Pandava heroes slain! | Karna-Parva-Section-06 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கொல்லப்பட்ட பாண்டவ வீரர்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! மகனே {சஞ்சயா}, போரில் பாண்டவர்களால் என்தரப்பில் கொல்லப்பட்டோரின் பெயர்களை நீ குறிப்பிட்டாய். ஓ! சஞ்சயா, இப்போது என் தரப்பு மக்களால் பாண்டவர்களுக்கு மத்தியில் கொல்லப்பட்டோரின் பெயர்களை எனக்கு இப்போது சொல்வாயாக" என்று கேட்டான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் பெரும் ஆற்றலையும், சக்தியையும், வலிமையையும் கொண்ட குந்திகள் {பாண்டவவீரர்கள்}, தங்கள் சொந்தங்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடன் சேர்த்துப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(2) நாராயணர்கள், பலபத்திரர்கள், நூற்றுக்கணக்கான பிற வீரர்கள் ஆகிய (பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புள்ள அனைவரும் வீர பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(3) சக்தியிலும், வலிமையிலும் போரில் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கு இணையான சத்யஜித், துல்லிய இலக்கைக் கொண்ட துரோணரால் போரில் கொல்லப்பட்டான்.(4) வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் திறம்பெற்றவர்களுமான பாஞ்சாலர்களில் பலர் துரோணரோட மோதி, யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(5) அதே போல வயதால் மதிப்பிற்குரியவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் ஆற்றலுடன் முயன்றவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்களும், தங்கள் மகன்களோடு சேர்த்துப் போரில் துரோணரால் கொல்லப்பட்டனர்.(6)
பாலனாக இருப்பினும், அர்ஜுனனுக்கோ, கேசவனுக்கோ {கிருஷ்ணனுக்கோ}, பலதேவனுக்கோ {பலராமனுக்கோ} போரில் இணையானவனும், போரில் உயர்ந்த சாதனைகளைச் செய்தவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அபிமன்யு, எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற பிறகு, இறுதியாக ஆறு முதன்மையான தேர்வீரர்களால் சூழப்பட்டு அவர்களால் கொல்லப்பட்டான். அர்ஜுனனைத் தடுக்க முடியாத அவர்கள் அர்ஜுனனின் மகனை {அபிமன்யுவைக்} கொன்றனர். வீரனான அந்தச் சுபத்ரையின் மகன் {அபிமன்} தன் தேரை இழந்தாலும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து போரில் நிலைத்திருந்தான். இறுதியாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, துச்சாசனன் மகன் அவனை {அபிமன்யுவைக்) களத்தில் கொன்றான்.(7-9) படச்சரர்களைக் கொன்றவனும், பெரும் படையால் சூழப்பட்டவனும், அழகனுமான அம்பஷ்டன் மகன், தன் கூட்டாளிகளுக்காகத் தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தினான்.(10) எதிரிகளுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, அவன் துரியோதனன் மகனான துணிச்சல்மிக்க லக்ஷ்மணனால் போரில் எதிர்கொள்ளப்பட்டு யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பப்பட்டான்.(11)
வலிமைமிக்க வில்லாளியும், போரில் வெல்லப்பட முடியாதவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான பிருஹந்தன், பெரும் ஆற்றலுடன் முயன்ற துச்சாசனனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(12) போரில் வெல்லப்பட முடியாதவர்களும், தங்கள் கூட்டாளிகளாக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும், மன்னர்களுமான மணிமான் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(13) போஜர்களின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தன் படைகளின் முகப்பில் நின்றவனுமான அம்சுமான், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடற்கரையின் ஆட்சியாளனான சித்திரசேனன், தன் மகனோடு சேர்த்து, சமுத்ரசேனனால் பலவந்தமாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(15) கடல்வழி நாட்டின் {அநூப நாட்டின்} மற்றொரு ஆட்சியாளனான நீலன், பெரும் சக்தி கொண்ட வியாக்ரதத்தன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அஸ்வத்தாமனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.(16) சித்திராயுதன், சித்திரயோதி ஆகிய இருவரும் பெரும் படுகொலைகளைச் செய்து, தன் தேரின் பல்வேறு நகர்வுகளை வெளிப்படுத்திய பிறகு, பெரும் ஆற்றலுடன் முயன்ற விகர்ணனால் போரில் கொல்லப்பட்டான்.(17)
போரில் விருகோதரனுக்கு {பீமனுக்கு} இணையானவனும், கைகேயப் போர்வீரர்களால் சூழப்பட்டவனுமான கைகேயர்கள் தலைவன், சகோதரனால் கொல்லப்பட்ட சகோதரனாக மற்றொரு கைகேயனாலேயே கொல்லப்பாட்டன்.(18) மலைநாட்டைச் சேர்ந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும, கதாயுதப் போர்களில் சாதித்தவனுமான ஜனமேஜயன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன் துர்முகனால் கொல்லப்பட்டான்.(19) முதன்மையான மனிதர்களும், பிராகசமான கோள்கள் இரண்டைப் போன்றவர்களுமான ரோசமானன் சகோதரர்கள் ஆகிய இருவரையும் துரோணர் தன் கணைகளால் சொர்க்கத்திற்கு ஒன்றாக அனுப்பினார்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட வேறு மன்னர்கள் பலரும் (பாண்டவர்களுக்காகப்) போரிட்டனர். அடைவதற்கரிய சாதனைகளைச் செய்த அவர்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(21)
சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தாய்மாமன்களான புருஜித் மற்றும் குந்திபோஜன் ஆகிய இருவரும், போரில் மரணமடைவதால் கிட்டும் உலகங்களுக்குத் துரோணரின் கணைகளால் அனுப்பப்பட்டனர்.(22) தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தலைமையேற்று வந்த காசிகளின் ஆட்சியாளனான அபிபூ, போரில் வசுதானன் மகனால் தனது உயிரை விடும்படி செய்யப்பட்டான்.(23) அளவற்ற ஆற்றலைக் கொண்ட யுதாமன்யு, பெரும் சக்தியைக் கொண்ட உத்தமௌஜஸ் ஆகியோர் வீரமிக்க நூற்றுக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற பிறகு நமது மக்களால் கொல்லப்பட்டனர்.(24) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசர்களான மித்ரவர்மன் மற்றும் க்ஷத்ரதர்மன் ஆகிய முதன்மையான வில்லாளிகள் இருவரும் துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் துணிச்சல் கொண்டவனும், சிகண்டியின் மகனுமான க்ஷத்ரதேவன், ஓ! ஐயா, உமது பேரன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டான்.(26)
பெரும் வலிமை கொண்டவர்களும், போரில் அச்சமற்றுத் திரிந்தவர்களும், தந்தையும் மகனுமான சுசித்ரன் மற்றும் சித்ரவர்மன் ஆகிய இரு வீரர்களும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அலைகள் நிறைந்த பெருங்கடலைப் போன்ற வார்த்தக்ஷேமி, போரில் தன் ஆயுதங்கள் தீர்ந்து, இறுதியாக இடைஞ்சலற்ற அமைதியை அடைந்தான்.(28) சூதர்களில் முதன்மையான சேனாபிந்து, போரில் எதிரிகள் பலரை எரித்த பிறகு, இறுதியாகப் பாஹ்லீகனால் {Bahlika} கொல்லப்பட்டான்.(29) ஓ! ஏகாதிபதி, சேதிகளுக்கு மத்தியில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான திருஷ்டகேது, அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(30) அதேபோல, பெரும் ஆற்றலைக் கொண்டவனான வீர சத்யதிருதி, பாண்டவர்களுக்காகப் போரில் பெரும் கொலைகளைச் செய்த பிறகு, யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(31) பூமியின் தலைவனும், சிசுபாலனின் மகனுமான சுகேது, எதிரிகள் பலரைக் கொன்ற பிறகு, இறுதியில் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.(32)
விராடனின் மகன் சங்கனும், பெரும்பலம் கொண்ட உத்தரனும், அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(33) அதே போல, மத்ஸ்யர்களின் சத்யதிருதி, பெரும் சக்தி கொண்ட மதிராஸ்வன், பெரும் ஆற்றலைக் கொண்ட சூர்யதத்தன் ஆகியோர் அனைவரும் துரோணரின் கணைகளால் கொல்லப்பட்டனர்.(34) ஓ! ஏகாதிபதி, பெரும் ஆற்றலைக் கொண்ட சிரேணிமத் (சிரேணிமான்} அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து, யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(35) பெரும் ஆற்றலைக் கொண்டவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான மகதர்களின் தலைவன்[1], பீஷ்மரால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் உறங்குகிறான்.(36) போரில் பேரழிவை ஏற்படுத்திய வசுதானனும், பெரும் ஆற்றலுடன் முயன்ற பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(37) இவர்களும், பாண்டவர்களின் இன்னும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் கொல்லப்பட்டனர். நீர் என்னைக் கேட்டது அனைத்தையும் இப்போது நான் சொல்லிவிட்டேன்" {என்றான் சஞ்சயன்}.(38)
-----------------------------------------------------------------------------------[1] இவன் ஜராசந்தரின் மகன் சகதேவனாக இருக்க வேண்டும்.
கர்ண பர்வம் பகுதி 6-ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |