“I shall crush thy head!” said Karna! | Karna-Parva-Section-40 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : மத்ரக நாட்டின் நடைமுறைகள், அந்நாட்டின் பெண்களின் நடத்தை, நட்பை மறுக்கும் குணம் ஆகியவற்றை வெளியிட்டுச் சல்லியனை நிந்தித்த கர்ணன், மேலும் இதுபோலப் பேசினால் தன் கதாயுதத்தால் சல்லியனின் தலையை நொறுக்கிவிடுவதாகச் எச்சரித்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட சல்லியனால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை நிந்திப்பவனின் வார்த்தைக் கணைகளின் விளைவால் அவனது {சல்லியனின்} பெயரின் பொருளை உணர்ந்து, கோபத்தால் நிறைந்து இவ்வாறு பதிலுரைத்தான்[1]”(1)
[1] “கணை {முளை} என்பதே சல்லிய என்ற வார்த்தையின் சுட்டுப்பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, தகுதிமிக்க மனிதர்களின் {குணசாலிகளின்} தகுதிகளை {குணங்களைத்} தகுதியற்றவர்கள் {குணமில்லாதவர்கள்} அறிவதில்லை, தகுதிமிக்கவர்களே {குணசாலிகளே} அறிவார்கள். எனினும், நீர் தகுதியற்றவராகவே இருக்கிறீர். அப்படியிருக்கையில், தகுதியையும், தகுதியின்மையையும் உம்மால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?(2) ஓ! சல்லியரே, அர்ஜுனனின் வலிமைமிக்க ஆயுதங்கள், அவனது சக்தி, வில், கணைகள், அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றல் ஆகியவற்றை நான் நன்கறிவேன்.(3) அதே போல, ஓ! சல்லியரே, பூமியின் தலைவர்களுக்கு மத்தியில் காளையான கிருஷ்ணனின் பெருமையை நான் நன்கறிந்ததைப் போல நீர் அறியமாட்டீர்.(4) ஆனால், ஓ! சல்லியரே, என் சக்தியையும், பாண்டு மகனின் {அர்ஜுனனின்} சக்தியையும் அறிந்தே நான் அவனைப் போருக்கு அறைகூவியழைக்கிறேன். சுடர்மிக்க நெருப்பைப் பொறுத்தவரை, பூச்சி போல நான் செயல்படுவதில்லை.(5)
ஓ! சல்லியரே, குருதி குடிக்கும் கூரிய வாய்க் கொண்டதும், ஓர் அம்பறாத்தூணிக்குள் தனியாகவே கிடப்பதும், சிறகுகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டதும், எண்ணெயில் நன்கு தோய்க்கப்பட்டதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான இந்தக் கணையை நான் கொண்டிருக்கிறேன்.(6) சந்தனத்தூளுக்கு மத்தியில் கிடப்பதும், பல ஆண்டுகளாக என்னால் வழிபடப்பட்டு வருவதுமான இது, பாம்பொன்றின் இயல்பையும், வடிவத்தையும் கொண்டிருப்பதால், நஞ்சுமிக்கதாகவும், கடுமையானதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லவல்லதாகவும் இருக்கிறது.(7) பயங்கர வடிவமும், அதிக அச்சத்தைத் தரவல்லதுமான இது, கவசங்களையும், எலும்புகளையும் துளைக்கவல்லதாக இருக்கிறது. கோபத்தால் தூண்டப்படும் நான், இதைக் கொண்டு வலிமைமிக்க மேருவின் மலைகளையும் கூடத் துளைக்க முடியும்.(8) பல்குனனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு எந்த மனிதனின் மீதும் நான் இக்கணையை ஏவமாட்டேன். இவ்விஷயத்தில் நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன். அதைக் கேட்பீராக.(9)
ஓ! சல்லியரே, கோபத்தால் தூண்டப்பட்ட நான் இக்கணையைக் கொண்டு, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயனோடு {அர்ஜுனனோடு} போரிடுவேன். அந்த அருஞ்செயல் எனக்குத் தகுந்ததே.(10) விருஷ்ணி குலத்தின் வீரர்கள் அனைவரிலும், கிருஷ்ணனிடமே எப்போதும் செழிப்பு நிறுவப்பட்டுள்ளது. பாண்டுவின் மகன்கள் அனைவரிலும், பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} எப்போதும் வெற்றி நிறுவப்பட்டுள்ளது.(11) ஒரே தேரில் இருக்கும் அந்த மனிதர்களில் புலிகள் இருவரும், போரில் தனியனான என்னை எதிர்த்து வருவார்கள். ஓ! சல்லியரே, இன்று என் குலப்பிறப்பின் உன்னதத்தை நீர் பார்ப்பீர்.(12) அத்தையின் மகனும், தாய்மாமனின் மகனுமான அந்த மைத்துனர்கள் இருவரும்[2], அந்த வெல்லப்பட முடியாத போர்வீரர்கள் இருவரும், (ஒரே கணையைக் கொண்டு) என்னால் கொல்லப்பட்டு, ஒரே இழையில் கோர்க்கப்பட இரு முத்துகளைப் போலத் தெரிவதை நீர் காண்பீர்.(13) அர்ஜுனனின் காண்டீவம், குரங்கைத் தாங்கும் கொடி, கிருஷ்ணனின் சக்கரம், கருடனைத் தாங்கும் கொடி ஆகியன மருண்டோரின் அச்சத்தையே தூண்டும். எனினும், ஓ! சல்லியரே, எனக்கோ அவை மகிழ்ச்சியை உண்டாக்கும்.(14) தீய நிலைப்பாடும், பெரும்போரில் திறனற்ற வழிமுறைகளையும் கொண்ட நீர் ஒரு மூடரே. அச்சத்தால் பீடிக்கப்பட்டே நீர் இப்படிக் கரைகிறீர்.(15) அல்லது நானறியாத ஏதோ காரணத்திற்காக நீர் அவர்களைப் புகழ்கிறீர். முதலில் அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு, உம்மையும், உமது சொந்தங்கள் அனைவருடனும் சேர்த்து இன்று கொல்வேன்.(16)
[2] குந்தியும், வசுதேவரும் சகோதர சகோதரிகள் என இங்கே கங்குலி விளக்குகிறார்.
பாவம் நிறைந்த நாட்டில் பிறந்த நீர், தீய ஆன்மா கொண்டவராகவும், கோணல் புத்தி கொண்டவராகவும், க்ஷத்திரியர்களில் இழிந்தவராகவும் இருக்கிறீர். நண்பராய் இருந்து கொண்டே, இரு கிருஷ்ணர்களைக் (இப்படிப் புகழ்வதால்) கொண்டு ஓர் எதிரியைப் போல என்னை ஏன் அச்சுறுத்துகிறீர்?(17) இன்று அவர்கள் இருவரும் என்னைக் கொல்வார்கள், அல்லது நான் அவர்கள் இருவரையும் கொல்வேன். என் பலத்தால் முடிந்ததெதுவோ அஃதை அறிந்த நான் இரு கிருஷ்ணர்களிடமும் அச்சமேதும் கொள்ளவில்லை.(18) ஓராயிரம் வாசுதேவர்களையும், நூற்றுக்கணக்கான பல்குனர்களையும் என்னால் தனியனாகவே கொல்ல முடியும். ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே, உமது நாவை அடக்கும்.(19) ஓ! சல்லியரே, ஏற்கனவே பழமொழிகளாகிவிட்டவையும், இளைஞர்கள், முதியவர்கள், மகளிர் ஆகியோராலும், கணக்கிலடங்கா பயணங்களில் ஈடுபடும் மனிதர்களாலும், ஏதோ தங்கள் கல்வியின் ஒரு பகுதியாக அமைந்துவிட்ட ஒன்றைப் போல் தீய மத்ரகர்களைக் குறித்துப் பொதுவாகச் சொல்லப்படுபவையுமான இந்தச் சொலவடைகளைக் என்னிடமிருந்து கேட்பீராக. மன்னர்களின் அவைகளில் இதே காரியங்கள் முன்பு பிராமணர்களாலும் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மூடரே, அந்தச் சொலவடைகளைக் கவனமாகக் கேட்டு நீர் மன்னிக்கலாம், அல்லது மீண்டும் {என்னோடு} இணையலாம். {பேசாமலிருக்கவும், அல்லது மறுமொழிகூறவும்}.(20,21)
மத்ரகன் {மத்ர நாட்டவன்} என்பவன் எப்போதும் நண்பர்களை வெறுப்பவனே. எவன் நம்மை வெறுப்பானோ அவனே மத்ரகன். பேச்சில் கீழ்த்தரமானவனும், மனித இனத்தில் இழிந்தவனுமான மத்ரகனிடம் நட்பென்பதே கிடையாது.(22) மத்ரகன் எப்போதும் தீய ஆன்மா கொண்டவனாகவும், எப்போதும் பொய்மை நிறைந்தவனாகவும், கோணல்புத்தி கொண்டவனாகவுமே இருக்கிறான். மரணக் கணம் வரையிலும் கூட மத்ரகர்கள் தீயவர்களாகவே இருப்பார்கள் என்று நாம் கேள்வி படுகிறோம். (மத்ரகர்களுக்கு மத்தியில்) தந்தை, மகன், தாய், மாமியார், மாமனார், தாய்மாமன், மருமகன், மருமகள், சகோதரன், பேரன், பிற சொந்தங்கள்,(24) தோழர்கள், அவர்களது இல்லங்களுக்கு வரும் அயலார், ஆண் மற்றும் பெண் அடிமைகள் ஆகியோர் {தங்களுக்குள்} ஒன்று கலக்கிறார்கள். மத்ரகர்களின் பெண்கள், தாங்கள் அறிந்த அல்லது அறியாத ஆடவருடன் தங்கள் விருப்பப்படியே கலந்து கொள்கிறார்கள்[3].(25) நீதியற்ற ஒழுக்கத்துடன் கூடிய அவர்கள், வறுத்து, பொடியாக்கப்பட்ட சோளம்
மற்றும் மீனை உண்டு, தங்கள் இல்லங்களில் மது குடித்து[4], மாட்டிறைச்சியும்
உண்டு சிரித்து, அழுகின்றனர்.(26) ஒத்திசைவில்லாப் பாடல்களைப் பாடும்
அவர்கள், வெளிப்படையாகப் பேசியபடியே ஒருவரோடொருவர் காமத்தில்
கலக்கிறார்கள். {இவ்வாறு} அனைத்து வகைத் தீச்செயல்களிலும் ஆணவமும்,
இழிபெயரும் கொண்ட மத்ரகர்களிடம் எவ்வாறு அறமிருக்க முடியும்?(27) ஒரு
மத்ரகனுடன் எவனும் நட்பு கொள்ளக்கூடாது, அல்லது அவனிடம் பகைமையையும்
தூண்டக்கூடாது. மத்ரகனிடம் நட்பேதும் கிடையாது. மத்ரகன் எப்போதும்
மனிதத்தின் கறையே.(28) காந்தாரகர்களிடம் தூய்மையும், வேள்வி செய்பவனாகவும்,
புரோகிதனாகவும் மன்னனே இருக்கும் வேள்வியில் ஊற்றப்படும் ஆகுதியையும் போல
மத்ரகர்களுக்கு மத்தியில் நட்பின் அனைத்து செயல்பாடுகளும்
தொலைந்துபோகும்.(29)
[3] வேறொரு பதிப்பில், “தகப்பன், மகன், தாய், மாமி, மாமன், அம்மான், சகோதரி, மகள், சகோதரன், பேரன், மற்ற உறவினர்கள், தோழர்கள், தோழிகள், அதிதிகள், அடிமைக்காரர்கள், அடிமைக்காரிகள் யாவரும் கூடுகிறார்கள். அறியப்பட்டவர்களும், அறியப்படாதவர்களுமான பெண்டிர்கள் தங்கள் இஷ்டப்படி புருஷர்களோடு சேர்கின்றார்கள்” என்றிருக்கிறது.[4] குறிப்பாக, கரும்புச்சாற்றின் கழிப்பாகில் செய்யப்பட்ட சித்து என்ற வகை மது என்று பிபேக்திப்ராயின் பதிப்பில் குறிப்பிருக்கிறது.
அதே போல, தேளால் கடிபட்டு அதன் நஞ்சால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு ஞானியர் மருத்துவம் செய்கையில், இவ்வார்த்தைகள் சொல்லப்படுவதை உண்மையாகவே காணலாம்: “சூத்திரனின் அறவிழாக்களில் {திருவருட்சாதனங்களில்} துணைபுரியும் ஒரு பிராமணன் தரமிழப்பதைப் போலவே, பிராமணர்களை வெறுப்பவன் எப்போதும் தரமிழப்பதைப் போலவே மத்ரகர்களுடன் கூட்டணி ஏற்படுத்தும் மனிதனும் தரமிழிப்பான். மத்ரகனிடம் நட்பேதும் இல்லாததைப் போல, ஓ! தேளே, உன் நஞ்சானது இல்லாமல் போகட்டும். இந்த அதர்வ மந்திரங்களால் நான் சர்வசாந்தி சடங்குகளை முறையாகச் செய்திருக்கிறேன்” {என்று ஞானியர் சொல்வதை நாம் காணலாம்}.(30-32) ஓ! கல்விமானே, இதை அறிந்து கொண்டு உமது நாவை அடக்கும், அல்லது, மேலும் நான் சொல்லப் போகும் சிலவற்றையும் கேளும்.(33)
மதுவினால் போதையுண்டு, தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு ஆடும் பெண்களும், (குறிப்பிட்ட நபர்கள் எவருடனும்) புணர்ச்சியில் இணையாதவர்களும், இணைந்தவர்களுமான மகளிரும் எந்தக் கட்டுபாடுகளும் இன்றித் தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள் எனும்போது,(34) ஓ! மத்ரகரே {சல்லியரே}, நான் கேட்கிறேன், அம்மகளிரில் ஒருத்தியின் குழந்தையான நீர், மனிதர்களின் கடமைகளை அறிவிக்கத் தகுந்தவராக எவ்வாறு ஆக முடியும்? ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றைப் போல இயற்கையின் அழைப்புக்குப் பதில் சொல்லி வாழ்பவர்களும், பாவம் நிறைந்தவர்களும், நாணமற்றவர்களுமான அம்மகளிரில் ஒருத்தியின் பிள்ளையான நீர், மனிதர்களின் கடமைகளை அறிவிக்க எவ்வாறு விரும்பலாம்?(35,36) ஒரு மத்ரகப் பெண்மணி, சிறு அளவு காடிக்காக {ஒரு வகை மதுவுக்காக} வேண்டப்படும்போது, அதைக் கொடுக்கும் விருப்பமில்லாத அவள், தன் இடைகளைச் சொறிந்தபடி, இந்தக் கொடும் மொழிகளைச் சொல்கிறாள்;(37) “எனக்கு அன்பான காடியை என்னிடம் எந்த மனிதனும் கேட்காதிருக்கட்டும். அவனுக்கு நான் என் மகனைக் கொடுப்பேன், என் கணவனையும் அவனுக்குக் கொடுப்பேன், ஆனால் காடியை ஒருபோதும் கொடுக்க மாட்டேன்” {என்று சொல்வாள்}[5].(38)
[5] வேறொரு பதிப்பில், “கஞ்சியை வேண்டப்பட்டவளான மத்திர தேசத்து ஸ்திரீயானவள், பின்தட்டுகளைச் சொறிந்து கொள்ளுகிறாள். கஞ்சி கொடுப்பதற்குப் பிரியமற்ற மத்திரதேசத்து ஸ்திரீ, “எனக்குப் பிரியமான கஞ்சியை என்னிடத்தினின்று ஒருவனும் கேட்க வேண்டும். பிள்ளையைக் கொடுப்பேன், புருஷனைக் கொடுப்பேன், கஞ்சியையெனின் நான் கொடேன்” என்று குரூரமான இவ்வித வசனத்தைச் சொல்லுகிறாள்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் மத்ரகப் பெண் கண்மையைக் கொடுக்க மாட்டாள் என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே காடி என்றே இருக்கிறது.
இளம் மத்ரகக் கன்னியர்களை மிக நாணமற்றவர்களாகவும், மயிர் நிறைந்தவர்களாகவும், பெருந்தீனிக்காரர்களாகவும், தூய்மையற்றவர்களாகவுமே நாம் கேள்விப்படுகிறோம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவர்களது செயல்பாடுகளையும், இன்னும் இதே போன்ற வேறு காரியங்களையும் அவர்களைக் குறித்து என்னாலும், பிறராலும் உறுதியாகச் சொல்ல முடிகிறது.(39,40) உண்மையில், பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவர்களும், நடைமுறையில் மிலேச்சர்களாக இருப்பவர்களும், கடமைகள் அனைத்தையும் முற்றாக அலட்சியம் செய்பவர்களுமான மத்ரகர்களாலும், சிந்து சௌவீரர்களாலும் கடமை குறித்த எதையும் எவ்வாறு அறிய முடியும்?(41) போரில் கொல்லப்பட்டு, நல்லோரால் புகழப்பட்டுப் பூமியில் கிடப்பதே க்ஷத்திரியர்களின் உயர்ந்த கடமையென நாம் கேள்விப்படுகிறோம்.(42) மரணத்தால் சொர்க்கத்தை அடைய விரும்பும் நான் இந்த ஆயுத மோதலில் (என் உயிரை இழந்து) கிடக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.(43)
திருதராஷ்டிரரின் புத்திசாலி மகனுக்கு நான் உயிர் நண்பனாகவும் இருக்கிறேன். அவனுக்காகவே என் உயிர்மூச்சையும், என்னிடமுள்ள எந்தச் செல்வத்தையும் நான் கொண்டிருக்கிறேன்.(44) உம்மைப் பொறுத்தவரை, ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே {சல்லியரே}, ஓர் எதிரியைப் போல எங்களிடம் நீர் அனைத்திலும் நடந்து கொள்வதால், பாண்டவர்களால் நீர் களங்கப்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.(45) நாத்திகர்களால் தவறாக வழிநடத்தப்பட இயலாத நீதிமிக்க மனிதனைப் போல, நானும் உம்மைப் போன்ற நூறு பேராலும் இந்தப் போரில் இருந்து அகற்ற இயலாதவனாகவே இருக்கிறேன்.(46) வியர்வையில் நனைந்திருக்கும் ஒரு மானைப் போல, அழுவதற்கோ, தாகம் கொள்வதற்கோ {வறட்சி அடைவதற்கோ} உமக்குச் சுதந்திரமுண்டு. ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பவனான நான், உம்மால் அச்சுறுத்தப்படத் தகுந்தவனாக இல்லை.(47) போரில் தங்கள் உயிரை விட்டவர்களும், பின்வாங்காத வீரர்களும் மனிதர்களில் சிங்கங்களுமாக இருந்தோரின் முடிவைக் குறித்துக் கடந்த காலங்களில் என் ஆசான் ராமரால் {பரசுராமரால்} எனக்கு அறிவிக்கப்பட்டவற்றை என் மனதில் நான் நினைத்துப் பார்க்கிறேன். கௌரவர்களைக் காக்கவும், எங்கள் எதிரிகளைக் கொல்லவும் தயாராக இருக்கும் என்னை, புரூரவனின் சிறந்த நடத்தையைக் கைகொள்ளத் தீர்மானித்திருப்பவனாக நீர் அறிந்து கொள்வீராக.(49)
ஓ! மத்ரகர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, இக்காரியத்தில் இருந்து என்னை அகற்றக் கூடிய மனிதன் எவனும் மூவுலகிலும் இருப்பதை நான் காணவில்லை.(50) இவை யாவையும் அறிந்து பேசுவதை நிறுத்துவீராக. ஏன் அச்சத்தால் இவ்வாறு கரைகிறீர்? ஓ! மத்ரகர்களில் இழிந்தவரே, நான் இப்போது உம்மைக் கொன்று, உமது உடலை ஊனுண்ணும் உயிரினங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்க மாட்டேன்.(51) ஓ! சல்லியரே, நட்பைக் கருதுவதாலும், திருதராஷ்டிரர் மகனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, பழியைத் தவிர்ப்பதற்காகவும் என இம்மூன்று காரணங்களாலேயே நீர் இன்னும் உயிரோடு இருக்கிறீர்.(52) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இத்தகு வார்த்தைகளை நீர் மீண்டும் பேசினால், வஜ்ரத்தைப் போன்ற கடினமான என் கதாயுதத்தினால் உமது தலையை நொறுக்கிவிடுவேன்.(53) ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே, இரு கிருஷ்ணர்கள் கர்ணனைக் கொல்வதையோ, கர்ணன் இரு கிருஷ்ணர்களையும் கொல்வதையோ மக்கள் இன்று பார்ப்பார்கள், அல்லது கேட்பார்கள்” என்றான் {கர்ணன்}.(54) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் மத்ரர்களின் மன்னனிடம் {சல்லியனிடம்}, “செல்லும், செல்வீராக” என்று அச்சமில்லாமல் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(55)
------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 40-ல் உள்ள சுலோகங்கள் : 55
ஆங்கிலத்தில் | In English |