The prowess of Arjuna and Satyaki! | Karna-Parva-Section-30 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நேர்ந்த போர்; சாத்யகியால் அதிகம் பீடிக்கப்படும் கர்ணனைக் கண்டு சாத்யகியை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய சாத்யகி; அர்ஜுனனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன் மரணக் கணையொன்றைத் துரியோதனன் மீது ஏவியது; அர்ஜுனனின் கணையை வெட்டிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைத் திக்குமுக்காடச் செய்த அர்ஜுனன் அடுத்ததாகக் கர்ணனை எதிர்த்துச் சென்றது; சாத்யகியை விட்டுவிட்டு அர்ஜுனனோடு மோதிய கர்ணன்; சூரியன் மறைந்தது; பதினாறாம் நாள் முடிவு...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வீழ்த்தக் கடினமானவர்களான உமது போர்வீரர்கள், கர்ணனை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, திரும்பிவந்து, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான ஒரு போரை (எதிரியுடன்) போரிட்டனர்.(1) யானைகள், மனிதர்கள், தேர்கள், குதிரைகள், சங்குகள் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட பேராரவாரத்தால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான யானைவீரர்கள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர், கோபத்தால் நிறைந்து, எதிரியை எதிர்த்துச் சென்று, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களின் வீச்சுக்களால் அவர்களைக் கொன்றனர்.(2) அந்தப் பயங்கரப் போரில் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும், கூரிய போர்க்கோடரிகள், வாள்கள், கோடரிகள், பல்வேறு வகைகளிலான கணைகள் மற்றும் தங்கள் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு துணிச்சல்மிக்கப் போர்வீரர்களால் கொல்லப்பட்டனர்.(3)
வெண்பற்கள், அழகிய முகங்கள், அழகிய கண்கள், சிறந்த மூக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய கிரீடங்களாலும், காதுகுண்டலங்களாலும், அருளப்பட்டவையும், தாமரை, அல்லது சூரியன், அல்லது சந்திரன் ஆகியவற்றுக்கு ஒப்பானவையுமான மனிதத்தலைகள் விரவிக்கிடந்ததால் பூமியானது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(4) ஆயிரக்கணக்கான யானைகளும், மனிதர்களும், குதிரைகளும், நூற்றுக்கணக்கான பரிகங்கள், குறுந்தடிகள் {உலக்கைகள்}, ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, அங்குசங்கள், புசுண்டிகள் மற்றும் கதாயுதங்களால் கொல்லப்பட்டன. {அவற்றால் சிந்தப்பட்ட} சிந்திய குருதி அந்தக் களத்தில் ஆற்றைப் போன்ற ஓர் ஓடையை உண்டாக்கியது.(5) அந்தத் தேர்வீரர்களும், மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் எதிரியால் கொல்லப்பட்டு, பயங்கரத் தன்மைகளுடனும், காயங்களின் பிளவுகளுடனும் கிடந்ததன் விளைவால், அண்ட அழிவின் போது மரணத்தின் மகனுடைய {யமனின்} ஆட்சிப்பகுதியைப் போல அந்தப் போர்க்களம் தெரிந்தது.(6)
அப்போது, ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளும், தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பாகத் தெரியும் குருக்களில் காளைகளான உமது மகன்கள் அனைவரும், அளவில்லா வலிமையைக் கொண்ட போர்வீரர்களைக் கொண்ட ஒரு படையைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிநி குலத்துக் காளையான சாத்யகியை எதிர்த்துச் சென்றனர்.(7) அதன் பேரில் அந்தப் படையானது, மனிதர்களில் முதன்மையானோரும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் நிரம்பிய அந்தப் படையானது ஆழ்கடலின் உரத்த ஆரவாரத்தை உண்டாக்கி, அசுரர்களின் படைக்கோ, தேவர்களின் படைக்கோ ஒப்பானதாக அழகில் கடுமையாக ஒளிர்ந்தது.(8)
அப்போது தேவர்களின் தலைவனுக்கு ஒப்பான ஆற்றலையுடையவனும், இந்திரனின் தம்பியைப் போன்றவனுமான அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, சூரியக் கதிர்களுக்கு ஒப்பான காந்தியையுடைய கணைகளால் அந்தச் சிநி குலத்தில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(9) அந்தப் போரில், அந்தச் சிநி குலத்தின் காளையும் {சாத்யகியும்}, தன் தேர், குதிரைகள் மற்றும் சாரதியாலும், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், பல்வேறு வகைகளிலானவையுமான பயங்கரக் கணைகளாலும் அந்த மனிதர்களில் முதன்மையானவனை {கர்ணனை} மறைத்தான்.(10) பிறகு, தேர்வீரர்களில் காளையான அந்த வசுசேனன் {கர்ணன்}, அந்தச் சிநி குலத்தின் முதன்மையான வீரனின் {சாத்யகியின்} கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், உமது படையைச் சார்ந்தவர்களுமான அதிரதர்கள் பலர், யானைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் துணையுடன் அவனை {கர்ணனை} வேகமாக அணுகினர்.(11) எனினும், பெருங்கடலைப் போன்று பரந்திருந்த அந்தப் படையானது, எதிரிகளும், பெரும் வேகம் கொண்டவர்களும், துருபதன் மகன்களின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவப் போர்வீரர்களால் தாக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடியது. அந்த நேரத்தில், மனிதர்களுக்கும், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்கு ஒரு பேரழிவு நேர்ந்தது.(12)
அப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களான அந்த அர்ஜுனனும், கேசவனும் {கிருஷ்ணனும்}, தினப்படியான தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி, தலைவன் பவனை முறையாக வழிபட்டு, உமது துருப்புகளை எதிர்த்துத் தங்கள் எதிரிகளான அவர்களைக் கொல்லும் தீர்மானத்துடன் வேகமாக விரைந்தனர்.(13) அவர்களது எதிரிகள் (குருக்கள்), மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் அழகாக அசையும் கொடிகளைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரின் மீது உற்சாகமற்ற வகையில் தங்கள் கண்களைச் செலுத்தினர்.(14) அப்போது காண்டீவத்தை வளைத்த அர்ஜுனன், தன் தேரில் நர்த்தனம் புரிந்தபடியே, சிறு வெற்றிடத்தையும் விட்டுவிடாமல் ஆகாயத்தையும், முக்கிய மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் கணைகளின் மாரியால் நிறைத்தான்.(15) மேகங்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்கள், கொடிமரங்கள் மற்றும் சாதரிகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டவையும், தேவர்களின் வாகனங்களைப் போலத் தெரிந்தவையுமான தேர்கள் பலவற்றைத் தன் கணைகளால் அழித்தான்.(16) வெற்றிக் கொடிகள் மற்றும் ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பலவற்றையும், அவற்றை வழிநடத்திய மனிதர்களையும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் பலரையும், காலாட்படைவீரர்களில் பலரையும் கூட அர்ஜுனன் தன் கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(17)
அப்போது துரியதோனன், கோபத்துடன் இருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனும், உண்மையில் யமனுக்கு ஒப்பானவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து தனியனாகவே சென்று, அவனைத் {அர்ஜுனனைத்} தன் நேரான கணைகளால் தாக்கினான்.(18) தன் எதிராளியின் {துரியோதனன்} வில், சாரதி, குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றை ஏழு கணைகளால் வெட்டிய அர்ஜுனன், அடுத்ததாக ஒரு கணையால் அவனது குடையையும் அறுத்தான்.(19) அப்போது ஒரு வாய்ப்பை அடைந்த அவன் {அர்ஜுனன்}, தாக்கப்படும் மனிதனின் உயிரை எடுக்க வல்ல சிறந்த கணையொன்றைத் துரியோதனனின் மீது ஏவினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அக்கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(20) பிறகு துரோணர் மகனின் வில்லை வெட்டி, தன் கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, கிருபரின் உறுதிமிக்க வில்லையும் அறுத்தான்.(21) பிறகு ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, அவனது {கிருதவர்மனின்} கொடிமரத்தையும், குதிரைகளையும் வீழ்த்தினான். அடுத்து துச்சாசனனின் வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றான்.(22)
இதனால் சாத்யகியை விட்டகன்ற கர்ணன், விரைவாக மூன்று கணைகளால் அர்ஜுனனையும், இருபதால் கிருஷ்ணனையும் துளைத்து, மீண்டும் மீண்டும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(23) கோபத்தால் தூண்டப்பட்ட இந்திரனைப் போலவே அந்தப் போரில் தன் எதிரிகளைக் கொல்லும்போது, கர்ணனால் ஏவப்பட்ட கணைகள் பலவாக இருந்தாலும் அவன் {அர்ஜுனன்} களைப்பெதையும் உணரவில்லை.(24) அதேவேளையில், முன்னே வந்த சாத்யகி, தொண்ணூற்று ஒன்பது {99} கடுங்கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் ஒரு நாறாலும் துளைத்தான்.(25) அப்போது பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் அனைவரும் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினர். யுதாமன்யு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரப்ரகர்கள்,(26) உத்தமௌஜஸ், யுயுத்சு, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, திருஷ்டத்யும்னன், சேதிகள், காருஷர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் கைகேயர்களின் படைப்பிரிவினர்,(27) வலிமைமிக்கச் சேகிதானன், சிறந்த நோன்புகளைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இவர்கள் அனைவரும், தேர்கள், குதிரைகள், யானைகள், கடும் ஆற்றலைக் கொண்ட காலாட்படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன்,(28) அந்தப் போரில் கர்ணனை அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, அவனுக்கு அழிவையுண்டாக்கத் தீர்மானித்துக் கடுஞ்சொற்களால் அவனிடம் {கர்ணனிடம்} பேசி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை அவன் மீது பொழிந்தனர்.(29)
தன் கூரிய கணைகளால் அவ்வாயுதமாரியை அறுத்த கர்ணன், காற்றானது தன் வழியில் நிற்கும் மரங்களை முறித்துத் தள்ளுவதைப் போல, தன் ஆயுதங்களின் சக்தியால் தன் எதிராளிகளை அகற்றினான்.(30) கோபத்தால் நிறைந்த கர்ணன், தேர்வீரர்கள், பாகர்களுடன் கூடிய யானைகள், குதிரை வீரர்களுடன் கூடிய குதிரைகள் மற்றும் பெரும் கூட்டங்களான காலாட்படைவீரர்களைக் கொல்பவனாகக் காணப்பட்டான்.(31) கர்ணனின் ஆயுதங்களுடைய சக்தியால், அந்தப் பாண்டவர்களின் மொத்த படையே கிடத்தட்ட கொல்லப்பட்டு, ஆயுதங்களை இழந்தவர்களாக, அங்கங்கள் கிழிந்து சிதைந்தவர்களாக, களத்தில் இருந்து ஓய்ந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டனர்.(32) அப்போது சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனன், தன் ஆயுதங்களால் கர்ணனின் ஆயுதங்களைக் கலங்கடித்து, கணைகளின் அடர்த்தியான மழையால், ஆகாயம், பூமி மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(33)
அர்ஜுனனின் கணைகள், கனமான தண்டங்களைப் போலவும், பரிகங்களைப் போலவும் பாய்ந்தன. அவற்றில் சில சதக்னிகளைப் போலப் பாய்ந்தன, சில சீற்றமிக்க இடியைப் போலப் பாய்ந்தன.(34) இவற்றால் கொல்லப்பட்டவையும், காலாட்படை, குதிரை, தேர்கள் மற்றும் யானைகளைக் கொண்டவையுமான அந்தக் கௌரவப்படையானது, அதன் கண்களை அடைத்துக் கொண்டு, உரத்தத் துன்ப ஒலங்களை வெளியிட்டபடி, உணர்வற்றவர்களாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(35) அந்தச் சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்ட குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளும் பலவாகும். மீண்டும் கணைகளால் தாக்கப்பட்டு, ஆழமாகப் பீடிக்கப்பட்டு பலர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(36)
வெற்றியடையும் விருப்பத்தால் உமது போர்வீரர்கள், இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்த மலையை அடைந்து அதனுள் நுழைந்தான்.(37) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருளாலும், குறிப்பாகப் புழுதியாலும், சாதகமாகவோ, பாதகமாகவோ எங்களால் எதையும் காண முடியவில்லை.(38) ஓ! பாரதரே, இரவுப்போருக்கு அஞ்சிய (கௌரவர்களில்) வலிமைமிக்க வில்லாளிகள் தங்கள் போராளிகள் அனைவருடன் களத்தை விட்டுச் சென்றனர்.(39) ஓ! மன்னா, அந்த நாளின் முடிவில் கௌரவர்கள் சென்றதும், வெற்றி அடைந்ததால் மகிழ்ந்த பார்த்தர்களும், தங்கள் முகாம்களுக்குச் சென்று,(40) தங்கள் இசைக்கருவிகளால் பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கித் தங்கள் எதிரிகளை ஏளனம் செய்து, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பாராட்டினர்.(41) அந்த வீரர்கள் இவ்வாறு படையை விலக்கிக் கொண்டதும், துருப்புகள் அனைத்தும், மன்னர்கள் அனைவரும் பாண்டவர்களை வாழ்த்தினார்கள்.(42) {படைகள்} விலகிய பிறகு, பாவமற்ற மனிதர்களான பாண்டவர்கள், பெருமகிழ்ச்சியடைந்து, தங்கள் பாசறைகளுக்குச் சென்று அங்கே இரவில் ஓய்ந்திருந்தனர்.(43) பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியன, ருத்திரனின் விளையாட்டுக்களத்திற்கு ஒப்பான அந்தப் பயங்கரப் போர்க்களத்திற்கு வந்தன” {என்றான் சஞ்சயன்}.(44)
----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 30-ல் உள்ள சுலோகங்கள் : 44
கர்ண பர்வம் பகுதி 30-ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |