Yudhishthira abstained from killing Duryodana! | Karna-Parva-Section-29 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர் எவ்வாறு தொடர்ந்தது என்று திருதராஷ்டிரன் கேட்க அதை விவரித்த சஞ்சயன்; தேரை இழந்திருந்த துரியோதனன், மற்றொரு தேரை அடைந்து யுதிஷ்டிரனை எதிர்த்தது; யுதிஷ்டிரனின் வில்லை வெட்டிய துரியோதனன்; துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டிய யுதிஷ்டிரன்; கதாயுதத்தை எடுத்த துரியோதனன்; ஈட்டி ஒன்றால் துரியோதனனின் மார்பைத் துளைத்து அவனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனைக் கொல்லாதவாறு யுதிஷ்டிரனைத் தடுத்த பீமசேனன்; துரியோதனனை அடைந்த கிருதவர்மன்; கிருதவர்மனை எதிர்த்து விரைந்த பீமசேனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கசப்பானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான துன்பங்கள் பலவற்றையும், என் மகன்களால் நீடிக்கும் இழப்புகளையும் உன்னிடமிருந்து நான் கேட்டேன்.(1) ஓ! சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான்? அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான்?(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது? ஓ! சஞ்சயா, உரையாற்றுவதில் திறம் கொண்டவனாக இருப்பதால் இவை யாவற்றையும் எனக்கு நீ விரிவாகச் செல்வாயாக” என்றான்.(4)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரு படைகளின் துருப்புகளும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின்படி போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வாயாக.(5,6) ஓ! சாரதியே, கவசம்பூண்டவனும், தன் தலைக்கு மேலே பிடிக்கப்பட்டிருக்கும் குடையின் கீழ் ஒளிர்ந்து கொண்டிருப்பவனுமான பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} எங்கிருக்கிறானோ, அங்கே என்னை விரைந்து கொண்டு செல்வாயாக” என்றான்.(7) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு தூண்டப்பட்ட சாரதி, தன் அரசத்தலைவனின் {துரியோதனனின்} சிறந்த தேரை யுதிஷ்டிரனின் முகத்தை நோக்கி விரைவாகத் தூண்டினான்.(8) இதனால் சினத்தால் நிறைந்தவனும், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்தவனுமான யுதிஷ்டிரனும் தன் சாரதியிடம், “துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான்.(9)
அப்போது, சகோதரர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். பெரும் சக்தி கொண்டவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரும் அந்தப் போரில் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(10) பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் மன்னன் துரியோதனன், கல்லில் கூராக்கப்பட்ட அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் அந்த அறம்சார்ந்த ஏகாதிபதியின் வில்லை இரண்டாக வெட்டினான்.(11) சினத்தால் நிறைந்த யுதிஷ்டிரனால் இந்த அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் உடைந்த வில்லை வீசிவிட்டுக் கோபத்தால் கண்கள் சிவந்தவனும், தன் படைகளுக்குத் தலைமையில் நின்றவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டினான்.(13) பிறகு, துரியோதனன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனைத் துளைத்தான். சினத்தால் நிறைந்த அவர்கள், ஒருவரை நோக்கி மற்றவர் கணைமாரி ஏவுவதைத் தொடர்ந்தனர்.(14)
ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய அவர்கள், கோபக்காரச் சிங்கங்கள் இரண்டிற்கு ஒப்பாகவே இருந்தனர். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அந்தப் போரில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(15) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தேவையான நேரத்தில் தாமதிக்கும் {சில} தவறுகளை ஒருவரிடமொருவர் எதிர்பார்த்தபடியே தொடர்ந்து {அங்கே} திரிந்து கொண்டிருந்தனர். பிறகு, முழுமையாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் காயமடைந்த அவ்விரு போர்வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ! மன்னா, அப்போது அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.(16,17) மனிதர்களின் ஆட்சியாளர்களான அவ்விருவரும், அந்தப் பயங்கரமான போரில், தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலிகளை உண்டாக்கி, தங்கள் விற்களில் உரக்க நாணொலிக்கவும் செய்தனர். அவர்கள் தங்கள் சங்குகளையும் பெரும்பலத்துடன் ஊதினார்கள்.(18) மேலும் அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாகப் பீடித்தனர். அப்போது மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, தடுக்கப்பட முடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் தாக்கினான். எனினும், உமது அரசமகன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஐந்து கூரிய கணைகளால் அவனைப் {யுதிஷ்டிரனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(19-20)
அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதுமான அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கூர்முனை கொண்ட ஒன்பது கூரிய கணைகளால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(24) தன் வலிமைமிக்க எதிரியால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, துரியோதனன் மீது குறி வைப்பதற்காகக் கணையொன்றை எடுத்தான்.(25) வலிமைமிக்க யுதிஷ்டிரன் அந்தக் கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(26) பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதை {அந்தக் கணையைத்} தன் எதிரியின் மீது ஏவினான். வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனைத் {துரியோதனனைத்} தாக்கிய அந்தக் கணை,(27) அவனை மலைக்கச் செய்த பிறகு, (அவனது உடலை ஊடுருவி கடந்து சென்று) பூமிக்குள் நுழைந்தது.
பிறகு, கோபத்தால் நிறைந்த துரியோதனன், பெரும் மூர்க்கத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றை உயர்த்திக் கொண்டே,(28) (குருக்களுக்கும், பாண்டுக்களுக்கும் இடையில் இருந்த) பகைமைகளை முடித்துக் கொள்வதற்காக, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். கதாயுதத்தை உயர்த்தியவனும், தண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பானவனுமான அவனை {துரியோதனனைக்} கண்ட(29) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கதும், காந்தியால் சுடர்விடுவதும், பெரும் மூர்க்கத்தைக் கொண்டதும், சுடர்விடும் பந்தத்தைப் போலத் தெரிந்ததுமான ஈட்டி {சக்தி ஆயுதம்} ஒன்றை உமது மகனின் {துரியோதனனின்} மீது வீசினான்.(30) தன் தேரில் நின்று கொண்டிருந்த குரு இளவரசன் {துரியோதனன்}, அந்தக் கணையால் மார்பில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, ஆழமான வலியை உணர்ந்து, கீழே விழுந்து மயக்கமடைந்தான்.(31) அப்போது தன் சபதத்தை நினைவுகூர்ந்த பீமன், யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இவன் உம்மால் கொல்லப்படக்கூடாது” என்றான். இதனால் யுதிஷ்டிரன் (தன் எதிரிக்கு இறுதி அடியைக் கொடுப்பதில் இருந்து) விலகினான்[1].(32)
[1] கங்குலியில் சுலோகம் 28 முதல் 32 வரை வரும் இந்தப் பத்தியில் உள்ள, வேறொரு பதிப்பில் முரண்படுகிறது. அது பின்வருமாறு, “தர்மராஜர் கதாயுதத்தைத் தூக்கினவனும் தண்டத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போன்றவனும் உமது குமாரனுமான துரியோதனனைக் கண்டு ஜ்வலிக்கின்றதும் மிக்க வேகமுள்ளதும் பிரகாசிக்கின்ற பெரிய எரிநக்ஷத்திரம் போன்றதும் யமதண்டத்துக்கொப்பானதும் கோரமானதும் வேறான காலராத்திரி போன்றதுமான பெரிய சக்தியாயுதத்தைப் (!) பிரயோகித்தார். ரதத்திலிருந்த அந்தத் துரியோதனன், அந்தக் கதையினால் (!) கவசத்தைப் பிளந்து நடுமார்பில் அடிக்கப்பட்டு மனத்தில் மிக்கத் துன்பமுற்று விழுந்து மூர்ச்சையடைந்தான். பிறகு, அந்தத் தர்மராஜரை நோக்கி ஆகாசவாணியானது, ’ராஜனே! இவன் உன்னால் கொல்லத்தக்கவனல்லன். பீமசேனனுடைய பிரதிஜ்ஞையைப் பரிபாலனம் செய்’ என்று சொல்லிற்று. இவ்வாறு சொல்லப்பட்டதைக் கேட்ட தர்மராஜர் திரும்பிவிட்டார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராய் அவர்களின் பதிப்பில், பீமன் தன் சபதத்தை யுதிஷ்டிரனுக்கு நினைவு படுத்துவதாகவோ, அசரீரி சொன்னதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை.
அந்த நேரத்தில், துன்பப் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த உமது அரசமகனிடம் {துரியோதனனிடம்}, கிருதவர்மன் மிக வேகமாக வந்து சேர்ந்தான்.(33) அப்போது பீமன், தங்கத்தாலும், சணலாலான கயிறுகளாலும் அலங்கரிக்கப்பட்ட கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் கிருதவர்மனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(34) அந்தப் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட உமது துருப்பு மற்றும் எதிரி துருப்புப் போராளிகளுக்கு இடையில் இவ்வாறே போர் நடந்தது[2].(35)
------------------------------------------------------------------------------------------------[2] “கல்கத்தா பதிப்பில் இந்தப் பகுதியில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கையானது மனநிறைவைத் தரவில்லை. நான் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். இதன் விளைவால், இந்த எண்ணிக்கையானது அச்சடிக்கப்பட்ட வேறு உரைகளோடு உடன்படாமல் போகலாம் என அஞ்சுகிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தக் குறிப்பு வலைத்தளங்களில் உள்ள பதிப்பில் இல்லை. அச்சடிக்கப்பட்ட இரண்டாம் பதிப்புப் புத்தகத்திலேயே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் சுலோகங்களின் எண்ணிக்கை கங்குலியில் உள்ளதைப் போல 35 ஆகவே உள்ளது.
கர்ண பர்வம் பகுதி 29-ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |