விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பாக நேற்று முன்தினம் (22.1.17) நடைபெற்ற இந்த வருடத்தின் முதல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு திரும்பும்போது மிகுந்த மனநிறைவுடன் திரும்பினேன். அங்கு வந்திருந்தவர் ஒவ்வொருவரும் என்னை அறிந்து வைத்திருந்தது பெருமகிழ்ச்சியை அளித்தது. பல ஊர்களில் இருந்து அந்தக் கலந்துரையாடலுக்காகவே வந்த சிலரும் அங்கே இருந்தனர். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாசகரும் உலக இலக்கியங்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். கோவையில் உணர்ந்த அது, என்னுள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போகிறோமே, கிராதம் குறித்துப் படித்துச் செல்ல வேண்டும் என்று மொழிபெயர்ப்பை நிறுத்தி மூன்று நாட்களாக (இரவு நேரத்தில் மட்டும்) கிராதத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடந்தேன். இருப்பினும், கிடைத்த நேரத்தில், முதல் முப்பத்தைந்து பகுதிகளைத்தான் என்னால் படிக்க முடிந்தது. படித்தது வரை மட்டுமாவது நினைவில் நிறுத்திக் கொண்டு கலந்துரையாடலில் பேசிவிடலாம் என்ற துணிவுடன் சென்ற எனக்கு, ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் பேச முடியவில்லை. சட்டைப்பையில் இருந்த சில குறிப்புகளையும் எடுக்க ஏனோ மனம் வரவில்லை. உண்மையில் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். விவாதங்களில் பங்குபெறுவதில் அதியாவல் கொண்ட எனக்கு, உரையாகப் பேசும் கலை மட்டும் ஒரு போதும் கைகூடி வருவதில்லை. அதற்காக நான் முயற்சித்ததும் மிக மிகக் குறைவே.
கடந்த திங்கட்கிழமை என்று நினைக்கிறேன், நண்பர் ஜெயவேலன் அவர்கள் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும், உடனே அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் தொலைபேசியில் எனக்குத் தெரிவித்தார். நான் தொடர்பு கொண்டபோது, திரு.ராஜகோபாலன் அவர்கள் பேசினார். இவ்வருட முதல் கலந்துரையாடலில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். நிச்சயம் கலந்து கொள்வேன் என்று சொன்ன நான், பேசுவதுதான் எனக்குச் சற்று சிரமமான காரியம் என்றும் தெரிவித்தேன். கலந்துரையாடலானது உரை நிகழ்த்துவது போல இருக்காது, விவாதம் போலத்தான் இருக்கும் என்று அவர் உற்சாகம் தந்தார். சரி கடினமேதும் இருக்காது என்ற துணிவோடே அங்கே சென்றேன்.
22ம் தேதியன்று மாலை 3.30 மணியளவில் சத்யானந்த யோக மையத்தை அடைந்தேன். ஏற்கனவே கோவை விருது வழங்கும் விழாவில் எனக்கு அறிமுகமாகியிருந்த நண்பர் காளிபிரசாத் அவர்கள் வரவேற்று, வரவேற்பறையில் என்னை அமரச் செய்தார். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் கண்டேன். அனைத்தும் மிகக் கனத்த நூல்கள். தத்துவ அளவிலும், வடிவத்தின் அளவிலும் கனமானவையே. "யோக மையத்தின் நிறுவுனர் திரு.சௌந்தர் அவர்களின் புத்தகங்கள் அவை" என்று காளி அவர்கள் சொன்னார். ஜெயமோகனின் மற்ற படைப்புகள் குறித்தும், வெண்முரசு குறித்தும், நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் குறித்தும் நானும் அவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சௌந்தர் அவர்கள் அவருடைய யோகா நண்பர்களுடன் வந்தார். மிகச் சாந்தமான மனிதர். யோகாசிரியர் எப்படி இருப்பார் என்பதற்கு இலக்கணமாகத் தெரிந்தார். பிறகு ஒவ்வொருவராக வந்தனர். மேலிருந்த பெரிய அறைக்குச் சென்று அமர்ந்தோம். இராஜகோபலன் அவர்கள் வந்தார். நண்பர் ஜெயவேலனும், அவரது மனைவி திருமதி. தேவகி ஜெயவேலனும் வந்தனர்.
4.30 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. ஒரு சிறு அறிமுகத்திற்குப் பிறகு, “இனி நேரம் உங்களுடையது, நீங்கள் பேசத் தொடங்கலாம்” என்றனர். பிச்சாண்டவர், வைசம்பாயனன், அத்ரி, சிவ வடிவங்கள், பைலன், சண்டன், அர்ஜுனன், கிருஷ்ணனின் பித்துநிலை, உருவகமாகச் சொல்லப்படும் தேவிகள், யமன், குபேரன் எனத் தனித்தனியாகப் பேச வேண்டும் என்று நான் நினைத்திருந்தவை எதுவும் ஏனோ வெளிப்பட மறுத்தன. என் இயலாமையை மறைக்க ஒன்றிரண்டு வரிகளை மட்டுமே பேசிவிட்டு, கலந்துரையாடலைத் தொடங்குவோமே என்று கேட்டேன். நீங்கள் நினைப்பதைப் பேசலாம் என்று திரு.ராஜகோபாலன் அவர்கள் சொன்னார். கிராதம் 35 பகுதிகள் தான் படித்திருக்கிறேன் என்றேன்.
என் நிலைமையை ஊகித்தறிந்த அவர், என்னைக் குறித்தும், நான் செய்து கொண்டிருக்கும் வேலைகளைக் குறித்தும் என் சார்பாகப் பேசினார். நானே பேசியிருந்தாலும் அவ்வளவு அழகாகப் பேசியிருக்க முடியாது. மஹாபாரதம் குறித்தும், அதன் தேவை குறித்தும், அதன் பலப்பல பதிப்புகள் குறித்தும், ஜெயமோகன் அவற்றை வெளிக்கொணரும் முறை குறித்தும் அருமையாக எடுத்துரைத்தார். அவரைக் கண்டு எனக்குப் பொறாமையாகவே இருந்தது. பிறகு அவரே கேள்வி பதில் வடிவில் கேள்விகளைக் கேட்க, நான் என்னால் இயன்ற பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மேலும் சிலரும் கேள்விகள் கேட்டனர். முடிந்தவரை விவரமாகவே பதிலளித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. உரையாகப் பேசியிருந்தால் நான் அவ்வளவு நேரம் பேசியிருக்க வாய்ப்பே இல்லை. இடைவேளையின் போது இராஜகோபாலன் அவர்களுடன் தனியாகப் பேசும்போது, “இவ்வளவு இனிமையாகப் உரை நிகழ்த்துகிறீர்களே நீங்கள் கொடுத்து வைத்தவர்” என்று சொன்னேன்.
கேள்விகள் கேட்ட ஒவ்வொருவரும் வெண்முரசில் வரும் பகுதிகள் மகாபாரதத்தில் எவ்வாறு உள்ளன என்பதைக் கேட்பதில் ஆவலாக இருந்தனர். சில இடங்களில் ஜெயமோகன் ஒரு குறிப்பையும் விடாமல் அனைத்தையும் சேர்த்திருப்பதை எண்ணி அனைவரும் வியந்தோம். இடையிடையே நண்பர் ஜெயவேலன் சில கருத்துகளைச் சொல்லும்போது குபீரெனச் சிரிப்பொலி சபையை நிறைத்தது. அது ஜெயவேலன் அவர்களுக்கே உரிய ஆற்றல். இயல்பான பேச்சுக்கு இருக்கும் லயத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு மீண்டும் கலந்துரையாடல் தொடர்ந்தது. இளையவர் முதல் முதியவர் வரை, ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் அவர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிந்தது நிறைவை அளித்தது. இரகுராமன் அவர்களும் இடையிடையே கேள்விகளைக் கேட்டு சில கேள்விகளுக்கான பதில்களை முழுமையடையச் செய்தார். முகநூல் நண்பரான அவரை நேரில் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. இறுதியில் நண்பர் ஜெயவேலனும், அவரது மனைவி தேவகி ஜெயவேலனும் பேசினார்கள். மகாபாரத மொழிபெயர்ப்பில் அவர்கள் பங்கேற்க நேர்ந்த விதத்தை இருவரும் உள்ளபடியே சொன்னார்கள்.
நிகழ்ச்சி முடியும் தருணத்தில், மகாபாரத மொழிபெயர்ப்புக்கு உதவும் விதமாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பாக ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்கள். அந்த நேரத்தில் ஜெயமோகன் அவர்களின் மகன் அஜிதன் அங்கே வந்தார். மிக அமைதியான இளைஞர். அவர் தனது தந்தையை வைத்து இயக்கியிருந்த காணொளியைக் கண்டு, “அற்புதமாக இயக்கியிருக்கிறாரே” என்று வியந்திருக்கிறேன். “உங்கள் தந்தையின் கீபோர்ட் போலவே என் கீபோர்டிலும் அதே பல் (Button) கிடையாது” என்றேன். காணொளியோடு சேர்ந்து தட்டெழுதும் ஒலியைச் சேர்த்திருக்கும் விதமும், காட்சி அமைப்புகளும் அருமையாக இருந்தன” என்று பாராட்டி, அவருக்கு வாழ்த்து கூறினேன்.
அடுத்து ஜெயமோகன் அவர்கள் “மாமலர்” எழுதவிருக்கிறார். மலர்கொய்யச் செல்லும் பீமன் அனுமனைத் தரிசித்துக் கந்தர்வர்களை வென்று மலரை அடையும் பகுதியாகவே அது இருக்க வேண்டும். “நளன் தமயந்தி குறித்து அவர் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். எழுதுவாரா? தவிர்த்துவிடுவாரா? என்று தெரியவில்லை” என்று நான் பேசிக் கொண்டிருந்தபோது, “உண்டு. மாமலரிலேயே அது வரக்கூடும்” என்று அஜிதன் சொன்னார். அஜிதனின் வார்த்தைகள் தேனை வார்த்தது போல இருந்தது. பிறகு, நாங்கள் வெளியே வந்தபோது, “விசிஷ்டாத்வைதத்தைப் படைப்புகளில் பொருத்திப் பார்ப்பதில் வல்லவர் அவர்” என்று இராஜகோபாலன் அவர்கள் அஜிதனைக் குறித்துச் சொன்னார். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன்.
அங்கேயே இரவு உணவும் உண்டு முடித்துப் புறப்படும் போது, சௌந்தர் அவர்கள் அவரது அறையில் நான் கண்ட புத்தகங்களில் வேண்டுபவற்றை எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் வைத்திருக்கும் புத்தகங்களிலேயே இன்னும் படிக்க வேண்டியவை இருப்பது நினைவுக்கு வரவே, அடுத்தமுறை வரும்போது எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டேன்.
ஜெயமோகன் படைப்புகளின் என்சைக்ளோபீடியா இவர்தான் என்று ஒரு நண்பரை அறிமுகம் செய்திருந்தனர். அருமையாகப் பேசினார், என் பதில்களில் பலவை முழுமை பெற இரகுராமனுடன் அவரும் உதவினார். "ஆசான் கிராதம் முடித்திருப்பதால் ‘கிராதனாகவே’ இவர் ஆகிவிட்டார்" என்று ஒரு நண்பரை அறிமுகம் செய்திருந்தனர். அவரும் பல அருமையான கேள்விகளைக் கேட்டார். அவர்கள் இருவரின் பெயரையும் மறந்தது மட்டுமே இதை எழுதும்போது என் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. நண்பர்கள் மன்னிப்பார்களாக.
ஜெயமோகன் படைப்புகளின் என்சைக்ளோபீடியா இவர்தான் என்று ஒரு நண்பரை அறிமுகம் செய்திருந்தனர். அருமையாகப் பேசினார், என் பதில்களில் பலவை முழுமை பெற இரகுராமனுடன் அவரும் உதவினார். "ஆசான் கிராதம் முடித்திருப்பதால் ‘கிராதனாகவே’ இவர் ஆகிவிட்டார்" என்று ஒரு நண்பரை அறிமுகம் செய்திருந்தனர். அவரும் பல அருமையான கேள்விகளைக் கேட்டார். அவர்கள் இருவரின் பெயரையும் மறந்தது மட்டுமே இதை எழுதும்போது என் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. நண்பர்கள் மன்னிப்பார்களாக.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை என் தாய்வீடாகவே உணர்கிறேன். முடிந்த சமயங்களில் எல்லாம் இனி அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். சௌந்தர் அவர்களிடம் சில புத்தகங்களையும் பெற வேண்டும்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
24.1.207
குறிப்பு: மனம் திளைப்பில் இருந்ததால், என் அலைபேசியில் ஒரு படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நினைவில்லை. இன்னும்கூட அந்தப் போதையிலேயே இருக்கிறேன். மொழிபெயர்க்க முடியவில்லை. கிராதத்திற்குள்ளேயே இருக்கிறேன்.