Aswathama encountered Bhima! | Karna-Parva-Section-15 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பீமசேனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த போர்; மயக்கமடைந்து விழுந்த இருவரும்; அவர்கள் இருவரையும் பாராட்டிய சித்தர்களும், பிறரும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே ஒரு கணையால் பீமனைத் துளைத்தான்.(1) உடலின் முக்கிய அங்கங்களுடைய அறிவனைத்தையும் கொண்டிருந்ததால், வேகமான கரங்களைக் கொண்டவனான அந்த அஸ்வத்தாமன், அவனது {பீமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் குறிபார்த்து, தொண்ணூறு {90} கணைகளால் மீண்டும் அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கூரிய கணைகளால் எங்கும் துளைக்கப்பட்ட பீமசேனன், அந்தப் போரில் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நன்கு செலுத்தப்பட்ட ஓராயிரம் {1000} கணைகளால் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) அந்தப் போரில் தன் கணைகளால் தன் எதிரியின் கணைகளைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} அந்தப் பாண்டவனின் {பீமனின்} முன்நெற்றியைத் தாக்கினான்.(5) ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, காட்டில் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்பைச் செருக்குடன் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்தக் கணையைத் தன் முன்நெற்றியில் தாங்கிக் கொண்டான்.(6)
பிறகு அந்தப் போரில் சிரித்துக் கொண்டே இருந்த வீரப் பீமன், போராடிக் கொண்டிருக்கும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நெற்றியை மூன்று துணிக்கோல் கணைகளால் {நாராசங்களை} தாக்கினான். அந்தப் பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன் நெற்றியில் ஒட்டியிருந்த அந்த மூன்று கணைகளுடன், மழைக்காலங்களில் நீரால் கழுவப்படும் மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஒன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(8) அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் அந்தப் பாண்டவனைப் {பீமனை} பீடித்தாலும், காற்றால் அசைக்கப்பட முடியாத மலையைப் போல இருந்த அவனை {பீமனை} அசைக்கத் தவறினான்.(9) அதே போலவே, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்தப் பாண்டுவின் மகனாலும், மலையை அசைப்பதில் தவறும் மழைத்தாரைகளைப் போலவே, தன் நூற்றுகணக்கான கணைகளால் அந்தப் போரில் துரோணர் மகனை அசைக்க முடியவில்லை.(10)
பயங்கரக் கணைமாரியால் ஒருவரையொருவர் மறைத்தவர்களும், வலிமையும், கடுமையும் கொண்டவர்களுமான அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் முதன்மையான தேர்களில் அப்போது பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(11) உலகத்தின் அழிவுக்காக உதித்த சுடர்மிக்க இரு சூரியர்களைப் போலத் தெரிந்த அவர்கள், சிறந்த கணைகளாலான தங்கள் கதிர்களால் ஒருவரையொருவர் எரிப்பதில் ஈடுபட்டனர்.(12) அந்தப் பெரும்போரில் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற பெருங்கவனத்துடன் முயன்றவர்களும், உண்மையில் மிகவும் அச்சமற்றவகையில் கணைமாரியால் செயலுக்குப் பொருத்தமான செயலில் ஈடுபட்டவர்களும்,(13) மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் அம்மோதலில் இரு புலிகளைப் போலவே திரிந்தனர். வெல்லப்பட்ட முடியாதவர்களும், பயங்கரமானவர்களுமான அவ்விருவரும் கணைகளையே தங்கள் நச்சுப்பற்களாகவும், விற்களையே தங்கள் வாய்களாகவும் கொண்டிருந்தனர்.(14)
மேகத்திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் போல, அனைத்துப் பக்கங்களிலும் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட அவர்கள் (கண்களுக்குக்) காணப்பட முடியாதவர்களானார்கள்.(15) பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும், மேகத்திரைகளில் இருந்து விடுபட்ட செவ்வாயையும், புதனையும் போலச் சுடர்விட்டபடி விரைவில் தோன்றினார்கள்.(16) அச்சந்தரும் வகையிலான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விருகோதரனை {பீமனைத்} தன் வலப்பக்கத்தில் நிறுத்திய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்},(17) மலையொன்றின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, நூற்றுக்கணக்கான கடுங்கணைகளை அவன் {பீமன்} மீது பொழிந்தான்.
எனினும், பீமனால் தன் எதிரியின் அந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அஸ்வத்தாமனின் வலப்பக்கத்தில் நின்றபடியே, பின்னவனின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினான். (நிலைமையின் தேவைக்குத் தகுந்தபடி) முன்னேறவும், பின்வாங்கவும் செய்த அவர்களது தேர்கள், பல்வேறு வழிகளில் திரிவதைத் தொடர்ந்த நிலையிலேயே,(19) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அந்தப் போர் மிகவும் மூர்க்கமடைந்தது. பல்வேறு பாதைகளில் திரிந்து, (போரிடுவதில்) வட்டமாகச் சுழன்ற அவர்கள்,(20) தங்கள் விற்களை முழுமையாக வளைத்துக் கணைகளை ஏவியபடியே ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவனை அழித்துவிடவும் பெருமுயற்சி செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் போரில் மற்றவனைத் தேரற்றவனாகச் செய்ய விரும்பினர்.(21)
பிறகு, அந்தப் பெரும் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அழைத்தான். எனினும், அந்தப் போரில் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் அந்த ஆயுதங்கள் அனைத்திற்கும் தன் கணைகளால் எதிர்வினையாற்றினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது, கோள்களுக்கிடையில் நடக்கும் பயங்கர மோதலைப் போலப் பயங்கரமான ஆயுத மோதல் அப்போது அங்கே நிகழ்ந்தது.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஒன்றோடொன்று மோதி திசைப்புள்ளிகள் அனைத்திற்கும், சுற்றிலும் இருந்த உமது துருப்புகளுக்கும்கூட ஒளியையூட்டின.(24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது வீழும் விண்கற்களால் மறைக்கப்பட்டதைப் போலவே, கணைக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட ஆகாயம், பயங்கரத் தோற்றத்தை ஏற்றது.(25) ஓ! பாரதரே, கணைகளின் மோதலால் பொறிகளுடனும், சுடர்களுடன் கூடிய தழல்களுடனும் நெருப்பு அங்கே உண்டானது. அந்நெருப்பு இரு படைகளையும் எரிக்கத் தொடங்கியது.(26)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே திரிந்த சித்தர்கள், “போர்கள் அனைத்திலும் இந்தப் போரே முதன்மையானது. (இதற்கு முன் போரிடப்பட்ட) போர்கள் அனைத்தும் இதன் பதினாறின் ஒரு பங்கிற்கும் ஆகாது. இதுபோன்றதொரு போர் இனி நேராது. பிராமணனும், க்ஷத்திரியனுமான இவ்விரு மனிதர்களும் ஞானம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(29) இருவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், கடும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். பீமனின் வலிமை பயங்கரமானதாக இருக்கிறது. அடுத்தவனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்திறன் அற்புதமானதாக இருக்கிறது. இவர்களது சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கிறது? இவ்விருவரும் கொண்ட திறன் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது?(30) யுகத்தின் முடிவில் அண்டத்தை அழிக்க நிற்கும் இரண்டு யமன்களைப் போலவே இவ்விருவரும் இந்தப் போரில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டு ருத்திரர்களைப் போலவோ, இரண்டு சூரியர்களைப் போலவோ பிறந்திருக்கின்றனர்.(31) பயங்கர வடிவங்களைக் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் இருவரும், இந்தப் போரில் இரு யமன்களைப் போலவே இருக்கின்றனர்” என்ற சித்தர்களில் இத்தகைய வார்த்தைகளே ஒவ்வொரு கணமும் {அங்கே} கேட்கப்பட்டன. மேலும் அங்கே கூடியிருந்த சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் சிங்க முழக்கம் எழுந்தது.(32)
அந்தப் போரில் அவ்விரு போர் வீரர்களாலும் செய்யப்பட்டவையும், அற்புதமானவையும், நினைத்துப் பார்க்கவும் முடியாதவையுமான சாதனைகளைக் கண்டு, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் நெருக்கமான கூட்டங்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(33) அவ்விருவரையும் புகழ்ந்த தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர் மகனே {அஸ்வத்தாமா}, நன்று. ஓ! பீமா, நன்று” என்றனர்.(34) அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவருக்கொருவர் காயங்களைச் ஏற்படுத்திய அந்த வீரர்கள் இருவரும், சினத்தால் கண்களை உருட்டியபடியே ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தனர்.(35) சினத்தால் சிவந்த கண்களுடன் கூடிய அவர்களது உதடுகளும்கூடச் சினத்தால் நடுங்கின. கோபத்தால் தங்கள் பற்களை அரைத்த அவர்கள், தங்கள் உதடுகளையும் கடித்துக் கொண்டனர்.(36)
அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், ஆயுதங்களின் பளபளப்பைத் தங்கள் மின்னலாகக் கொண்டு, கணைத்தாரைகளை மழையாகப் பொழியும் மேகங்கள் இரண்டைப் போல அந்தப் போரில் தங்களைக் கணை மாரியால் மறைத்துக் கொண்டனர்.(37) அந்தப் பெரும்போரில் மற்றவரின் கொடிமரத்தையும், சாரதியையும், குதிரைகளையும் துளைத்த அவர்களில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கியபடியே இருந்தனர்.(38) பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த அவர்கள் ஒவ்வொருவரும், மற்றவனைக் கொல்ல விரும்பி, இரு கணைகளை எடுத்துக் கொண்டு விரைவாக அவற்றை எதிரியின் மீது ஏவினர்.(39) தடுக்கப்படமுடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான அந்தச் சுடர்மிக்கக் கணைகள் இரண்டும், ஓ! மன்னா, தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்று கொண்டிருந்த அவ்விரு வீரர்களையும் வந்தடைந்து {அவர்களைத்} தாக்கின.(40)
அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள் இருவரில் ஒவ்வொருவரும், மற்றவனின் சக்தியால் {கட்டுண்டு} தங்கள் தங்கள் தேர்களின் தட்டுகளில் மூழ்கினர் {விழுந்தனர்}.(41) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} நினைவிழந்ததை அறிந்த அவனது சாரதி, ஓ! மன்னா, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைப் போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்.(42) அதேபோல, ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் மயக்கமடைந்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான பாண்டுவின் மகனையும் {பீமனையும்} அவனது சாரதி போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(43)
ஆங்கிலத்தில் | In English |