியையும் உணரமுடியவில்லை. மிகப்பெரும் படுகொலைகளை நினைத்துப் பார்த்த அவர்களால் உறங்கவும் முடியவில்லை.(4) குறிப்பாகச் சூதன் மகன் (கர்ணன்), மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, துச்சாசனன், சகுனி ஆகியோரால் உறங்கவே முடியவில்லை.(5) இந்த நால்வரும், உயர் ஆன்மப் பாண்டவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்திய துயரங்களை நினைத்துப் பார்த்தபடியே அவ்விரவை துரியோதனனின் பாசறையில் ஒன்றாகக் கழித்தனர்.(6) முன்பு அவர்கள், பகடையாட்டத்தால் துயரில் மூழ்கியிருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தனர்.
அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)
அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)
காலை விடிந்ததும், அவர்கள் அனைவரும் இயல்பு விதிகளை நோற்று, வழக்கமான தங்கள் சடங்குகளைச் செய்தனர்.(9) வழக்கமான சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓரளவுக்கு ஆறுதலை அடைந்த அவர்கள், தங்கள் துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, போரிட வெளியே வந்து,(10) கர்ணனின் மணிக்கட்டில் மங்கல நாணைக் கட்டி, அவனைத் {கர்ணனைத்} தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு, தயிர்ப்பாத்திரங்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் [1], தங்க நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், நகைகள், விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தும், கட்டியங்கூறுவோர் {சூதர்கள்}, இசைக்கலைஞர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} ஆகியோரை வெற்றித் துதிகளால் தங்களைப் பாடச் செய்தும், அவர்களைத் தங்களின் வெற்றிக்காக வேண்டச் செய்தனர்.(11,12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்களும், தங்கள் காலைச் சடங்குகளைச் செய்த பிறகு, போரிடும் தீர்மானத்துடன் தங்கள் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(13)
[1] "அக்ஷதங்கள் என்பன, ஒருவேளை பூர்ண பாத்திரங்கள், அதாவது, சோளம் மற்றும் பிற பயனுள்ள பொருட்களால் விளிம்பு வரை நிறைந்த குறிப்பிட்ட பாத்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். முழுமையாகப் பார்த்தால் இது மங்கலத்தன்மையைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கடும்போர் தொடங்கியது.(14) கர்ணனுடைய படைத்தலைமையின் போது, குரு மற்றும் பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது.(15) போரில் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற விருஷன் (கர்ணன்), இறுதியாகத் தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(16) பிறகு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய சஞ்சயன், குருஜாங்கலத்தில் நடைபெற்ற அனைத்தையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்டவனும், அம்பிகையின் மகனுமான முதிர்ந்த மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தான்.(18) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, துரியோதனனின் நலன் விரும்பியான கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரில் மூழ்கியும், எவ்வாறு அவன் {திருதராஷ்டிரன்} உயிரோடு இருந்தான்?(19) தன் மகன்களின் வெற்றி எவனிடம் இருக்கிறது என அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} நினைத்தானோ, அவன் {கர்ணன்} வீழ்ந்த போதும், எவ்வாறு அவனால் {திருதராஷ்டிரனால்} உயிர் தரித்திருக்க முடிந்தது?(20)
கர்ணனின் மரணத்தைக் கேட்ட பிறகும் மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடாமல் இருந்தான் எனும்போது, எத்தகு பெரும் துயரச் சூழ்நிலைகளிலும் மனிதர்கள் தங்கள் உயிரை விடுவது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(21) ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, சந்தனுவின் மதிப்புமிக்க மகன் {பீஷ்மர்}, பாஹ்லீகன், துரோணர், சோமதத்தன், பூரிஸ்ரவஸ், பிற நண்பர்கள், தன் மகன்கள், பேரன்கள் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடவில்லை எனும்போது, ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, ஒருவன் உயிரை விடுவது என்பது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(22,23) உண்மையாக நடந்தவாறே இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் மூதாதையரின் உயர்ந்த சாதனைகளைக் கேட்பதில் நான் நிறைவை அடையவில்லை" என்றான் {ஜனமேஜயன்}.(24)
----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 1-ல் உள்ள சுலோகங்கள் : 24
----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 1-ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |