The lament of Dhritarashtra! | Karna-Parva-Section-08 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனின் பெருமைகளைச் சொல்லிப் புலம்பிய திருதராஷ்டிரன், நஞ்சுண்டோ, தீயில் விழுந்தோ, மலையில் இருந்து விழுந்தோ சாக விரும்புவதாகச் சஞ்சயனிடம் சொன்னது...
ஜனமேயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயனரே}, மன்னன் {திருதராஷ்டிரன்} சற்றே ஆறுதலடைந்ததும், கர்ணனின் வீழ்ச்சியையும், தனது மகன்கள் கொல்லப்பட்டதையும் கேட்டு என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் மகன்களுக்கு ஏற்பட்ட அழிவால் உண்டான அவனது துயரம் வருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} சொன்னது அனைத்தையும் கேட்கின்ற எனக்கு {அவற்றை} நீர் சொல்வீராக" என்றான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நம்பமுடியாததும், அதிர்ச்சியூட்டுவதும், அச்சமூட்டுவதும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளையும் முடக்கும் திறன் கொண்டதும், மேருவின் வீழ்ச்சியைப் போலத் தெரிவதும்,(3) அல்லது நம்ப முடியாத வகையிலான சுக்கிரனின் {சுக்கிராச்சாரியரின்} அறிவு மயக்கம் போன்றதும், அல்லது பயங்கரச் சாதனைகளைச் செய்த இந்திரன் எதிரிகளிடம் அடையும் வீழ்ச்சியைப் போன்றதும்,(4) அல்லது ஆகாயத்தில் இருக்கும் பிரகாசமான சூரியன் பூமியில் விழுந்ததைப் போன்றதும், அல்லது வற்றாத நீர் கொள்ளிடமான பெருங்கடலானது, புரிந்து கொள்ள முடியாத வகையில் வற்றிப் போவது போன்றதும்,(5) அல்லது பூமி, ஆகாயம், திசைப்புள்ளிகள் மற்றும் நீர் ஆகியன, வியக்கவைக்கும் வகையில் முற்றிலும் அழிவது போன்றதும், அல்லது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரு செயல்களும் கனியற்றுப் போவது போன்றதுமான கர்ணனின் படுகொலையைக் கேட்ட திருதராஷ்டிரன்,(6) அதுகுறித்துச் சிறிது நேரம் மெய்யுறுதியுடன் சிந்தித்ததும், தன் படை நிர்மூலமாக்கப்பட்டதாகவே நினைத்தான்.(7)
கொல்லப்பட முடியாத கர்ணனைப் போலவே, அதே போன்ற விதியையே பிற உயிரினங்களும் அடையப் போகின்றன என்று நினைத்தவனும், துயரில் எரிந்தவனும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், கிட்டத்தட்ட அங்கங்கள் {அனைத்தும்} முடங்கியவனும், அந்த அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், மிகவும் உற்சாகமற்ற வகையில் நெடும் பெருமூச்சுகளைவிட்டுக் கொண்டே, கவலையால் நிறைந்து "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் புலம்பத் தொடங்கினான்.(8,9)
அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, "ஓ! சஞ்சயா, அதிரதனின் அந்த வீர மகன் {கர்ணன்}, சிங்கம் அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டிருந்தான். ஒரு காளையின் கழுத்தளவிற்குத் தன் கழுத்து தடித்தவனான {காளையின் திமில்களைப் போலத் தோள் தடித்தவனான} அவனது கண்கள், நடை மற்றும் குரலும் கூடக் காளையைப் போன்றே இருந்தன.(10) வஜ்ரத்தைப் போன்ற கடினமான அங்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் {கர்ணன்}, காளையானது மற்றொரு காளையிடம் இருந்து தப்பி ஓடாததைப் போல, பெரும் இந்திரனே {மகேந்திரனே} தன் எதிரியாக இருந்தாலும் போரில் இருந்து எப்போதும் விலகியதில்லை. (11)
அவனது வில்லின் நாணொலி, உள்ளங்கையொலி, அவனது கணை மாரியின் "விஸ்" என்ற ஒலி ஆகியவற்றால் மனிதர்களும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் போரில் இருந்து தப்பி ஓடின.(12) துரியோதனன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரனை {கர்ணனை} நம்பியே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் பகைமையைத் தூண்டிவிட்டான்.(13) தேர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியும், தடுக்கப்படமுடியாத தொடக்கத்தை {புறப்பாட்டைக்} கொண்ட வீரனுமான அந்தக் கர்ணன், போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்லப்பட்டான்?(14)
அவன் {கர்ணன்}, தன் கரங்களின் வலிமையை நம்பியே, மங்காப் புகழ் கொண்ட கேசவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருஷ்ணிகள் மற்றும் பிற எதிரிகள் அனைவரையும் அலட்சியம் செய்தான்?(15) அவன் {கர்ணன்}, மூடனும், பேராசை கொண்டவனும், தலைக்குனிவை அடைந்தவனும், அரசில் ஆசை கொண்டவனும், பீடிக்கப்பட்டவனுமான துரியோதனனிடம், "ஒன்றாகச் சேர்ந்திருப்பவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான சாரங்கபாணி {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகிய இருவரையும், போரில் அவர்களது முதன்மையான தேர்களில் இருந்து நான் ஒருவனாகவே கீழே வீழ்த்துவேன்" என்று சொல்வது வழக்கம்.(16,17)
காந்தாரர்கள், மத்ரகர்கள், மத்ஸ்யர்கள், திரிகர்த்தர்கள், தங்கணர்கள், காசர்கள்,(18) பாஞ்சாலர்கள், விதேஹர்கள், குளிந்தர்கள், காசி-கோசலர்கள், சுஹ்மர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், புண்டரர்கள், கீசகர்கள்,(19) வத்ஸர்கள், கலிங்கர்கள், தரதர்கள், அஸ்மகர்கள், ரிஷிகர்கள் ஆகிய வெல்லப்பட முடியாதவர்களும், வலிமிக்கவர்களுமான எதிரிகளை அவன் {கர்ணன்} அடக்கியிருக்கிறான். துணிவுமிக்க இந்தக் குலங்கள் அனைத்தையும் கங்க இறகுகளைக் கண்ட தன் கூரிய கணைகளால் அடக்கியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரையும் நமக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(20,21) ஐயோ, தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்த போர்வீரனும், படைகளைப் பாதுகாப்பவனும், வலிமையும் சக்தியும் கொண்ட விருஷன் என்று அழைக்கப்பட்டவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணன், வீரர்களும், வலிமைமிக்கவர்களும், தன் எதிரிகளுமான பாண்டுவின் மகன்களால் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(22)
தேவர்களில் முதன்மையானவனான இந்திரனைப் போல, கர்ணன் மனிதர்களில் முதன்மையானவனாக இருந்தான். இந்த மூவுலகிலும், இவர்களைப் போல வேறு மூன்றாவது நபரை நாம் கேள்விப்பட்டதிலை.(23) குதிரைகளில் உச்சைஸ்ரவம் முதன்மையானது; யக்ஷர்களில் வைஸ்ரவணன் {குபேரன்} முதன்மையானவன்; தேவர்களில் இந்திரன் முதன்மையானவன்; தாக்குபவர்களில் கர்ணனே முதன்மையானவன்.(24) பெரும் வீரமிக்கவர்களும், மிக வலிமையானவர்களுமான ஏகாதிபதிகளால் கூட வெல்லப்பட முடியாதவனாக இருந்த அவன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகத்தையும் அடக்கினான்.(25) மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்}, நல்லிணக்கம் மற்றும் கௌரவங்களின் மூலம் கர்ணனைத் தன் நண்பனாக அடைந்து, கௌரவர்களையும், யாதவர்களையும் தவிர்த்து உலகின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி அழைத்தான்.(26)
{அப்படிப்பட்ட} அந்தக் கர்ணன், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, நடுக்கடலில் உடைந்த மரக்கலத்தைப் போலத் துயரக் கடலில் நான் மூழ்குகிறேன்.(27) உண்மையில், மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அவன் {கர்ணன்}, தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, கடலில் தெப்பம் இல்லாத ஒருவனைப் போலத் துன்பக்கடலில் நான் மூழ்குகிறேன்.(28) ஓ! சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ! சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான்?(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, {இந்தத்} துயரத்தின் பெருங்கனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை" {என்றான் திருதராஷ்டிரன்}.(31)
--------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 8-ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |