Sahadeva vanquished Dushasana! | Karna-Parva-Section-23 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சகாதேவனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனுக்கும், சகாதேவனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; மாறிமாறி ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டியது; துச்சாசனனை மயக்கமடையச் செய்த சகாதேவன்; போர்க்களத்தைவிட்டுத் துச்சாசனனைக் கொண்டு சென்ற அவனது சாரதி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தால் நிறைந்த சகாதேவன், இவ்வாறு உமது படையைச் சிதறடித்துக் கொண்டிருந்தபோது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சகோதரனை எதிர்த்த சகோதரனாகத் துச்சாசனன் அவனை {சகாதேவனை} எதிர்த்துச் சென்றான்.(1) அவ்விருவரும் பயங்கரப் போரில் ஈடுபடுவதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தங்கள் ஆடைகளை {காற்றில்} அசைத்தனர்.(2) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வலிமைமிக்க அந்த மகன் {சகாதேவன்}, வில்தரித்த உமது கோபக்கார மகனால் {துச்சாசனனால்} மூன்று கணைகளைக் கொண்டு மார்பில் தாக்கப்பட்டான்.(3) பிறகு சகாதேவன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதலில் ஒரு கணையால் உமது மகனைத் {துச்சாசனனைத்} துளைத்து, எழுபது கணைகளால் மீண்டும் அவனையும், அதன் பிறகு மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(4)
அப்போது துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் சகாதேவனின் வில்லை அறுத்து, எழுபத்து மூன்று கணைகளால்அவனது கரங்களிலும், மார்பிலும் துளைத்தான்.(5) பிறகு அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த சகாதேவன், ஒரு வாளை உருவி கொண்டு, அதைச் சுழற்றி உமது மகனின் {துச்சாசனனின்} தேரை நோக்கி வேகமாக வீசினான்.(6) கணை பொருத்தப்பட்ட துச்சாசனனுடைய வில்லின் நாண்கயிற்றை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்தில் இருந்து விழும் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(7) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்த வீரச் சகாதேவன், மரணக் கணையொன்றை துச்சாசனன் மீது ஏவினான்.(8) எனினும், அந்தக் குரு போர்வீரன், யமதண்டத்தைப் போன்ற அந்தப் பிரகாசமான கணையானது தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும்போதே, அதைத் தன் கூர்முனை வாளால் இரு துண்டுகளாக வெட்டினான்.(9) பிறகு அந்தக் கூரிய வாளை சுழற்றிய துச்சாசனன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது அதை வேகமாக வீசினான். அதே வேளையில் அந்த வீரப் போர்வீரன் {துச்சாசனன்} கணையொன்றுடன் கூடிய மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(10)
எனினும் சகாதேவன், அந்தப் போரில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த வாளைத் தன் கூரிய கணைகளால் மிக எளிதாக வெட்டிக் கீழே விழச் செய்தான்.(11) அப்போது அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் {துச்சாசனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அறுபத்துநான்கு கணைகளைச் சகாதேவன் தேர் மீது வேகமாக ஏவினான்.(12) எனினும் சகாதேவன், ஓ! மன்னா, அந்த எண்ணற்றக் கணைகள் பெரும் வேகத்தோடு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, அவை ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் வெட்டினான்.(13) உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளைத் தடுத்த சகாதேவன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவினான்.(14) அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று கணைகளால் வெட்டிய உமது மகன், மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்தபடி உரக்க முழங்கினான்.(15)
பிறகு துச்சாசன், ஓ! மன்னா, சகாதேவனைத் துளைத்து, ஒன்பது கணைகளால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் அந்தப் போரில் தாக்கினான்.(16) அப்போது சினத்தால் நிறைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாண்கயிற்றில் அந்தகனுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றைப் பொருத்தினான்.(17) பெரும் வேகத்தோடு சென்ற அந்தக் கணையானது, ஓ! மன்னா, அவனது {துச்சாசனனின்} பலமான கவசத்தையும், உடலையும் துளைத்து, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(18) அவன் {துச்சாசனன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, தானும் கூரிய கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டிருந்தாலும், வேகமாகத் தன் தேரை {போருக்கு} வெளியே கொண்டு சென்றான்.(19) இவ்வாறு அந்தக் குரு போர்வீரனை வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, துரியோதனனின் படைப்பிரிவைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் அதை நொறுக்கத் தொடங்கினான்.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, கோபத்தில் தூண்டப்பட்ட ஒரு மனிதன் எறும்புக்கூட்டத்தை நசுக்குவதைப் போலவே அந்தப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்} கௌரவப் படையை நசுக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(21)
-----------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -23ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |