The encounter between Arjuna and Samsaptakas! | Karna-Parva-Section-27 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; பல்வேறு வீரர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்றது; குருதிச் சேற்றில் திரிந்த அர்ஜுனனின் தேர்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெண்குதிரை கொண்டோனும் (அர்ஜுனனும்) கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பஞ்சுக்குவியலை அணுகும் காற்றைப் போல உமது படையை முறியடித்து அனைத்துப் பக்கங்களிலும் அதைச் சிதறடித்தான்.(1) அவனை எதிர்த்து திரிகர்த்தர்கள், சிபிக்கள், கௌரவர்கள், சால்வர்கள், சம்சப்தகர்கள் ஆகியோரும், நாராயணர்களைக் கொண்ட படையும் விரைந்தன.(2) சத்யசேனன், சந்திரதேவன், மித்ரதேவன், சுருதஞ்சயன், சுஸ்ருதன் மகன், சித்திரசேனன் மற்றும் மித்ரவர்மன் ஆகியோரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவர்களுமான தன் தம்பிகள் மற்றும் மகன்கள் ஆகியோரால் சூழப்பட்ட திரிகர்த்தர்களின் மன்னனும் {சுசர்மனும்},(4) பெருங்கடலை நோக்கிப் பாயும் சீற்றமிகு நீரோடையைப் போல அந்தப் போரில் கணைமாரியிறைத்தபடியே திடீரென முன்னேறிச் சென்றனர்.(5)
லட்சக்கணக்கில் இருந்த அந்தப் போர்வீரர்கள், கருடனைக் கண்ட பாம்புகளைப் போலவே அர்ஜுனனை அணுகிய அழிந்து போவது தெரிந்தது.(6) போரில் கொல்லப்பட்டாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க எருப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத பூச்சிகளைப் போலவே அவர்கள் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விட்டு அகலவில்லை.(7) அம்மோதலில் சத்யசேனன், மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான், மித்ரதேவன் அறுபத்து மூன்றாலும், சந்திரதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்.(8) மித்ரவர்மன் அவனை எழுபத்து மூன்று கணைகளாலும், சுஸ்ருதன் மகன் ஏழாலும் துளைத்தனர். சத்ருஞ்சயன் இருபதாலும், சுசர்மன் ஒன்பதாலும் அவனைத் துளைத்தனர்.(9) அம்மோதலில் இவ்வாறு பலரால் துளைக்கப்பட்ட அர்ஜுனன், பதிலுக்கு அம்மன்னர்கள் அனைவரையும் துளைத்தான். உண்மையில், சுஸ்ருதன் மகனை ஏழு கணைகளாலும், சத்யசேனனை மூன்றாலும் அவன் துளைத்தான்,(10) சத்ருஞ்சயனை இருபதாலும், சந்திரதேவனை எட்டாலும், மித்ரதேவனை நூறாலும், சுருதசேனனை மூன்றாலும்,(11) மித்ரவர்மனை ஒன்பதாலும், சுசர்மனை எட்டாலும் அவன் துளைத்தான்.
பிறகு, கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு, தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்ட சுஸ்ருதன் மகனின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(12) பிறகு எந்தத் தாமதமும் செய்யாமல் எண்ணற்ற பிற கணைகளால் அவன் சந்திரதேவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரைப் பொருத்தவரைத் தீவிரமாகப் போரிட்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தடுத்தான்.(13) அப்போது சினத்தால் நிறைந்த சத்யசேனன், அந்தப் போரில் கிருஷ்ணனைக் குறி பார்த்து, உறுதிமிக்க ஒரு வேலை ஏவி, சிங்க முழக்கம் செய்தான்.(14) இரும்புவாயும், தங்கப் பிடியும் கொண்ட அந்த வேலானது, உயர் ஆன்ம மாதவனின் {கிருஷ்ணனின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்கு ஊடுருவியது.(14) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு அந்தப் பெரும்போரில் வேலால் துளைக்கப்பட்ட மாதவனின் {கிருஷ்ணனின்} கரங்களில் இருந்து சாட்டையும், கடிவாளமும் கீழே விழுந்தன.(16)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கம் துளைக்கப்பட்டதைக் கண்டவனும், பிருதையின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கோபமனைத்தையும் திரட்டிக் கொண்டு வாசுதேவனிடம்,(17) “ஓ! வலிய கரங்கொண்டவனே, ஓ! பலமிக்கவனே, என் கூர்மையான கணைகளால் சத்யசேனனை நான் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவதற்கு ஏதுவாக, அவனிடம் {சத்யசேனனிடம்} தேரைக் கொண்டு செல்வாயாக” என்றான்.(18) பிறகு அந்தச் சிறப்புமிக்கக் கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் சாட்டையையும், கடிவாளங்களையும் எடுத்துக் கொண்டு, சித்திரசேனனின் வாகனத்திற்கு முன்பு அந்தத் தேரைக் கொண்டு செல்லுமாறு அந்தக் குதிரைகளைச் செய்தான்.(19) அண்டத்தின் ஆட்சியாளன் {கிருஷ்ணன்} இவ்வாறு துளைக்கப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், பிருதையின் மகனுமான அந்தத் தனஞ்சயன், சில கூரிய கணைகளால் சத்யசேனனைத் தடுத்து,(20) காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டவனும், படையின் தலைமையில் நின்றவனுமான அந்த மன்னனுடைய பெரிய தலையைப் பெரும் கூர்மையைக் கொண்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) இவ்வாறு சத்யசேனனின் தலையை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கூரிய கணைகளால் சித்திரவர்மனையும் அகற்றி {கொன்று}, கன்றின் பல்லலைப் போன்ற ஒரு கூரிய கணையால் {வத்சதந்தத்தால்} பின்னவனின் சாரதியையும் அகற்றினான்.(22)
சினத்தால் நிறைந்த அந்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால், சம்சப்தகர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தினான்.(23) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட கத்தி தலை கணையொன்றால் சிறப்புமிக்க மித்ரசேனனின் தலையை வெட்டினான். மேலும் சினத்தால் நிறைந்த அவன் சுசர்மனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(24) அப்போது கோபத்தால் நிறைந்தவர்களான சம்சப்தகர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு கணைமாரியால் அவனைப் பீடிக்கத் தொடங்கி, திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தங்கள் கூச்சல்களால் நிறைத்தனர்.(25) இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரகணக்கான கணைகள் தொடர்ச்சியாக வெளிப்படத் தொடங்கின.(26)
அப்போது, ஓ! மன்னா, கொடிமங்கள், அம்பறாத்தூணிகள், நுகத்தடிகள், அச்சுக்கட்டைகள், சக்கரங்கள், பூட்டாங்கயிறுகள், கூபரங்கள், தேர்த்தட்டுகள், கூபரங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் கொண்டவையும், குதிரைகள், சூலங்கள், கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள், ஈட்டிகள், வேல்கள், கோடரிகள், சக்கரங்களுடன் கூடிய சதாக்னிகள், கணைகள், தொடைகள், கழுத்தாரங்கள், அங்கதங்கள், கேயூரங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாலைகள், கவசங்கள், ஓ! பாரதரே, குடைகள், விசிறிகள், கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான தேர்கள் விழுகையில் உரத்த ஆரவாரம் கேட்டது.(27-31) காது குண்டலங்கள் மற்றும் அழகிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முழு நிலவுக்கு ஒப்பானவையுமான தலைகள் ஒவ்வொன்றும், ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலக் களத்தில் கிடந்தன.(32) அழகிய மலர்மாலைகள், சிறந்த ஆடைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனக்குழம்பு பூசப்பட்டவையுமாகக் கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் போர்வீரர்களின் உடல்கள் பலவாக இருந்தன.(33)
பயங்கரமாக இருந்த அந்தப் போர்க்களமானது, நீராவி வடிவங்கள் நிறைந்து மேகங்களுடன் கூடிய ஆகாயத்தைப் போலத் தெரிந்தது. கொல்லப்பட்ட பெரும் வலிமைமிக்க இளவரசர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுடனும்,(34) வீழ்ந்திருந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடனும் கூடிய பூமியானது, மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அந்தப் போரில் கடக்க முடியாததானது.(35) தொடர்ச்சியாகத் தன் எதிரிகளைக் கொல்வதிலும், யானைகள் மற்றும் குதிரைகளைத் தன் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனின் தேர்ச் சக்கரங்களுக்கு அங்கே பாதையேதும் இல்லை.(36) ஓ! ஐயா, அந்தப் போரில் குருதிச் சேற்றில் திரிவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவனது {அர்ஜுனனின்} தேர்ச்சக்கரங்கள் நிற்பது போலத் தெரிந்தது.(37) எனினும், மனம், அல்லது காற்றின் வேகத்துடன் கூடிய அவனது {அர்ஜுனனது} குதிரைகள், நகர மறுத்த அந்தச் சக்கரங்களைப் பெரும் முயற்சியுடனும், உழைப்புடனும் இழுத்தன.(38) இவ்வாறு வில்தரித்த அந்தப் பாண்டு மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தப் படையானது, எதிரியை எதிர்த்து எஞ்சிநிற்போன் எவனும் இல்லாமல் கிட்டத்தட்ட மொத்தமாகவே தப்பி ஓடியது.(39) அந்தப் போரில் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வென்றதும், பிருதையின் மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, புகையற்றச் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(40)
-----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 27-ல் உள்ள சுலோகங்கள் : 40
-----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 27-ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |