Installation of Karna as the generalissimo! | Karna-Parva-Section-10 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : துரோணர் கொல்லப்பட்டதும், தப்பி ஓடிய படைகளை அணிதிரட்டிய துரியோதனன்; அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து முகாமில் ஆலோசித்த கௌரவர்கள்; கர்ணனைப் படைத்தலைவனாக்குமாறு சொன்ன அஸ்வத்தாமன்; கர்ணனின் பெருமைகளைச் சொல்லி, படைத்தலைமையை ஏற்குமாறு அவனைக் கேட்டுக் கொண்ட துரியோதனன்; துரியோதனனின் வார்த்தைகளை ஏற்ற கர்ணன்; சாத்திரங்களுக்கு இணங்கிய சடங்குகளின் படி படைத்தலைமையை ஏற்ற கர்ணன்; வந்திகளும், பிராமணர்களும் கர்ணனை வாழ்த்தியது; பொழுது புலர்ந்ததும் படையை அணிவகுத்த கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நாளில் வலிமைமிக்க வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} காரியம் கலங்கடிக்கப்பட்டதும்,(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் பரந்த படை ஓடிய பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளை அணிதிரட்டிக் கொண்டு தன் சகோதரர்களுடன் களத்தில் நின்றான்.(2) அவன் {அர்ஜுனன்} களத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் படை ஓடுவதைக் கண்டு பெரும் துணிவுடன் அவற்றை அணிதிரட்டினான்.(3)
ஓ! பாரதரே, தன் படைப்பிரிவுகளை நிலையேற்கச் செய்த உமது மகன் {துரியோதனன்}, வெற்றியடைந்தவர்களும், மகழ்ச்சியால் நிறைந்திருப்பவர்களும், நீண்ட நேரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த தன் எதிரிகளுமான பாண்டவர்களுடன், தன் கர வலிமையை நம்பி நீண்ட நேரம் போரிட்டான். மாலை சந்தி அணுகியதும் அவன் தன் துருப்புகளைத் திரும்ப அழைத்துக் கொண்டான்.(4,5) தங்கள் துருப்புகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குள் நுழைந்த கௌரவர்கள், விரிப்புகளுடன் கூடிய விலையுயர்ந்த கட்டில்கள், சிறந்த இருக்கைகள் மற்றும் பகட்டான படுக்கைகள் ஆகியவற்றில் தேவர்களைப் போல அமர்ந்து கொண்டு, தங்கள் நலனைக் குறித்து ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தனர்.(6,7) பிறகு மன்னன் துரியோதனன், அந்த வலிமைமிக்க வில்லாளிகளிடம், இனிமையான, உயர்ந்த வெளிப்பாடுகளுடன் கூடிய பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(8)
துரியோதனன், “புத்திசாலிகளில் முதன்மையானவர்களே, உங்கள் கருத்துகளை அனைவரும் தாமதமில்லாமல் அறிவிப்பீராக. மன்னர்களே, இந்தச் சூழ்நிலையில் இன்றியமையாதது எது? அதைவிடவும் அவசியமானது எது?” என்று கேட்டான்.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்த மனிதர்களின் இளவரசன் {துரியோதனன்}, அவ்வார்த்தைகளைப் பேசிய போது, தங்கள் அரியாசனங்களில் அமர்ந்திருந்த மனித சிங்கங்கள் {மன்னர்கள்}, போரில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு முகபாவங்களைச் செய்தனர்.(10) புத்திசாலித்தனத்துடன் கூடியவனும், பேச்சில் சாதித்தவனுமான ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, போர் நெருப்பில் தங்கள் உயிர்களை நீர்க்காணிக்கைகளாக {ஆகுதிகளாக} ஊற்ற விரும்பும் அவர்கள் அனைவரின் குறிப்புகளை உற்றுநோக்கி, காலைச்சூரியனின் பிரகாசத்துடன் கூடிய ஏகாதிபதியின் {துரியோதனனின்} முகத்தையும் கண்டு,(11) இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “உற்சாகம், வாய்ப்பு, திறமை, கொள்கை {நீதி} ஆகிய வழிகள் முடிவுகள் அனைத்தையும் சாதிக்கவல்லவை {வெற்றியை அடையவல்லவை} என்று கற்றோரால் அறிவிக்கப்பட்டிக்கிறது. எனினும், அவை விதியைச் சார்ந்ததே[1].(12)
[1] வேறொரு பதிப்பில், “ஸ்வாமிபக்தி, தேசகால முதலானவைகளுடைய அனுகூல்யம், அவ்வாறே பலம், நீதி ஆகிய அர்த்தஸாதகங்களான உபாயங்களென்று பண்டிதர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஆர்வம், விடாமுயற்சி, மேலும் திறமை மற்றும் அணுகும் நயம் ஆகிய இவையே முடிவுகளைச் சாதிப்பதில் முக்கியத் தகுதிகள் எனக் கற்றோரால் அறிவிக்கப்படிருக்கிறது. இவை முழுவதும் விதியைச் சார்ந்தே இயங்குகின்றன” என்றிருக்கிறது.
தேவர்களுக்கு இணையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கொள்கையுடன் {நீதியுடன்} கூடியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், சாதித்தவர்களும், நன்றியுணர்வு கொண்டவர்களுமாக நம் தரப்பில் இருந்த முதன்மையான மனிதர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.(13) அவை யாவற்றாலும் நாம் வெற்றியில் நம்பிக்கையிழக்கக்கூடாது. இந்த வழிகள் முறையாகப் பொருத்தப்பட்டால், விதியையே கூட அநுகூலமானதாக்கலாம்.(14) எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, நாம் அனைவரும் சேர்ந்து, மனிதர்களில் முதன்மையானவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான கர்ணனைப் படையின் தலைமையில் நிறுவலாம் {சேனாதிபதியாக்கலாம்}.(15) கர்ணனை நம் படைத்தலைவனாகச் செய்து, நம் பகைவர்களை நாம் நசுக்குவோம். இந்தக் கர்ணன் பெரும் வலிமை கொண்டவன்; இவன் ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வீழ்த்தப்பட இயலாத வீரனுமாவான். யமனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனான இவன் {கர்ணன்}, போரில் நம் எதிரிகளை வெல்லத்தகுந்தவனாவான்” என்றான் {அஸ்வத்தாமன்}.(16)
ஆசான் மகனின் {அஸ்வத்தாமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் கர்ணன் மீது பெரும் நம்பிக்கைகளைக் கொண்டான்.(17) பீஷ்மர் மற்றும் துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு கர்ணன் பாண்டவர்களை வெல்வான் என்ற அந்த நம்பிக்கையைத் தன் இதயத்தில் பேணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதனால் ஆறுதலை அடைந்து வந்த துரியோதனன்,(18) அஸ்வத்தாமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தும், தன் மனதை உறுதியாக்கிக் கொண்டும், தன் கரங்களின் வலிமையை நம்பியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்}, பாசம், மரியாதை, உண்மை, மகிழ்ச்சி, நன்மை ஆகியவை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(19-20) “ஓ! கர்ணா, உன் ஆற்றலையும், நீ என் மீது கொண்ட பெரும் நட்பையும் நான் அறிவேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவை யாவற்றுக்காகவும், என் நன்மைக்கான குறிப்பிட்ட சில வார்த்தைகளை உனக்குச் சொல்வேன்.(21) ஓ! வீரா, அவற்றைக் கேட்ட பிறகு, உனக்கு எது விருப்பமுடைடையதாகத் தோன்றுகிறதோ அதைச் செய்வாயாக. பெரும் அறிவைக் கொண்டிருப்பதால், நீயே எனக்கு உயர்ந்த புகலிடமாவாய்.(22)
அதிரதர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய என் இரண்டு படைத்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களைவிட வலிமையானவனான நீயே என் படைத்தலைவன் ஆவாயாக.(23) பெரும் வில்லாளிகளான அவ்விருவரும் வயதால் முதிர்ந்தவர்களாக இருந்தனர். மேலும், அதைத் தவிரவும் அவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} பரிவும் கொண்டிருந்தனர். இருப்பினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன் வார்த்தையினால் அவ்விரு வீரர்களும் என்னால் மதிக்கப்பட்டனர்.(24) ஓ! ஐயா {கர்ணா}, பாண்டுவின் மகன்களுடன் பாட்டன் {பீஷ்மர்} கொண்ட உறவுமுறையால், தொடர்ந்து பத்து நாட்களாக அந்தப் பயங்கரப் போரில் அவர்கள் தப்புவிக்கப்பட்டனர்.(25) நீயும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டாய். அந்தப் பெரும்போரில் தன் முன்னே சிகண்டியைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} வீரப் பீஷ்மரும் கொல்லப்பட்டார்.(26) அந்தப் பெரும் வில்லாளி வீழ்ந்து, கணைப்படுக்கையில் தன்னை வழிப்படுத்திக் கொண்ட பிறகு, ஓ! மனிதர்களில் புலியே, உன் வார்த்தையினாலேயே துரோணர் நமது தலைவராக்கப்பட்டார்.(27) பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அவரது {துரோணரது} சீடர்களாயிருந்த உறவின் விளைவால், அவராலும் கூட அவர்கள் தப்புவிக்கப்பட்டனர் என்றே நான் நினைக்கிறேன். மிக விரைவில், அந்தக் கிழவரும் {துரோணரும்} திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டுவிட்டார்.(28) போரில் உனக்கு இணையான மற்றொரு போர்வீரனை என்னால் சிந்திக்கவும் முடியவில்லை. போரில் கொல்லப்பட்ட அவ்விரு முதன்மையான போர்வீரர்களாலும் கூட உன் ஆற்றலை அளவிட முடியாது.(29)
இன்று, நீ மட்டுமே நமக்கு வெற்றியைக் கொடுக்க வல்லவன் என்பதில் சந்தேகமில்லை. முன்பும், இடையிலும், பின்பும் நீ நமது நன்மைக்காகவே செயல்பட்டவனாவாய்.(30) எனவே, ஒரு தலைவனைப் போல இந்தப் போரின் சுமையைச் சுமப்பதே உனக்குத் தகும். உன்னை நீயே தலைமையில் நிறுவிக் கொள்வாயாக.(31) தேவர்களின் படைத்தலைவனும், மங்கா ஆற்றலைக் கொண்டவனுமான தலைவன் ஸ்கந்தன் (தேவர்களின் படையை ஆதரிப்பதைப்) போல, இந்தத் தார்தராஷ்டிரப் படையை நீ ஆதரிப்பாயாக. தானவர்களைக் கொல்லும் மஹேந்திரனைப் போல, நம் எதிரிக்கூட்டங்கள் அனைத்தையும் அழிப்பாயாக.(32) போரில் நிற்கும் உன்னைக் காணும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களும், அவர்களுடன் சேர்ந்து பாஞ்சாலர்களும், விஷ்ணுவைக் கண்ட தானவர்களைப் போலப் போரில் தப்பி ஓடப் போகிறார்கள். எனவே, இந்தப் பரந்த படைக்கு நீ தலைமையேற்பாயாக.(33) களத்தில் நீ தீர்மானத்துடன் நின்றால், தீய இதயங்களைக் கொண்ட பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுவார்கள்.(34) உதயச் சூரியன் தன் சக்தியால் அனைத்தையும் எரித்தபடியே அடர்த்தியான இருளை அழிப்பதைப் போல, நீ நம் எதிரிகளை அழிப்பாயாக” என்றான் {துரியோதனன்}.(35)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்டிருந்தாலும், கர்ணன் பாண்டவர்களை வெல்வான் என்ற நம்பிக்கை உமது மகனின் {துரியோதனனின்} இதயத்தில் பலமடைந்தது.(36) தன் இதயத்திற்குள் அந்நம்பிக்கையைப் பேணிக்காத்த அவன் {துரியோதனன்}, கர்ணனிடம், “ஓ! சூதன் மகனே {கர்ணா}, உனக்கு எதிரில் போரிடப் பார்த்தன் {அர்ஜுனன்} எப்போதும் விரும்பியதில்லை” என்றான்.(37)
அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, `தங்கள் மகன்களோடு கூடிய பாண்டவர்களையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்’ என்ற இந்த வார்த்தைகளை முன்னர் உன் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறேன்.(38) நான் உனது படைத்தலைவனாவேன். இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அமைதியடைவாயாக. பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே கருதுவாயாக” என்றான்.(39)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்டதும் மன்னன் துரியோதனன், ஸ்கந்தனை கௌரவிப்பதற்காகத் தேவர்கள் அனைவருடன் சேர்ந்த நூறு வேள்விகளைச் செய்தவனைப் போலக் கர்ணனைக் கௌரவிப்பதற்காக ஏகாதிபதிகள் அனைவருடன் சேர்ந்து எழுந்து நின்றான்.(40) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் தலைமையிலான மன்னர்கள் அனைவரும், வெற்றியை விரும்பி, விதிகளுக்கு இணங்கிய சடங்குகளின் படி கர்ணனைப் படைத்தலைவர் பொறுப்பில் நிறுவினார்கள்[2].(41) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்டு, விளிம்புவரை நீர் நிறைந்தவையும், யானைகளின் தந்தங்கள், காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் வலிமைமிக்கக் காளைகளின் கொம்புகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான பொற்குடங்ளுடனும், மண்குடங்களுடனும்,(42) ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பிற பாத்திரங்களுடனும், நறுமணமிக்க மூலிகைகள் மற்றும் செடிகளுடனும், அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டட பிற பொருட்களுடனும், உடும்பர மரத்தில் {அத்திப் பலகையில்} செய்யப்பட்டதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான இருக்கை ஒன்றில் சுகமாக வீற்றிருந்த கர்ணன், சாத்திரங்களுக்கு இணங்கிய சடங்குகளின் படி படைத்தலைவனாகப் பட்டமளிக்கப்பட்டான். அந்தச் சிறந்த ஆசனத்தில் குளிப்பட்டப்பட்ட அந்த உயர் ஆன்மாவை {கர்ணனைப்} பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் மரியாதைக்குரிய சூத்திரர்கள் ஆகியோர் புகழ்ந்து துதித்தனர்[3].(43,44)
[2] “இந்த அபிஷேகம் {நிறுவுதல்} என்பது, பட்டமேற்கவுள்ள மனிதனின் தலையில் மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட நீரை ஊற்றுதலாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] வேறொரு பதிப்பில், “வெண்பட்டினால் மூடப்பட்டதும், அத்திப் பலகையினாற் செய்யப்பட்டதுமான பீடத்தில் இனிது வீற்றிருக்கிற கர்ணனை, சாஸ்திரத்தில் சொல்லிய முறைப்படி அபிஷேகத்திற்கு வேண்டியவைகளால் நன்றாக நிரப்பப்பட்ட ஸ்வர்ணமயமான தீர்த்த கடங்களாலும், மந்திரங்களால் அபிமந்திரணம் செய்யப்பட்ட மண்மயமான தீர்த்த கடங்களாலும், ஜலத்தால் நிரப்பப்பட்ட யானைகளுடைய தந்தங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களாலும் (தீர்த்தத்தால் நிறைக்கப்பட்ட) கடக மிருகங்களினுடைய கொம்புகளாலும், மகா விருஷபங்களுடைய கொம்புகளாலும் அவ்வாறே இரத்தினங்களோடும், முத்துக்களோடும் கூடினவைகளும், பரிசுத்தமான கந்தத்துடன் கூடியவைகளுமான மற்ற ஔஷதங்களாலும், சாஸ்திரத்தில் காணப்பட்டிருக்கிற முறைப்படி அபிஷேகஞ் செய்தார்கள்” என்றிருக்கிறது.
இப்படிப் படைத்தலைவனாக நிறுவப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிஷ்கங்கள், பசுக்கள் மற்றும் பிற செல்வங்களைக் கொடையாக அளிக்கச் செய்து பிராமணர்களில் முதன்மையான பலரையும் தன்னை ஆசீர்வதிக்கும்படி செய்தான்.(45) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, ’கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்களையும், அவர்களைப் பின்தொடர்வோர் அனைவரையும் வெல்வாயாக’ என்ற இவ்வார்த்தைகளையே வந்திகளும், பிராமணர்களும் அவனிடம் சொன்னார்கள்.(46) (மேலும் அவர்கள்), “ஓ! ராதையின் மகனே {கர்ணா} கடுங்கதிர்களால் இருளை அழிக்கும் உதயச் சூரியனைப் போல, நம் வெற்றிக்காகப் பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்வாயாக.(47) சூரியனின் எரியும் கதிர்களைப் பார்க்க இயலாத ஆந்தைகளைப் போல, உன்னால் ஏவப்படும் கணைகளைக் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடியவர்களால் {பாண்டுவின் மகன்களால்} பார்க்கவும் முடியாது.(48) போரில் இந்திரனுக்கு எதிராக நிற்க இயலாத தானவர்களைப் போல, ஆயுதங்களுடன் கூடிய உனக்கு முன்னிலையில் நிற்பதற்கும் பார்த்தர்களாலும், பாஞ்சாலர்களாலும் இயலாது” என்றனர்.(49)
படைத்தலைமையில் நிறுவப்பட்டவனும், ஒப்பிலா காந்தி கொண்டவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, இரண்டாவது சூரியனைப் போல அழகுடனும், ஒளியுடனும் பிரகாசித்தான்.(50) (இவ்வாறு) ராதையின் மகனை {கர்ணனைப்} படையின் தலைவனாக நிறுவிய உமது மகன் {துரியோதனன்}, காலனால் தூண்டப்பட்டு, தன் காரியங்கள் நிறைவேறியவனாகத் தன்னைக் கருதிக் கொண்டான்.(51) எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைமை பொறுப்பை அடைந்து, சூரியன் உதித்ததும், துருப்புகளை அணிவகுக்கச் செய்தான்.(52) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாரகையைத் தீய வேராகக் கொண்ட போரில், தேவர்களால் சூழப்பட்ட ஸ்கந்தனைப் போல, உமது மகன்களால் சூழப்பட்ட கர்ணன் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(53)
-------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 10-ல் உள்ள சுலோகங்கள் : 53
ஆங்கிலத்தில் | In English |