karna defeats Nakula! | Karna-Parva-Section-24 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும் நகுலனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; நகுலனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்த நகுலன்; ஆச்சரியத்தில் நிறைந்த தேவர்கள்; மீண்டும் கர்ணனுடைய வில்லின் நுனியை அறுத்த நகுலன்; இருவரின் கணைகளால் நிறைந்த ஆகாயம்; இருவீரர்களாலும் கொல்லப்பட்ட இருபடையினர்; பார்வையாளர்களாகத் தொலைவில் நின்ற இரு படை வீரர்கள்; கர்ணனின் கணைகளால் போர்க்களத்தில் உண்டான நிழல்; நகுலனின் தேரையும் குதிரைகளையும் சிதறடித்த கர்ணன், நகுலனின் கழுத்தில் வில்லை மாட்டி எள்ளி நகையாடி உயிரைப் பறிக்காமல் விட்டது; தப்பி ஓடிய நகுலன் யுதிஷ்டிரனின் தேரில் தஞ்சமடைந்தது; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நகுலன் பெரும்பலத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை முறியடித்து அழித்துக் கொண்டிருந்த போது, சினத்தால் நிறைந்தவனும், விகர்த்தனன் மகனுமான கர்ணன் அவனைத் தடுத்தான்.(1) அப்போது, நகுலன் சிரித்துக் கொண்டே கர்ணனிடம், “நீண்ட காலத்திற்குப் பிறகு, தேவர்களின் கருணையால் நான் உன்னைக் காண்கிறேன்.(2) ஓ! இழிந்தவனே, நீயும் என் பார்வையில் ஒரு பொருளாய் வந்திருக்கிறாய். இந்தத் தீமைகள் அனைத்திற்கும், இந்தப் பகைமைக்கும், இந்தச் சச்சரவுக்கும் ஆணிவேரானாவர் நீயே.(3) உன் குற்றங்களாலேயே, கௌரவர்கள் ஒருவருடனொருவர் மோதி அழிகின்றனர். இன்றைய போரில் உன்னைக் கொன்று, நோக்கத்தை அடைந்தவனாக என்னைக் கருதிக் கொள்வேன். என் இதயத்தின் நோயும் விலகப்போகிறது” என்றான் {நகுலன்}.(4)
இவ்வாறு நகுலனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, அந்த இளவரசனுக்கும் {நகுலனுக்கும்}, குறிப்பாக எந்த ஒரு வில்லாளிக்கும் தகுந்த பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(5) “ஓ! வீரா {நகுலா}, என்னைத் தாக்குவாயாக. உன் ஆண்மையை நாங்கள் காண விரும்புகிறோம். ஓ! துணிச்சில்மிக்கப் போர்வீரா, போரில் சில சாதனைகளை அடைந்திருப்பதால், நீ தற்பெருமையே பேச வேண்டும்.(6) ஓ! ஐயா, வீரர்களானவர்கள், தற்பெருமையில் ஈடுபடாமல் தங்கள் சக்தியில் சிறப்பாகப் போரிடுவார்கள். உன் சிறப்பான வலிமையைப் பயன்படுத்தி என்னுடன் போரிடுவாயாக. உன் செருக்கை நான் தணிப்பேன்” என்றான் {கர்ணன்}.(7) இவ்வார்த்தைகளைச் சொன்ன சூதன் மகன் {கர்ணன்}, வேகமாக அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனைத்} தாக்கி, அம்மோதலில் எழுபத்து மூன்று {73} கணைகளால் அவனைத் துளைத்தான்.(8)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு தாக்கப்பட்ட நகுலன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளாக்கு ஒப்பான எண்பது {80} கணைகளால் பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(9) பிறகு பெரும் வில்லாளியான அந்தக் கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எண்ணற்ற கணைகளால் தன் எதிராளியின் {நகுலனின்} வில்லை அறுத்து, முப்பது கணைகளால் அவனைப் {நகுலனைப்} பீடித்தான்.(10) அவனது {நகுலனது} கவசத்தைத் துளைத்த அந்தக் கணைகள், கடும் நஞ்சுமிக்க நாகங்கள் பூமியைத் துளைத்த பிறகு நீரைக் குடிப்பதைப் போல அந்தப் போரில் அவனது {நகுலனது} குருதியைக் குடித்தன.(11) அப்போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட நகுலன், இருபது கணைகளால் கர்ணனைத் துளைத்து, மூன்றால் அவனது {கர்ணனது} சாரதியைத் துளைத்தான்.(12)
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனான நகுலன், சினத்தால் நிறைந்து, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை {க்ஷுரப்ரக்} கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான்.(13) சிரித்துக் கொண்டே இருந்த அந்தப் பாண்டுவின் வீர மகன் {நகுலன்}, தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லற்றவனுமான கர்ணனனை முன்னூறு {300} கணைகளால் தாக்கினான்.(14) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {நகுலனால்}, இவ்வாறு கர்ணன் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், (ஆகாயத்தில் இருந்த) தேவர்களுடன் கூடியிருந்தவர்களும், அங்கே இருந்தவர்களுமான தேர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், விகர்த்தனன் மகனுமான கர்ணன், ஐந்து கணைகளால் நகுலனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(16) அங்கே தைத்த அந்தக் கணைகளுடன் கூடிய மாத்ரியின் மகன் {நகுலன்}, பூமியின் மீது தன் கதிர்களால் ஒளியைப் பொழியும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(17) பிறகு நகுலன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் கர்ணனுடைய வில்லின் நுனிகளில் ஒன்றை அறுத்தான்.(18) அந்தப் போரில் மேலும் கடுமையான ஒரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் நகுலனை மூடி ஆகாயத்தையும் நிறைத்தான்.(19) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன், கர்ணனின் வில்லில் இருந்து இவ்வாறு திடீரென ஏவப்பட்ட கணைகளால் மறைக்கப்பட்டாலும், தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக அறுத்தான்.(20)
சுற்றித்திரியும் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் நிறைந்த வானம் போலவே, பெரும் எண்ணிக்கையிலான கணைகள் பரவிக் கிடந்த ஆகாயம் காட்சியளித்தது.(21) உண்மையில், வானமானது, (அந்தப் போர்வீரர்கள் இருவராலும்) ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்தால் மறைக்கப்பட்டதைப் போலவே தெரிந்தது.(22) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், தொடர் சரங்களாக வெளிப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் பறக்கும் நாரைகளின் வரிசைகளைப் போலவே அழகாகத் தெரிந்தது.(23) இவ்வாறு வானம் கணைமழையால் மறைக்கப்பட்டபோது, சூரியனே காட்சியில் இருந்து மறைந்து கொண்டான், காற்றில் பறக்கும் எந்த உயிரினத்தாலும் பூமியில் இறங்க முடியவில்லை.(24) அனைத்துப் பக்கங்களும் இவ்வாறு கணைமழையால் மறைக்கப்பட்டபோது, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், யுகத்தின் முடிவில் எழுந்த இரு சூரியர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)
கர்ணனின் வில்லில் இருந்து வெளிப்பட்ட கணைகளால் கொல்லப்பட்ட சோமகர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மிகவும் பீடிக்கப்பட்டவர்களாகப் பெரும் வலியை உணர்ந்து, தங்கள் கடைசி மூச்சைச் சுவாசிக்கத் தொடங்கினர்.(26) அதேபோல, நகுலனின் கணைகளால் தாக்கப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் வீசப்பட்ட மேகங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கலைந்து சென்றனர்.(27) அந்தப் போர் வீரர்கள் இருவராலும் தங்கள் தங்கள் வலிமைமிக்க தெய்வீகக் கணைகளால் இவ்வாறு கொல்லப்பட்ட இரண்டு படையினரும், அந்தக் கணைகள் அடையும் தொலைவுக்கு அப்பால் பின்வாங்கி, அம்மோதலைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.(28) கர்ணன் மற்றும் நகுலன் ஆகியோரின் கணைகளால் அந்த இருபடைகளும் விரட்டப்பட்டபோது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், கணை மழையால் ஒருவரையொருவர் துளைக்கத் தொடங்கினர்.(29) அந்தப் போர்களத்தில் தங்கள் தெய்வீக ஆயுதங்களை வெளிக்காட்டிய அவர்கள், ஒருவரின் அழிவை மற்றவர் ஏற்படுத்த விரும்பி வேகமாக ஒருவரையொருவர் மறைத்துக் கொண்டனர்.(30)
நகுலனால் ஏவப்பட்ட கணைகள், கங்க மற்றும் மயிலின் இறகால் அலங்கரிக்கப்பட்டு, சூதன் மகனை {கர்ணனை} மறைத்தபடியே, ஆகாயத்தில் நிலைத்து நிற்பதாகத் தெரிந்தன.(31) அதே போல அந்தப் பயங்கரப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணைகளும் பாண்டுவின் மகனை {நகுலனை} மறைத்தபடியே ஆகாயத்தில் நிலைத்து நிற்பதாகவே தெரிந்தன.(32) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையறைகளுக்குள் மறைக்கப்பட்ட அந்தப் போர் வீரர்கள் இருவரும், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலக் கண்ணுக்குப் புலப்படாதவர்களானார்கள்.(33) அப்போது கர்ணன், சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பயங்கரத் தன்மையை அடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தான்.(34)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} முற்றிலும் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, மேகங்களால் மறைக்கப்பட்டவனான நாளை உண்டாக்குபவனை {சூரியனைப்} போல எந்த வலியையும் உணராதவனாக இருந்தான்.(35) அப்போது, ஓ! ஐயா, அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே தன் கணைச்சரத்தை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினான்.(36) அந்த உயர் ஆன்மக் கர்ணனின் கணைகளால் எஞ்சிய போர்க்களமெங்கும் ஒரு பரந்த நிழல் தெரிந்தது. உண்மையில், (அவனது வில்லில் இருந்து) தொடர்ந்து வெளிப்பட்ட அந்த அற்புதக் கணைகளால் மேகங்களால் உண்டானதைப் போல அங்கே ஒரு நிழல் உண்டானது.(37) பிறகு கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம நகுலனின் வில்லை அறுத்து, தேர்த்தட்டில் இருந்து பின்னவனின் சாரதியையும் மிக எளிதாக விழச் செய்தான்.(38) அடுத்ததாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான்கு கூரிய கணைகளால் அவன் {கர்ணன்}, நகுலனின் நான்கு குதிரைகளை விரைவாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(39) மேலும் அவன் {கர்ணன்}, தனது கணைகளால் தன் எதிராளியின் சிறந்த தேரையும், அவனது கொடிமரம், அவனது தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்கள், கதாயுதம், வாள், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயம், வேறு பிற உபகரணங்கள் மற்றும் போர்ச் சாதனங்கள் ஆகியவற்றையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டினான்.(40)
அப்போது நகுலன், குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, கவசமற்றவனாக, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, முள்பதித்த கனத்தத் தடி ஒன்றைக் கையில் தரித்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாக இறங்கினான்.(41) பாண்டுவின் மகனால் {நகுலனால்} இவ்வாறு உயர்த்தப்பட்ட அந்தப் பயங்கரத் தடியும், ஓ! மன்னா, பெரும் கடினத்தைத் தாங்க வல்ல கூரிய கணைகள் பலவற்றால் வெட்டப்பட்டது.(42) தன் எதிராளி {நகுலன்} ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், நேரான கணைகள் பலவற்றால் தாக்கத் தொடங்கினான், ஆனால், அவனைப் {நகுலனை} பெரிதும் பீடித்துவிடாமல் இருப்பதிலும் கவனம் செலுத்தினான்.(43) ஆயுதங்களில் சாதித்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனால் {கர்ணனால்} இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட நகுலன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேதனையில் வேகமாகத் தப்பி ஓடினான்.(44) மீண்டும் மீண்டும் சிரித்தபடி அவனைத் {நகுலனைத்} தொடர்ந்து சென்ற அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதரே, பின்வாங்கிக் கொண்டிருந்த நகுலனின் கழுத்தில், நாண் பொருத்தப்பட்ட தன் வில்லை மாட்டினான்.(45) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கழுத்தில் அந்தப் பெரிய வில்லுடன் கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஒளிவட்டத்துடன் கூடிய ஆகாயத்து நிலவைப் போலவோ, இந்திரவில்லால் வளைக்கப்பட்ட ஒரு வெண்மேகத்தைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(46)
அப்போது அவனிடம் {நகுலனிடம்} பேசிய கர்ணன், “நீ சொன்ன வார்த்தைகள் பயனற்றதாகின. மீண்டும் மீண்டும் என்னால் தாக்கப்பட்டிருக்கும் உன்னால் மகிழ்ச்சியாக இப்போது அவற்றைச் சொல்ல முடியாதா?(47) ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, பெரும் வலிமை கொண்ட குருக்களுடன் மீண்டும் போரிடாதே. ஓ! குழந்தாய் {நகுலா}, உனக்கு இணையானவர்களுடன் போரிடுவாயாக. ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, இதற்காக வெட்கமேதும் அடையாதே.(48) ஓ! மாத்ரியின் மகனே, வீட்டுக்குச் செல், அல்லது கிருஷ்ணனும், பல்குனனும் {அர்ஜுனனும்} எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக” என்றான் {கர்ணன்}. அவனிடம் {நகுலனிடம்} இவ்வாறு பேசிய பிறகு, அவன் {கர்ணன்} அவனைக் {நகுலனை} கைவிட்டுச் சென்றான்.(49) அறநெறி அறிந்தவனான கர்ணன், ஏற்கனவே காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த நகுலனை அப்போது கொல்லவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த கர்ணன் நகுலனைச் செல்லவிட்டான்.(50)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, வில்லாளியான சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு விடப்பட்டு, பெரும் நாணத்துடன் யுதிஷ்டிரனின் தேரை நோக்கிச் சென்றான்.(51) சூதன் மகனால் எரிக்கப்பட்ட அவன் {நகுலன்}, பெரும் துயரால் எரிந்து, ஜாடிக்குள் வைக்கப்பட்ட ஒரு பாம்பைப் போலத் தொடர்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} தேரில் ஏறினான்.(52) அதே வேளையில் கர்ணன், நகுலனை வென்ற பிறகு, அழகான கொடிகளைக் கொண்டதும், நிலவைப் போன்ற வெண்மையான குதிரைகளைக் கொண்டதுமான தேரில் பாஞ்சாலர்களை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(53) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையின் தலைவன் {கர்ணன்}, பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களை நோக்கிச் செல்வதைக் கண்ட போது, பாண்டவர்களுக்கு மத்தியில் ஒரு பேராரவாரம் அங்கே உண்டானது.(54) ஓ! ஏகாதிபதி, சூரியன் நடுவானை அடைந்த அந்த வேளையில், பலமிக்கப் போர்வீரனும், சக்கரம் போன்ற சுறுசுறுப்புடன் எப்போதும் திரிந்து கொண்டிருந்தவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} ஒரு பேரழிவை உண்டாக்கினான்.(55)
பாஞ்சாலப் போர்வீரர்கள் பலர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய சக்கரங்கள் மற்றும் அச்சுகளுடன் கூடியவையும், உடைந்த கொடிமரங்கள் மற்றும் கிழிந்த கொடிகளுடன் கூடியவையும், குதிரைகளற்றவையும், சாரதியற்றவையுமானத் தங்கள் தேர்களில் போரில் இருந்து கொண்டு செல்லப்படுவதை நாங்கள் கண்டோம். மேலும் (கணைகளால் அங்கங்கள் எரிக்கப்பட்ட) யானைகள் பலவும், காட்டுத்தீயில் எரிந்து, அங்கங்கள் சுடப்பட்டுப் பரந்தக்காட்டில் தனியாகத் திரிவது போல அங்கே அனைத்துத் திசைகளிலும் திரிவது காணப்பட்டது. உயர் ஆன்மக் கர்ணனால் தாக்கப்பட்ட வேறு சில {யானைகள்}, மத்தகங்கள் பிளக்கப்பட்டு, அல்லது குருதியில் குளித்து, அல்லது துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு,(56-58) அல்லது தங்கள் கவசம் பிளந்து, அல்லது தங்கள் வால்கள் அறுபட்டு, பிரிந்து செல்லும் மேகங்களைப் போலக் கீழே விழுந்தன.(59) ராதையின் மகனுடைய கணைகள் மற்றும் வேல்களால் அச்சுறுத்தப்பட்ட வேறு சில யானைகள், சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல ராதையின் மகனையே எதிர்த்துச் சென்றன.(60) பெரும் யானைகள் சில, தங்கள் சாரலில் சிற்றாறுகள் பாயும் மலைகளைப் போலப் பல்வேறு அங்கங்களில் குருதியை உதிர்த்து ஒன்றையொன்று எதிர்த்துத் தாக்குவது காணப்பட்டது.(61)
முதன்மையான இனத்தைச் சேர்ந்த குதிரைகள், மார்புத்தகடுகளையும், வெள்ளி, வெண்கலம் மற்றும் தங்கத்தாலான தங்கள் ஆபரணங்களையும் இழந்து,(62) நெற்றியணி, கடிவாளங்கள், சாமரங்கள், சேணவிரிப்புகள் இழந்து, தங்கள் முதுகுகளில் இருந்து அம்பறாத்தூணிகள் விழுந்து, போர்க்கள ரத்தினங்களான தங்கள் வீரச் சாரதிகள் கொல்லப்பட்டு, களத்தில் அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருப்பது காணப்பட்டது.(63,64) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வேல்கள், ரிஷ்டிகள், வாள்கள் ஆகியவற்றால் துளைத்து வெட்டப்பட்டவர்களும், கவசம், தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான குதிரை வீரர்கள் பலரை, ஓ! பாரதரே, கொல்லப்பட்டோ, கொல்லப்படும் தருணத்திலோ, அச்சத்துடன் நடுங்குவதையோ, பல்வேறு அங்கங்களை இழப்பதையோ நாங்கள் கண்டோம்.(65,66) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டவையுமான தேர்களும், தங்கள் சாரதிகள் கொல்லப்பட்டு அங்கேயும் இங்கேயும் வேகமாக இழுத்துச் செல்லப்படுவது காணப்பட்டது.(67) இவற்றில் சிலவற்றில், ஓ! பாரதரே, அச்சுகளும், தூண்களும் உடைந்திருந்தன. சிலவை கொடிகள் மற்றும் கொடிமரங்களற்றவையாக இருந்தன. சிலவை தங்கள் ஏர்க்கால்களை இழந்தவையாக இருந்தன.(68)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} கணைகளால் எரிக்கப்பட்டுத் தங்கள் தேர்களை இழந்து எங்குச் சுற்றிக் கொண்டிருக்கும் தேர்வீரர்கள் பலரும் எங்களால் அங்கே காணப்பட்டனர்.(69) சிலர் ஆயுதங்களை இழந்திருந்தனர், பெரும் எண்ணிக்கையிலான சிலர் தங்கள் கைகளில் ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் உயிரற்றவர்களாகக் களத்தில் கிடப்பதும் காணப்பட்டது.(70) நட்சத்திரக்கூட்டங்கள் பதிக்கப்பட்டவையும், அழகான மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பலவண்ணங்களிலான வண்ணமயமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் பலவும் அனைத்துத் திசைகளிலும் திரிவது எங்களால் காணப்பட்டது.(71) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் வெட்டப்பட்ட தலைகள், கரங்கள், மார்புகள், பிற அங்கங்கள் சுற்றிலும் இறைந்து கிடப்பது எங்களால் காணப்பட்டது.(72) (பாண்டவப் படையின்) போர்வீரர்கள் கூரிய கணைகளால் போரிட்ட போது, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்படுகையில், கடுமையான ஒரு பெரிய பேரிடர் அவர்களை ஆட்கொண்டது.(73)
சூதன் மகனால் {கர்ணனால்} அந்தப் போரில் கொல்லப்பட்ட சிருஞ்சயர்கள், சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரையும் பூச்சிகளைப் போலவே குருடாக அவனையே {கர்ணனையே} எதிர்த்துச் சென்றனர்.(74) உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் பாண்டவப் படைப்பிரிவினரை எரிப்பதில் ஈடுபட்டிருந்த போது, அவனைத் {கர்ணனைத்} தவிர்த்த க்ஷத்திரியர்கள், சுடர்மிக்க யுகநெருப்பாகவே அவனைக் கருதினர்.(75) அந்தப் பேரழிவில், வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாஞ்சாலர்களில் உயிருடன் எஞ்சியோர் தப்பி ஓடினர். எனினும் நொறுங்கிப் போய்ப் பின்வாங்கிய அந்தப் போர்வீரர்களின் மீது பின்னால் இருந்து கணைகளை ஏவியபடியே கர்ணன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் {கர்ணன்} கவசங்களையும், கொடிமரங்களையும் இழந்த அந்தப் போராளிகளைப் பின்தொடர்ந்து சென்றான்.(76) உண்மையில் பெரும் வலிமையைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுவானை அடையும்போது அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் இருளை அகற்றுவோனைப் {சூரியனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைத் தொடர்ந்து எரித்தான்” {என்றான் சஞ்சயன்}.(77)
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 24-ல் உள்ள சுலோகங்கள் : 77
கர்ண பர்வம் பகுதி 24-ல் உள்ள சுலோகங்கள் : 77
ஆங்கிலத்தில் | In English |