Kshemadhurti slain by Bhima! | Karna-Parva-Section-12 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பீமனுக்கும் க்ஷேமதூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற போர்; க்ஷேமதூர்த்திக் கொல்லப்பட்டது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சிமிக்க மனிதர்களாலும், குதிரைகள், மற்றும் யானைகள் ஆகியவற்றாலும் நிறைந்த அந்தப் பரந்த இரு படைகளும், தேவாசுர படைகளுக்கு ஒப்பான காந்தியுடன் ஒன்றோடொன்று சந்தித்து, ஒன்றையொன்று தாக்கத் தொடங்கின.(1) பெரும் ஆற்றலைக் கொண்ட மனிதர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவையும், காலாட்படை வீரர்களும், உடல்களுக்கும், பாவங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் கட்டுறுதியான வீச்சுகளுடன் தாக்குதலைத் தொடுத்தனர்[1].(2) சிங்கத்தைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவரும், முழு நிலவுக்கோ, சூரியனுக்கோ ஒப்பானவையும், தாமரையின் நறுமணத்தைக் கொண்டவையும் சிங்கத்தைப் போன்றவையுமான வேறு மனிதர்களின் தலையால் பூமியை தூற்றினர்.(3) போராளிகள், பிறை வடிவம் மற்றும் அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணம் மற்றும் பல்லங்களாலும்}, கத்திமுகக் கணைகளாலும் {க்ஷுரப்ரங்களாலும்}, கோடரிகளாலும், போர்க்கோடரிகளாலும் வேறு போராளிகளின் தலைகளை வெட்டினர்.(4) ஆயுதங்களாலும், கடகங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட மனிதர்களின் கரங்கள், பருத்த கரங்களைக் கொண்ட வேறு மனிதர்களால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்து ஒளிர்ந்தன.(5) சிவந்த விரல்கள், உள்ளங்கை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்த அந்தக் கரங்கள், கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகள் கிடப்பதைப் போலப் பிரகாசமாகப் பூமியில் படர்ந்து கிடந்தன.(6)
[1] “நான் வங்க உரையில் உள்ள ‘தேஹபாப்மபிரனாசணன்’ ’Dehapaapmapranaachanan’ என்ற சொல்லையே பின்பற்றியிருக்கிறேன். ’போரில் இறப்பது சொர்க்க வெகுமதியைக் கொடுப்பதால், உடல்கள் அழிக்கப்படும் போது, அவர்களது பாவங்களும் அழியும்படி மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்’ என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புண்ணியம் தீர்ந்து போய்த் தங்கள் தெய்வீகத் தேர்களில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போல, எதிரிகளால் தாக்கப்பட்ட துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றில் இருந்து கீழே விழுந்தனர்.(7) வேறு துணிச்சல் மிக்க வீரர்களும், கனமான கதாயுதங்கள், முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, மற்றும் குறுந்தடிகளுடன் கூடிய மேலும் துணிச்சல்மிக்கப் போராளிகளால் அந்தப் போரில் நசுக்கப்பட்டு நூற்றுகணக்கில் விழுந்தனர்.(8) கொந்தளிப்படைந்த அந்தப் போரில் தேர்கள், தேர்களால் நசுக்கப்பட்டன, மதங்கொண்ட யானைகள், வேறு மதங்கொண்ட யானைகளாலும், குதிரைவீரர்கள், வேறு குதிரைவீரர்களாலும் நசுக்கப்பட்டனர்.(9) தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்களும், காலாட்படைவீரர்களால் கொல்லப்பட்ட குதிரைவீரர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களும், காலாட்படை வீரர்களால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், குதிரைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், காலாட்படை வீரர்களும் மற்றும் யானைகளும், தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளும் களத்தில் கீழே விழுந்தன.(10,11) கைகள், கால்கள், ஆயுதங்கள், தேர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மனிதர்களும், குதிரைகளும், யானைகளும், தேர்வீரர்களும், தேர்வீரர்கள், குதிரைகள், யானைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு பெரியதாக இருந்தது.(12)
வீரம் மிகுந்த போர்வீரர்களால் இப்படி அந்தப் படை தாக்கிக் கொல்லப்பட்ட போது, விருகோதரன் {பீமன்} தலைமையிலான பார்த்தர்கள் {பாண்டவர்கள்} எங்களை எதிர்த்து வந்தனர்.(13) அகன்ற தோள்களும், நீண்ட கரங்களும், நெடிய உடற்கட்டும், பெரிய கண்களும் கொண்டோரான, பாண்டியர்கள், சோழர்கள், கேரளர்கள் {சேரர்கள்} ஆகிய அனைவருடன் கூடிய வலிமைமிக்க ஓர் அணிவகுப்பால் சூழப்பட்டவர்களும், திராவிடர்களின் படைகளுடன் கூடியவர்களுமான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சேகிதானன் ஆகியோரும் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} இருந்தனர்.(14,15) சாத்யகியால் வழிநடத்தப்பட்ட ஆந்திர இனக்குழுவைச் சேர்ந்த காலாட்படை போராளிகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும், சிவந்த பற்களுடையவர்களாகவும், மதங்கொண்ட யானைகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளை உடுத்தியிருந்தவர்களாகவும், நறுமணப்பொடிகளைப் பூசியிருந்தவர்களாகவும்,(16) வாள்களையும், சுருக்குக் கயிறுகளையும் தரித்திருந்தவர்களாகவும், வலிமைமிக்க யானைகளையே தடுக்கவல்லவர்களாகவும், ஒருவரையொருவர் கைவிடாத மரணத் தோழர்களாகவும் {காலனின் தோழர்களாகவும்} [2],(17) அம்பறாத்தூணிகளைக் கொண்டவர்களாகவும், விற்களைத் தாங்கியிருந்தவர்களாகவும், நீண்ட குழல்களை {மயிரைக்} கொண்டவர்களாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவர்களாகவும், கடும் வடிவங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் [3].(18)
[2] வெற்றியைக் கருதியவர்களாகையால் மரணத்தையும் உயிர்வாழ்வதையும் சமமாக நினைத்தவர்கள். என்றாவது மாண்டால் அனைவரும் இறப்போமென்று ஒரே தீர்மானமுள்ளவர்கள்” என்பது இங்கே கருத்து.[3] வேறொரு பதிப்பில், “அவ்வாறு அந்தப்படையானது சூரர்களாலே வதம் பண்ணப்பட்டு நாசம் அடையும்போது, பீமசேனனை முதன்மையாகக் கொண்ட பாண்டவர்கள் நம்மை எதிர்த்து வந்தனர். திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், திரௌபதீபுத்திரர்களும், பிரபத்ரகர்களும், ஸாத்யகியும், சேகிதானனும் திராவிடத் தேசத்திலுண்டான ஸைனிகர்களோடு எதிர்த்தார்கள். அகன்ற மார்பையுடையவர்களும், நீண்ட கைகளையுடையவர்களும், உயர்ந்தவர்களும், அகன்ற கண்களையுடையவர்களுமான பாண்டியர்களும், சோழர்களும், கேரளர்களும் பெரிய வியூகத்தால் சூழப்பட்டார்கள். பூஷணங்களை அணிந்தவர்களும், சிவந்த பற்களையுடையவர்களும், மதங்கொண்ட யானை போல வல்லமைபொருந்தியவர்களும், பற்பலவிதமான சாயவஸ்திரங்களைத் தரித்தவர்களும், வாசனைப்பொடிகளாலே பூசப்பட்டவர்களும், கத்திகளைக் கட்டிக்கொண்டவர்களும், பாசத்தைக் கையில் கொண்டவர்களும், யானைகளை எதிர்க்கின்றவர்களுமான வீரர்களனைவரும் சமமான மிருத்யுவையுடைவர்களாக இருந்து கொண்டு ஒருவரையொருவர் விலகினார்களில்லை. பூஷணத்தை அணிந்தவர்களும், விற்களைக் கையில் பிடித்தவர்களும், நீண்ட மயிர்களையுடையவர்களாகவும், பிரியமான வார்த்தையைச் சொல்லுகின்றவர்களும், கோரமான ரூபத்தையும், பராக்ரமத்தையும் உடையவர்களுமாகக் காலாட்கள் பாணங்களால் அடிக்கப்பட்டார்கள்” என்றிருக்கிறது. கங்குலியில் உள்ளதைப் போல ஆந்திரர்கள் பற்றிய குறிப்பு இஃதில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
துணிச்சல் மிக்கப் பிற போர்வீரர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், காருஷர்கள், கோசலர்கள், காஞ்சிகள், மகதர்கள் ஆகியோரும் விரைந்து முன்னேறினர்.(19) முதன்மையான வகைகளைச் சேர்ந்த அவர்களது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியனவும், அவர்களது கடும் காலாட்படை வீரர்களும், பல்வேறு இசைக்கருவிகளின் இசையால் மகிழ்ந்து ஆடுவதாகவும், சிரிப்பதாகவும் தெரிந்தது.(20) அந்தப் பரந்த படைக்கு மத்தியில், யானையின் கழுத்தில் ஏறிக் கொண்ட விருகோதரன் {பீமன்}, பல முதன்மையான யானைவீரர்களால் சூழப்பட்டபடியே, உமது படையை எதிர்த்து வந்தான்.(21) முறையாக ஆயுதங்களைத் தரித்திருந்தவையும், கடுமையானவையும், முதன்மையானவையுமான அந்த யானைகள், உதய மலையின் மேலே உதயச் சூரியனால் மகுடம் சூட்டப்பட்டதும் கல்லால் கட்டப்பட்டதுமான மாளிகை போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையுமான அவற்றின் {அந்த யானைகளின்} இரும்புக் கவசங்களும், நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசித்தன.(23)
கூதிர்காலத்து நடுப்பகல் சூரியனின் காந்தியுடன் கூடிய அந்தப் பீமன், விரிந்து நீட்டப்பட்ட தன் கைகளில் வேலுடனும், தன் தலையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கிரீடத்துடனும், தன் எதிரிகளை எரிக்கத் தொடங்கினான்.(24) அந்த {பீமனின்} யானையைத் தொலைவிலிருந்தே கண்டவனும், தானும் யானையில் ஏறியிருந்தவனுமான க்ஷேமதூர்த்தி, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த பீமனை நோக்கி அறைகூவியபடியே விரைந்து சென்றான்.(25) அப்போது, மேலே மரங்களைக் கொண்ட இரு பெரும் மலைகளுக்கு ஒப்பானவையும், ஒன்றோடொன்று போரிட விரும்பியவையும் கடும் வடிவங்களுடன் கூடியவையுமான அந்த இரு யானைகளுக்கும் இடையில் ஒரு மோதல் நடந்தது.(26) ஒன்றோடொன்று மோதிய அந்த யானைகளில் இருந்த அவ்விரு வீரர்களும், சூரியக் கதிர்களின் காந்தியுடன் கூடிய வேல்களால் பலவந்தமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு உரத்த முழக்கமிட்டனர்.(27) பிறகு, பிரிந்த அவர்கள், தங்கள் யானைகளுடன் வட்டமாகத் திரிந்து, விற்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(28)
தங்கள் உரத்த முழக்கங்களாலும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டதாலும், தங்கள் கணைகளின் விஸ் என்ற ஒலியாலும் சுற்றியிருந்த மக்களை மகிழ்ச்சியடைச் செய்தபடியே அவர்கள் தொடர்ந்து சிங்க முழக்கமிட்டனர்.(29) பெரும் பலம் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான அவ்விருவரும், காற்றில் மிதக்கும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் யானைகளின் உயர்த்தித் தூக்கப்பட்ட துதிக்கைகளைப் பயன்படுத்திப் போரிட்டனர்.(30) பிறகு, அடுத்தவரின் வில்லை வெட்டிய அவ்விருவரும், ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே, மழைக்காலத்து இரு மேகத் திரள்கள் மலைத்தாரைகளைப் பொழிவதைப் போல ஈட்டிகள் மற்றும் வேல்களின் மழையை ஒருவர்மீதொருவர் பொழிந்தனர்.(31)
