Dhritarashtra felldown senseless! | Karna-Parva-Section-04 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : துயரால் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; பெண்களின் ஓலம்; பெண்கள் மயங்கிவிழுந்தது; மீண்டும் சஞ்சயனிடம் போரைக் குறித்து விசாரித்த திருதராஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இந்தப் புலனாய்வைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரின் உச்சக்கட்டத்தை உணர்ந்து, சுயோதனன் {துரியோதனன்} ஏற்கனவே இறந்துவிட்டதாகவே கருதினான். மிகவும் கலங்கிப் போன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, உணர்வுகளை இழந்த யானையொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(1) பெரிதும் கலக்கமடைந்தவனான அந்த ஏகாதிபதிகளில் முதனமையானவன் {திருதராஷ்டிரன்} பூமியில் விழுந்த போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, (அரச குடும்பத்தைச் சார்ந்த) பெண்கள் உரக்க ஓலமிட்டனர். மொத்த பூமியையும் நிறைக்குமளவுக்கு அவ்வொலி பேரொலியாக இருந்தது[1].(2) ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்கியிருந்த அந்தப் பாரதப் பெண்மணிகள், பெரிதும் கலக்கமடைந்த இதயங்களுடன், துயரால் எரிக்கப்பட்டவர்களாக உரக்க அழுதனர்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னனை அணுகிய காந்தாரியும், அந்தக் குடும்பத்தின் பிற பெண்மணிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(4)
[1] சுலோகங்கள் 1-ம், 2-ம் இரு வரி சுலோகங்களாக அல்லாமல் முவ்வரி சுலோகங்களாக இருக்கின்றன எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துயரால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் குளித்து, உணர்வுகளை இழந்த அந்தப் பெண்களுக்குச் சஞ்சயன் ஆறுதல் கூறினான்.(5) (சஞ்சயனால்) ஆறுதலடைந்த அந்தப் பெண்கள், காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினர்.(6) விதுரனும், அந்தக் குரு வழித்தோன்றலின் {திருதராஷ்டிரன்} மீது நீரைத் தெளித்து, தன் கண்ணையே ஞானமாகக் கொண்ட [2] அந்தப் பலமிக்க ஏகாதிபதிக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மெதுவாக உணர்வுகளை அடைந்து, அந்தக் குடும்பத்தின் பெண்கள் அங்கே இருப்பதை அறிந்து கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, மதியிழந்த ஒருவனைப் போலச் சிறிது நேரம் முற்றிலும் அமைதியாக இருந்தான்.(8)
[2] "இது பார்வையற்ற ஒரு மனிதனைக் குறிக்கும் மதிப்புமிக்க அடைமொழியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சிறிது நேரம் சிந்தித்து, நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்களை நிந்தித்து, பாண்டவர்களைப் புகழ்ந்தான்.(9) தன் அறிவையும், சுபலனின் மகனான சகுனியின் அறிவையும் நிந்தித்த மன்னன், நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினான்.(10) மீண்டும் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த மன்னன், போதுமான மன உரத்துடன், கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான்.(11)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். ஓ! சூதா, எப்போதும் வெற்றியை விரும்பிய என் மகன் துரியோதனன், வெற்றியடையவதில் சலிப்படைந்து ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டானா? ஓ! சஞ்சயா, திரும்பச் சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, இவை யாவையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக" என்றான்.(12,13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, மன்னனால் {திருதராஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதன் {சஞ்சயன்}, அவனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களுமான தனது மகன்கள், தம்பிகள் மற்றும் பிற சூதப் போர்வீரர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டான்.(14) பாண்டுவின் புகழ்பெற்ற மகனால் {பீமனால்} துச்சாசனனும் கொல்லப்பட்டான். உண்மையில், அந்தப் போரில் கோபத்துடன் இருந்த பீமசேனனால் அவனது {துச்சாசனனின்} குருதியும் குடிக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(15)
------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 4-ல் உள்ள சுலோகங்கள் :15
ஆங்கிலத்தில் | In English |