Arjuna Aswathama encounter! | Karna-Parva-Section-16 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சம்சப்தகர்களுடன் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுடன் பிற மன்னர்களுக்கும் எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) ஓ! சஞ்சயா, அர்ஜுனன் அஸ்வத்தாமனுடனும், பூமியின் பிற தலைவர்கள் பார்த்தர்களுடனும் எவ்வாறு போரிட்டனர் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாவங்களுக்கும், உடல்களுக்கும், உயிர்களுக்கும் அழிவை உண்டாக்கிய அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை நான் சொல்லும்போது கேட்பீராக.(3) எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்கு ஒப்பான சம்சப்தகப் படைக்குள் ஊடுருவி, பரந்த கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல அதை மிகவும் கலங்கடித்தான்.(4) முழு நிலவின் காந்தியைக் கொண்ட முகங்கள், அழகிய கண்கள், புருவங்கள் மற்றும் பற்களால் அலங்கரிக்கப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் தலைகளைக் கூர் முனைகளைக் கொண்ட அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} அறுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தண்டுகளில் இருந்து கொய்யப்பட்ட தாமரைகளைப் போல விரைவில் அவற்றை {தலைகளைப்} பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(5) மேலும் அந்தப் போரில் அர்ஜுனன், சுற்றிலும் நன்கு பருத்தவையும், பெரியவையும், பிரம்மாண்டமானவையும், சந்தனக்குழம்பாலும், நறுமணப் பொருட்களாலும் பூசப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடியில் கொண்டிருந்தவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஐந்து தலை பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான தன் எதிரிகளின் கரங்களைத் தனது கத்தித் தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான்.(6)
மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளையும், சாரதிகளையும், தேரோட்டிகளையும், கொடிகளையும், விற்களையும், கணைகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களையும் தனது அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} மீண்டும் மீண்டும் அறுத்தான்.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் அந்தப் போரில், பல்லாயிரக்கணக்கான கணைகளால் தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும், குதிரைவீரர்களையும் யமனின் வசிப்பிடத்திற்கு மேலும் அனுப்பி வைத்தான்.(8) சினத்தால் நிறைந்த முதன்மையான போர்வீரர்கள் பலர், காளைகளைப் போல முழங்கிக் கொண்டும், பருவகாலத்தில் பசுவுக்கான ஏக்க வெறியுடன் (கூடிய காளைகளைப் போலவே) உரத்த கூச்சல்களுடன் அர்ஜுனனை நோக்கி விரைந்து சென்றனர்.(9) அர்ஜுனன் அவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருந்தபோது, மதங்கொண்ட காளைகள் தங்கள் இனத்தில் ஒன்றைத் தங்கள் கொம்புகளால் தாக்குவதைப் போல அவர்கள் அனைவரும் தங்கள் கணைகளால் அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கினர். அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகையும் வெல்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(10)
தன் ஆயுதங்களால் தன் எதிரிகளின் ஆயுதங்களை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்த அர்ஜுனன், எண்ணற்ற கணைகளால் வேகமாகத் துளைத்து அவர்களுடைய உயிர்களை எடுத்தான்.(11) தன் எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், ஜெயன் என்று அழைக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மேகத்திரள்களை அழிக்கும் காற்றைப் போல, தன்னால் ஏற்கனவே சிதறடிக்கப்பட்ட அச்சுகள், சக்கரங்கள், கம்புகளைக் கொண்டவையும், போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் சாரதி ஏற்கனவே கொல்லப்பட்டவையும், ஆயுதங்கள் அம்பறாத்தூணிகள் இடம்பெயர்ந்தவையும், கொடிமரங்கள் நொறுங்கியவையும், சேணங்களும், கடிவாளங்களும் பிளக்கப்பட்டவையும், மரக்கூடுகளும் மற்றும் அச்சுகளும் ஏற்கனவே உடைந்தவையுமான தேர்க்கூட்டங்களை நூறு துண்டுகளாக வெட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடி, ஒன்றாகச் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கான பெரும் தேர்வீரர்களைப் பகைத்துக் கொண்டு, காண்பதற்குப் பிரமாண்டமான சாதனைகளை அடைந்தான்.(12-14)
சித்தர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் {அர்ஜுனனைப்} பாராட்டின. தெய்வீகப் பேரிகைகள் ஒலித்தன, மேலும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனின் தலைகளில் மலர்மாரி பொழிந்தன. அப்போது ஓர் அருவமான குரல்,(15) “கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், சந்திரனின் அழகையும், நெருப்பின் காந்தியையும், காற்றின் பலத்தையும், சூரியனின் பிரகாசத்தையும் எப்போதும் கொண்ட இரு வீரர்கள் ஆவர்.(16) ஒரே தேரில் இருக்கும் அவ்விரு வீரர்களும், பிரம்மனையும், ஈசானனையும் போலவே வெல்லப்பட முடியாதவர்களாவர்” என்றது.(17) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இந்த அற்புதங்களைக் கேட்டுக் கண்ட அஸ்வத்தாமன், அந்தப் போரில் பெரும் கவனத்துடனும், தீர்மானத்துடனும் இரு கிருஷ்ணர்களையும் எதிர்த்து விரைந்தான்.(18)
கணையைப் பற்றியிருந்த கரங்களுடன் கூடிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்லும் தலைகளுடன் கூடிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த அந்தப் பாண்டவனை {அர்ஜுனனைப்} புகழ்ந்து, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(19) “ஓ! வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் உயர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும்? நீ முறையெனக் கருதினால், எழுந்து விருந்தோம்பலை அளித்துவிடலாம்” என்றான் {அர்ஜுனன்}.(22)
இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன், வேள்விக்கு இந்திரனைக் கொண்டு செல்லும் வாயுவைப் போல, வெற்றியாளனை அறைகூவி அழைக்கும் விதிப்படி அழைக்கப்பட்ட பார்த்தனைத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருகில் கொண்டு சென்றான்.(23) ஒன்றிலேயே மனம் நிலைத்திருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனிடம், “ஓ! அஸ்வத்தாமரே, அமைதியாக இருந்து, ஒரு கணத்தையும் இழக்காமல், தாக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்வீராக.(24) பிறரைச் சார்ந்திருப்போர்கள், தங்கள் தலைவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இதோ வந்திருக்கிறது. பிராமணர்களுக்கிடையிலான சச்சரவுகள் நுட்பமானவையாகும். எனினும், க்ஷத்திரியர்களுக்கிடையிலான சச்சரவுகளின் விளைவுகள், வெற்றியாகவும், தோல்வியாகவும் நன்கு உணரப்படுபவையாகும் {இயல்பானவையாகும்}.(25) பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீர் வேண்டும் விருந்தோம்பலின் சிறந்த சடங்குகளை அடைவதற்கு, இந்தப் பாண்டுவின் மகனிடம் இப்போது அமைதியாகப் போரிடுவீராக” என்றான்.(26)
வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறி, கேசவனை {கிருஷ்ணனை} அறுபது கணைகளாலும், அர்ஜுனனை மூன்றாலும் துளைத்தான்.(27) அப்போது, சினத்தால் நிறைந்த அர்ஜுனன், மூன்று கணைகளால் அஸ்வத்தாமனின் வில்லை அறுத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(28) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதை நாணேற்றிய அவன் {அஸ்வத்தாமன்}, கேசவனை முன்னூறு {300} கணைகளாலும், அர்ஜுனனை ஓராயிரம் {1000} கணைகளாலும் துளைத்தான்.(29) அப்போது அந்தத் துரோணரின் மகன், அந்தப் போரில் அர்ஜுனனை மலைக்கச் செய்து, ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான, பத்து இலட்சக்கணக்கான கணைகளை மிகக் கவனமாக ஏவினான்.(30) அந்தப் பிரம்ம உச்சரிப்பாளனின் {அஸ்வத்தாமனின்}, அம்பறாத்தூணிகள், வில், வில்லின் நாண்கயிறு, விரல்கள், தோள்கள், கரங்கள், மார்பு, முகம், மூக்கு, கண்கள்,(31) காதுகள், தலை, அங்கங்கள், உடலின் {தோல்} துளைகள், மேனியின் கவசம், தேர், கொடிமரம் ஆகியவற்றில் இருந்து கணைகள் வெளிப்படத் தொடங்கின.(32) அந்த அடர்த்தியான கணைமாரியால் மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனையும் துளைத்த அந்தத் துரோணர் மகன், மகிழ்ச்சியால் நிறைந்து, மேகக்கூட்டங்களின் பரந்த திரளுக்கு ஒப்பான உரத்த முழக்கத்தைச் செய்தான்.(33)
அவனது முழக்கத்தைக் கேட்ட பாண்டுவின் மகன், மங்காப் புகழ் கொண்ட கேசவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மாதவா {கிருஷ்ணா}, ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} எனக்குச் செய்யும் பொல்லாங்கைப் பார்.(34) இந்த அடர்த்தியான கணைமாரியால் அவர் நம்மைக் கொல்லவே கருதுகிறார். எனினும், என் பயிற்சியாலும், வலிமையாலும் அவரது நோக்கத்தை இப்போது கலங்கடிக்கப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(35) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக்கிய அந்த முதன்மையான பாரதக் குலத்தவன் {அர்ஜுனன்}, அடர்த்தியான பனியை அழிக்கும் சூரியனைப் போல அவை அனைத்தையும் அழித்தான்.(36) இதன் பிறகு, அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள், கொடிமரங்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் கூடிய சம்சப்தகர்களை மீண்டும் துளைத்தான்.(37) அங்கே பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், கால், அல்லது தேர், அல்லது குதிரை, அல்லது யானை ஆகியவற்றுடன் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், அர்ஜுனன் கணைகளால் தான் மறைக்கப்பட்டிருப்பதாகக் கருதினர்.(38)
காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சிறகு படைத்தவையும், பல்வேறு வடிங்களிலானவையுமான அந்தக் கணைகள், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்போ, இரண்டு மைல் தொலைவுக்குள்ளோ இருந்த யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொன்றன.(39) ஆவலைக் குறைக்கும் மதநீரானது, குமடுகளிலும், பிற அங்கங்களிலும் ஒழுகிக் கொண்டிருந்த யானைகளின் துதிக்கைகள், காட்டில் கோடரியால் வெட்டப்பட்டுக் கீழே விழும் நெடும் மரங்களைப் போல அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டபட்டு விழுந்தன.(40) குன்றுகளைப்போன்ற அந்தப் பெரும் யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் நொறுக்கப்பட்ட மலைகளைப் போலச் சற்றுப் பிறகே தங்கள் சாரதிகளுடன் கீழே விழுந்தன.(41) மாலை வானில் கரையும் நீர்மாளிகைகளை {மேகங்களைப்} போலத் தெரிந்தவையும், பெரும் வேகமும், நல்ல பயிற்சியும் கொண்டிருந்த குதிரைகள் பூட்டப்பட்டிருந்தவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்களைத் தன் கணைகளால் நுண்ணியப் பகுதிகளாக வெட்டிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் மீது கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரியின் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் கொல்வதைத் தொடர்ந்தான்.(42,43) உண்மையில், யுக முடிவில் எழும் சூரியனுக்கு ஒப்பான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, எளிதில் வற்ற செய்ய இயலாத சம்சப்தகப் பெருங்கடலை வற்ற செய்தான்.(44)
அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இடியால் மலையைப் பிளக்கும் வஜ்ரதாரியைப்போலப் பெரும் மலைக்கு ஒப்பாக இருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனைப்} பெரும் வேகம் கொண்டவையும், சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தவையுமான கணைகளைக் கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் மீண்டும் துளைத்தான்.(45) போரிடும் விருப்பத்துடன் கூடிய அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} சினத்தால் நிறைந்து, வேகமாகச் செல்லும் தன் கணைகளால் அர்ஜுனனையும், அவனது குதிரைகளையும், சாரதிகளையும் துளைப்பதற்காக அவனை அணுகினான். எனினும் அர்ஜுனன், அஸ்வத்தாமனால் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகளை வேகமாக வெட்டினான்.(46) பெரும் கோபத்தில் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வீட்டிற்கு வந்த விருந்தினனுக்கு அனைத்தையும் அளிக்கும் ஓர் ஈகையாளனைப் போல, விரும்பத்தக்க விருந்தினனான அஸ்வத்தாமனுக்கு அம்பறாத்தூணிகளுக்கு மேல் அம்பறாத்தூணிகளாலான கணைகளை அளித்தான்.(47) பிறகு, தகாத விருந்தினர்களைக் கைவிட்டு, தகுந்தவனை நோக்கிச் செல்லும் ஒரு கொடையாளனைப் போல, சம்சப்தகர்களை விட்ட அந்தப் பாண்டுவின் மகன், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி ஒரு கொடையாளனைப் போல விரைந்தான்[1].(48)
[1] வேறொரு பதிப்பில் இந்த அத்தியாயம் 52வது பகுதியாகவும், அடுத்தது 53வது பகுதியாகவும் வருகின்றன. கங்குலியில் இந்தப் பகுதி சரியாக ஒட்டவில்லை.
ஆங்கிலத்தில் | In English |