அப்போது, க்ஷேமதூர்த்தி, பெரும் மூர்கத்தைக் கொண்ட வேலொன்றால் பீமசேனனின் நடுமார்பைத் துளைத்து, மேலும் ஆறால் துளைத்து, உரக்க முழங்கினான்.(32) தன் உடலில் தைத்திருந்த அந்த வேல்களுடன் கூடியவனும் கோபத்தால் சுடர்விட்டவனுமான பீமசேனன், மேகத்திரையின் வழியே கதிர்களை வெளியேற்றும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) அப்போது பீமன், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமானதும், முற்றிலும் நேராகச் செல்வதும், முழுவதும் இரும்பாலானதுமான வேல் ஒன்றைத் தன் எதிராளியின் மீது கவனமாக வீசினான்.(34) பிறகு அந்தக் குலுட்டர்களின் {கரூசர்களின்} ஆட்சியாளன் {க்ஷேமதூர்த்தி}, தன் வில்லை வளைத்துப் பத்துக் கணைகளால் அந்த வேலை அறுத்து, மேலும் அறுபது {60} கணைகளால் பாண்டுவின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(35) பிறகு பாண்டுவின் மகனான பீமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, உரக்க முழங்கிய படியே தன் எதிராளியின் யானையைத் தன் கணைகளால் ஆழமாகப் பீடித்தான்.(36) அந்தப் போரில் பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை, அதைத் தாங்கிக் கொள்ள முனைந்தாலும், காற்றால் விரட்டப்படும் மேகத்தைப் போலக் களத்தில் நிற்கவில்லை.(37) பீமனுக்குச் சொந்தமானதும், கடுமையானதுமான யானைகளின் இளவரசன், காற்றால் விரட்டப்படும் மேகத்திரள்களைப் புயலால் விரட்டப்படும் மற்றொரு மேகத்திரளைப் போல (ஓடிக் கொண்டிருக்கும்) தன் எதிராளியைப் பின்தொடர்ந்து சென்றது.(38) தன் யானையை நிறுத்திய வீர க்ஷேமதூர்த்தி, பின்தொடர்ந்து வந்த பீமசேனனின் யானையைத் தன் கணைகளால் துளைத்தான்.(39) நன்கு அடிக்கப்பட்டதும், முற்றிலும் நேரானதுமான கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் தன் எதிராளியின் வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, பிறகு அந்தப் பகை யானையைப் பீடித்தான்.(40)
அப்போது அந்தப் போரில் கோபத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி, பீமனைத் துளைத்து, அவனது யானையின் அனைத்துப் பகுதியையும் நீண்ட கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் தாக்கினான்.(41) எனினும், தன் யானை வீழ்வதற்கு முன்பே அந்த விலங்கில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்ற பீமன், பிறகு தன் கதாயுதத்தால் எதிராளியின் யானையை நசுக்கினான்.(42) நசுக்கப்பட்ட தன் யானையில் இருந்து கீழே குதித்து, உயர்த்திய ஆயுதத்துடன் தன்னை நோக்கி வந்த க்ஷேமதூர்த்தியையும், பீமன் அவ்வாறே தாக்கினான்.(43) இப்படித் தாக்கப்பட்ட க்ஷேமதூர்த்தி, இடியால் வீழ்த்தப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலையின் அருகிலேயே கிடக்கும் சிங்கத்தைப் போலத் தன் கையில் வாளுடன் தன் யானையின் அருகிலேயே உயிரற்று விழுந்தான்.(44) குலுட்டர்களின் {கரூசர்களின்} கொண்டாடப்படும் மன்னன் {க்ஷேமதூர்த்தி} கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மிகவும் துன்புற்று தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(45)
--------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 12-ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |