Remnant warriors yet alive! | Karna-Parva-Section-07 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : குருக்களில் இன்னும் உயிரோடு இருக்கும் வீரர்கள் யாவர் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; துயர் தாளாமல் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, என் போர்வீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் அழிந்த பிறகு, என் படையில் எஞ்சியிருப்போரும் அழிந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்பவில்லை.(1) வலிமைமிக்க வில்லாளிகளும், குருக்களில் முதன்மையானோரும், வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்ட பிறகும், நான் இன்னும் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?(2) போர்க்கள ரத்தினமும், பத்தாயிரம் யானைகளின் பலத்துடன் கூடிய பெரும் கர வலிமை கொண்டவனுமான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} மரணத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, ஓ! சூதா {சஞ்சயா}, முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்த பிறகு எனது படையில் இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போரைக் குறித்து இப்போது சொல்வாயாக.(4) வீழ்ந்தவர்களின் பெயர்களை நீ எனக்குச் சொன்னாய். எனினும், இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போர் அனைவரும் கூட ஏற்கனவே இறந்துவிட்டதாகவே எனக்குத் தெரிகின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.(5)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிராமணர்களில் முதன்மையான துரோணர், சுடர்மிக்க, தெய்வீகமான, வலிமைமிக்க நால்வகை ஆயுதங்கள் [1] பலவற்றை எந்த வீரனுக்கு வழங்கினாரோ, திறனும், கரநளினமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், உறுதியான பிடியும், வலுவான ஆயுதங்களும், பலமிக்கக் கணைகளும் கொண்ட அந்த வீரன், நெடுந்தொலைவுக்கு {ஆயுதங்களை} ஏவவல்லவனான அந்த உயர்ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் இன்னும் நிற்கிறான்.(6,7) ஆநர்த்த நாட்டுவாசியும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், சாத்வதர்களில் முதன்மையானவனும், போஜர்களின் தலைவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான அந்தக் கிருதவர்மன், போரிட விரும்புபவனாக இன்னும் களத்தில் இருக்கிறான்.(8) ஆர்த்தாயனன் மகனும், போரில் அச்சமற்றவனும், போர்வீரர்களில் முதல்வனும், உம் தரப்பில் உள்ள அனைவரிலும் முதன்மையானவனும், தன் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்காகத் தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களான பாண்டவர்களைக் {நகுல சகாதேவர்களை} கைவிட்டவனும், போரில் கர்ணனின் உற்சாகச் செருக்கைக் குறைப்பதாக யுதிஷ்டிரனின் முன்னிலையில் உறுதியளித்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரனும், வெல்லப்பட முடியாதவனும், சக்தியில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனுமான சல்லியன், உமக்காகப் போரிட விரும்பி இன்னும் களத்தில் இருக்கிறான்(9,10)
[1] நால்வகை ஆயுதங்கள் பின்வருமாறு: 1. த்ருடம் {திடம்} = உறுதியாகத் தாக்குவது; 2. தூரம்: தொலைவிலுள்ளதைத் தாக்குவது; 3. ஸூக்ஷமம் = நுட்பமானதைத் தாக்குவது; 4. சப்தவேதி = ஒலி வழியே சென்று தாக்குவது. "சித்ரம், சுப்ரம், திவ்யம், லிகிதம்" என்றும் கொள்ளலாம்.
ஆஜநேயர்கள், சைந்தவர்கள், மலைவாசிகள், வடிநிலப் பகுதிவாசிகள் {ஆற்றுப்படுகைவாசிகள்}, காம்போஜர்கள், வனாயுகள் ஆகியோரைக் கொண்ட தன் படையின் துணையுடன் கூடிய காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, உமக்காகப் போரிட விரும்புபவனாகக் களத்தில் இருக்கிறான்.(11) ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், பல்வேறு அழகிய வழிகளில், பல்வேறு ஆயுதங்களுடன் போரிடவல்லவரும், கௌதமர் என்று அழைக்கப்படுபவருமான சரத்வான் மகன் {கிருபர்}, பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், பெரியதுமான ஓர் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு போரிட விரும்பி களத்தில் நிற்கிறார்.(12) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நல்ல குதிரைகளுடனும், கொடிமரத்துடனும் கூடிய நல்ல தேரில் ஏறியவனுமான கைகேயர்கள் ஆட்சியாளனுடைய மகன், உமக்காகப் போரிடுவதற்காகக் களத்தில் நிற்கிறான்.(13)
ஓ! மன்னா{திருதராஷ்டிரரே}, உமது மகனும், குருகுலத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனுமான புருமித்ரன், சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிக்கொண்டு, மேகமற்ற ஆகாயத்தில், பிரகாசமாக ஒளிரும் சூரியனைப் போலவே களத்தில் நிற்கிறான்.(14) பெரும் சக்தி கொண்ட துரியோதனனும், ஒரு யானைப்படைக்கு மத்தியில், போராளிகளில் முதன்மையான பலரின் துணையுடன் போரிட விரும்பி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் நிற்கிறான்.(15) மன்னர்கள் பலருக்கு மத்தியில், தாமரையின் காந்தியைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, சற்றே புகையுடன் கூடிய நெருப்பைப் போலவோ, மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போலவோ, தனது அழகான தங்கக் கவசத்துடன் பிரகாசமாகத் தெரிந்தான்.(16)
சித்திரசேனனுடன் சேர்ந்து, வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய சுஷேணன், வீர சத்யசேனன் ஆகிய உமது மகன்களும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், போரிடும் விருப்பத்துடன் நிற்கின்றனர்.(17) பெரும் பலம் கொண்டவர்களும், பணிவுடன் கூடியவர்களுமான பாரத இளவரசர்கள் சித்ராயுதன், சுருதவர்மன், ஜயன், சலன், சத்யவிரதன், துச்சலன் ஆகியோர் அனைவரும் போரிட விரும்பி களத்தில் நிற்கின்றனர்.(18) கைதவ்யர்களின் ஆட்சியளானும், தன் துணிவில் செருக்குக் கொண்டவனும், போரில் அச்சமற்றுத் திரியவல்லவனுமான அந்த இளவரசன் {கைதவ்ய ராஜகுமாரன்}, காலாட்படை, குதிரைப்படை, யானைகள் மற்றும் தேர்களைக் கொண்ட தன் எதிரிகளைக் கொன்றபடியே, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் நிற்கிறான்.(19) வீரம் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், திறம்படத் தாக்கவல்லவர்களும், துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான சுருதாயு, சுருதாயுதன், சித்திராங்கதன், சித்திரவர்மன் ஆகியோரும் போரில் விருப்பத்துடன் களத்தில் நிற்கின்றனர்.(20)
கர்ணனின் மகனான உயர் ஆன்ம சத்யசந்தன், போரிடும் விருப்பத்துடன் களத்தில் நிற்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவையும், பெரும் கரநளினத்தையும் கொண்டவர்களான கர்ணனின் வேறு இரண்டு மகன்களும், அற்ப சக்தி கொண்ட போர்வீரர்களால் துளைக்க முடியாதபடியே, உமக்காகப் போரிடும் விருப்பத்துடன் பெரும் படைகளுக்குத் தலைமையில் நிற்கிறார்கள்.(21) இவ்வீரர்கள் மற்றும் அளவற்ற வலிமை கொண்ட இன்னும் பல முதன்மையான போர்வீரர்கள் ஆகியோரின் துணையுடன் குரு மன்னன் (துரியோதனன்) இரண்டாவது இந்திரனைப் போல வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டு தன் யானை படைப்பிரிவுக்கு மத்தியில் நிற்கிறான்" {என்றான் சஞ்சயன்}.(22)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "நமக்கும் எதிரிக்கும் மத்தியில் உயிரோடு இருப்பவர்கள் அனைவரையும் நீ முறையாக எனக்குச் சொல்லிவிட்டாய். இதிலிருந்தே வெற்றி எந்தப்பக்கம் சேரும் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். உண்மையில் அஃதை இந்த உண்மைகளில் இருந்தே அனுமானிக்கலாம்" என்றான்.(23)
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், "தன் முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்துவிட்டதால், தன் படையின் சிறு பகுதி மட்டுமே உயிரோடு இருப்பதை அறிந்த அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், இதைச் சொன்ன போது, துயரத்தில் மிகவும் கலக்கமடைந்ததாகத் தன் இதயத்தை உணர்ந்தான். {அப்படியே, அந்த} மன்னன் {திருதராஷ்டிரன்} மயங்கிப் போனான். பிறகு ஓரளவுக்குத் தன் உணர்வுகள் மீண்ட அவன், சஞ்சயனிடம், "ஒருக்கணம் பொறுப்பாயாக" என்றான்.(24,25) மேலும் அந்த மன்னன், "ஓ! மகனே {சஞ்சயா}, இந்தக் கொடிய பேரிடரைக் கேட்ட பிறகு, என் இதயம் பெரிதும் கலங்குகிறது. என் புலன்கள் மயங்குகின்றன, என் அங்கங்களும் முடங்குகின்றன" என்றான்.(26) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அம்பிகையின் மகனும், பூமியின் தலைவனுமான அந்தத் திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்"{என்றார் வைசம்பாயனர்}.(27)
------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 7-ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |