Vinda and Anuvida of Kekaya! | Karna-Parva-Section-13 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கேகயத்து இளவரசர்களான விந்தானுவிந்தர்கள் மற்றும் சாத்யகிக்கு இடையில் நடந்த மோதல்; சாத்யகியால் கொல்லப்பட்ட விந்தானுவிந்தர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கவனும், வீரமிக்க வில்லாளியுமான கர்ணன், அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(1) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும், கோபத்தால் நிறைந்து, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது மகனுடைய {துரியோதனனுடைய} படையைத் தாக்கத் தொடங்கினர்.(2) கர்ணனும், ஓ! மன்னா, அந்தப் போரில், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்படவையும், சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடியவையுமான துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பாண்டவப் படையைக் கொன்றான்.(3) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் உரக்கப் பிளிறி, தங்கள் பலத்தை இழந்து மயக்கமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் திரிந்தன.(4)
அந்தப் படையானது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு அழிக்கப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} நோக்கி நகுலன் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(5) கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டிருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து பீமசேனன் விரைந்தான். சாத்யகி, கைகேய இளவரசர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரைத் தடுத்தான்[1].(6) மன்னன் சித்திரசேனன் முன்னேறி வரும் சுருதகர்மனை எதிர்த்து விரைந்தான்; பிரதிவிந்தியன், அழகிய கொடிமரத்தையும், அழகிய வில்லையும் கொண்ட சித்திரனை எதிர்த்து விரைந்தான்.(7) துரியோதனன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்; அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூட்டம் கூட்டமாக வந்த கோபக்கார சம்சப்தகர்களை எதிர்த்து விரைந்தான்.(8) பெரும் வீரர்கள் கொல்லப்பட்ட அம்மோதலில், திருஷ்டத்யும்னன் கிருபரை எதிர்த்துச் சென்றான். வெல்லப்படமுடியாத சிகண்டி கிருதவர்மனோடு மோதினான்.(9) சுருதகீர்த்திச் சல்லியனுடன் மோதினான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாத்ரியின் மகனான வீரச் சகாதேவன், உமது மகன் துச்சாசனனோடு மோதினான்.(10)
[1] “அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும் அர்ஜுனனால் முன்பே கொல்லப்பட்டனர். இங்கே குறிப்பிடப்படும் இரண்டு போர்வீரர்களும் அவந்தியைச் சார்ந்தவர்கள் அல்ல; அவர்கள் கைகேயர்கள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அவந்தியின் விந்தானுவிந்தர்கள் கொல்லப்பட்டது துரோண பர்வம் பகுதி 98 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் போரில் கைகேய இளவரசர்கள் இருவரும், சுடர்மிக்கக் கணைமாரியால் சாத்யகியை மறைத்தனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்னவனும் {சாத்யகியும்}, அந்த இரு கைகேயச் சகோதரர்களை மறைத்தான்.(11) காட்டில் இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒரு பகையானையைத் தாக்குவது போல, அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் சாத்யகியின் மார்பை ஆழத் துளைத்தனர்.(12) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்த இரு சகோதரர்களும், பழுதற்ற செயல்களைச் செய்யும் சாத்யகியைத் தங்கள் கணைகளால் துளைத்தனர்.(13) எனினும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைமாரியால் மறைத்த சாத்யகி, புன்னகைத்துக் கொண்டே, அவ்விரு சகோதரர்களையும் தடுத்தான்.(14) சிநியின் பேரன் {சாத்யகி} ஏவிய அந்தக் கணைமாரியால் தடுக்கப்பட்ட அவ்விரு சகோதரர்களும், தங்கள் கணைகளால் அந்தச் சிநியின் பேரனுடைய தேரை மறைத்தனர்.(15)
பெரும் புகழைக் கொண்ட அந்தச் சௌரின் {சாத்யகி}, அவ்விருவரின் அழகிய விற்களை வெட்டிவிட்டு அந்தப் போரில் தன் கூரிய கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(16) வேறு அழகிய இரு விற்களையும், பெரும் எண்ணிக்கையிலான பலமிக்கக் கணைகளையும் எடுத்துக் கொண்ட அவ்விருவரும், சாத்யகியை மறைத்து, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் திரியத் தொடங்கினர்.(17) கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அவ்விரு சகோதரர்களால் ஏவப்பட்டவையுமான அந்த வலிமைமிக்கக் கணைகள் திசைகளின் அனைத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே பாயத் தொடங்கின.(18) அவர்களுக்கிடையிலான அந்தப் பயங்கரப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் அங்கே இருளை உண்டாக்கின. பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் விற்களை வெட்டினர்.(19)
அப்போது வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்வதன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அதில் நாணேற்றி, கத்தி தலை கொண்ட கூரிய கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் அனுவிந்தனின் தலையை அறுத்தான்.(20) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய தலையானது, ஓ! மன்னா, (பழங்காலத்தில் நடந்த) பெரும்போரில் கொல்லப்பட்ட சம்பரனின் தலை போல விழுந்தது. மேலும் அது கைகேயர்கள் அனைவரையும் துயரில் நிறைக்கும்படி உடனே பூமியை அடைந்தது.(21) துணிச்சல் மிக்க அந்தப் போர்வீரன் {அனுவிந்தன்} கொல்லப்பட்டதைக் கண்ட அவனது சகோதரனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விந்தன், மற்றொரு வில்லுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சிநியின் பேரனைத் தடுக்கத் தொடங்கினான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது {60} கணைகளால் சாத்யகியைத் துளைத்த அவன் {விந்தன்}, “நில், நில்” என்று சொன்னபடியே உரக்க முழங்கினான்.(23) பிறகு அந்தக் கைகேயர்களின் வலிமைமிக்கத் தேர்வீரன் {விந்தன்}, பல்லாயிரம் கணைகளால் சாத்யகியின் கரங்களையும் மார்பையும் வேகமாகத் தாக்கினான்.(24)
அனைத்து அங்கங்களிலும் கணைகளால் காயம்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(25) அந்த மோதலில் உயர் ஆன்ம கைகேயனால் துளைக்கப்பட்ட சாத்யகி, (பதிலுக்கு) இருபத்தைந்து கணைகளால் அந்தக் கைகேயனை {விந்தனை} மிக எளிதாகத் துளைத்தான்.(26) பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவ்விரு போர்வீரர்களும் {விந்தனும் சாத்யகியும்}, அம்மோதலில் ஒருவரின் அழகிய வில்லை மற்றவர் அறுத்து, ஒருவரின் சாரதியையும், குதிரைகளையும் மற்றவர் வேகமாகக் கொன்று, வாளால் போரிடுவதற்காக ஒருவரையொருவர் காலால் நடந்தே அணுகினர்.(27) பருத்த கரங்களைக் கொண்டவர்களான அவ்விருவரும், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பெரும் வலிமையுடன் கூடிய இருவரான ஜம்பன் மற்றும் சக்ரனை {இந்திரனைப்} போல, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும், ஒரு சிறந்த வாளையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பரந்த அரங்கில் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) அந்தப் பெரும்போரில் அவர்கள் இருவரும் வட்டமாக {மண்டலகாரமாகத்} திரியத் தொடங்கினர். பிறகு அவர்கள் ஒருவரையொருவர் அருகில் அணுகி, ஒருவரோடொருவர் வேகமாக மோதத் தொடங்கினர்.(29)
அப்போது அந்தச் சாத்வதன் {சாத்யகி}, அந்தக் கைகேயனின் {விந்தனின்} கேடயத்தை இரண்டாகப் பிளந்தான். பின்னவனும் {விந்தனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் கேடயத்தை இரண்டாகப் பிளந்தான்.(30) நூறு நட்சத்திரங்களால் மறைக்கப்பட்ட தன் எதிராளியின் கேடயத்தைப் பிளந்த கைகேயன், (சில நேரங்களில்) முன்னேறியும், பின்வாங்கியும் வட்டமாகத் திரியத் தொடங்கினான்.(31) அப்போது பெறும் சுறுசுறுப்பைக் கொண்ட சிநியின் பேரன் {சாத்யகி}, இவ்வாறு கையில் வாளுடன் அந்தப் பரந்த அரங்கில் திரிந்து கொண்டிருந்த கைகேயர்களின் இளவரசனை {விந்தனை} ஒரு பக்கத் தாக்குதால் {குறுக்காக} வெட்டினான்.(32) கவசம் பூட்டப்பட்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கைகேய இளவரசன் {விந்தன்} இவ்வாறு அந்தப் பெரும்போரில் இரண்டாகப் பிளக்கப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலக் கீழே விழுந்தான்.(33)
போரில் அவனைக் கொன்றதும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், எதிரிகளை எரிப்பவனுமான துணிச்சல்மிக்கச் சிநியின் பேரன் {சாத்யகி}, வேகமாக யுதாமன்யுவின் தேரில் ஏறிக் கொண்டான்.(34) பிற்பாடு, முறையாக (அனைத்தையும்) அடையப்பெற்ற மற்றொரு தேரில் ஏறிய சாத்யகி, தன் கணைகளால் கைகேயர்களின் பெரும்படையைக் கொல்லத் தொடங்கினான்.(35) இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்தக் கைகேயர்களின் பரந்த படையினர், தங்கள் எதிரியை {சாத்யகியை} விட்டுவிட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(36)
ஆங்கிலத்தில் | In English |