“Karna, you are a jackal!” said Shalya! | Karna-Parva-Section-39 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் தனியாகப் போரிட வேண்டாம் என்று கர்ணனை எச்சரித்த சல்லியன்; தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்த கர்ணன்; கர்ணனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத சல்லியன் அவனை இகழ்ந்தது; கர்ணன் மற்றும் அர்ஜுனனை, நரி மற்றும் சிங்கமாக ஒப்பிட்டுச் சொன்ன சல்லியன்...
சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, யானையளவு பெரிதான ஆறு காளைகளுடன் கூடிய தங்கத் தேரை எவனுக்கும் கொடுத்துவிடாதே. நீ இன்று தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணப் போகிறாய்.(1) நீயே பொக்கிஷத் தலைவன் {குபேரன்} என்பதைப் போலச் செல்வங்களைக் கொடுப்பதாக மடமையினாலே நீ சொல்கிறாய்.[1] எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, எந்தத் இடருமில்லாமலே நீ இன்று தனஞ்சயனைக் காண்பாய்.(2) அறிவற்ற மனிதனைப் போல நீ செல்வத்தைக் கொடுக்கிறாய்; தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பரிசுகளில் இணைந்திருக்கும் குறைகளை நீ காணவில்லை.(3) நீ கொடுக்க விரும்பும் அப்பெருஞ்செல்வத்தைக் கொண்டு, நிச்சயம் வேள்விகள் பலவற்றை நடத்திவிட முடியும். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ அவ்வேள்விகளைச் செய்வாயாக.(4) மடமையினால் தூண்டப்பட்ட அவ்விருப்பம் நிச்சயம் வீணானதாகும். இரண்டு சிங்கங்கள் ஒரு நரியால் வீழ்த்தப்பட்டதை நாம் எப்போதும் கேட்டதில்லை.(5)
[1] வேறொரு பதிப்பில், “பலத்தினால் மதங்கொண்டவனான நீ குபேரன் போலப் பொருளைச் செலவிடுகிறார். ராதேய! யதனமின்றியே இப்பொழுது நீ தனஞ்சயனைப் பார்ப்பாய்” என்றிருக்கிறது.
எதை நீ எப்போதும் வேண்டக்கூடாதோ அதையே வேண்டுகிறாய். சுடர்மிகும் நெருப்புக்குள் வேகமாக விழும் உன்னைத் தடுக்க நண்பர்கள் எவரும் உனக்கு இல்லை என்பது தெரிகிறது.(6) எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் வேறுபாடு காண உன்னால் இயலவில்லை. உன் காலம் நிறைவுபெற்றது என்பதில் ஐயமில்லை. வாழ விரும்பும் எந்த மனிதன்தான் இந்தளவுக்குக் கேட்பதற்கு ஒத்திசையாத, தகாத பேச்சுகளைப் பேசுவான்?(7) இந்த உனது முயற்சியானது, கழுத்தில் கனமான கல்லைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளால் மட்டுமே பெருங்கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போலவோ, மலைச்சிகரத்தில் இருந்து குதித்துவிட விரும்பும் ஒருவனைப் போலவோ இருக்கிறது.(8) உன் நன்மைக்கான வெற்றியை நீ அடைய விரும்புவாயெனில், அணிவகுக்கப்பட்ட உன் படைப்பிரிவுக்குள் நல்ல பாதுகாப்புடன் இருந்து கொண்டு, உனது போர்வீரர்கள் அனைவரின் உதவியுடன் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடம்} போரிடுவாயாக. {தனியாகப் போரிடாதே}.(9) உன் மீது எந்தத் தீய நோக்கமும் கொள்ளாமல், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகவே இதை நான் உன்னிடம் சொல்கிறேன். உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விருப்பமேதும் நீ கொண்டிருந்தால், என்னால் சொல்லப்பட்டும் வார்த்தைகளை ஏற்பாயாக” என்றான் {சல்லியன்}.(10)
கர்ணன் {சல்லியனிடம்}, “என் கரங்களின் வலிமையை நம்பியே நான் அர்ஜுனனுடன் போரிட முயல்வேன். எனினும், நண்பனின் முகத்தோடு கூடிய பகைவரான நீர் என்னை அச்சுறுத்த விரும்புகிறீர்.(11) இந்தத் தீர்மானத்தில் இருந்து என்னைப் பின்வாங்கச் செய்ய எவனாலும், ஏன் வஜ்ரத்தை உயர்த்தும் இந்திரனாலும் கூட முடியாது எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றான்.(12)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணனுடைய வார்த்தைகளின் முடிவில், அவனது கோபத்தைத் தூண்ட விரும்பிய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(13) {சல்லியன்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} ஏவப்படுபவையும், கங்க இறகுகளால் சிறகுகள் அமைந்தவையும், அவனது வில்லின் நாணில் இருந்து தூண்டப்பட்டவையும், அவனது சக்தி அனைத்தையும் திரட்டி ஏவப்பட்டவையுமான கூர்முனை கணைகள் உன்னை நாடும்போது, அந்த வீரனுடனான உன் மோதலைக் குறித்து நீ வருந்துவாய்.(14) சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு (குரு) படையை எரித்து, கூரிய கணைகளால் உன்னை அதீதமாகப் பீடிக்கும்போது, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ (உன் மடமைக்காக) வருந்துவாய்.(15) தாயின் மடியில் கிடக்கும் குழந்தை, நிலவைப் பிடிக்க முயல்வதைப் போல நீயும் உன் மடமையினால் தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை வெல்ல முயல்கிறாய்.(16) ஓ! கர்ணா, கூர்முனை சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் அங்கங்களைத் தேய்த்துக் கொள்கிறாய்[2].(17)
[2] வேறொரு பதிப்பில், “நீ இப்போது அர்ஜுனனோடு யுத்தம் செய்ய விரும்புவது நன்கு தீட்டப்பட்டதும், கூர்மையான முனையுள்ளதுமான கத்தியைப் பூமியில் நாட்டி (அதன் முனையில் கையினால்) அடிப்பது போலவும் கூர்மையான பாணங்களாலே (தன் மேல்) குத்திக் கொள்வது போலவும் இருக்கிறது. கர்ண, நீ மிக்கக் கூர்மையுள்ள ஆயுதத்தினுடைய நுனிக்கொப்பான செய்கையுள்ள அர்ஜுனனோடு இப்பொழுது போர்புரிய விரும்புகிறபடியால், மிக்கக் கூர்மையுள்ள நுனியுடன் கூடின திரிசூலத்தைக் கட்டிக் கொண்டு எல்லா அங்கங்களையும் உரைத்துக் கொள்ளுகிறாய்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ கர்ணா, சிறப்புமிக்கச் சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் உடலைத் தேய்த்துக் கொள்கிறாய்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “உன் மயக்கத்தினால், தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை நீ இன்று வெல்ல விரும்புகிறாய். அது திரிசூலத்தின் கூர்முனைகளில் உன் அங்கங்கள் அனைத்தையும் தேய்த்துக் கொள்வதைப் போலாகும். நீ இன்று மிகக் கூர்மையான அருஞ்செயல்களைச் செய்த அர்ஜுனனுடன் நீ போரிட விரும்புகிறாய்” என்றிருக்கிறது.
ஓ! சூதன் மகனே {கர்ணனே}, சுறுசுறுப்பும், இளமையும், மடமையும் கொண்ட ஒரு சிறு மானானது, கோபத்தால் தூண்டப்பட்ட ஒரு பெரும் சிங்கத்தை அறைகூவியழைப்பதைப் போன்றதே இந்த உனது அறைகூவல் இருக்கிறது.(18) ஓ! சூதன் மகனே {கர்ணா}, காட்டில் இறைச்சியில் நிறைவு கொண்ட ஒரு நரியானது, பிடரிமயிர் கொண்ட காட்டு ஏகாதிபதியை {பெருஞ்சிங்கத்தை} அறைகூவியழைப்பதைப் போல, வலிமையும் சக்தியும் கொண்ட அந்த இளவரசனை {அர்ஜுனனை} நீ அறைகூவியழைக்காதே. அர்ஜுனனோடு மோதி அழிவையடையாதே.(19) ஓ! கர்ணா, ஒரு முயலானது, கலப்பைகள் அளவு பெரிய தந்தங்களைக் கொண்டதும், வலிமைமிக்கதும், வாயிலும், கன்னத்திலும் மத நீர் பெருக்குவதுமான ஒரு யானையை அறைகூவியழைப்பதைப் போல, நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(20) பார்த்தனோடு போரிட விரும்பும் மடமையினால் நீ, பொந்துக்குள் கிடக்கும் கடும் நஞ்சுமிக்கக் கருநாகத்தை மரத்துண்டினால் {குச்சியினால்} துளைத்து, அதன் சீற்றத்தைத் தூண்டுகிறாய்.(21) ஓ! கர்ணா, சிறுமதி கொண்ட நீ, மனிதர்களில் சிங்கமான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அலட்சியம் செய்து, கோபத்தால் தூண்டப்பட்டதும், பிடரிமயிர் கொண்டதுமான ஒரு சிங்கத்தை நோக்கி ஊளையிடும் நரியைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி ஊளையிடுகிறாய்.(22)
ஒரு பாம்பானது, பறவைகளில் முதன்மையானவனும், அழகிய இறகுகள் கொண்டவனும், பெரும் சுறுசுறுப்புடையவனுமான வினதையின் மகனை {கருடனை} தன் அழிவுக்காகவே அறைகூவியழைப்பதைப் போல, பாண்டுவின் மகனான தனஞ்சயனை நீ அறைகூவியழைக்கிறாய்.(23) நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடமும், மலைகளைப் போன்ற அலைகளைக் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்ததும், சந்திரன் உதிக்கையில் உயரமாக எழுவதுமான பயங்கரமானபெருங்கடலை நீ படகில்லாமல் கடக்க விரும்புகிறாய்.(24) ஓ! கர்ணா, ஒரு கன்றானது, கூரிய கொம்புகளையும், பேரிகையைப் போன்ற தடித்த திமில்களையும் கொண்டதும், தாக்கவல்லதுமான காளையொன்றை அறைகூவியழைப்பதைப் போல, போரில் நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {குந்தியின் மகனான அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(25) அபரிமிதமான மழையைப் பொழியும் பயங்கரமான பெரும் மேகத்தைக் கண்டு கரையும் தவளையைப் போல, மனிதர்களில் பர்ஜன்யனான {மேகதேவனான}[3] அர்ஜுனனைக் கண்டு நீ கரைகிறாய்.(26) தன் தலைவனின் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நாயானது, காட்டில் திரியும் புலியைக் கண்டு குரைப்பதைப் போல, ஓ! கர்ணா, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு நீ குரைக்கிறாய்.(27)
[3] பர்ஜன்யன், மேகங்களின் தேவனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார். அதாவது மழையைப் பொழியும் மேகத்தைப் போலக் கணைகளைப் பொழியும் மனித மேகம் என்பது பொருள்.
ஓ! கர்ணா, காட்டில், குழிமுயல்களுக்கு மத்தியில் வசிக்கும் நரியானது, உண்மையில் ஒரு சிங்கத்தைப் பார்க்குவரை, தன்னையே ஒரு சிங்கமாகக் கருதிக் கொள்ளும்.(28) அது போலவே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எதிரிகளை ஒடுக்குபவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சனை நீ காணாததால், உன்னையே சிங்கமாக நீ கருதிக் கொள்கிறாய்.(29) ஒரே தேரில் சூரியனையும், சந்திரனையும் போல இருக்கும் கிருஷ்ணர்கள் {கருபர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும் நீ காணாதவரை உன்னை நீயே சிங்கமாகக் கருதிக் கொள்வாய்.(30) பெரும்போரில் காண்டீவத்தின் நாணொலியை நீ எதுவரை கேட்கவில்லையோ, அதுவரை நீ விரும்பியதைச் செய்ய இயன்றவனாக இருப்பாய்.(31) பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேரின் சடசடப்பொலியாலும், தன் வில்லின் நாணொலியாலும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைப்பதைக் கண்டும், புலியைப் போல அவன் முழங்குவதைக் கண்டும், நீ நரியாகப் போகிறாய்.(32) நீ எப்போதும் நரியே ஆவாய், தனஞ்சயனோ {அர்ஜுனனோ} எப்போதும் சிங்கமேயாவான். ஓ! மூடா, அந்த வீரர்களிடம் கொண்ட பொறாமை மற்றும் வெறுப்பின் விளைவால், நீ எப்போதுமே நரியாகவே தெரிகிறாய்.(33) எலியும் பூனையும் ஒன்றுக்கொன்று பலத்தில் எப்படியோ, நாயும் புலியும் எப்படியோ, நரியும் சிங்கமும் எப்படியோ, முயலும் யானையும் எப்படியோ, பொய்மையும், மெய்யும் எப்படியோ, விஷமும் அமுதமும் எப்படியோ, அப்படியே நீயும் பார்த்தனும் உங்கள் செயல்களால் அனைவராலும் அறியப்படுகிறீர்கள்” {என்றான் சல்லியன்}.(34)
--------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 39-ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |