“If a person Discovers Arjuna to me?” said Karna! | Karna-Parva-Section-38 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைத் தன்னிடம் காட்டிக் கொடுப்பவனுக்கு, அவன் விரும்பும் பரிசுகளைத் தான் அளிக்கப் போவதாகப் பாண்டவத் துருப்பினரிடம் சொன்ன கர்ணன்; மீண்டும் சல்லியன் கர்ணனிடம் பேசத் தொடங்குவது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படைக்கு மகிழ்வூட்டியபடி கர்ணன் போருக்குப் புறப்பட்ட பிறகு, தான் சந்தித்த ஒவ்வொரு பாண்டவப் படைவீரனிடமும் அவன் {கர்ணன்} இவ்வார்த்தைகளைப் பேசினான்:(1) “வெண்குதிரைகளைக் கொண்ட உயர் ஆன்மத் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று எனக்குச் சுட்டிக் காட்டுபவனுக்கு, அவன் விரும்பும் எந்தச் செல்வத்தையும் நான் அளிப்பேன்.(2) அதைப் பெற்ற பின்பும் அவன் நிறைவடையவில்லையென்றால், அதற்கு மேலும் அதிகமாக நான் கொடுப்பேன். அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு ஒரு வண்டிச்சுமை அளவுக்கு ரத்தினங்களையும், நகைகளையும் அளிப்பேன்.(3) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவன் நிறைவடையவில்லையெனில், அவனுக்கு நூறு பசுக்களையும், அவற்றில் பால் கறப்பதற்காக அதே அளவு பித்தளை பாத்திரங்களையும் கொடுப்பேன்.(4) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு முதன்மையான நூறு கிராமங்களை அளிப்பேன். அர்ஜுனனை எனக்குக் காட்டுபவனுக்கு, கருங்கண்களையும், நீண்ட கூந்தலையும் கொண்ட காரிகைகள் பலரையும், வெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்றையும் அளிப்பேன்.(5)
அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், யானைகள் அளவுக்குப் பெரியவையான ஆறு காளைகள்[1] பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான மற்றுமொரு தேரை நான் அளிப்பேன்.(6) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தங்கக் கழுத்தணி பூண்டவர்களும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களும்[2], பாடல் மற்றும் ஆடலில் சாதித்தவர்களுமான நூறு காரிகைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(7) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், நூறு யானைகளையும், நூறு கிராமங்களையும், நூறு தேர்களையும்,(8) பருத்தவையும், சிறந்த தன்மைகள் பலவற்றைக் கொண்டவையும், தேர்களை இழுக்க வல்லவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான பத்தாயிரம் {10000} குதிரைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(9) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குத் தங்கக் கொம்புகள் கொண்ட நூனூறு பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் கொடுப்பேன்.(10) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாகத் தங்க இழைகளாலும், தங்க நகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஐநூறு {500} குதிரைகளை நான் அவனுக்கு அளிப்பேன். நன்கு கீழ்ப்படியும் தன்மை கொண்ட வேறு பதினெட்டு குதிரைகளையும் நான் கொடுப்பேன்.(11,12) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குப் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், முதன்மையான காம்பாஜக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான பிரகாசமான ஒரு தேரையும் அளிப்பேன்.(13)
[1] “அல்லது இது, “காளைகளாகச் செயல்படும் ஆறு யானைகள் பூட்டப்பட்ட தேர்” என்ற பொருளையும் தரலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “அர்ஜுனனைக் காட்டுகின்ற மனிதன் அதில் திருப்தியடையாவிடில் அவனுக்கு மறுபடியும் ஸ்வர்ணமயமான கஜராஜனே நான் கொடுப்பேன்” என்று சொல்லிவிட்டு, அதற்கு அடிக்குறிப்பாக, “யானை போன்ற வடிவமுள்ள ஆறு காளைக் கட்டிய பொன்னாலாக வேறொரு தேர்”, அல்லது “யானைகளையே காளைகளைப் போல் கட்டிய தேர்” எனப் பொருள் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.[2] இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சியாமை Cyaamaa என்ற சொல், குளர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ந்ததாகவும் உள்ளதும், புடம்போட்ட தங்கத்தைப் போன்றதும், பிரகாசமான நிறத்தைக் கொண்டதுமான தோலை உடைய காரிகை ஒருத்தியைக் குறிக்கும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மிகவும் மதிப்புமிக்கப் பரிசாகக் கழுத்துகளில் தங்க ஆரங்களுடையவையும், தங்க அம்பாரிகளால் மறைக்கப்பட்டவையும், பெருங்கடலின் மேற்குக் கடற்கரைகளில் பிறந்தவையும்,[3] யானைப்பழக்கிகளால் பயிற்சியளிக்கப்பட்டவையுமான அறுநூறு {600} யானைகளை நான் அவனுக்கு அளிப்பேன்.(14,15) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, மக்கள் நிறைந்தவையும், செல்வம் நிறைந்தவையும், காடுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை அருகாமையில் கொண்டவையும், ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவையும், (இன்றியமையாதவை பிறவற்றுடன் சேர்த்து) நன்கு அமைக்கப்பட்டவையும், மன்னர்களால் அனுபவிக்கத் தகுந்தவையுமான பதினான்கு {14} வைசியக் கிராமங்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(16,17) தனஞ்சயனை {அர்ஜுனனை} எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு, தங்கக் கழுத்தணி கொண்டவர்களும், மகதர்களின் நாட்டைச் சேர்ந்தவர்களும், மிக இளவயதுடையவர்களுமான நூறு அடிமைப்பெண்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(18) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, உண்மையில் அவனே வேண்டுவதைக் கொடுப்பேன்.(19) நான் கொண்டுள்ள மகன்கள், மனைவியர், இன்பங்கள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் அவன் விரும்பினால் நான் கொடுப்பேன்[4].(20) உண்மையில், கேவசவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் நான் கொன்ற பிறகு, அவர்களை எனக்குக் கண்டுபிடித்துத் தந்தவனுக்கு, அவர்களிடம் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம்} எஞ்சியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுப்பேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(21)
[3] “இந்த வெளிப்பாட்டில் ஆப்ரிக்கா பற்றிய குறிப்பைக் கண்டுபிடிக்க முடியும் என நான் நினைக்கிறேன். இங்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலச் சொல் அபராந்தேஷு aparaanteshu ஆகும், அதாவது மறுமுனை என்பதாகும். இது கிட்டத்தட்ட, நான் இட்டிருப்பதைப் போலக் கடலின் மறுகரை என்ற பொருளைக் கொண்டதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] வேறொரு பதிப்பில், “பிள்ளைகளையும், பெண்டாட்டியையும் தவிர, என்னிடம் வேறு எந்தப் பொருள் இருக்கிறதோ அதையும், பின்னும் எந்த எந்த வஸ்துவை மனத்தினால் விரும்புகிறானோ அந்த அந்த வஸ்துவையும் நான் அவனுக்குக் கொடுப்பேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “அர்ஜுனனை எனக்குக் காட்டும் மனிதன் இது போதவில்லை எனக் கருதினால் நான் அவனுக்கு, அவன் விரும்பும் வேறு வரத்தையும் கொடுப்பேன். மகன்கள், மனைவியர் மற்றும் செல்வங்களை நான் கொண்டுள்ளேன். அவன் விரும்பினால், இவற்றை நான் அவனுக்குக் கொடுப்பேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியின் பதிப்பிலுள்ள சுலோகம் எண் 14 முதல் 20வரையிலான செய்திகள் எதுவும் இல்லை.
அந்தப் போரில் இப்படிப் பல்வேறு பேச்சுகளைப் பேசிய கர்ணன், கடலில் பிறந்ததும், இனிய ஒலியை உண்டாக்குவதுமான தன் சிறந்த சங்கை எடுத்து ஊதினான்.(22) சூதன் மகனின் நிலைக்குத் தகுந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியில் நிறைந்தவன் ஆனான்.(23) அந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் காளையே, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில், மிருதங்கங்கள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்கள், சிங்க முழக்கங்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியன அங்கே பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளோடு கலந்து எழுந்தன. மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்களின் கூச்சல்களும் அங்கே எழுந்தன.(24,25) இவ்வாறு (கௌரவத்) துருப்புகள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த போது, வெறுப்புடன் சிரித்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போரெனும் பெருங்கடலுக்குள் மூழ்கச் செல்பவனும், இத்தகு வீண் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}[5].(26)
--------------------------------------------------------------------------[5] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதியில் மொத்தம் 19 சுலோகங்களே இருக்கின்றன. வேறொரு பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் எந்தப் பகுதியிலும் சுலோக எண்கள் சுட்டப்படுவதில்லை. பல பகுதிகளின் செய்திகள் முன்னுக்குப்பின்னாக மாறி மாறியே வருகின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பு எல்லாப் பகுதிகளிலும், இந்தப் பகுதியைப் போன்ற சிலவற்றைத் தவிரக் கங்குலியின் பதிப்புடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்றது.
கர்ண பர்வம் பகுதி 38-ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |