The curses obtained by Karna! | Karna-Parva-Section-42 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பரசுராமரிடம் தான் பெற்ற சாபத்தைச் சொன்ன கர்ணன்; பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தது; புழுவாக வந்து கர்ணனின் தொடையைத் துளைத்த இந்திரன்; நடந்ததை அறிந்த பரசுராமர்; உண்மையைச் சொன்ன கர்ணன்; பரசுராமரின் சாபம்; நண்பன் மற்றும் எதிரிக்கிடையிலான வேறுபாட்டைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன் அவனை நிந்திப்பது; யாரிடமும் அஞ்சாத தான், ஒரு பிராமணரின் சாபத்திற்கு அஞ்சுவதாகச் சொன்ன கர்ணன்; ஹோமப்பசுவின் கன்றைக் கொன்ற கர்ணன்; பிராமணரின் சாபம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதிரதனின் உயர் ஆன்ம மகன் {கர்ணன்}, நம்பிக்கையே இல்லாமல் மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்தச் சல்லியனிடம், “வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனைக் குறித்தது நான் நன்கு அறிந்ததே.(1) தேர்களைச் செலுத்துவதில் சௌரியின் {கிருஷ்ணனின்} திறன், பாண்டுவின் மகனான அர்ஜுனனுடைய உயர்ந்த ஆயுதங்களின் வல்லமை ஆகியவை இந்நேரத்தில் நான் நன்கறிந்தவையே. எனினும், ஓ! சல்லியரே, அக்காரியங்களின் விழிச் சான்று உம்மிடம் இல்லை {அவற்றை நீர் கண்டதில்லை}.(2) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரிடமும் நான் அச்சமின்றிப் போரிடுவேன். எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான ராமரின் {பரசுராமரின்} சாபம், இன்று என்னைப் பெரிதும் துன்புறுத்துகிறது.(3) முன்பொரு சமயம், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து தெய்வீக ஆயுதங்களைப் பெற விரும்பி ஒரு பிராமணனின் வேடத்தில் அவருடன் நான் வசித்து வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ! சல்லியரே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஒரு புழுவின் கடும் வடிவத்தை ஏற்று என் தொடையை அணுகி அதைத் துளைத்து ஒரு தடையை உண்டாக்கினான்.(4) என் ஆசான் {பரசுராமர்}, எனது தொடையில் தலையை வைத்து உறங்கிக் கொண்டிருக்கையில், அதை {என் தொடையை} அணுகி அதைத் துளைக்கத் தொடங்கினான். என் தொடை துளைக்கப்பட்டதன் விளைவால், என் உடலில் இருந்து அடர்த்தியான குருதி வெள்ளம் பாய்ந்தது.(5)
என் ஆசானிடம் (அவரது உறக்கத்தினைக் கலைப்பதில்) கொண்ட அச்சத்தினால் நான் என் அங்கத்தை அசைக்காமல் இருந்தேன். எனினும் அந்தப் பிராமணர் விழித்துக் கொண்டதும் அங்கு நடந்ததைக் கண்டார். என் பொறுமையைக் கண்ட அவர் {பரசுராமர்}, என்னிடம் “நீ பிராமணனே அல்ல. நீ யார் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றார்.(6) ஓ! சல்லியரே, நான் ஒரு சூதன் என்பதைச் சொல்லி அவரிடம் உண்மையைக் கூறினேன். என் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் தவசி, சினத்தால் இதயம் நிறைந்து, “ஓ! சூதா, வஞ்சகத்தின் விளைவால் நீ இவ்வாயுதத்தை அடைந்ததால், உன் மரணத்திற்கான காலம் வரும்போது, தேவையேற்படும் சமயத்தில் இஃது உன் நினைவில் தோன்றாது. பிராமணனாக இல்லாத ஒருவனிடம் நிச்சயம் பிரம்மன் வசிக்கமாட்டான்” என்று சபித்தார்[1].(8) கடுமையானதும், பயங்கரமானதுமான இந்தப் போரில் அந்தப் பெரும் ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைக்} நான் மறந்துவிட்டேன் [2].(9) ஓ! சல்லியரே, பாரதர்களுக்கு மத்தியில் சாதித்தவனும், பெருந்திறனுடன் தாக்குபவனும், அண்ட அழிவை ஏற்படுத்துபவனும், வலிமையாக நொறுக்குபவனுமான அந்த மிகப் பயங்கரமானவன் (அர்ஜுனன்), க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை எரித்துவிடுவான் என்றே நான் நினைக்கிறேன்.(10)
[1] வேறொரு பதிப்பில், “ஸூத, உன்னால் அடையப்பட்ட இந்தப் பிரம்மாஸ்திரம் உன் பிதிஜ்ஞையைக் காப்பாற்றுகிற தருணத்தில் தோன்றாமல் போகுக. உனக்கு மரணகாலத்தைத் தவிர மற்ற காலத்திலோ உன்னிடத்திலிருக்கும் பிராம்மணனல்லாதவனிடம் வேதமந்திரம் நிலைபெற்றிராது” என்று பரசுராமர் சபித்ததாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[2] வேறொரு பதிப்பில் மறந்துவிட்டேன் என்ற வார்த்தை இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
எனினும், ஓ! சல்லியரே, கடும் வில்லாளியும், போர்வீரர்களில் முதன்மையானவனும், சுறுசுறுப்புடைய வீரனும், தாங்கிக் கொள்ள முடியாத சக்தியைக் கொண்டவனும், பயங்கரமானவனும், உறுதிமொழிகளைச் சாதித்த போர்வீரனும், பாண்டுவின் மகனுமான அந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போரில் நான் கொல்வேன் என்பதை அறிவீராக.(11) எதிரிகளைப் பெருமளவில் அழிக்கவல்ல அந்த ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இன்று நான் என் காட்டுப்பாட்டில் (கட்டுப்பாட்டிலாவது) வைத்திருக்கிறேன்[3]. எதிரிகளை எரிப்பவனும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்கப் போர்வீரனும், அளவிலா சக்தி கொண்ட கடும் வில்லாளியும், கொடுரமான, பயங்கரமான வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போரில் நான் கொல்வேன்.(12) நீர்நிலைகள் அனைத்தின் தலைவனும், அளக்கமுடியாதவனுமான பெருங்கடலானவன் {சமுத்திரராஜன்}, எண்ணிலா உயிரினங்களை மூழ்கடிப்பதற்குக் கடும் மூர்க்கத்துடன் விரைகிறான். எனினும், கரைகள் அவனைப் பிடித்துத் தடுத்து விடுகின்றன.(13) இன்று, இவ்வுலகில், வில்லின் நாணை இழுப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான குந்தியின் மகன் {அர்ஜுனன்}, நல்ல சிறகுகளைக் கொண்டவையும், வீரர்களுக்கு அழிவை உண்டாக்குபவையும், அனைத்து அங்கங்களையும் ஊடுருவவல்லவையும், அவற்றில் எதுவும் பொய்க்காதவையுமான எண்ணிலா கணைகளை இடையறாமல் தொடுத்துக் கொண்டிருக்கும்போது, அவனோடு {அர்ஜுனனோடு} போரிடும் நான் அவனைத் தடுப்பேன்.(14) வலிமையிலும் வலிமைமிக்கவனும், உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட போர்வீரனும், பெருங்கடலைப் போன்ற வீரனும், நெடுந்தொலைவை அடையக்கூடியவையும், கடுமையானவையுமான கணைகளையே அலைகளாகக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} (பகை) மன்னர்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது, பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, நான் இன்று அவனைத் தடுப்பேன்.(15)
[3] வேறொரு பதிப்பில், “தனஞ்சயனை மிருத்யுவினுடைய முகத்தை அடையும்படி செய்வேன். பரசுராமரால் கொடுக்கப்பட்டிருக்கிற அஸ்திரத்தைத் தவிர, யுத்தத்தில் பகைவர்களை நாசம் செய்யக்கூடிய வேறோர் அஸ்திரமும் இப்போது என்னிடமிருக்கிறது” என்று கர்ணன் சொல்வதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தத் தகவல் இல்லை.
நான் இன்று அவனோடு {அர்ஜுனனோடு} போரிடும்போது, வில் தரிக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இணையேதும் இல்லாததும், ஒன்றுசேர்ந்திருக்கும் தேவாசுரர்களையே வெல்லவல்லதுமான அந்தக் கடும்போரைக் காண்பீராக.(16)
அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பெருஞ் செருக்குடனே இருக்கிறான். போரிட விரும்பும் அவன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட தனது வலிமைமிக்க ஆயுதங்களுடன் என்னை அணுகுவான். போரில் என் ஆயுதங்களால் அவனுடைய ஆயுதங்களைக் கலங்கடிக்கும் நான், என் அற்புதக் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனை} இன்று வீழ்த்துவேன்.(17)
கடுங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலத் தன் எதிரிகளை எரித்து, இருளையகற்றுபவனைப் போலவே தழலுடன் சுடர்விடும் நான் மேகத் திரள்களைப் போலவே, என் கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று முற்றாக மறைப்பேன்.(18)
பெரும் சக்தியைக் கொண்டதும், புகை கலந்ததும், உலகம் முழுவதையும் எரிக்கத் தயாராக இருப்பதைப் போலத் தெரிவதுமான தழல்களைக் கொண்ட சுடர்மிக்க நெருப்பை அணைக்கும் மேகங்களைப் போல நான் என் கணை மழையால் போரில் குந்தியின் மகனை அழிப்பேன்.(19)
கடும் நஞ்சுமிக்கதும், பிடிபட மிகக் கடினமானதும், கூரிய நச்சுப்பற்களைக் கொண்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போன்றதும், கோபத்தால் எரிவதும், தன் எதிரிகளை எப்போதும் எரிப்பதுமான பயங்கரப் பாம்பான அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} என் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அசையாமல் தடுக்கப் போகிறேன்.(20)
அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பெருஞ் செருக்குடனே இருக்கிறான். போரிட விரும்பும் அவன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட தனது வலிமைமிக்க ஆயுதங்களுடன் என்னை அணுகுவான். போரில் என் ஆயுதங்களால் அவனுடைய ஆயுதங்களைக் கலங்கடிக்கும் நான், என் அற்புதக் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனை} இன்று வீழ்த்துவேன்.(17)
கடுங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலத் தன் எதிரிகளை எரித்து, இருளையகற்றுபவனைப் போலவே தழலுடன் சுடர்விடும் நான் மேகத் திரள்களைப் போலவே, என் கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று முற்றாக மறைப்பேன்.(18)
பெரும் சக்தியைக் கொண்டதும், புகை கலந்ததும், உலகம் முழுவதையும் எரிக்கத் தயாராக இருப்பதைப் போலத் தெரிவதுமான தழல்களைக் கொண்ட சுடர்மிக்க நெருப்பை அணைக்கும் மேகங்களைப் போல நான் என் கணை மழையால் போரில் குந்தியின் மகனை அழிப்பேன்.(19)
கடும் நஞ்சுமிக்கதும், பிடிபட மிகக் கடினமானதும், கூரிய நச்சுப்பற்களைக் கொண்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போன்றதும், கோபத்தால் எரிவதும், தன் எதிரிகளை எப்போதும் எரிப்பதுமான பயங்கரப் பாம்பான அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} என் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அசையாமல் தடுக்கப் போகிறேன்.(20)
வலிமைமிக்கவனும், அனைத்தையும் நொறுக்குபவனும், மூர்க்கமானவனும், தாக்கும் தேவனுமான வாயுவை அசையாமல் தடுக்கும் இமயத்தைப் போல நான் கோபக்காரனும், பழிவாங்குபவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தடுப்பேன்.(21)
உலகில் வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகள் அனைவரையும் சந்திக்கவல்லவனும், தேர்த்தடங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவனும், போரிடுவதில் வீரனுமான தனஞ்சயனைப் போரில் நான் தடுப்பேன்.(22)
வில் தரிக்கும் மனிதர்களில் இணையில்லாதவனும், மொத்த உலகத்தையும் வென்றவனுமான அவனுடன் {அர்ஜுனனுடன்} இன்று நான் போரிடுவேன்.(23)
காண்டவம் என்றழைக்கப்படும் நாட்டில் {காட்டில்} தேவர்கள் உட்பட அனைத்தை உயிரினங்களையும் வென்ற சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} என்னைத் தவிரத் தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் வேறு எந்த மனிதன்தான் போரிடுவான் {போரிட விரும்புவான்}?(24) அர்ஜுனன் செருக்குடையவன்; அவனது ஆயுதங்களோ ஆழமாகத் தாக்குபவை; அவன் குதிரைகளை நன்கறிந்தவன்; பெரும் படைகளைக் கலங்கடிக்கவல்லவன்; அதிரதனாக அவன் கருதப்படுகிறான். இவ்வாறெல்லாம் இருந்தாலும், நான் இன்று என் கூரிய கணைகளால் அவனது {அர்ஜுனனது} உடலிலிருந்து தலையை அறுத்தெடுக்கப் போகிறேன்.(25)
உலகில் வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகள் அனைவரையும் சந்திக்கவல்லவனும், தேர்த்தடங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவனும், போரிடுவதில் வீரனுமான தனஞ்சயனைப் போரில் நான் தடுப்பேன்.(22)
வில் தரிக்கும் மனிதர்களில் இணையில்லாதவனும், மொத்த உலகத்தையும் வென்றவனுமான அவனுடன் {அர்ஜுனனுடன்} இன்று நான் போரிடுவேன்.(23)
காண்டவம் என்றழைக்கப்படும் நாட்டில் {காட்டில்} தேவர்கள் உட்பட அனைத்தை உயிரினங்களையும் வென்ற சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} என்னைத் தவிரத் தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் வேறு எந்த மனிதன்தான் போரிடுவான் {போரிட விரும்புவான்}?(24) அர்ஜுனன் செருக்குடையவன்; அவனது ஆயுதங்களோ ஆழமாகத் தாக்குபவை; அவன் குதிரைகளை நன்கறிந்தவன்; பெரும் படைகளைக் கலங்கடிக்கவல்லவன்; அதிரதனாக அவன் கருதப்படுகிறான். இவ்வாறெல்லாம் இருந்தாலும், நான் இன்று என் கூரிய கணைகளால் அவனது {அர்ஜுனனது} உடலிலிருந்து தலையை அறுத்தெடுக்கப் போகிறேன்.(25)
ஓ! சல்லியரே, எப்போதும் மரணத்தையோ, வெற்றியையோ {மட்டுமே} என் முன்னால் கொள்ளும் நான், இன்று தனஞ்சயனோடு போரிடப்போகிறேன். அந்தகனுக்கு ஒப்பான அந்தப் பாண்டவனுடன் தனித்தேரில் போரிடக்கூடியவன் என்னைத் தவிர வேறு எவனுமில்லை.(26) க்ஷத்திரியர்களுடைய சபைகளின் மத்தியில் பல்குனனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் குறித்து நானே மகிழ்ச்சியாகவே பேசுவேன். எனினும், மூடரும், மூட அறிவு கொண்டவருமான நீர் அர்ஜுனனின் ஆற்றலைக் குறித்து என்னிடம் ஏன் பேசுகிறீர்.(27) ஏற்பில்லா {இனிமையற்ற} செயல்களைச் செய்பவர் நீர். கொடூரராகவும், அற்பராகவும், பொறுமையற்றவருமான {மன்னிக்கும் இயல்பற்றவருமான} நீர், பொறுமை சாலிகளைச் சிறுமைபடுத்துகிறீர். உம்மைப் போன்ற நூறு நபர்களை என்னால் கொல்ல முடியும் என்றாலும், மன்னிக்கும் இயல்பிலான என் மனநிலையின் விளைவால், காலத்தின் உடனடித் தேவையைக் கருத்தில் கொண்டு உம்மை நான் மன்னிக்கிறேன்.(28) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர் நீர். பாண்டுவின் மகனுக்காக {அர்ஜுனனுக்காக}, ஏற்பில்லாத பலவற்றைச் சொல்லி ஒரு மூடனைப் போல என்னை ஏன் நீர் நிந்திக்கிறீர்? கோணல் மனம் கொண்ட நீர், நேர்மையான இதயம் கொண்ட என்னிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொன்னீர். நட்பு என்பது ஏழு எட்டுகள்[4] கொண்டதாகையால் நண்பனான {என்னைப் போன்ற} நண்பர்களுக்குத் தீங்கிழைக்கும் நீர் சபிக்கப்பட்டவராவீர்.(29) இப்போது {நாம்} கடந்து வரும் காலம் பயங்கரமானதாகும். துரியோதனனே நேராகப் போரிட வந்திருக்கிறான். அவனது நோக்கங்கள் நிறைவேற ஆவல் கொண்டவனாக நான் இருக்கிறேன். எனினும், (குரு மன்னனிடம்) எந்த நட்பும் இல்லாதவரைப் போலவே உமது செயல்பாடுகள் உம்மைக் காட்டுகின்றன.(30)
[4] மூலத்தில் சப்தபாதம் Saptapada என்றிருக்கிறது “ஏழு எட்டுகள் உடன் நடந்தால் அவன் நண்பன் என்பார்கள், அப்படிப்பட்ட நண்பர்களுக்குத் தீங்கிழைக்கும் நீர் சபிக்கப்பட்டவராவீர்” என்பது இங்கே பொருள்.
வேறொரு பதிப்பில், “நீ மூடன் போல என்னை அவமதித்துக் கொண்டு பாண்டவனுக்குப் பிரியமான வார்த்தைகளைச் சொன்னாய். ருஜுவான புத்தியுடையவனான என்னிடத்தில் நீ என்ன காரணத்தினால் கொடிய மனமுள்ளவனும், மித்திரதுரோகியுமாகிவிட்டாய்? ஏழு வார்த்தை சொல்வதினாலே ஸ்னேகம் ஏற்படுகிறதன்றோ?” என்று இருக்கிறது.
மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.பிபேக்திப்ராயின் பதிப்பில், “பாண்டவர்களுக்காக நீ என்னிடம் இனிமையற்ற வார்த்தைகளைப் பேசினாய். தீய செயல்களைச் செய்யும் மூடனைப் போல நீ என்னை நிந்தித்தாய். நான் அதற்குத் தகுந்தவனல்ல. இருப்பினும் நீ உன் நாவால் என்னைத் தாக்கினாய். நீ நண்பர்களை வெறுப்பவனாவாய். ஒருவன் இன்னொருவனோடு ஏழு எட்டுகள் உடன் நடந்தால் அவனுடைய நண்பனாகிறான்” என்றிருக்கிறது.
ஒருவனிடம் பற்றைக் காட்டுபவனும் {பாசம் கொண்டவனும்}, அவனை மகிழ்விப்பவனும், அவனைக் கௌரவிப்பவனும், அவனது இன்பங்களில் மகிழ்பவனுமான மற்றொருவனே நண்பன் எனப்படுகிறான். இந்தப் பண்புகள் அனைத்தையும் நான் கொண்டுள்ளேன், இவை யாவற்றையும் மன்னனும் {துரியோதனனும்} அறிவான் என்பதை நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.(31) மறுபுறம், நம்மை அழிப்பவனும், தண்டிப்பவனும், தன் ஆயுதங்களைக் கூராக்குபவனும், காயப்படுத்துபவனும், நம்மைப் பெருமூச்சு விடச் செய்பவனும், நம்மை உற்சாகமற்றவர்களாகச் செய்பவனும், பல்வேறு வழிகளில் நமக்குத் தீங்கிழைப்பவனுமான ஒருவன் எதிரி எனப்படுவான். இந்தப் பண்புகள் அனைத்தும் உம்மிடம் காணப்படுகின்றன, மேலும் நீரும் இவை யாவற்றையும் என்னிடம் காண்கின்றீர்[5].(32) துரியோதனனுக்காகவும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், வெற்றிக்காகவும், எனக்காகவும், கடவுளுக்காகவும், மிகத் தீவிரமாக முயன்று பார்த்தனுடனும் {அர்ஜுனனுடனும்}, வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} நான் போரிடுவேன். என் அருஞ்செயல்களை இன்று காண்பீராக.(33) என் சிறந்த ஆயுதங்களான பிரம்மாயுதத்தையும், பிற தெய்வீக ஆயுதங்களையும், மனித ஆயுதங்களையும் இன்று காண்பீராக. மதங்கொண்ட எதிராளியைக் கொல்லும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலவே, கடும் ஆற்றலைக் கொண்ட அந்த வீரனை {அர்ஜுனனை} நான் இன்று கொல்வேன்.(34) பிரம்மம் என்றழைக்கப்படும் அளவிலா சக்தி கொண்ட அந்த ஆயுதத்தை, என் வெற்றிக்காக இன்று பார்த்தன் மீது என் மனத்தாலேயே ஏவுவேன். இன்றைய போரில் என் தேர்ச்சக்கரங்கள் பூமிக்குள் புதையவில்லையென்றால், அந்த ஆயுதத்திடம் இருந்து அர்ஜுனனால் தப்ப இயலாது.(35) ஓ! சல்லியரே, தண்டம் தரித்து வரும் யமனிடமோ, சுருக்கு {பாசம்} தரித்து வரும் வருணனிடமோ, கதாயுததாரியாக வரும் குபேரனிடமோ, வஜ்ரதாரியாக வரும் வாசவனிடமோ {இந்திரனிடமோ}, என்னைக் கொல்வதற்காக அணுகும் வேறு எந்த எதிரியிடமோ நான் அச்சங்கொள்வதில்லை என்று நீர் அறிவீராக.(36,37) எனவே, நான் பார்த்தனிடமோ, ஜனார்த்தனனிடமோ {கிருஷ்ணனிடமோ} எந்த அச்சமும் கொள்ளவில்லை. மறுபுறம், அழிவுமிக்க இன்றைய போரில் நான் அந்த இருவருடனும் மோதுவேன்.(38)
[5] வேறொரு பதிப்பில் மேற்கண்ட இரு சுலோகங்களும், “நேசத்தாலும், ஸந்தோஷப்படுத்துவதாலும், பிரீதியினாலும், ரக்ஷணத்தினத்தாலும், கௌரவிப்பதினாலும், உடன் மகிழ்வதாலும் மித்ரம் என்கிற சொல் ஏற்படுகிறது. இவையெல்லாம் எனக்குத் துரியோதனன் விஷயத்தில் இருக்கின்றன. என்னிடத்திலுள்ள அவையெல்லாவற்றையும் அரசன் அறிகிறான். அழிப்பதனாலும், கட்டளையிடுவதனாலும், இளைக்கச் செய்வதினாலும், ஹிம்ஸையினாலும், பெருமூச்சு விடச்செய்வதினாலும், வாடச் செய்வதாலும், ஸ்ரமத்தை உண்டுபண்ணுவதினாலும், சோகத்தை உண்டுபண்ணுவதாலும் மிகுதியாக நாசத்தை உண்டு பண்ணுவதாலும் சத்துரு என்கிற சொல் ஏற்படுகிறது. பெரும்பான்மையாக அவையனைத்தும் உன்னிடத்திலும் என்னிடத்திலுமுள்ளன” என்றிருக்கிறது.
ஒரு காலத்தில், விஜயம் என்றழைக்கப்படும் என் வில்லைக் கொண்டு ஆயுதங்களில் பயிற்சி எடுப்பதற்காகத் திரிந்து, ஓ! மன்னா {சல்லியரே}, பயங்கர வடிவங்களிலான கடுங்கணைகளை ஏவிக்கொண்டிருந்த போது, அந்தத் தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்த (ஒரு பிராமணரின்) ஹோமப் பசுவின் கன்றை அக்கணைகளில் ஒன்றால் கவனமில்லாமல் தாக்கி, என் விருப்பமில்லாமலேயே கொன்றுவிட்டேன். அப்போது அந்தப் பிராமணர் என்னிடம், “என் ஹோமப்பசுவின் கன்றை நீ உணர்வில்லாமல் கொன்றுவிட்டதால், போரிடுங்காலத்தில் உன் இதயத்திற்குள் அச்சம் நுழையும்போது, (உன் தேரின்) சக்கரம் பூமியில் புதைந்து போகட்டும்” என்று சொன்னார்.(41) பிராமணரின் இந்த வார்த்தைகளிலேயே நான் பெரும் அச்சமடைகிறேன். சந்திர குலத்தவரும், (பிற மக்களின்) இன்ப துன்பங்களுக்குத் தலைவர்களுமான இந்த மன்னர்கள்,(42) அந்தப் பிராமணருக்கு ஓராயிரம் பசுக்களையும், அறுநூறு காளை மாடுகளையும் கொடுக்க முன்வந்தனர். ஓ! சல்லியரே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இத்தகு கொடையாலும் அந்தப் பிராமணர் மனநிறைவு கொள்ளவில்லை.(43) பிறகு நான் அவருக்குப் பெரிய தந்தங்களையுடைய எழுநூறு {700} யானைகளையும், பல்லாயிரக்கணக்கான அடிமைகளையும், அடிமைப்பெண்களையும் தருவதாகச் சொன்னேன். அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் அதிலும் மனம் நிறையவில்லை.(44) அடுத்ததாக, கருப்பு நிறமுள்ளவையும், வெண்ணிற கன்றைக் கொண்டவையுமான பதினான்காயிரம் {14000} பசுக்களைத் திரட்டினாலும், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரின் அருளை என்னால் அடைய முடியவில்லை.(45) ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தாலும் நிறைந்த செழிப்புமிக்க மாளிகை ஒன்றை அவருக்கு உரிய வழிபாடுகளுடன் நான் கொடுக்க விரும்பினாலும், அந்தக் கொடையைப் பெற அவர் மறுத்துவிட்டார்.(46)
குற்றமிழைத்துவிட்டு, விடாப்பிடியாக அவரது மன்னிப்பை இரந்து கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் அந்தப் பிராமணர், “ஓ! சூதா, நான் சொன்னவை நடந்தே தீரும். அது வேறு வகையாக முடியாது. பொய்மையானது, உயிரினங்களை அழித்துவிடும், பாவமும் எனதாகும். எனவே, அறத்தைப் பேணிக்காப்பதற்காகவே, பொய்மை பேச நான் துணிவதில்லை.(47,48) பிராமணனின் ஆதாரவழிகளை மீண்டும் அழிக்காதே. என் பேச்சைப் பொய்யாக்க இவ்வுலகில் எவனும் கிடையாது. அவ்வார்த்தைகளை ஏற்றுக் கொள்வாயாக. அது (கன்றைக் கொன்ற பாவத்திற்கு) ஓர் ஈடாக {பரிகாரமாக} உனக்கு அமையும்” என்றார்.(49) உம்மால் கடிந்துரைக்கப்பட்டாலும், நட்பின் நிமித்தமாக நான் உமக்கு இவையாவையும் வெளிப்படுத்தினேன். இவ்வாறு கடிந்துரைக்கும் உம்மை நான் அறிவேன். இப்போது அமைதியாக இருந்து, நான் தற்சமயம் சொல்லப்போவதைக் கேட்பீராக” என்றான் {கர்ணன்}.(50)
-------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -42ல் உள்ள சுலோகங்கள் : 50
கர்ண பர்வம் பகுதி -42ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |