The heroism of Karna! | Karna-Parva-Section-21 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பாண்டியன் கொல்லப்பட்டதும் என்ன நேர்ந்தது என்று சஞ்சயனை விசாரித்த திருதராஷ்டிரன்; கர்ணனின் வீரமும், அவனால் உண்டாக்கப்பட்ட பேரழிவும்; திருஷ்டத்யும்னன், உபபாண்டவர்கள், இரட்டயர் மற்றும் யுயுதானன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தது; போர்வீரர்கள் பிறருக்கிடையில் நேர்ந்த கடும்போர்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பாண்டியன் {மலயத்வஜன்} கொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான கர்ணன், அந்தப் போரில் எதிரியை முறியடித்து அழித்துக் கொண்டிருந்தபோது, அர்ஜுனன் என்ன செய்தான்?(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ! சஞ்சயா, அங்கே அத்தருணத்தில் பார்த்தன் {அர்ஜுனன்} சாதித்தது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டியன் வீழ்ந்ததும், கிருஷ்ணன் இந்த நன்மையான வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான், “நான் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காணவில்லை. பிற பாண்டவர்களும் பின்வாங்கிவிட்டனர்.(4) பார்த்தர்கள் திரும்பியிருந்தால், எதிரியின் பரந்த படையானது பிளக்கப்பட்டிருக்கும். அஸ்வத்தாமனால் ஊக்கப்படுத்தப்படும் காரியங்களை நிறைவு செய்யும் விதமாகக் கர்ணன், சிருஞ்சயர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.(5) (அந்தப் போர்வீரனால்) குதிரைகளுக்கும், தேர்வீரர்களுக்கும், யானைகளுக்கும் பேரழிவு ஏற்படுகிறது” என்றான். இப்படியே வீர வாசுதேவன் கிரீடம் தரித்தவனிடம் (அர்ஜுனனிடம்) அனைத்தையும் எடுத்துரைத்தான்[1].(6)
[1] வேறொரு பதிப்பில் கிருஷ்ணன் பேசும் இவ்வரிகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. அவை பின்வருமாறு “பாண்டியன் கொல்லப்பட்டவுடன், வாஸுதேவர் விரைவுடன் அர்ஜுனனைப் பார்த்து ஹிதமான வார்த்தையைக் கூறலானார், “நமது பாண்டியராஜன் கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் ஓடுவதையும் பார். பெரும்போர்க்களத்தில் மண்டுகின்ற நெருப்பு போன்ற கர்ணனைப் பார். மஹாவில்லாளியான இந்தப் பீமன் யுத்தத்தை நோக்கித் திரும்பிவிட்டான். த்ருஷ்டத்யும்னனை முதன்மையாகக் கொண்ட அப்படிப்பட்ட இந்தப் பாஞ்சாலர்களும் ஸ்ருஞ்சயர்களும் பாண்டவர்களுடைய படைமுகத்தை அனுசரித்து வரவில்லை. மீண்டும் வருகின்ற பார்த்தர்களாலே பெரிதான பகைபடையானது நாசஞ்செய்யப்பட்டது. இதோ கர்ணன், ஓடுகின்ற கௌரவர்களை அதிகமாகத் தடுக்கிறான். குந்தீபுத்திர! வேகத்தில் யமனுக்கொப்பானவரும், பராக்கிரமத்தில் இந்திரனையொத்தவரும், சஸ்திரங்களைத் தரித்தவர்களும் சிறந்தவருமான த்ரோணபுத்திரர் செல்லுகிறார். மஹாரதனான இந்த த்ருஷ்டத்யும்னன் யுத்தத்தில் அவரை எதிர்த்துச் செல்லுகிறான். குந்தீபுத்திர! அஸ்வத்தாமாவினால் யுத்தத்தில் எல்லா ஸ்ருஞ்சயர்களும் கொல்லப்பட்டார்கள். ரதங்களுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் பெரிதான துன்பம் உண்டுபண்ணப்பட்டுவிட்டது” என்றார் வாஸுதேவன். இவை எல்லாவற்றையும் இவ்வாறு கிரீடிக்கு உரைத்தார்” என்றிருக்கிறது.
தன் அண்ணன் {யுதிஷ்டிரன்} பேராபத்தில் இருப்பதைக் கேட்டுணர்ந்த பார்த்தன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம் விரைவாக, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முடியாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது.
விற்கள், கணைகள், முள்பதித்த தண்டாயுதங்கள், வாள்கள், வேல்கள், கோடரிகள், குறுங்கதாயுதங்கள், புசுண்டிகள், ஈட்டிகள் {சக்திகள்}, குத்துவாள்கள், போர்க்கோடரிகள்,(11) கதாயுதங்கள், சூலங்கள், பளபளப்பாக்கப்பட்ட குந்தங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, அங்குசங்கள் ஆகியவற்றுடன் கூடிய போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய படியே ஒருவர் மீதொருவர் வேகமாகப் பாய்ந்தனர்.(12) ஆகாயம், திசைகளின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள், வானம், பூமி ஆகியவற்றைக் கணைகளின் விஸ் ஒலி, வில்லின் நாண்கயிறுகளின் நாணொலி, உள்ளங்கையொலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் நிறைத்தபடியே பகைவரை நோக்கிப் பகைவர்கள் விரைந்தனர்.(13) அந்தப் பேரொலியால் மகிழ்ந்த வீரர்கள், பகைமைகளின் இறுதியை அடையும் விருப்பத்தில் வீரர்களுடனே போரிட்டனர்.(14) நாண்கயிறுகள், கூடுகள், விற்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியவற்றாலும், காலாட்படை வீரர்கள் மற்றும் வீழ்ந்த மனிதர்களின் கூச்சல்களாலும் அவ்வொலியானது பேரொலியானது.(15) கணைகளின் பயங்கரமான விஸ் ஒலி, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் பல்வேறு கூச்சல்கள் ஆகியவற்றைக் கேட்ட துருப்புகள் அச்சமடைந்து, நிறம் மங்கிக் கீழே விழுந்தன.(16) கதறுவதிலும், ஆயுதங்களை ஏவுவதிலும் ஈடுபட்ட அந்தப் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை, அதிரதனின் அந்த வீரமகன் {கர்ணன்} தன் கணைகளால் நொறுக்கினான்.(17)
பிறகு கர்ணன், தன் கணைகளைக் கொண்டு, துணிச்சல் மிக்கப் பாஞ்சால வீரர்களில் இருபது தேர்வீரர்களை, அவர்களது குதிரைகள், சாரதிகள் மற்றும் கொடிமங்களோடு யமலோகத்திற்கு அனுப்பினான்.(18) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களை வேகமாகப் பயன்படுத்துபவர்களுமான பாண்டவப் படையினர் பலர், வேகமாகச் சுழன்று அனைத்துப் பக்கங்களிலும் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(19) தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், அன்னங்களால் மறைக்கப்பட்டதுமான தடாகத்திற்குள் மூழ்கும் யானைமந்தையின் தலைமையானையைப் போல அந்தப் பகைவர்களின் படையை ஆயுதமாரியால் கர்ணன் கலங்கடித்தான்.(20) எதிரிகளுக்கு மத்தியில் ஊடுருவிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன் சிறந்த வில்லை அசைத்துத் தாக்கத் தொடங்கித் தன் கூரிய கணைகளால் அவர்களது தலைகளை வீழ்த்தினான்.(21) போர்வீரர்களின் கேடயங்களும், கவசங்களும் வெட்டுண்டு பூமியில் விழுந்தன. கர்ணனின் இரண்டாவது கணையின் தீண்டல் தேவைப்பட்ட எவருமே அங்கு இருக்கவில்லை.(22)
சாட்டையால் குதிரைகளைத் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணன், (தன் எதிரிகளின்) வில்லின் நாணால் மட்டுமே உணரக்கூடிய கூடுகளையும், கவசங்களையும், அவற்றைப் பூண்ட உடல்களையும், உயிர்களையும் நொறுக்கவல்ல தன் கணைகளால் தாக்கினான்.(23) மான்கூட்டங்களைக் கலங்கடிக்கும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணன், தன் கணைகள் செல்லும் தொலைவிற்குள் வர நேர்ந்த அந்தப் பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் வேகமாகக் கலங்கடித்தான்.(24) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கதாயுதங்களுடனும், குறுந்தண்டங்கள், உயர்த்திப் பிடிக்கப்பட்ட யமதண்டங்களைப் போலத் தெரிந்த முள்பதித்த தடிகள் ஆகியவற்றுடனும் குதித்து, ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, உரக்க முழங்கிக் கொண்டே தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்தனர்.(27,28)
பிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தாக்கப்பட்டும், தங்கள் அங்கங்களில் குருதி வழிய, அறிவையும், கண்களையும், ஆயுதங்களையும் இழந்தபடியே அவர்கள் கீழே விழுந்தனர்.(29) ஆயுதங்களால் மறைக்கப்பட்ட சிலர், பற்களால் அலங்கரிக்கப்பட்ட குருதி நிறைந்த வாய்களுடனும், மாதுளை போன்ற அழகிய முகங்களுடன் அங்கே கிடக்கையில், உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிந்தனர்.(30) போரெனும் அந்தப் பரந்த கடலில், சினத்தால் நிறைந்த வேறு சிலர், சிதைக்கப்பட்டனர், அல்லது வெட்டப்பட்டனர், அல்லது துளைக்கப்பட்டனர், அல்லது வீழ்த்தப்பட்டனர், அல்லது துண்டிக்கப்பட்டனர், அல்லது போர்க்கோடரிகளாலும், குறுங்கணைகளாலும், அங்குசங்களாலும், சூலங்களாலும், வேல்களாலும் கொல்லப்பட்டனர்.(31,32) ஒருவரையொருவர் கொன்று குருதியில் மறைந்த அவர்கள், கோடரியால் வெட்டப்பட்ட சந்தன மரங்கள், தங்கள் குளுமையான இரத்தச் சிவப்புத் திரவத்தை உதிர்த்தபடியே கீழே விழுவதைப் போல உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(33)
தேரால் அழிக்கப்பட்ட தேர்களும், யானைகளால் யானைகளும், மனிதர்களால் மனிதர்களும், குதிரைகளால் அழிக்கப்பட்ட குதிரைகளும் ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன.(34) கொடிமரங்கள், தலைகள், குடைகள், யானைகள், துதிக்கைகள், மனிதக்கரங்கள் ஆகியன கத்திமுக {க்ஷுரப்ரம்}, அல்லது அகன்ற தலை {பல்லம்}, அல்லது பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்தன.(35) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களும், யானைகளும், தேர்களுடன் பூட்டப்பட்ட குதிரைகளும் அந்தப் போரில் நொறுக்கப்பட்டன. குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலர் கீழே விழுந்தனர், துதிக்கைகள் வெட்டப்பட்ட யானைகள் பலவும், (தங்கள் உடல்களில் இருந்த) கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் மலைகள் வீழ்வதைப் போலக் கீழே விழுந்தன. காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட யானைகள் மற்றும் தேர்கள் பலவும் அழிக்கப்பட்டு, அல்லது அழிக்கப்படும் வேளையில், அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன. சுறுசுறுப்புடன் கூடிய காலாட்படைவீரர்களுடன் மோதிய குதிரைவீரர்கள், அவர்களால் {காலாட்படை வீரர்களால்} கொல்லப்பட்டனர்.(36-38) அதே போலக் குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களின் கூட்டங்களும் களத்தில் பட்டுக் கீழே விழுந்தனர். அந்தப் பயங்கரப்போரில் கொல்லப்பட்டோரின் முகங்களும், அங்கங்களும், நசுக்கப்பட்ட தாமரைகளைப் போலவும், மங்கிய மலர்மாலைகளைப் போலவும் தெரிந்தன. யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அழகிய வடிவங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுக்கடைந்த துணிகளுக்கு ஒப்பாகக் காண்பதற்கு வெறுக்கத்த நிலையை அடைந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(39-40)
--------------------------------------------------------------------------------[2] வேறொரு பதிப்பில் இப்பகுதி முழுமையுமே வேறுமாதிரியாக இருக்கிறது. கர்ணன் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டது போல வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
கர்ண பர்வம் பகுதி 21-ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |