The arrays of Makara and Arthachandra! | Karna-Parva-Section-11 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : போர்க்களத்திற்குச் சென்று தன் படையை மகரவியூகத்தில் அணிவகுத்த கர்ணன்; அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; தன் படையை அர்த்தச்சந்திர வியூகத்தில் அணிவகுத்த அர்ஜுனன்; பதினாறாம் நாள் போர் தொடங்கியது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, படைத்தலைமையை அடைந்த பிறகு, மன்னனே {துரியோதனனே} இனிமையும், சகோதரத்துவமும் நிறைந்த அவ்வார்த்தைகளால் அவனிடம் {கர்ணனிடம்} பேசிய பிறகு, சூரிய உதயத்தில் துருப்புகளை அணிவகுக்கச் செய்த பிறகு, விகர்த்தனன் மகனான கர்ணன் என்ன செய்தான்?” என்றான்.(1,2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் விருப்பங்களை அறிந்த உமது மகன்கள், இன்பகரமான இசையுடன் துருப்புகளை அணிவகுக்கக் கட்டளையிட்டனர்.(3) விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்த போது, “அணிவகுப்பீர், அணிவகுப்பீர்” என்ற உரத்த ஒலி உமது துருப்புகளின் மத்தியில் எழுந்தது.(4) தங்கள் கவசங்களைப் பூட்டும்போதோ, சேணம்பூட்டப்படும்போதோ, முதன்மையான யானைகள், தடுப்புடன் கூடியவையும் தயாரிப்பு நிலையில் இருந்தவையுமான தேர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைகள் ஆகியனவற்றுக்கு மத்தியிலும், சுறுசுறுப்புடன், ஒருவரையொருவர் கூவி அழைத்தப்படி நகர்ந்து கொண்டிருந்த போராளிகளுக்கு மத்தியில் எழுந்த அந்த ஆரவாரமானது மகத்தானதாகி சொர்க்கங்களையே எட்டியது.(5,6)
பிரகாசமான சூரியனின் காந்தியைக் கொண்டதும், பல கொடிகளால் மகுடம் சூட்டப்பட்டும், வெண்கொடிமரத்தைக் கொண்டதும், நாரைகளின் நிறத்திலான குதிரைகளுடன் கூடியதும், யானை கட்டும் கயிறை {யானைச் சங்கிலியை} பொறியாகத் தாங்கியதும் {கொடியில் கொண்டதும்}, நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகளால் நிறைந்ததும், கதாயுதம், மரத் தடுப்பு ஆகியவற்றைக் கொண்டதும், சதக்னிகள் நிறைந்ததும், மணிவரிசைகளைக் கொண்டதும், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள் மற்றும் பல விற்களுடன் கூடியதுமான தேரில், தங்கப் பின்புறம் கொண்ட வில்லைத் தாங்கியபடியே சூதன் மகன் {கர்ணன்} தோன்றினான்.(7-9) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தங்க இழைகளின் வலையால் அலங்கரிக்கப்பட்ட சங்கை ஊதிக் கொண்டும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உறுதிமிக்கத் தன் வில்லை அசைத்துக் கொண்டும் களத்தில் தோன்றினான்.(10)
தேர்வீரர்களில் முதன்மையானவனும், அணுகுவதற்குக் கடினமானவனும், இருளை அழிக்கும் உதயச் சூரியனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டு,(11) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களில் எவரும், பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது வேறு மனிதர்களின் இழப்பாலும் கவலை கொள்ளவில்லை.(12) ஓ! ஐயா, தன்னுடைய சங்கின் வெடிப்பொலிகளால் போர்வீரர்களை வேகப்படுத்திய கர்ணன், கௌரவர்களின் அந்தப் பரந்த படையை வெளியே கொண்டுவந்தான்.(13) வலிமைமிக்க வில்லாளியும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், துருப்புகளை மகர வியூகத்தில் அணிவகுக்கச் செய்துகொண்டு, வெற்றியடையும் விருப்பத்துடன் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(14)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மகரத்தின் அலகு முனையில் கர்ணனே நின்றிருந்தான். அதன் இரு கண்களிலும் துணிச்சல்மிக்கச் சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும் இருந்தனர்.(15) அதன் தலையில் துரோணர் மகனும் {அஸ்வத்தாமனும்}, அதன் கழுத்தில் {துரியோதனனின்} உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரும் இருந்தனர். அதன் {மகரத்தின்} மத்தியில் பெரும்படையால் ஆதரிக்கப்பட்டபடி மன்னன் துரியோதனன் இருந்தான்.(16) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையான நோன்புகளைக் கொண்ட சுஷேணன், ஆயிரம் தேர்கள் மற்றும் முன்னூறு யானைகளால் சூழப்பட்டபடி நின்றிருந்தான்.(20) அதன் வால் பகுதியில், ஒரு பெரும்படையால் சூழப்பட்ட படி வலிமையும் சக்தியும் கொண்ட இரண்டு அரச சகோதரர்களான சித்திரனும், சித்திரசேனனும் நின்றிருந்தனர்.(21)
ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான கர்ணன் இவ்வாறு வெளியே வந்த போது, அர்ஜுனன் மீது தன் கண்களைச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஓ! வீரா, இந்தப் போரில் வீரர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்படும் வகையில் இந்தத் தார்தராஷ்டிரப் படையை எவ்வாறு கர்ணன் அணிவகுத்திருக்கிறான் பார்.(23) இந்தத் தார்தராஷ்டிரப் படை துணிச்சமிக்கப் போர்வீரர்களை இழந்திருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ! பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு நீ விரும்பியவாறு அணிவகுப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)
தனது அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டவன், அரை நிலவு {அர்த்தச் சந்திரன்} வடிவிலான எதிர் வியூகத்தில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} தன் படையை அணிவகுத்தான்.(27) அதன் இடது பக்கத்தில் பீமசேனனும், வலது பக்கத்தில் பெரும் வில்லாளியான திருஷ்டத்யும்னனும் நின்றிருந்தனர்.(28) அந்த வியூகதின் நடுவில் மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருந்தனர். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பின்புறத்தில், நகுலனும், சகாதேவனும் நின்றனர்.(29) பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள், ஒரு கணமும் அர்ஜுனனை விட்டு அகலாமல் இருந்தனர்.(30)
ஓ! பாரதரே, பெரும் வீரம் கொண்டவர்களும், கவசம் தரித்தவர்களுமான எஞ்சிய மன்னர்கள், தாங்கள் கொண்ட உற்சாகம் மற்றும் உறுதியின் அளவுக்கத்தக்க அந்த வியூகத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றனர்.(31) ஓ! பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வியூகத்தில் அணிவகுக்கப்பட்டிருக்கும் பாண்டவப் படையைக் கண்டு, கர்ணனுடன் சேர்ந்த தார்தராஷ்டிரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(34)
அப்போது சங்குகள், பேரிகைகள், உடுக்கைகள் {பணவங்கள்}, பெருமுரசுகள் {ஆனகங்கள்}, கைத்தாளங்கள் {கோமுகங்கள்}, டிண்டிமங்கள், ஜார்ஜரங்கள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் உரக்க முழக்கி, இசைக்கப்பட்டன.(35) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ! மன்னா, அங்கே குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் கடும் சடசடப்பொலிகளும் எழுந்தன.(37)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில், கவசம்பூண்டவனும், வியூகத்தின் தலைமையில் நின்றவனும், பெரும் வில்லாளியுமான கர்ணனைக் கண்டு, (கௌரவப் படையில்) எவரும் துரோணரின் இழப்பை உணராதிருந்தனர்.(38), ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ! மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள் முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கிடையிலான போரானது ஒருவரையொருவர் அழிப்பதற்காகத் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(42)
----------------------------------------------------------------------------------[1] “உண்மையாக அந்த மோதல் நேர்ந்தபோது, அந்த வியூகத்தின் வரிசையானது இரு படைகளிலும் விரைவாகவும், மொத்தமாகவும் கலைந்ததாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கர்ண பர்வம் பகுதி 11-ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |