The weakness listed by Karna! | Karna-Parva-Section-31 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சிறப்பைச் சொன்ன திருதராஷ்டிரன்; போர்க்களத்தில் நேர்ந்தவற்றைச் சொல்லத் தொடங்கிய சஞ்சயன்; அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு எதிரான தன் பலங்களையும், பலவீனங்களையும் சொன்ன கர்ணன்; விஜயம் என்ற கர்ணனுடைய வில்லின் சிறப்பு; பலவீனங்களை நேராக்கி மேம்பட்டவனாகத் திகழத் துரியோதனனிடம் சில ஏற்பாடுகளைச் செய்ய சொன்ன கர்ணன்; ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால் சாதிப்பேன் என்ற கர்ணன்; வாக்களித்த துரியோதனன் சல்லியனிடம் பேசியது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் உங்கள் அனைவரையும் தன் விருப்பப்படி கொன்றான் என்றே தெரிகிறது. உண்மையில் யமனே அர்ஜுனனுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்தாலும், அவனும் போரில் அவனிடம் தப்ப முடியாது.(1) தனியொருவனாகவே பார்த்தன் {அர்ஜுனன்} பத்திரையை {சுபத்திரையை} அபகரித்தான், தனியொருவனாகவே அவன் அக்னியையும் மனநிறைவு கொள்ளச் செய்தான். தனியொருவனாகவே அவன் மொத்த உலகையும் அடிபணியச் செய்து, மன்னர்கள் அனைவரையும் கப்பம் கட்டச் செய்தான்.(2) தன் தெய்வீக வில்லுடன் தனியொருவனாகவே அவன் நிவாதகவசர்களைக் கொன்றான். தனியொருவனாகவே அவன் {அர்ஜுனன்}, வேட வடிவத்தில் தன் முன் நின்ற மகாதேவனுடன் {சிவனுடன்} போரிட்டான்.(3) தனியொருவனாகவே அவன் பாரதர்களைக் காத்தான், மேலும் தனியொருவனாகவே அவன் பவனையும் {சிவனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தான். கடும் ஆற்றலைக் கொண்ட பூமியின் மன்னர்கள் அனைவரும் அவனால் {அர்ஜுனனால்} தனியொருவனாகவே வெல்லப்பட்டனர்.(4) குருக்களை {கௌரவர்களைப்} பழிக்க முடியாது. மறுபுறம் அவர்கள் (இத்தகு போர்வீரனொருவனுடன் போர் செய்ததால்) பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} என்ன செய்தனர் என இப்போது எனக்குச் சொல்வாயாக. ஓ! சூதா {சஞ்சயா}, அதன் பிறகு துரியோதனன் என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தாக்கப்பட்டு, காயம்பட்டு, தங்கள் வாகனங்களில் இருந்து வீழ்த்தப்பட்டு, கவசத்தை இழந்து, ஆயுதங்களை இழந்து, தங்கள் விலங்குகள் கொல்லப்பட்டு, அவலக் குரல்களுடனும், எரியும் துயரத்துடனும், தங்கள் எதிரிகளால் வெல்லப்பட்டவர்களும், இறுமாப்புடன் கூடியவர்களுமான கௌரவர்கள், தங்கள் பாசறைகளுக்குள் நுழைந்து, மீண்டும் ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தனர். அவர்கள், விஷத்தையும், பற்களையும் இழந்து மிதிபட்ட பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(6,7) கோபக்காரப் பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், தன் கரங்களைப் பிசைந்தபடி உமது மகனைப் {துரியோதனனைப்} பார்த்துக் கொண்டே அவர்களிடம்,(8) “அர்ஜுனன் கவனம்நிறைந்தவனாகவும், உறுதிமிக்கவனாகவும், திறனைக் கொண்டவனாகவும், நுண்ணறிவு கொண்டவனாகவும் எப்போதும் இருக்கிறான். மேலும், நேரம் வரும்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} (என்ன செய்ய வேண்டும் என்பதில்) அவனை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறான்.(9) இன்று, அந்தத் திடீர் ஆயுதமழையைக் கொண்டு, அவனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். எனினும் நாளை, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} நோக்கங்கள் அனைத்தையும் நான் மழுங்கடிப்பேன்” என்றான் {கர்ணன்}.(10)
கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட துரியோதனன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஓய்வெடுக்க அனுமதி அளித்தான். மன்னனால் {துரியோதனனால்} அனுமதிக்கப்பட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.(11) அவ்விரவை மகிழ்ச்சியாகக் கழித்த அவர்கள், (அடுத்த நாள்) போருக்கு உற்சாகமாகச் சென்றனர்.(12) அப்போது அவர்கள், பிருஹஸ்பதி மற்றும் உசனஸ் {சக்கிராச்சாரியார்} ஆகியோரின் இசைவுக்கேற்றபடி, குரு {கௌரவக்} குலத்தில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால், பெருங்கவனத்துடன் அமைக்கப்பட்ட, வெல்லப்பட முடியாத வியூகம் ஒன்றைக் கண்டனர்.(13)
அப்போது எதிரிகளைக் கொல்பவனான துரியோதனன், எதிரிகளுக்கு எதிர்வினையாற்றுபவனும், காளைபோன்ற {காளையின் திமிலைப் போன்ற} கழுத்தைக் கொண்ட போர்வீரனும், போரில் புரந்தரனுக்கும் {இந்திரனுக்கும்}, வலிமையில் மருத்துக்களுக்கும், சக்தியில் கார்த்தவீரியனுக்கும் இணையான வீரக் கர்ணனை மனத்தில் நினைத்தான். உண்மையில், மன்னனின் {துரியோதனனின்} இதயம் கர்ணனை நோக்கியே திரும்பியது.(14,15) பேராபத்தான நிலையில் நண்பனை நாடும் ஒருவனின் இதயத்தைப் போல, துருப்புகள் அனைத்தின் இதயங்களும் வலிமைமிக்க வில்லாளியும், வீரனுமான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} நோக்கித் திரும்பின {நாடின}” {என்றான் சஞ்சயன்}.(16)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை உங்கள் அனைவரின் இதயங்களும் நாடிய போது, அடுத்ததாகத் துரியோதனன் என்ன செய்தான்?(17) குளிரால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் பார்வையைச் சூரியனை நோக்கித் திருப்புவதைப் போல என் துருப்பினரும் தங்கள் கண்களை ராதையின் மகன் {கர்ணன்} மேல் செலுத்தினரா? துருப்புகளைத் திருப்பி அழைத்த பிறகு, போர் மீண்டும் தொடங்கியதும்,(18) ஓ! சஞ்சயா, விகர்த்தனன் மகனான கர்ணன் எவ்வாறு போரிட்டான்? அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} பாண்டவர்கள் அனைவரும் எவ்வாறு போரிட்டனர்?(19) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், தனியொருவனாகவே பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் கொல்வான். கர்ணனுடைய கரங்களின் வலிமையானது போரில் சக்ரன் {இந்திரன்}, அல்லது விஷ்ணுவுக்கு இணையானதாகும்.(20) அவனது ஆயுதங்கள் மூர்க்கமானவை, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் ஆற்றலும் மூர்க்கமானதே. கர்ணனை நம்பியே மன்னன் துரியோதனன் தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான்.(21) துரியோதனன், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} ஆழமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டும், பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களான பாண்டுவின் மகன்களைப் பார்த்தும், வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் என்ன செய்தான்?(22)
ஐயோ, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையாலேயே பார்த்தர்களையும், அவர்களுடன் கூடிய அவர்களது மகன்களையும், கேசவனையும் {கிருஷ்ணனையும்} வெல்ல முடியும் என மூடனான துரியோதனன் நம்புகிறான்.(23) ஐயோ, கர்ணனால் தன் பலத்தைக் கொண்டு போரில் பாண்டுவின் மகன்களை வெல்ல முடியாது என்பதே பெருந்துயரத்தைத் தருகிறது. விதியே உயர்வானது என்பதில் ஐயமில்லை.(24) ஐயோ, அந்தச் சூதாட்டத்தின் பயங்கர முடிவு இதோ வந்திருக்கிறது. ஐயோ, ஓ! சஞ்சயா, துரியோதனனின் செயல்களால் உண்டானவையும், பெரும் எண்ணிக்கையிலானவையும், பயங்கரக் கணைகளைப் போன்றவையுமான இதயத்தைப் பிளக்கும் கவலைகளை நான் இப்போது {என் இதயத்தில்} சுமக்கிறேன்.(25) ஓ! ஐயா {சஞ்சயா}, அப்போதெல்லாம், சுபலனின் மகனே {சகுனியே}, கூர்மதிகொண்டோனாகக் கருதப்பட்டான். கர்ணனும், மன்னன் துரியோதனனிடம் மிக அதிகமான பற்றுடன் எப்போதும் இருக்கிறான்.(26) ஐயோ, வழக்கு இப்படியிருக்கையில், ஓ! சஞ்சயா, தோல்விகளையும், எனது மகன்களின் மரணங்களையும் நான் ஏன் அடிக்கடிக் கேட்கிறேன்.(27) போரில் பாண்டவர்களைத் தடுக்கவல்லவர்கள் எவரும் இல்லையே. ஆதரவற்ற பெண்களுக்கு மத்தியில் நுழையும் மனிதனைப் போல, அவர்கள் என் படைக்குள் ஊடுருவுகிறார்கள். உண்மையில், விதியே உயர்வானது” என்றான் {திருதராஷ்டிரன்}.(28)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகடையாட்டம் மற்றும் பிறவற்றைப் போன்ற உமது நீதிமிக்கச் செயல்கள் அனைத்தையும் இப்போது நினைப்பீராக. எந்தச் செயல்பாடுகள் கடந்தனவோ அவையே மனிதனின் சிந்தனை நோக்கங்களாக அமைகின்றன.(29) எனினும், ஒருவன் கடந்த போன செயல்களைச் சிந்திக்கக்கூடாது. அத்தகு சிந்தனையால் ஒருவன் அழிந்து போகக்கூடும். ஞானம் கொண்டவராக இருப்பினும், உமது செயல்களின் நன்மை, அல்லது தீமைகளை நீர் சிந்தித்துப் பார்க்காததால், (நீர் எதிர்பார்த்த) அவ்விளைவு பலனளிக்கும் இடத்தில் இருந்து இப்போது நீங்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுடன் போரிடுவதற்கு எதிராகப் பல முறை உமக்கு ஆலோசனை வழங்கப்பட்டது[1].(30,31) எனினும், ஓ! ஏகாதிபதி, மடமையினால் அவ்வாலோசனைகளை நீர் ஏற்கவில்லை. பாண்டுவின் மகன்களுக்கு எதிராகப் பயங்கர இயல்பைக் கொண்ட பாவம் நிறைந்த பல்வேறு செயல்கள் உம்மால் செய்யப்பட்டன.(32) அச்செயல்களுக்காகவே இப்போது இந்த மன்னர்களின் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்திருக்கின்றன. எனினும் அவையாவும் இப்போது கடந்தவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வருந்தாதீர்.(33) மங்கா புகழ் கொண்டவரே, நேர்ந்துவிட்ட பயங்கரப் பேரழிவின் விவரங்களை இப்போது கேட்பீராக.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “ராஜரே, இவற்றிற்குக் காரணம் முன்பு நடந்த பெரிய தர்மங்களென்று நினைத்துக் கொள்ளும். ஒருவன் சென்றதான எந்தக் காரியத்தைப் பற்றிப் பிறகு ஆலோசிக்கிறானோ அந்தக் காரியமும் அவனுக்கு ஒருகாலும் கைகூடுவதில்லை, அவனும் மனக்கவலையினால் அழிந்து போகிறான். விவேகமுடையவரான உம்மால் யுக்தாயுக்த விசாரணையானது முந்தியே செய்யப்படாத காரணத்தினால் அவ்விதமான இந்தக் கார்யமானது உம்மைவிட்டு வெகுதூரம் விலகிவிட்டது. அர்ரே, பாண்டவர்களோடு யுத்தம் செய்ய வேண்டாமென்று பலவாறாகச் சொல்லபட்டீர். பாண்டவர்களிடத்திலுள்ள பகைமையினால் அந்த வார்த்தையை நீர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றிருக்கிறது.
இரவு விடிந்ததும் கர்ணன், மன்னன் துரியோதனனிடம் சென்றான்.(24) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, மன்னனை {துரியோதனனை} அணுகி, “ஓ! மன்னா, சிறப்புமிக்கப் பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} நான் இன்று போரிடுவேன்.(35) இன்று நான் அந்த வீரனைக் கொல்வேன், அல்லது அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வான். ஓ! பாரதா {துரியோதனா}, நானும், பார்த்தனும் {அர்ஜுனனும்} போரிட வேண்டியிருந்தாலும், ஓ! மன்னா, பல்வேறு காரியங்களால் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் இதுவரை அது {நேரடி சந்திப்பு} நடக்கவில்லை. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் ஞானத்தில் பேசப்படும் இந்த என் வார்த்தைகளை இப்போது கேட்பாயாக.(36,37) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் நான் திரும்பேன். முதன்மையான போர்வீரர்களை நம் படை இழந்திருப்பதாலும், போரில் நான் இருப்பேன் என்பதாலும், அதிலும் குறிப்பாகச் சக்ரன் {இந்திரன்} எனக்களித்த ஈட்டியை நான் இழந்துவிட்டேன் என்பதாலும், பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வருவான். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, எது நன்மை என்பதை இப்போது கேட்பாயாக.(38,39)
என் தெய்வீக ஆயுதங்களின் சக்தியானது, அர்ஜுனனின் ஆயுதங்களின் சக்திக்கு இணையானதே. பலமிக்க எதிரிகளின் சாதனைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதிலும், கரநளினத்திலும், கணைகள் ஏவப்படும் தொலைவிலும்,(40) திறனிலும், குறியைத் தாக்குவதிலும் சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஒருபோதும் எனக்கு நிகராகமாட்டான். ஓ! பாரதா, உடல்பலம், துணிச்சல், (ஆயுத) அறிவு, ஆற்றல்,(41) குறி பார்த்தல் ஆகியவற்றிலும் சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஒருபோதும் எனக்கு இணையாக மாட்டான். விஜயம் என்று அழைக்கப்படும் என் வில்லானது (அதன் வகையில்) ஆயுதங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(42) அஃது (இந்திரனுக்கு) ஏற்புடையதைச் செய்ய விரும்பிய (தெய்வீகக் கைவினைஞன்) விஸ்வகர்மனால் இந்திரனுக்காகவே செய்யப்பட்டதாகும். ஓ! மன்னா {துரியோதனா}, அவ்வில்லால் இந்திரன் தைத்தியர்களை வென்றான்.(43) அதன் நாணொலியால் தைத்தியர்கள் {திசைகளின்} பத்து புள்ளிகளையும் வெறுமையாகக் கண்டனர்[2]. அனைவராலும் மதிக்கப்பட்ட அந்த வில்லைச் சக்ரன் {இந்திரன்}, பிருகுவின் மகனிடம் (ராமரிடம் {பரசுராமரிடம்}) கொடுத்தான்.(44) விற்களில் முதன்மையான அந்தத் தெய்வீக வில்லைப் பிருகுவின் மகன் {பரசுராமர்} என்னிடம் கொடுத்தார். கூட்டமாகக் கூடியிருக்கும் தைத்தியர்களுடன் அந்த வில்லைக் கொண்டு போரிடும் இந்திரனைப் போல நான், வெற்றியாளப் போர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனுடன் போரிடுவேன். ராமர் {பரசுராமர்} பரிசளித்த அந்த உறுதிமிக்க வில்லானது {விஜயம் என்ற வில்லானது}, காண்டீவத்திற்கும் மேன்மையானதாகும். இந்த வில்லைக் கொண்டுதான் (பிருகுவின் மகனால் {பரசுராமரால்} இந்தப் பூமி இருபத்தோரு முறை வெல்லப்பட்டது. (45-47) ராமர் எனக்களித்த அந்த வில்லுடனே நான் அந்தப் பாண்டுவின் மகனுடன் போரிடுவேன்.
[2] “மூலத்தில் இதன் பொருள் தைத்தியர்கள் மலைப்படைந்தனர் {மயக்கமடைந்தனர்} என்பதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! துரியோதனா, வெற்றியாளர்களில் முதன்மை வீரனான அந்த அர்ஜுனனைப் போரில் கொன்று உன்னையும், உன் நண்பர்களையும் இன்று நான் மகிழ்ச்சியடையச் செய்வேன். (உன் விருப்பத்தை எதிர்க்க) ஒரு போர்வீரனும் இல்லாதவளும், மலைகள், காடுகள், தீவுகள் ஆகியவற்றுடன் கூடியவளும், நீயும், உன் மகன்களும், பேரர்களும் மேன்மையாக ஆளக்கூடியவளுமான மொத்த பூமியும் இன்று உனதாவாள். உனக்கு ஏற்புடையதைச் செய்வதே குறிப்பான நோக்கம் என்பதால், துறவியின் வெற்றியானது, அறத்தில் அர்ப்பணிப்பும், பற்றார்வமும் கொண்ட ஒருவனால் தவற விட முடியாததைப் போல, இன்று என்னால் அடையப்பட முடியாத ஏதும் கிடையாது. நெருப்பிலிருக்கும் மரத்தால் அந்த மூலகத்தை {பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைத்} தாங்கிக் கொள்ள முடியாததைப் போலவே, போரில் அர்ஜுனனால் என்னைத் தாங்கிக் கொள்ள முடியாது.(47-51)
எனினும் எந்த அடிப்படையில் நான் அர்ஜுனனுக்குத் தாழ்ந்தவனாக இருக்கிறேன் என்பதை நான் அறிவிக்க வேண்டும். அவனது வில்லின் நாண்கயிறு தெய்வீகமானது, அவனது அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாகும். அவனது சாரதி கோவிந்தனாவான் {கிருஷ்ணனாவான்}.(52) அவனைப் {கிருஷ்ணனைப்} போல ஒருவன் எனக்கு இல்லை. விற்களில் முதன்மையானதும், தெய்வீகமானதும், போரில் அழிவற்றதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான வில் அவனுடையது.(53) சிறந்ததும், தெய்வீகமானதும், உறுதிமிக்கதுமான விஜயம் என்று அழைக்கப்படும் வில்லை நானும் கொண்டிருக்கிறேன். எனவே, எங்கள் விற்களைப் பொறுத்தவரையில், ஓ! மன்னா, நான் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாகவே இருக்கிறேன்[3].(54) பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்} எப்பொருட்களில் எல்லாம் என்னைவிட மேம்பட்டவனாக இருக்கிறான் என்பதை இப்போது கேட்பாயாக. (அவனது குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடிப்பவன், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படும் தசார்ஹகுலத்தோனாவான் {கிருஷ்ணனாவான்}.(55) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், எப்பகுதியிலும் ஊடுருவப்பட முடியாததுமான அவனது தெய்வீகத் தேரும், ஓ! வீரா {துரியோதனா}, மனோவேகம் கொண்ட அவனது குதிரைகளும், அக்னியால் அவனுக்கு {அர்ஜுனனால்} அளிக்கப்பட்டவையாகும்.(56) சுடர்மிக்கக் குரங்கைக் கொண்ட அவனது தெய்வீகக் கொடிமரமானது மிகவும் அற்புதமானதாகும். மேலும், அண்டத்தைப் படைத்தவனான கிருஷ்ணனே அவனது தேரைப் பாதுகாக்கிறான்.(57)
[3] வேறொரு பதிப்பில், “எதனாலே நான் பல்குனனை விடக் குறைந்திருக்கிறேனென்னும் விஷயம் நான் அவசியம் நான் சொல்லத்தக்கதாயிருக்கிறது. அந்த அர்ஜுனவில்லினுடைய நாண்கயிறானது தெய்வீகத் தன்மையுள்ளது, அவ்வாறே இரண்டு பெரிய அம்புத்தூணிகளும் குறையாதவைகள். அந்த அர்ஜுனனுக்குச் சாரதி கோவிந்தன். எனக்கு அவ்விதமான சாரதி இல்லை. அந்த அர்ஜுனனுக்குத் திவ்யமானதும், யுத்தத்தில் ஜயிக்கமுடியாததுமான காண்டீவம் என்கிற சிறந்த வில்லிருக்கிறது. எனக்கும் திவ்யமானதும், மஹிமை பொருந்தினதும் விஜயத்தைக் கொடுக்கக்கூடியதுமான உத்தமமான வில்லிருக்கிறது. ராஜனே, அப்படிப்பட்ட வில்லினாலே பார்த்தைக் காட்டிலும் யான் மேலானவன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "உண்மையில், எந்த அடிப்படையில் நான் பலுகுனனுக்குத் தாழ்ந்தவனாக இருக்கிறேன் என்பதையும் நான் சொல்ல வேண்டும். அவனது வில்லின் நாண்கயிறு தெய்வீகமானது; மேலும் அவன் வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டைக் கொண்டிருக்கிறான். அவனது தேரோட்டி கோவிந்தனவான். ஆனால் நானோ இவையாவற்றையும் போல ஏதும் கொள்ளவில்லை. அவனது காண்டீவ வில்லானது தெய்வீகமானதும், சிறந்ததில் ஒன்றும், போரில் அழிக்கப்பட முடியாததுமாகும். அதே வேளையில், விஜயம் என்றழைக்கப்படும் என் வில்லும் தெய்வீகமானது; உறுதிமிக்கது, அதன் வகையில் முதன்மையானதே ஆகும். எனவே, ஓ ஏகாதிபதி, வில்லைப் பொறுத்தவரை பிருதையின் மகனுக்கு மேம்பட்டவனாகவே நான் இருக்கிறேன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் “பார்த்தனுக்கு எவ்வாறு நான் குறைந்தவனாக இருக்கிறேன் என்பதையும் நான் உனக்குச் சொல்ல வேண்டும். அவனது வில்லின் நாண்கயிறு தெய்வீகமானது, அவனது பெரிய அம்பறாத்தூணிகள் வற்றாதவை. அவன் கொண்டிருக்கும் தெய்வீகமான உயர்ந்த வில்லான காண்டீவம் போரில் வெல்லப்பட முடியாததாகும். உயர்ந்ததும், பெரியதும், தெய்வீகமானதுமான விஜயம் என்றழைக்கப்படும் வில்லை நானும் கொண்டிருக்கிறேன். எனவே, ஓ மன்னா, விற்களைப் பொறுத்தவரை, பார்த்தனுக்கு மேம்பட்டவனாகவே நான் இருக்கிறேன்” என்றிருக்கிறது. இந்த நான்கு பதிப்புகளிலும், 52-54ம் சுலோகம் வரை சுட்டிக்காட்டப்படும் இந்தப் பகுதியில் சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன.
இக்காரியங்களில் எல்லாம் அர்ஜுனனுக்குக் குறைந்தவனாகவே {நான்} இருப்பினும், அவனோடு போர்புரிய நான் விரும்புகிறேன். எனினும், சபைகளின் ரத்தினமான இந்தச் சல்லியன், சௌரிக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவராவார்.(58) இவர் {சல்லியன்} என் சாரதியானால், வெற்றியானது நிச்சயம் உனதேயாகும். எனவே, எதிரிகளால் தடுக்கப்பட முடியாத இந்தச் சல்லியன் என் தேரின் சாரதியாகட்டும்.(59) என் நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்}, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்டவற்றையும் {கணைகளையும்} பெரும் எண்ணிக்கையிலான வண்டிகள் சுமந்து வரட்டும். ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான தேர்கள் பெரும் எண்ணிக்கையில் என்னை எப்போதும் பின்தொடர்ந்து வரட்டும். குறிப்பிடப்பட்ட தன்மைகளைப் பொறுத்தவரையில், இந்த ஏற்பாடுகளால், நான் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாக ஆவேன்.(61) சல்லியன் கிருஷ்ணனுக்கு மேன்மையானவர், நானோ அர்ஜுனனுக்கு மேம்பட்டவன். எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தசார்ஹ குலத்தோன் குதிரைக் கலைகளை அறிந்திருப்பதைப் போலவே,(62) வலிமைமிக்கத் தேர்வீரரான இந்தச் சல்லியரும் குதிரைக்கலைகளை அறிந்திருக்கிறார். கரங்களின் வலிமையில் மத்ரர்களின் தலைவருக்கு இணையாக வேறு எவனும் இல்லை.(63) ஆயுதங்களில் எனக்கு இணையான எவனும் இல்லாததைப் போல, குதிரைகளின் அறிவில் சல்லியனுக்கு இணையானவன் எவனும் இல்லை.(64)
சூழ்நிலை இவ்வாறிருந்தால், நான் பார்த்தனுக்கு மேம்பட்டவனாக இருப்பேன். என் தேரை எதிர்த்து வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும் துணிந்து வரமாட்டார்கள்.(65) இவையாவும் கவனிக்கப்பட்டால், ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் என் தேரில் ஏறும்போது, போர்வீரனின் தன்மைகளில் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாகி, பல்குனனை {அர்ஜுனனை} வெல்வேன்.(66) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, இவை யாவும் உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காலதாமதம் ஏதும் செய்ய வேண்டாம்.(67) இவையாவும் நிறைவேற்றப்பட்டால், விருப்பப்படும் அனைத்து சந்தர்ப்பத்திலும் மிகவும் பலன் தரும் வகையில் என்னாலான உதவி கிடைக்கும். அப்போது, ஓ! பாரதா {துரியோதனா}, போரில் நான் எதைச் சாதிப்பேன் என்பதை நீ காண்பாய்.(68) போரில் பாண்டுவின் மகன்கள் என்னை அணுகும்போது, அனைத்து வழிகளிலும் நான் அவர்களை வெல்வேன். தேவர்களாலும், அசுரர்களாலும் கூடப் போரில் என்னை எதிர்த்து வர முடியாது. அப்படியிருக்கையில், மனிதத் தோற்றம் கொண்ட பாண்டு மகன்களைக் குறித்து என்ன சொல்வது” என்று கேட்டான் {கர்ணன்}.(69)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போர்க்கள ரத்தினமான கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த ராதையின் மகனை {கர்ணனை} வழிபட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம்,(70) “ஓ! கர்ணா, நீ நினைப்பதைச் சாதிப்பாயாக. சிறந்த அம்பறாத்தூணிகள், குதிரைகள் ஆகியவற்றுடன் ஆயத்தப்படுத்தப்பட்ட தேர்கள் போரில் உன்னைப் பின் தொடர்ந்து வரும்.(71) நீ எவ்வளவு விரும்புவாயோ அவ்வளவு எண்ணிக்கையிலான தேர்கள், உன் நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்}, கழுகின் இறகுகளால் ஆயத்தப்படுத்தப்பட்ட கணைகளையும் சுமந்து வரட்டும். நாங்களும், மன்னர்கள் அனைவரும் போரில் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று பதிலளித்தான் {துரியோதனன்}.”(72)
சஞ்சயன் தொடர்ந்தான், “இச்சொற்களைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான உமது அரச மகன் {துரியோதனன்}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, பின் வரும் வார்த்தைகளால் அவனுடன் பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(73)
----------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 31-ல் உள்ள சுலோகங்கள் : 73
ஆங்கிலத்தில் | In English |