The enquiry of Dhritarashtra! | Karna-Parva-Section-09 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனின் மரணத்தைக் கேட்டு துக்கமடைந்த திருதராஷ்டிரன்; கர்ணன் மற்றும் துரியோதனன் பற்றிச் சஞ்சயனிடம் கூறியது; கர்ணன் மற்றும் பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போரைக் குறித்துச் சொல்லுமாறு சஞ்சயனை ஏவிய திருதராஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அழகாலும், பிறப்பாலும், புகழாலும், தவத்தாலும், கல்வியாலும் உலகம் உம்மை யயாதியின் மகன் நகுஷனுக்கு இணையாகக் கருதுகிறது.(1) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் உயர்ந்த சாதனையைக் கொண்ட பெருமுனிவர் ஒருவரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவீர். உமது மனவுறுதியைத் திரட்டுவீராக. துயருக்குள்ளாகாதீர்" {என்றான்}.(2)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சால மரத்தைப் போல இருந்த கர்ணனே போரில் கொல்லப்பட்டதால், விதியே உயர்ந்ததென்றும், முயற்சி கனியற்றதென்றும் நான் நினைக்கிறேன்[1].(3) யுதிஷ்டிரனின் படையையும், பாஞ்சாலத் தேர்வீரர்களின் பெருங்கூட்டத்தையும் கொன்று, தன் கணைமாரியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எரித்து, அசுரர்களை மலைக்கச் செய்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} மலைக்கச் செய்த பிறகு, ஐயோ, எதிரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {கர்ணன்}, புயலால் பூமியில் வேரோடு சாய்க்கப்பட்ட பெருமரம் ஒன்றைப் போல எவ்வாறு விழுந்திருக்க முடியும்?(4,5)
[1] வேறொரு பதிப்பில், "யுத்தத்தில் சாலவிருக்ஷத்துக்கு ஒப்பான கர்ணன் கொல்லப்பட்டமையால், ஆண்மை பயனற்றது; அதனை நிந்திக்க வேண்டும். தெய்வமே சிறந்ததென நான் எண்ணுகிறேன்" என்று இருக்கிறது.
உண்மையில், மூழ்கிக் கொண்டிருப்பவனான மனிதன் ஒருவனால், பெருங்கடலின் எல்லையைக் காண முடியாததைப் போல, என் துயரங்களுக்கு ஓர் எல்லையை என்னால் காண இயலவில்லை. கர்ணனின் மரணம் மற்றும் பல்குனனின் {அர்ஜுனனின்} வெற்றி ஆகியவற்றைக் கேட்டு என் கவலைகள் அதிகரிப்பதால் நான் உயிர்வாழ விரும்பவில்லை.(6) உண்மையில், ஓ! சஞ்சயா, கர்ணனின் படுகொலையை நம்பவே முடியாததாக நான் கருதுகிறேன்.(7) கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், என் இந்தக் கடினமான இதயம் {கல்நெஞ்சம்} ஆயிரம் துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால், அது வஜ்ரத்தாலானதே என்பதில் ஐயமில்லை.(8)
கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரால் புண்பட்டும் நான் சாகாதிருப்பதால், (என் பிறப்புக்கு) முன்பே, தேவர்களால் எனக்கு நீண்ட வாழ்நாள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ! சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ! சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன்?(11) ஓ! சஞ்சயா, பீஷ்மர், துரோணர் மற்றும் உயர் ஆன்ம கர்ணன் ஆகியோருடைய வீழ்ச்சியின் விளைவால், வலியில் {துன்பத்தில்} இருந்து பெரும் வலியையும் {பெருந்துயரையும்}, பேரிடரையுமே நான் அடைந்திருக்கிறேன்.(12) சூதன் மகன் {கர்ணன்} போரில் கொல்லப்பட்டான் எனும்போது, (என் படையைச் சேர்ந்த) எவனும் உயிரோடு தப்புவான் என்பதைக் காணவில்லை. ஓ! சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன்?(14) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, இடியின் வீழ்ச்சியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தைப் போலவே தன் தேரிலிருந்து வீழ்ந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(15) மதங்கொண்ட ஒரு யானைகளின் இளவரசனால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போல அவன் {கர்ணன்}, குருதியில் குளித்து, பூமியை அலங்கரித்தபடி கிடந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(16)
கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரால் புண்பட்டும் நான் சாகாதிருப்பதால், (என் பிறப்புக்கு) முன்பே, தேவர்களால் எனக்கு நீண்ட வாழ்நாள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ! சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ! சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன்?(11) ஓ! சஞ்சயா, பீஷ்மர், துரோணர் மற்றும் உயர் ஆன்ம கர்ணன் ஆகியோருடைய வீழ்ச்சியின் விளைவால், வலியில் {துன்பத்தில்} இருந்து பெரும் வலியையும் {பெருந்துயரையும்}, பேரிடரையுமே நான் அடைந்திருக்கிறேன்.(12) சூதன் மகன் {கர்ணன்} போரில் கொல்லப்பட்டான் எனும்போது, (என் படையைச் சேர்ந்த) எவனும் உயிரோடு தப்புவான் என்பதைக் காணவில்லை. ஓ! சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன்?(14) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, இடியின் வீழ்ச்சியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தைப் போலவே தன் தேரிலிருந்து வீழ்ந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(15) மதங்கொண்ட ஒரு யானைகளின் இளவரசனால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போல அவன் {கர்ணன்}, குருதியில் குளித்து, பூமியை அலங்கரித்தபடி கிடந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(16)
[2] வேறொரு பதிப்பில், "யுத்தத்தில் சூதபுத்திரனான கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, நமது சேனை மிகுந்திருப்பதை யான் காண்கிறேனில்லை. மகானான அந்தக் கர்ணனோ என் குமாரர்களுக்கு ஒரு கரையாயிருந்தான்" என்றிருக்கிறது.
எவன் தார்தராஷ்டிரர்களின் பலமாக இருந்தானோ, எவன் பாண்டு மகன்களை அச்சுறுத்துபவனாக இருந்தானோ, ஐயோ செருக்கு நிறைந்த வில்லாளியான அந்தக் கர்ணன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(17) வீரனும், வலிமைமிக்க வில்லாளியுமான அவன் {கர்ணன்}, என் மகன்களின் அச்சங்களை விலக்குபவனாக இருந்தான். ஐயோ, உயிரை இழந்த அந்த வீரன், இந்திரனால் தாக்கி வீழ்த்தப்பட்ட மலையைப் போல (பூமியில்) கிடக்கிறான்[3].(18) துரியோதனனின் விருப்பங்கள், முடவன் இடம்பெயர்வதை {வழிநடையைப்} போன்றனவோ, ஏழை மனிதனின் {தரித்திரனின்} விருப்பம் நிறைவேறுவதைப் போன்றனவோ, தாகம் கொண்டவனுக்கு எப்போதோ கிடைக்கும் நீர்த்துளிகளைப் போன்றனவோ ஆகும்.(19) ஒரு வழியில் திட்டமிடப்பட்ட நமது திட்டங்கள் வேறு மாதிரியாக முடிகின்றன. ஐயோ, விதியே வலிமையானது, காலமும் மீற முடியாதது.(20)
[3] வேறொரு பதிப்பில், "வீரனும், சிறந்த வில்லாளியும், மித்திரர்களுக்கு அபயத்தைக் கொடுக்கின்றவனுமான அந்தக் கர்ணன் முற்காலத்தில் இந்திரனால் வீரனான பலாஸுரன் அடிக்கப்பட்டதுபோல அடிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான்" என்றிருக்கிறது.
ஓ! சூதா {சஞ்சயா}, எனது மகன் துச்சாசனன், (புழுதியில்) பணியச் செய்யப்பட்டு, உற்சாகமற்ற ஆன்மா கொண்டவனாக ஆண்மை அனைத்தையும் இழந்து களத்தில் இருந்து ஓடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டானா?(21) ஓ! மகனே, ஓ! சஞ்சயா, அந்தச் சந்தர்ப்பத்தில் கோழைத்தனமான செயல் எதையும் அவன் செய்யவில்லை என நான் நம்புகிறேன். வீழ்ந்துவிட்ட பிறகு அந்த வீரன் க்ஷத்திரியர்களைப் போலத் தன் மரணத்தைச் சந்திக்கவில்லையா?(22) போரேற்புக்கு எதிரான நலம்தரும் மருந்தான யுதிஷ்டிரனின் தொடர்ச்சியான அறிவுரையை மூடனான துரியோதனன் ஏற்கவில்லை.(23)
பெரும்புகழைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தண்ணீரை இரந்து கேட்ட போது, பூமியின் பரப்பைத் துளைத்தான்.(24) அந்தப் பாண்டு மகனால் உண்டாக்கப்பட்ட நீர்த்தாரையைக் கண்ட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர் (பீஷ்மர், துரியோதனனிடம், "ஓ! ஐயா, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. பகைமைகள் தணிந்தால், அமைதி உனதாகும். உனக்கும் உன் சகோதரர்களுக்கும் இடையிலான போர் என்னோடு முடிந்து போகட்டும். பாண்டு மகன்களுடன் சகோதரத்துவத்துடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக" என்றார்.(25,26) அந்த ஆலோசனைகளை அலட்சியம் செய்த எனது பிள்ளை {துரியோதனன்} இப்போது நிச்சயமாக வருந்தியிருப்பான். பெரும் முன்னறிதிறம் கொண்ட பீஷ்மர் சொன்னதே இப்போது நடக்கிறது.(27)
ஓ! சஞ்சயா, என்னைப் பொறுத்தவரை, நான் ஆலோசகர்களற்றவனாக, மகன்களை இழந்தவனாக இருக்கிறேன். சூதாட்டத்தின் விளைவாக, சிறகுகளை இழந்த பறவையைப் போல நான் பெருந்துயரத்தில் வீழ்ந்துவிட்டேன்.(28) ஓ! சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடுவிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன்?(31) எவன் காம்போஜர்கள், கைகேயர்களுடன் கூடிய அம்பஷ்டர்கள் ஆகியோர் அனைவரையும் வெற்றிகொண்டானோ, தன் காரியத்தைச் சாதித்துப் போரில் கந்தர்வர்கள், விதேகஹர்கள் ஆகியோரைப் போரில் வென்றானோ, எவன் துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகையும் அடக்கினானோ, அந்தப் பலமிக்கவன் {கர்ணன்}, ஐயோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், வீரர்களும், பலவான்களுமான பாண்டவர்களால் வெல்லப்பட்டான்.(32,33)
போரில் அந்த வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லபட்ட பிறகு, ஓ! சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ! ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்கள் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ! சஞ்சயா, பல கணைகளால் ஏற்கனவே துளைக்கப்பட்டுப் போரில் தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணரைத் தன் வாளை உயர்த்திக் கொன்றான் துருபதனின் மகனான திருஷ்டத்யும்னன்.(37) இவர்கள் இருவரும் பாவமான நிலையிலும், குறிப்பாக வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டனர். பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் குறித்து நான் இப்படியே கேட்டேன்.(38) உண்மையில் பீஷ்மரும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்த போது, நேர்மையான வழிகளில் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கூடப் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். நான் உனக்குச் சொல்லும் இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.
கர்ணனைப் பொறுத்தவரை, உண்மையில், இந்திரனுக்கு நிகரான அந்த வீரன் பன்மடங்கான தெய்வீக ஆயுதங்களை ஏவி கொண்டிருந்த போது, மரணத்தால் அவனை எவ்வாறு தீண்ட முடியும்?(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியாத பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தில் நிறைத்ததோ அவன், ஐயோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்?[4](48)
[4] "பம்பாய்ப் பதிப்பில் இதற்குப் பின்னர் மூன்று வரிகள் தோன்றுகின்றன. அவற்றை வங்க உரைகள் சரியாகவே தவிர்த்திருக்கின்றன என்ற நான் நினைக்கிறேன். அவ்வரிகளில், அர்ஜுனன் சம்சப்தகர்களுடன் போரில் ஈடுபட்டது கர்ணனைத் தவிர்ப்பதற்காகவே என்று திருதராஷ்டிரன் குற்றம் சுமத்துகிறான். அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு அபத்தமானதாகும்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் "எப்பொழுதும், வேறு பக்கத்தில் யுத்தத்திற்கு அழைக்கிற ஸம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுப் பிறகு யுத்தத்தில் விகர்த்தனகுமாரனான கர்ணனை யான் கொல்வேன்’ என்று சொல்லிக் கொண்டு, பார்த்தன் யுத்தத்தில் எந்த ஸூத புத்திரனைவிட்டு விலகினானோ அப்படிப்பட்ட பகைவீரர்களைக் கொல்லுகிற வீரனான கர்ணன், பார்த்தனால் எவ்வாறு கொல்லப்பட்டான்?" என்றிருக்கிறது. இந்த வாக்கியம் கங்குலியில் இல்லை.
தேரிழப்பு, வில்முறிப்பு, ஆயுதங்கள் தீர்தல் ஆகியவற்றில் எவையேனும் ஒன்று நடைபெறாமல், எதிரிகளால் அவன் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்?(50) அவன் கொல்லப்பட்டான் என்று நீ என்னிடம் சொல்வதால், அவனது வில் ஒடிந்திருக்க வேண்டும், அல்லது அவனது தேர் பூமியில் அழுந்தியிருக்க வேண்டும், அல்லது அவனது ஆயுதங்கள் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்பது நிச்சயம். உண்மையில், அவனது கொலைக்கான ({அவனது கொலையை} விளக்கும்) வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(51)
"பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் என் பாதங்களைக் கழுவுவதில்லை" என்ற பயங்கரச் சபதத்தை உயர் ஆன்மா கொண்ட எவன் செய்தானோ,(52) எந்தப் போர்வீரன் மீது கொண்ட அச்சத்தால், மனிதர்களில் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் காட்டில் தொடர்ந்து பதிமூன்று வருடங்களாகத் தூங்காமல் இமைத்துக் கொண்டிருந்தானோ,(53) உயர் ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்ட எவனது வீரத்தை நம்பி என் மகன், பாண்டவர்களின் மனைவியைப் {திரௌபதியைப்} பலவந்தமாகச் சபைக்கு இழுத்து வந்தானோ,(54) அங்கே அந்தச் சபையில், பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் முன்னிலையில், பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அடிமைகளின் மனைவி என்று எவன் அழைத்தானோ,(55) சூத குலத்தைச் சேர்ந்த எந்த வீரன், சபைக்கு மத்தியில், கிருஷ்ணையிடம் {கர்ணன் திரௌபதியிடம்}, "ஓ! கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக" என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(56,57)
துரியோதனனிடம் எவன், "ஓ! துரியோதனா, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் பீஷ்மரோ, போரில் வெல்லப்பட முடியாதவரான துரோணரோ பாரபட்சத்தால் குந்தியின் மகன்களைக் கொல்ல மாட்டார்கள். நானே அவர்கள் அனைவரையும் கொல்வேன், உன் இதய நோய் விலகட்டும்" என்ற வார்த்தைகளைச் சொன்னானோ, எவன், "குளுமையான சந்தனக் குழம்பால் பூசப்பட்டிருக்கும் என் கணை ஆகாயத்தில் செல்லும் போது, (அர்ஜுனனின்) காண்டீவத்தாலும், வற்றாத அம்பறாத்தூணி இரண்டாலும் என்ன செய்து விட முடியும்?" என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(58-60)
எவன் காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கைகளின் கடுந்தீண்டலை அலட்சியம் செய்து, கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "உனக்கு இப்போது கணவர்களில்லை" என்று சொல்லி பாண்டவர்களை வெறித்துப் பார்த்தானோ,(61) ஓ! சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ! ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது?(63) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தன் கையுறைகளை அணிந்து கொண்டு வில்லின் நாணைத் தொடும்போதோ, அவன் எதிரில் நிற்கத்தகுந்தவர் எவருமில்லை.(64) சூரியன், சந்திரன் அல்லது நெருப்பு ஆகியவற்றின் காந்திகளை இழக்க பூமிக்குச் சாத்தியப்படலாம், ஆனால், போரில் எப்போதும் பின்வாங்காத அந்த முதன்மையான மனிதன் இறப்பது சாத்தியமில்லை.(65)
எவன் கர்ணனையும், தன் தம்பி துச்சாசனனையும் தன் கூட்டாளிகளாக அடைந்தானோ, அந்தத் தீய புத்தி கொண்ட என் மூடப் பிள்ளை {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பரிந்துரைகளை மறுக்க எண்ணம் கொண்டதால்,(66) காளையின் தோள்களைக் கொண்ட கர்ணன் மற்றும் துச்சாசனனின் கொலைகளைக் கண்டு இப்போது புலம்பங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான் என்பது உறுதி.(67) சவ்யசச்சினுடனான {அர்ஜுனனுடனான} தனிப்போரில் விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் வெற்றி மகுடம் சூடியதையும் கண்ட துரியோதனன் என்ன சொன்னான்?(68) போரில் துர்மர்ஷனனும், விருஷசேனனும் கொல்லப்பட்டதைக் கண்டும், வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும்போது தன் படை பிளக்கப்படுவதைக் கண்டும்,(69) ஓடும் நோக்கோடு (தன் படையின்) மன்னர்கள் முகத்தைத் திருப்புவதையும், தன் தேர்வீரர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதையும் கண்டும் என் மகன் இப்போது புலம்பல்களில் ஈடுபடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்.(70)
உற்சாகமிழந்த தன் படையைக் கண்டவனும், ஆளமுடியாதவனும், செருக்கு மிக்கவனும், மூடனும், ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாதவனுமான துரியோதனன் உண்மையில் என்ன சொன்னான்?(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்?(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, "போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்" என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்?(74)
ஓ! ஐயா {சஞ்சயா}, முன்பு பகடையாட்டம் நடந்து முடிந்ததும் மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} வஞ்சித்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது என்ன சொன்னான்?(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அறிவியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ! சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான்?(77,78) ஓ! ஐயா {சஞ்சயா}, கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தேர்வீரர்களில் முதன்மையானவரும், ஆயுத அறிவியலின் ஆசிரியரும், சரத்வானின் மகனுமான கிருபர் கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட போது என்ன சொன்னார்?(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்? ஓ! சஞ்சயா, போரிட வந்த பூமியின் தலைவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான பிற போர்வீரர்கள் அனைவரும், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னார்கள்?(80-82)
[5] "சல்லியன், பெரும் தேர்வீரனாக இருந்தாலும், அர்ஜுனனுடன் கர்ணன் போரிடும்போது, பின்னவனின் {கர்ணனின்} தேரைச் செலுத்த வேண்டும் என்ற துரியோதனனின் கோரிக்கையை ஏற்றான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தேர்வீரர்களில் முதன்மையானவரும், மனிதர்களில் காளையுமான அந்த வீரத் துரோணர் வீழ்ந்த பிறகு, எவரெல்லாம் தங்கள் வகைக்கான பல்வேறு பிரிவுகளின் தலைவர்களானார்கள்?(83) ஓ! சஞ்சயா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான சல்லியன், வைகர்த்தனன் {கர்ணன்} தேரைச் செலுத்துவதில் எவ்வாறு ஈடுபட்டான் என் எனக்குச் சொல்வாயாக.(84) சூதன் மகன் {கர்ணன்} போரில் ஈடுபட்டபோது, பின்னவனின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அந்த வீரனின் பின்புறத்தில் நின்றவர்களும் யாவர்?(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர்? ஓடிப்போன அற்பவர்கள் யாவர்? வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஒன்று சேர்ந்தவர்களாக இருந்த உங்களுக்கு மத்தியில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்?(87)
ஓ! சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(88) ஓ! சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன்?(90) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையான கரங்களைக் கொண்ட கர்ணன், பாண்டவர்களால் கொல்லப்பட்டான் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(91)
துரோணர் இறந்த பிறகு, ஓ! சஞ்சயா, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான கௌரவர்களுக்கும், அவர்களது எதிரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.(92) குந்தியின் மகன்கள் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டனர் என்பதையும், அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்} போரில் எவ்வாறு தன் ஓய்வை அடைந்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.[6](93)
துரோணர் இறந்த பிறகு, ஓ! சஞ்சயா, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான கௌரவர்களுக்கும், அவர்களது எதிரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.(92) குந்தியின் மகன்கள் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டனர் என்பதையும், அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்} போரில் எவ்வாறு தன் ஓய்வை அடைந்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.[6](93)
[6] மன்மதநாததத்தரின் பதிப்பில் 90 சுலோகங்களே இருக்கின்றன.
ஆங்கிலத்தில் | In English |