Yudhishthira disarmed Duryodana! | Karna-Parva-Section-28 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை அச்சமில்லாமல் எதிர்கொண்ட துரியோதனன்; துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது கொடிமரம், வில் மற்றும் வாள் ஆகியவற்றை வீழ்த்திய யுதிஷ்டிரன்; பேராபத்தான நிலையில் துரியோதனன் தரையில் நிற்பதைக் கண்டு அங்கே விரைந்த கௌரவர்கள்; யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவர்கள்; அதன் பிறகு நடந்த போர் குறித்த வர்ணனை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன் பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவிக் கொண்டிருந்தபோது, மன்னன் துரியோதனன் அவனை {யுதிஷ்டிரனை} அச்சமற்ற வகையில் எதிர்கொண்டு வரவேற்றான்.(1) நீதிமானான அரசன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனைத்} வேகமாகத் துளைத்து, மூர்க்கத்துடன் அவனை நோக்கி விரைந்து, “நில், நிற்பாயாக” என்றான்.(2) எனினும் துரியோதனன், ஒன்பது கணைகளால் பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்து, பெருங்கோபத்தால் நிறைந்து, அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் யுதிஷ்டிரனின் சாரதியையும் தாக்கினான்.(3)
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று கணைகளைத் துரியோதனன் மீது ஏவினான்.(4) நான்கு கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, ஐந்தாவதால், துரியோதனனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(5) ஆறாவதால் (குரு) மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தைப் பூமியில் வீழ்த்தி, ஏழாவதால் அவனது வில்லையும், எட்டாவதால் அவனது வாளையும் வீழ்த்தினான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மேலும் ஐந்து கணைகளால் அந்தக் குரு ஏகாதிபதியையும் {துரியோதனனையும்} ஆழமாகப் பீடித்தான்.(7) அப்போது உமது மகன், குதிரைகள் அற்ற அந்தத் தேரில் இருந்து இறங்கி, உடனடி ஆபத்துடன் கூடியவனாகப் பூமியில் நின்றான். பேரச்சம் கொள்ளத்தக்க அந்தச் சூழ்நிலையில் அவனைக் கண்டவர்களான கர்ணன், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறர், மன்னனை {துரியோதனனை} மீட்கும் விருப்பத்தால் அவ்விடத்தை நோக்கித் திடீரென விரைந்தனர்.(8) பிறகு பாண்டுவின் மகன்கள் {பிறர்} அனைவரும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டு அம்மோதலில் பங்கேற்றதால், ஒரு கடும் போர் அங்கே நிகழ்ந்தது.(9)
அந்தப் பெரும் போரில் ஆயிரக்கணக்கான எக்காளங்கள் முழங்கின, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற குரல்களின் குழப்பான ஆரவாரம் அங்கே எழுந்தது.(10) எங்கே கௌரவர்களுடன் பாஞ்சாலர்கள் போரிட்டார்களோ, அங்கே மனிதர்களோடு மனிதர்கள் நெருங்கினர் {போரிட்டனர்}, யானைகளோடு, முதன்மையான யானைகளும் நெருங்கின.(11) தேர்வீரர்கள் தேர்வீரர்களோடு நெருங்கினர், குதிரைகள் குதிரைகளோடும் நெருங்கின. பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், பெரும் திறன் கொண்டவர்களும், இருவர் இருவராகப் போரிடுபவர்களான பல்வேறு மனிதர்களும், விலங்குகளும், அந்தக் களத்தில் அழகாகக் காட்சியளித்தன.(12) பெரும் மூர்க்கம் கொண்டவர்களான அந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் அழிவை ஏற்படுத்த விரும்பி, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் போரிட்டனர்.(13) அந்தப் போரில் அவர்கள், போர்வீரர்களின் (ஒப்பளிக்கப்பட்ட) நடைமுறைகளை நோற்று ஒருவரையொருவர் கொன்றனர். அவர்களில் எவரும் பின்னாலிருந்து {பின்புறத்தில் இருந்து} போரிடவில்ல.(14) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் அழகிய தன்மையைக் கொண்டிருந்தது. விரைவில் அது, போராளிகள் ஒருவருக்கொருவர் எந்த மதிப்பையும் காட்டாதவகையில் வெறிபிடித்த மனிதர்களின் மோதலாக மாறியது.(15)
தேர்வீரன் யானையை அணுகி, கூரிய கணைகளால் துளைத்து, நேரான கணைகளால் அதை யமனிடம் அனுப்பினான்.(16) அந்தப் போரில் பல்வேறு இடங்களில் யானைகள் குதிரைகளை அணுகி, அவற்றில் பலவற்றைக் கீழே இழுத்து (தங்கள் தந்தங்களால்) மிகக் கொடூரமாக அவற்றைக் கிழித்தன.(17) பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும் கூட, குதிரைகளில் முதன்மையான பலவற்றைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலியை உண்டாக்கி, அவற்றுடன் நெருங்கினர்.(18), அந்தக் குதிரைவீரர்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த குதிரைகளையும், அதே போலக் களத்தில் பின்புறத்திலும், பக்கங்களிலும் திரிந்து கொண்டிருந்த பெரும் யானைகள் பலவற்றையும் கொன்றனர்.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானைகள், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளை முறியடித்து, தங்கள் தந்தங்களால் அவற்றைக் கொன்றன, அல்லது பெரும்பலத்துடன் அவற்றை நசுக்கின.(20) கோபத்தால் நிறைந்த சில யானைகள் தங்கள் தந்தங்களால் குதிரைவீரர்களோடு கூடிய குதிரைகளைத் துளைத்தன. வேறு சில, அவற்றைப் பெரும்பலத்துடன் பிடித்து, பெரும்பலத்துடன் தரையில் வீசியெறிந்தன.(21) சரியான வாய்ப்புகளைப் பெற்ற காலாட்படை வீரர்களால் தாக்கப்பட்ட பல யானைகள், வலியால் பயங்கரமாகக் கூச்சலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(22)
அந்தப் பெரும்போரில், தங்கள் ஆபரணங்களை வீசியெறிந்துவிட்டு, ஓடிப்போன காலாட்படை வீரர்களில் பலர், அந்தக் களத்தில் விரைவாக {எதிரிகளால்} சூழப்பட்டனர். பெரும் யானைகளைச் செலுத்திய யானைவீரர்கள், வெற்றியின் குறியீடுகளைப் புரிந்து கொண்டு, தங்கள் விலங்குகளுடன் சுழன்று, அவற்றைக் கொண்டு அந்த அழகிய ஆபரணங்களைப் பிடிக்கச் செய்து, தங்கள் தந்தங்களால் அவர்களைத் துளைக்கச் செய்தனர்.(23,24) பெரும் மூர்க்கத்தையும், கடும் வலிமையையும் கொண்ட வேறு சில காலாட்படை வீரர்கள், இவ்விளையாட்டுகளில் ஈடுபடும் அந்த யானைவீரர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்லத் தொடங்கினர்.(25) அந்தப் பெரும்போரில் மேலும் சிலர், யானைகளின் துதிக்கைகளால் காற்றில் தூக்கி வீசப்பட்டுக் கீழே விழுகையில், பயிற்சி பெற்ற அவ்விலங்குகளின் தந்தநுனிகளால் துளைக்கப்பட்டனர்.(26) திடீரெனப் பிற யானைகளால் பிடிக்கப்பட்ட சிலர், அவற்றின் தந்தங்களால் தங்கள் உயிரை இழந்தனர். தங்கள் படைப்பிரிவுகளில் இருந்து வேறு படைப்பிரிவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிலர், ஓ! மன்னா, அந்தப் பெரும் யானைகளால் மீண்டும் மீண்டும் தரையில் உருட்டப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.(27) வேறு சிலர், விசிறிகளைப் போல உயரச் சுழற்றப்பட்டு அந்தப் போரில் கொல்லப்பட்டனர். சிலர், நின்று கொண்டிருந்த யானைகள் பிறவற்றுக்கு முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் களத்தில் திரிந்த யானைகளால் தங்கள் உடல்கள் அதிகமாகத் துளைக்கப்பட்டு, கிழிக்கப்பட்டனர்.(28)
பல யானைகள், தங்கள் குமடுகள், மத்தகங்கள் மற்றும் தங்கள் தந்தங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சூலங்களாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும், ஆழமாகக் காயம்பட்டன.(29) தங்கள் பக்கங்களில் நின்றிருந்த கடுமையான தேர்வீரர்களாலும், குதிரைவீரர்களாலும் மிகவும் பீடிக்கப்பட்ட பல யானைகள் தங்கள் உடல் பிளக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(30) அந்தப் பயங்கரப் போரில், தங்கள் குதிரைகளில் இருந்த குதிரைவீரர்கள் பலர், தங்கள் வேல்களால் காலாட்படை வீரர்களைத் தாக்கி, அவர்களைப் பூமியில் செருகினர், அல்லது பெரும்பலத்துடன் அவர்களை நசுக்கினர்.(31) மூர்க்கமான, பயங்கரமான அந்தப் போரில் சில யானைகள், ஓ ஐயா, கவசம் பூண்ட தேர்வீரர்களை அணுகி, அவர்களது வாகனங்களில் இருந்து அவர்களை உயரத்தூக்கி, பெரும்பலத்துடன் அவர்களைக் கீழே பூமியில் தூக்கி விசின.(32) துணிக்கோல் கணையால் கொல்லப்பட்ட சில யானைகள், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(33)
போராளிகளுடன் மோதிய போராளிகள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர், அல்லது ஒருவரையொருவர் முடியைப் பற்றி இழுத்துக் கீழே வீசி ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(34) வேறு சிலர் தங்கள் கரங்களை விரித்துக் கீழே பூமியில் தங்கள் எதிரிகளை வீசி, தங்கள் பாதங்களை அவர்களது மார்புகளில் வைத்துப் பெரும் சுறுசுறுப்புடன் அவர்களது தலைகளை வெட்டினர்.(35) சில போராளிகள், ஓ! மன்னா, இறந்து போன சில எதிரிகளைத் தங்கள் பாதங்களால் தாக்கினர். ஓ! மன்னா, சிலர், கீழே விழும் எதிரியின் தலையைத் தங்கள் வாளால் வெட்டினர்.(36) சிலர், உயிருடன் உள்ள எதிரியின் உடலில் தங்கள் ஆயுதத்தால் குத்தினர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கைமுட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஒருவரையொருவர் மயிர்ப்பற்றிக் கொண்டவர்கள், அல்லது வெறுங்கரங்களுடன் ஒருவரோடொருவர் மற்போரிட்டவர்கள் ஆகிய போராளிகளுக்கிடையில் அங்கே கடும்போர் நடந்தது.(37) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைப் பயன்படுத்திய போராளிகள், வேறு சிலருடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், அவர்களைக் காணாதவர்களுமான போராளிகளின் உயிர்களைப் பல சந்தர்ப்பங்களில் எடுத்தனர்.(38)
பொதுவாக நடந்த அந்தப் போரில், போராளிகள் அனைவரும் சிதைக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலையில்லா முண்டங்கள் அந்தக் களத்தில் எழுந்து நின்றன.(39) உறைந்த குருதியில் நனைந்த ஆயுதங்களும், கவசங்களும், மிக அழகிய சிவப்பால் {சிவப்பு நிறத்தால்} வண்ணமேற்றப்பட்ட துணிகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(40) பயங்கர ஆயுத மோதல்களால் குறிக்கப்பட்ட அந்தக் கடும்போரானது இவ்வாறே நடந்தது. வெறிபிடித்து முழங்கும் கங்கையின் ஓடையானது மொத்த அண்டத்தையுமே தன் ஆரவாரத்தால் நிறைப்பதைப் போல அது தெரிந்தது.(41) கணைகளால் பீடிக்கப்பட்ட போர்வீரர்களால், எதிரிகளிடமிருந்து தங்கள் நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை வேண்டிய மன்னர்கள், தாங்களும் போரிட வேண்டும் என்று நினைத்தே அங்கே போரிட்டனர்.(42) அந்தப் போர்வீரர்கள், அருகில் வந்த நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் கொன்றனர். இரு படைகளையுஞ் சேர்ந்த போராளிகளும், அவர்களைச் சீற்றத்துடன் தாக்கிய இருபடை வீரர்களாலும் தங்கள் அறிவை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}.(43)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய தேர்கள், விழுந்த யானைகள், தரையில் கிடக்கும் குதிரைகள், வீழ்த்தப்பட்ட மனிதர்கள்,(44) உறைந்த இரத்தம் மற்றும் சதைகளின் சேறு ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, குருதியோடைகளால் மறைக்கப்பட்டு, விரைவில் கடக்கப்பட முடியாததானது.(45) கர்ணன் பாஞ்சாலர்களைக் கொன்றான், அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்} திரிகர்த்தர்களைக் கொன்றான். ஓ! மன்னா, பீமசேனன், குருக்களையும், அவர்களின் படைப்பிரிவின் யானைகள் அனைத்தையும் கொன்றான்.(46) இவ்வாறே, சூரியன் நடுவானைக் கடந்த அந்த வேளையில், பெரும்புகழை வெல்லும் விருப்பத்தால் உந்தப்பட்ட குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளின் அழிவும் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(47)
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 28-ல் உள்ள சுலோகங்கள் : 47
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 28-ல் உள்ள சுலோகங்கள் : 47
ஆங்கிலத்தில் | In English |