Nakula killed the Mlecchha king! | Karna-Parva-Section-22 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : துரியோதனனின் தூண்டுதலின் பேரில் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்ற யானைப் படையினர்; யானைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; யானைகளால் கொல்லப்பட்ட படைவீரர்கள்; வங்கர்களின் மன்னனை வீழ்த்திய சாத்யகி; புண்டரனைக் கொன்ற சகாதேவன்; அங்கர்களின் தலைவனான மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்; யானைப்படையைப் பீடித்த பாண்டவர்கள்; புறமுதுகிட்டோடிய கௌரவப் படையினர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யானைகளில் சென்ற போர்வீரர்கள் பலர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, சினத்தால் நிறைந்து, திருஷ்டத்யும்னனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி அவனை எதிர்த்துச் சென்றனர்.(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்டரர்கள், மகதர்கள், தாம்ரலிப்தகர்கள், மேகலர்கள், கோசலர்கள், மத்ரர்கள், தாசர்ணர்கள், நிஷாதர்கள் ஆகியோரைச் சார்ந்தவர்களும், யானைப் போரில் திறம்பெற்ற போராளிகளில் முதன்மையானோருமான பலர், கலிங்கர்களுடன் சேர்ந்து கொண்டு, கணைகளையும், வேல்களையும் பொழியும் மேகங்களைப் போல அந்தப் போரில் பாஞ்சாலர்களை நனைத்தனர்.(2-4)
குதிங்கால்கள், கால்விரல் நுனிகள் மற்றும் அங்குசங்களைக் கொண்டு தங்கள் சாரதிகளால் தூண்டப்பட்ட அந்த (எதிரிகளை) நசுக்கும் யானைகளைப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தன் கணைகளாலும் நாராசங்களாலும் மறைத்தான்.(5) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்விலங்குகள் ஒவ்வொன்றையும், அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, பத்து, எட்டு, அல்லது ஆறு கூரிய கணைகளால் துளைத்தான்.(6) மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போலப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த யானைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும், கூரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உரத்த முழக்கங்களுடன் (அவனை மீட்பதற்காக) அவனை நோக்கிச் சென்றனர்.(7) அந்த யானைகளின் மீது தங்கள் ஆயுதங்களைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள், தங்களின் உள்ளங்கையொலிகள் மற்றும் தங்கள் வில்லின் நாணொலிகள் ஆகியவற்றினால் உண்டான இசையின் துணையுடனும், காலத்தை வெல்லும் வீரர்களால் தூண்டப்பட்டும் அவர்கள் வீரர்களின் நடனத்தை ஆடத் தொடங்கினர்.(8)
அப்போது, பெரும்பலத்தைக் கொண்டவர்களான நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சிகண்டி, சேகிதானன் ஆகிய வீரர்கள் அனைவரும், மேகங்கள் தங்கள் மழையால் மலைகளை நனைப்பதைப் போலத் தங்கள் ஆயுதங்களால் அந்த யானைகளை அனைத்துப் பக்கங்களிலும் நனைத்தனர்.(9) மிலேச்சப் போர்வீரர்களால் தூண்டப்பட்ட அந்தச் சீற்றமிகு யானைகள், தங்கள் துதிக்கைகளால் மனிதர்களையும், குதிரைகளையும், தேர்களையும் இழுத்துத் தங்கள் கால்களால் அவற்றை நசுக்கின.(10) தங்கள் தந்தங்களின் முனைகளால் அவை சிலரைத் துளைத்தன, சிலரை உயரத் தூக்கித் தரையில் வீசின; அந்தப் பெரும் விலங்குகளின் தந்தங்களில் உயரத் தூக்கப்பட்ட வேறு சிலர், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் கீழே விழுந்தனர்.(11)
அப்போது, சாத்யகி, தன் முன்னே இருந்த வங்கர்களின் மன்னனுடைய யானையின் முக்கிய அங்கங்களைச் சிதைத்துப் பெரும் வேகத்தைக் கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசத்தால்} அதைப் போர்க்களத்தில் கீழே வீழ்த்தினான்.(12) பிறகு சாத்யகி, தன்னால் தொட முடியாதவனான சாரதியை, அவன் தன் விலங்கின் முதுகில் இருந்து குதிக்கப் போகும் தருணத்தில், மற்றொரு நீண்ட கணையால் அவனது மார்பைத் துளைத்தான். சாத்வதனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {வங்கர்களின் மன்னன்} கீழே பூமியில் விழுந்தான்.(13) அதே வேளையில் சகாதேவன், நகரும் மலையெனத் தன்னை எதிர்த்து வந்த புண்டரனின் யானையைப் பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட மூன்று கணைகளால் தாக்கி,(14) கொடிமரம், சாரதி, கவசம் மற்றும் அதன் {யானையின்} உயிரையும் இழக்கச் செய்தான். இவ்வாறு அந்த யானையை வெட்டி வீழ்த்திய சகாதேவன், அங்கர்களின் தலைவனை [1] எதிர்த்துச் சென்றான்.(15) எனினும், சகாதேவனை விலகச் செய்த நகுலன், யமதண்டத்திற்கு ஒப்பான மூன்று நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அங்கர்களின் ஆட்சியாளனைப் பீடித்து, ஒரு நூறு கணைகளால் தன் எதிரியின் யானையையும் பீடித்தான்.(16) பிறகு அந்த அங்கர்களின் ஆட்சியாளன், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசம் கொண்ட எண்ணூறு {800} வேல்களை நகுலன் மீது வீசினான். அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நகுலன் வெட்டினான்.(17) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} தன் எதிராளியின் தலையைப் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றால் வெட்டி வீழ்த்தினான். இதனால் உயிரையிழந்த அந்த மிலேச்ச மன்னன், தான் செலுத்திய விலங்கிலிருந்து கீழே விழுந்தான்.(18)
[1] அங்கர்களின் ஆட்சியாளனாகத் துரியோதனனால் முடிசூடப்பட்டவன் கர்ணன். ஆனால், இங்கே குறிப்பிடப்படுபவன் கர்ணன் அல்லன். மிலேச்சர்கள் என்று அயல் நாட்டினரே குறிப்பிடப்படுவர். இங்கே குறிப்பிடப்படும் அங்கர்களின் மன்னன் 18ம் சுலோகத்தின் மிலேச்சன் என்றும் சொல்லப்படுகிறான்.
யானைகளைச் செலுத்துவதில் திறன்பெற்ற அந்த அங்கர்களின் இளவரசன் வீழ்ந்ததும், சினத்தால் நிறைந்த அங்கர்களின் யானைக்காரர்கள், நகுலனைத் துண்டுகளாக {தூள்தூளாக} நசுக்க விரும்பி, காற்றில் அசையும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சிறந்த வாய்களைக் கொண்டவையும், தங்கத்தாலான அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சுடர்மிக்க மலைகளைப் போலத் தெரிந்தவையுமானத் தங்கள் யானைகளில் வேகமாக அவனை {நகுலனை} எதிர்த்துச் சென்றனர்.(19,20) மேலும், மேகலர்கள், உத்கலர்கள், கலிங்கர்கள், நிஷாதர்கள், தாம்ரலிப்தகர்கள் பலரும், நகுலனைக் கொல்ல விரும்பி தங்கள் கணைகளையும், வேல்களையும் பொழிந்தபடியே அவனை எதிர்த்துச் சென்றனர்.(21) அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்கள், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்தப் போர்வீரர்களால் சூழப்பட்ட நகுலனை மீட்பதற்காக வேகமாக விரைந்தனர்.(22) பிறகு தங்கள் கணைகளையும், நாராசங்களையும் பொழிந்த அந்தத் தேர்வீரர்களுக்கும், ஆயிரக்கணக்கான வேல்களைப் பொழிந்த அந்த யானைக்காரர்களுக்கும் இடையே ஒரு கடும்போர் நேர்ந்தது.(23) யானைகளின் மத்தகங்கள், மற்ற அங்கங்கள், துதிக்கைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நாராசங்களால் மிகவும் துளைக்கப்பட்டுப் பிளந்து சிதைந்தன.(24)
அப்போது சகாதேவன், வேகமான அறுபத்துநான்கு கணைகளால், அந்தப் பெரும் யானைகளில் எட்டை விரைவாகக் கொன்று, அதன் சாரதிகளோடு கீழே விழச் செய்தான்.(25) தன் குலத்தை மகிழ்விப்பவனான நகுலனும், பெரும் வீரியத்துடன் தன் அற்புத வில்லை வளைத்து, நேரான கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் யானைகள் பலவற்றைக் கொன்றான்.(26) பிறகு, பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சிகண்டி ஆகியோர் அந்தப் பெரும் யானைகளைக் கணை மழையால் நனைத்தனர்.(27) பாண்டவ வீரர்களாலான அந்த மழைநிறைந்த மேகங்களின் விளைவாக, எதிரியின் யானைகளாலான அந்த மலைகள், இடியுடன் கூடிய புயலால் தாக்கி வீழ்த்தப்பட்ட உண்மையான மலைகளைப் போலவே, அவர்களது எண்ணற்ற கணைகளாலான மழைத்தாரைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டன.(28) பாண்டவத் தேர்வீரர்களான அந்தத் தலைவர்கள், அந்த உமது யானைகளை இவ்வாறு கொன்று, கரையை உடைத்துச் செல்லும் ஆற்றுக்கு ஒப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பகைவரின் படையின் மீது தங்கள் கண்களைச் செலுத்தினர்.(29) பாண்டு மகனின் அந்தப் போர்வீரர்கள், இவ்வாறு உமது படையைக் கலங்கடித்து, மீண்டும் அதைக் கலங்கடித்த பிறகு கர்ணனை எதிர்த்து விரைந்தனர். {என்றான் சஞ்சயன்}(30)
-----------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி - 22ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |