Red-eyed Crow and the Swan! | Karna-Parva-Section-41 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : காக்கை மற்றும் அன்னத்தைக் குறித்த கதையொன்றைக் கர்ணனுக்குச் சொன்ன சல்லியன்; அந்த உவமைக் கதையில் வரும் காக்கையைப் போன்றவனே கர்ணன் என்று அவனை நிந்தித்த சல்லியன்; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பாதுகாப்பை நாடுமாறு கர்ணனுக்கு அறிவுரை கூறிய சல்லியன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் மகிழ்ச்சி கொள்பவனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் மீண்டும் கர்ணனிடம் ஓர் உதாரணத்தைச் சொல்லிப் பேசினான்.(1) {அவன்}, “பெரும் வேள்விகளைச் செய்தவர்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காதவர்களும், புனித நீராடலுடன் மணிமுடி தரித்த மன்னர்களும் உதித்த குலத்தில் பிறந்தவன் நான். மேலும் நானும் அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புள்ளவனே.(2) ஓ! விருஷா {கர்ணா}, மதுவின் போதையிலிருப்பவனைப் போலவே நீ தெரிகிறாய். போதையிலிருக்கும் உன்னையும், உனது தவறையும் நட்பின் காரணமாகவே நான் சீராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.(3) ஓ! கர்ணா, ஒரு காகத்தைக் குறித்து நான் சொல்லப்போகும் உவமையைக் கேட்பாயாக. அதைக் கேட்டதும், ஓ! மதியற்றவனே, உன் குலத்தில் இழிந்தவனே, நீ தேர்ந்தெடுப்பதையே செய்வாயாக.(4)
ஓ! கர்ணா, அப்பாவியான என்னை நீ கொல்ல விரும்பும் அளவுக்கு, என்னிடம் ஒரு சிறு தவறையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.(5) நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் அறிந்திருப்பதாலும், குறிப்பாக நான் உனது தேரின் சாரதியாக இருப்பதாலும், மன்னன் துரியோதனனின் நன்மையை நான் விரும்புவதாலும், உனக்கு எது நன்மை, எது தீமை என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.(6) இந்தத் தேருக்கு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவனும், இதன் சாரதியாக இருப்பவனுமான நான், சமமான தரை எது? சமமற்றது எது? (என் வாகனத்தில் உள்ள) போர்வீரனின் பலம், அல்லது பலவீனம், அனைத்து நேரங்களிலும் (நான் செலுத்தும்) குதிரைகள் மற்றும் போர்வீரனின் களைப்பு மற்றும் மயக்கம்,(7) இருப்பிலுள்ள ஆயுதங்களின் அறிவு, விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகள், குதிரைகளுக்குக் கனமானவை எவை? மிகக் கனமானவை எவை? கணைகளைப் பிடுங்குதல், காயங்களை ஆற்றுதல்,(8) ஆயுதங்களுக்கு எதிர்வினையாற்றும் ஆயுதங்கள் எவை? பல்வேறு போர்முறைகள், அனைத்து வகைகளிலான சகுனங்கள் மற்றும் குறியீடுகள் என்பன போன்றவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஓ! கர்ணா, இதற்காகவே, இந்த உதாரணத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கிறேன்.(9)
பெருங்கடலின் மறுபக்கத்தில், அபரிமிதமான செல்வமும், சோளமும் {தானியமும்} கொண்டிருந்த வைசியன் ஒருவன் இருந்தான். அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தாராளமான கொடைகளை அளிப்பவனாகவும், அமைதி நிறைந்தவனாகவும், தன் வகைக்கான {வைசிய} கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருந்தான், பழக்கவழக்கங்களாலும், மனத்தாலும் தூய்மையானவனாகவும் இருந்தான்.(10) அவன் தன் அன்புக்குரிய மகன்களாகப் பலரைக் கொண்டிருந்தான், உயிர்கள் அனைத்திடமும் அன்புடனும் இருந்தான். அறத்தால் வழிநடத்தப்பட்ட ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிளுக்குள் அவன் அச்சமில்லாமல் வாழ்ந்து வந்தான்.(11) நன்னடத்தைக் கொண்டவர்களான அந்த வைசியனின் இளம் மகன்களின் உணவில் எஞ்சியவற்றைக் கொண்டு {எச்சிலுணவை உண்டு} வாழ்ந்து வந்த காகம் ஒன்று அங்கே இருந்தது.(12) அந்த வைசியக் குழந்தைகள் இறைச்சி, தயிர், பால், பாயாசம், தேன், நெய் ஆகியவற்றை எப்போதும் அந்தக் காக்கைக்குக் கொடுத்து வந்தனர்.(13) அந்த வைசியப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியவற்றால் இவ்வாறு உணவூட்டப்பட்டு வந்த அந்தக் காக்கையானது ஆணவம் கொண்டு, தனக்கு இணையான அனைத்துப் பறவைகளையும், ஏன் மேன்மையான பறவைகளையும்கூட அலட்சியம் செய்து {அவமதித்து} வந்தது.(14)
ஒரு சமயத்தில், உற்சாகமான இதயங்களையும், பெரும் வேகத்தையும் கொண்டவையும், எண்ணிய இடம் எங்கும் செல்ல வல்லவையும், செல்லும் தொலைவிலும், பறக்கும் வேகத்திலும் கருடனுக்கு இணையானவையுமான குறிப்பிட்ட சில அன்னங்கள் {ஹம்சங்கள்} பெருங்கடலின் அந்தப் பக்கத்திற்குத் தற்செயலாக வந்தன.(15) அந்த அன்னங்களைக் கண்ட வைசியச் சிறுவர்கள், அந்தக் காக்கையிடம், “ஓ! வானுலாவியே {காக்கையே}, சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் நீயே மேன்மையானவன்” என்றனர்.(16) அற்ப அறிவு கொண்டவர்களான அந்தப் பிள்ளைகளால் வஞ்சிக்கப்பட்ட அந்த முட்டையிடும் உயிரினம் {காக்கை}, மடமையினாலும், செருக்காலும் அந்த வார்த்தைகளை உண்மையென்றே கருதியது.(17) அந்தப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியதை உண்டு செருக்கடைந்திருந்த அந்தக் காகம், பெரும் தொலைவுகளைக் கடக்க வல்ல அந்த அன்னங்களுக்கு மத்தியில் பறந்து சென்று, அவற்றின் தலைவன் யார் என்பதை விசாரிக்க விரும்பியது.(18) இறுதியாக அந்த மடக் காக்கையானது, களைப்பில்லா சிறகுகளைக் கொண்ட அந்தப் பறவைகள், எதனைத் தங்களில் தலைவனாகக் கருதினவோ, அதனிடம், “பறப்பதில் நாம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோமா?” என்று அறைகூவியழைத்தது.(19)
அங்கே கூடியிருந்தவையும், பெரும் பலம் கொண்ட முதன்மையான பறவைகளுமான அந்த அன்னங்கள், கரையும் காக்கையின் அந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கத் தொடங்கின.(20) அப்போது, விரும்பிய எங்கும் செல்லவல்ல அந்த அன்னங்கள், அந்தக் காக்கையிடம்,(21) “அன்னங்களாகிய நாங்கள், மானஸத் தடாகத்தில் எங்கள் வசிப்பிடத்தைக் கொண்டவர்களாவோம். உலகம் முழுவதையும் நங்கள் கடந்து வருகிறோம். நாங்கள் சிறகுபடைத்த உயிரினங்களுக்கு மத்தியில் கடக்கும் தொலைவுகளுக்காகவே நாங்கள் மெச்சப்படுகிறோம்.(22) ஓ! மூடா, ஒரு காகமாக இருந்து கொண்டு, நினைத்த எங்கும் செல்லவல்லவனும், பெரும் வலிமை கொண்டவனும், பறக்கையில் பெரும் தொலைவுகளைக் கடப்பவனுமான ஓர் அன்னத்தை நீ அறைகூவியழைப்பது எவ்வாறு? சொல், ஓ! காகமே, நீ எவ்வாறு எங்களோடு பறப்பாய்?” என்று கேட்டது.(23)
தற்பெருமை நிறைந்த அந்தக் காகம், தன் இனத்துடைய மடமையின் விளைவால், மீண்டும், மீண்டும் அவ்வன்னத்தின் வார்த்தைகளில் குறை கண்டுபிடித்து, இந்தப் பதிலை அளித்தது.(24) அந்தக் காகம், “வெவ்வேறு வகையான நூற்றொரு அசைவுகளை {இயக்கங்களை [அ] கதிகளை} வெளிப்படுத்தியபடியே நான் பறப்பேன் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. ஒவ்வொரு நூறு யோஜனைகளையும், வெவ்வேறு அழகிய அசைவுகளைச் செய்தபடியே, அந்த அசைவுகள் அனைத்தையும் நான் வெளிப்படுத்துவேன்.(25) உயர எழுவது, கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, நேரே செல்வது, மெதுவாகச் செல்வது, உறுதியாக முன்னேறுவது, சாய்ந்த கோணத்தில் மேலும், கீழுமான பல்வேறு அசைவுகளைச் செய்வது,(26) அசையாமல் மிதப்பது, கணைபோல் முன்னோக்கிப் பாய்வது, கடும் வேகத்துடன் மேல்நோக்கி உயர்வது, மீண்டும் மெது்வாக முன்னேறுவது, பிறகு மிக மூர்க்கமாக முன்னேறுவது,(27) மீண்டும் கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, உறுதியாக முன்னேறுவது, அதிர்வுடன் மேலே மேலே எழுவது, நேராக உயர்வது, மீண்டும் கீழே பாய்வது,(28), வட்டமாகச் சுழல்வது, செருக்குடன் விரைவது, என அசைவுகளின் பல்வேறு வகைகளான இவற்றை நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளிப்படுத்துவேன். அப்போது நீங்கள் என் பலத்தைக் காண்பீர்கள்.[1](29) பல்வேறு அசைவுகளின் வகைகளான இவற்றில் எதைக் கண்டு நான் வானத்தில் உயர வேண்டும். அன்னங்களே, இந்த அசைவுகளில் எதைக் கொண்டு நான் வெளியினூடாகப் பறக்க வேண்டும்?(30) உங்களுக்கு அசைவு வகையைத் தீர்மானித்த பிறகு, நீங்கள் என்னோடு பறக்கலாம். அந்த வெவ்வேறு அசைவுகளையும் பின்பற்றியே ஆதாரமற்ற வெளியில் என்னோடு நீங்கள் பறக்க வேண்டும்” என்றது {காக்கை}.(31)
[1] “இறுதியில் சில அசைவு வகைகளைப் புரிந்து கொள்ளமுடியாததால் நான் சொல்லவில்லை. நீலகண்டர் இங்கே குறிப்பிடப்பட்ட பல்வேறு அசைவுகளையும் விளக்க இவை யாவற்றையும் விளக்கி புரிதலுக்கான ஒரு குறிப்பைச் செய்திருக்கிறார். அவரது பொருள்கள் பலவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லையெனினும், அவை அழகாகவே இருக்கின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
வேறொரு பதிப்பில், “நூற்றொரு விதமான பக்ஷிகதிகளோடு நான் ஸஞ்சரிப்பேன், ஸம்சயமில்லை. விசித்திரமாயும், அவ்வறே பற்பல விதமாயுமிருக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நூறு நூறு யோஜனை தூரம் பறப்பேன் நான், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இப்பொழுது உட்டீனம், அவ்டீனம், பர்டீனம், டீனம், நிடீனம், ஸமடீனம், திர்யகடீனம் என்கிற கதிகளையும், விடீனம், பரிடீனம், பராடீனம், ஸுடீனம், அபிடீனம், மஹாடீனம், நிர்டீனம், அதிடீனம், அவடீனம், பரடீனம், ஸம்டீனம், டீன்டினம், ஸமடீனோடடீனடீனம், மறுபடியும் டீனவிடீனம், ஸம்பாதம், ஸமுதீபம் (என்கிற கதிகளையும்) இவற்றைத் தவிர மற்றும் வேறுள்ள கதிகளையும், கதாகதத்தையும், பரதிகதத்தையும் அனேகங்களான நிகுடீனங்களையும் செய்வேன். அப்போது என் பலத்தைப் பார்ப்பீர்கள்” என்று இருக்கிறது.
காகம் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், அன்னங்களில் ஒன்று அதனுடன் {அந்தக் காக்கையுடன்} பேசியது. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அந்த அன்னம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பாயாக. அந்த அன்னம், “ஓ! காகமே, நூற்றொரு வகையான அசைவுகளுடன் நீ பறப்பாய் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. எனினும், (பிற) பறவைகள் அறிந்த ஒரே வகை அசைவுடனே நான் பறப்பேன். ஓ! காகமே, நான் வேறு எதையும் அறியமாட்டேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! செங்கண்களைக் கொண்டவனே, நீ விரும்பும் எவ்வகை அசைவுடனும் பறப்பாயாக” என்று சொன்னது {அந்த அன்னப்பறவை}.(32-35) அங்கே கூடியிருந்த காகங்கள், இவ்வார்த்தைகளைக் கேட்டு உரக்கச் சிரித்து, “பறப்பதில் ஒரே வகையை மட்டுமே அறிந்த அன்னமானது, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பதைவிட சிறப்படையப் போவதெவ்வாறு?”[2] என்றன.(36)
[2] வேறொரு பதிப்பில், “அன்னம், “காகமே, நீ நிச்சயமாய் நூற்றொரு கதிகளோடு பறக்கிறவன். எல்லாப் பறவைகளும் எந்த ஒரே கதியை அறிகின்றனவோ அந்த ஒரு கதியுடன் நான் பறப்பேன். மற்றொன்றையும் நான் அறியேன்” என்றது. காகம், “அன்னமே, எந்தக் கதியுடன் பறந்து செல்வதற்கு நினைக்கிறாயோ அந்தக் கதியை அனுஸரித்து நீயும் விரைவாகப் பறந்து செல்” என்றது. பிறகு, “காகமே, ஹம்ஸமானது ஒரே ஒரு கதியினால் நூறுகதியுள்ள உன்னை எவ்வாறு ஜயிக்கும்? நீ ஒரு கதியினாலேயே இந்த அன்னை ஜயித்துவிடுவாய்” என்று அங்கு ஒன்றுசேர்ந்திருக்கின்ற அன்னங்களெல்லாம் காக்கையைப் பரிஹாஸஞ்செய்தன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே காகங்கள் சிரித்ததாகவே இருக்கிறது.
பிறகு அன்னம் மற்றும் காகம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று அறைகூவியழைத்தபடியே வானத்தில் எழுந்தன. காகமானது வெவ்வேறு வகையான நூறு அசைவுகளுடன் பறந்த அதே வேளையில், விரும்பிய எங்கும் செல்லவல்ல அன்னமானது ஒரே வகை அசைவிலேயே பறந்தது.(37) அன்னம் பறந்து சென்றது, காக்கையும் (தனது திறனை) ஒவ்வொருவரும் வியக்கும் வண்ணமும், தன் சாதனைகளை ஒவ்வொருவரும் உயர்வாகப் பேசும் வண்ணமும் பறந்து சென்றது.(38) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த காகங்கள், அடுத்தடுத்த நேரங்களில் பல்வேறு வகைப் பறக்கும் அசைவுகளைக் கண்டு, மேலும் உரக்கக் கரைந்தன.(39) அன்னங்களும், (அந்தக் காகங்கள்) ஏற்றுக்கொள்ளாத பல கருத்துகளைச் சொல்லிக் கேலியுடன் சிரித்தன. பிறகு அவை இங்கேயும் அங்கேயும் மீண்டும் மீண்டும் உயரப் பறக்கத் தொடங்கின.(40) அவை மர உச்சிகளில் இருந்து கீழே பாயவும், பூமியின் பரப்பில் இருந்து உயர எழும்பவும் தொடங்கின. பிறகு அவை தங்கள் வெற்றியைக் குறிக்கும் வகையில் பல்வேறு கூச்சல்களைச் செய்தன.(41) எனினும், அந்த அன்னமானது, (தான் பழக்கப்பட்ட) ஒரே வகையிலான மெதுவான அசைவையே செய்து வானத்தைக் கடக்கத் தொடங்கியது. எனவே, ஓ! ஐயா {கர்ணா}, ஒரு சிறு {முகூர்த்த} காலம் வரை, காகத்தைவிட அந்த அன்னம் பின்தங்கியதாகத் தெரிந்தது.(42)
இதனால் காகங்கள், அன்னங்களை அவமதிக்கும் வகையில், இந்த வார்த்தைகளைச் சொல்லின: “பறந்து சென்றவனும், உங்களில் ஒருவனுமான அந்த அன்னம், பின்தங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” {என்றன காகங்கள்}.(43) (பறந்து கொண்டிருந்த) அன்னமானது, இவ்வார்த்தைகளைக் கேட்டதும், மேற்குநோக்கி, மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலுக்குப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றது.(44) அப்போது, களைக்கும்போது அமர்வதற்கு தீவுகள் அல்லது மரங்கள் எதையும் காணாமல் கிட்டத்தட்ட உணர்வையிழந்திருந்த அந்தக் காகத்தின் இதயத்திற்குள் அச்சம் நுழைந்தது. அந்தக் காகமானது, களைப்படைந்த போது, பரந்திருக்கும் அந்த நீரின் மீது எங்கே இறங்குவது எனத் தன் இதயத்துக்கள் எண்ணியது.(45) எண்ணற்ற உயிரினங்களின் வசிப்பிடமாக இருக்கும் பெருங்கடலானது கடக்கமுடியாததாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் வசிக்கும் அது, {பல உயிரினங்கள் வசிப்பதால்} வானத்தைவிட மேன்மையானது.(46) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, ஆழத்தில் அதை விஞ்சுவதற்கு எதுவும் கிடையாது. ஓ! கர்ணா, பெருங்கடலின் நீரானது வெளியைப் போலவே எல்லையற்றிருப்பதாக மனிதர்கள் அறிகிறார்கள். ஓ! கர்ணா, அதன் நீரின் அளவுக்கு ஒரு காகமானது எம்மாத்திரம்?(47)
ஒரு கணத்தில் பெரும் தொலைவைக் கடந்த அன்னமானது, காகத்தைத் திரும்பிப் பார்த்ததும், அதனால் (இயலுமென்றாலும்} அதைப் பின்னால் விட்டு விட்டுச் செல்ல முடியவில்லை.(78) அந்தக் காகத்தைக் கடந்து சென்ற அந்த அன்னமானது, தன் கண்களை அதன் {அந்தக் காகத்தின்} மீது செலுத்தி, “இந்தக் காகமே {நம்மிடம்} வரட்டும்” என்று எண்ணிக் காத்திருந்தது.(49) காகமும், மிகவும் களைத்துப் போய் அன்னத்திடம் வந்தது.(50) விழுந்து, மூழ்கப்போகும் அதைக் கண்டும், நல்லினத்தோரின் நடைமுறைகளை நினைவுகூர்ந்தும் அதைக் காக்க விரும்பிய அன்னமானது, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசியது:(51) “பறத்தல் குறித்துப் பேசியபோது, பல்வேறு வகைகளிலான அசைவுகளைக் குறித்து நீ மீண்டும் மீண்டும் பேசினாயே. அவை எங்களுக்குப் புதிராக இருப்பதால் (இந்த உனது நிலையில்) அவை குறித்து நீ பேசவில்லையோ?(52) ஓ! காகமே, பறப்பதில் இப்போது நீ பின்பற்றிய அசைவுவகையின் பெயரென்ன? உன் சிறகுகளாலும், அலகாலும் நீ மீண்டும் மீண்டும் நீரைத் தொடுகிறாயே.(53) ஓ! காகமே, அந்தப் பறக்கும் அசைவுகளில் நீ இப்போது எதைப் பின்பற்றுகிறாய்? வா, வா, ஓ! காகமே, வேகமாக வா, நான் உனக்காகவே காத்திருக்கிறேன்” என்றது.(54)
சல்லியன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “ஓ! தீய ஆன்மா கொண்டவனே, மிகவும் பீடிக்கப்பட்டதும், தன் சிறகுகளாலும், அலகாலும் நீரைத் தொட்டுக் கொண்டிருந்ததும், அன்னத்தால் இவ்வாறு காணப்பட்டதுமான அந்தக் காகம், அதனிடம் {அன்னத்திடம்} பேசியது.(55) உண்மையில், அந்த நீர்ப்பரப்பின் எல்லையைக் காணாமல், களைத்து விழுந்து, பறக்கும் திறனை இழந்த காகமானது, அவ்வன்னத்திடம், “காகங்களாகிய நாங்கள், கா, கா எனக் கரைந்து கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்போம். ஓ! அன்னமே, என் உயிர் மூச்சு உன் கரங்களில் இருக்கிறது, என் பாதுகாப்பை உன்னிடம் நான் நாடுகிறேன். ஓ! என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வாயாக” என்றது.(57) மிகவும் பீடிக்கப்பட்டுத் தன் சிறகுகளாலும், அலகாலும் பெருங்கடலைத் தொட்டுக் கொண்டிருந்த அந்தக் காகம், மிகவும் களைத்துப் போயத் திடீரெனக் கீழே விழுந்தது.(58) கவலை கொண்ட இதயத்துடன், பெருங்கடலின் நீரில் அது விழுவதைக் கண்ட அன்னமானது, மரணத் தருவாயில் இருந்த அந்தக் காகத்திடம், “ஓ! காகமே, தற்புகழ்ச்சியுடன் நீ சொன்னதென்ன என்பதை நினைவுகூர்வாயாக. நூற்றொரு வெவ்வேறு வகைகளில் வானத்தில் பறப்பேன் என்பதே உன் வார்த்தைகளாக இருந்தன. எனவே, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பவனும், என்னைவிட மேன்மையானவனுமான நீ, ஐயோ, ஏன் களைத்துப் போய்ப் பெருங்கடலில் விழுந்தாய்?” என்றது.(61)
பலவீனமடைந்த அந்தக் காகமானது, மேல்நோக்கி அன்னத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, அதை மனநிறைவு கொள்ளச் செய்ய முயற்சிக்கும் வகையில்,(62) “பிறருடைய உணவுகளில் எஞ்சியதை உண்டு, அதனால் செருக்கடைந்த நான், ஓ! அன்னமே, கருடனுக்கு இணையானவனாக என்னைக் கருதிக் கொண்டு, அனைத்துக் காகங்களையும், பிற பறவைகள் பலவற்றையும் அலட்சியம் செய்தேன் {அவமதித்தேன்}.(63) எனினும், இப்போது என் உயிர் மூச்சை உன் கரத்தில் இருக்கிறது, உன் பாதுகாப்பை நான் வேண்டுகிறேன். ஓ!, என்னை ஏதேனும் ஒரு தீவின் கரைக்குக் கொண்டு செல்வாயாக.(64) ஓ! அன்னமே, ஓ! தலைவா, நான் என் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடிந்தால், அதன் பிறகு எப்போதும் ஒருவரையும் அலட்சியம் செய்ய {அவமதிக்க} மாட்டேன். ஓ!, இந்தப் பேரிடரில் இருந்து என்னைக் காப்பாயாக” என்று மறுமொழி கூறியது.(65)
இவ்வாறு சொன்னதும், கவலையுடன் அழுது கொண்டிருந்ததும், உணர்வுகளை இழந்ததும், “கா, கா” எனக் கரைந்து கொண்டே,(66) பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்ததும், நீரில் நனைந்திருந்திருந்ததும், காணச் சகியா நிலையில் இருந்ததும், அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்ததுமான அதனிடம் {காகத்திடம்}, மேலும் ஒரு வார்த்தையும் சொல்லாத அந்த அன்னமானது, தன் கால்களால் அதனைப் பற்றி இழுத்து, மெதுவாகத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது.(67) உணர்விழந்த அந்தக் காகத்தைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்ட அன்னமானது, அவ்விரண்டும் ஒருவரையொருவர் அறைகூவியழைத்தபடி எங்கிருந்து பறந்த வந்தனவோ, அதே தீவுக்கு வேகமாகத் திரும்பியது.(68) உலர்ந்த தரையில் அவ்வானுலாவியை {காக்கையைக்}கிடத்தி, அதற்கு ஆறுதலளித்த அவ்வன்னம், மனோ வேகத்துடன் தான் விரும்பிய பகுதிக்குச் சென்றது. பிறரின் உணவுகளில் எஞ்சியவற்றை உண்டு வந்த அந்தக் காகமானது, இவ்வாறே அந்த அன்னத்தால் வெல்லப்பட்டது. பிறகு அந்தக் காகம், தன் வலிமை, சக்தி ஆகியவற்றில் இருந்த செருக்கைத் துறந்து, அமைதியான வாழ்வையே மேற்கொண்டது.(69,70)
உண்மையில், அந்த வைசியப் பிள்ளைகளின் உணவுகளில் எஞ்சியதை உண்டு வளர்ந்த அந்தக் காகமானது, தனக்கு இணையானவர்களையும், மேன்மையானவர்களையும் அலட்சியம் செய்ததை {அவமதித்தைப்} போலவே, ஓ! கர்ணா, திருதராஷ்டிரன் மகன்களுடைய உணவில் எஞ்சியவற்றை {எச்சிலுணவை} உண்டு வளர்ந்த நீ, உனக்கு இணையானவர்கள் மற்றும் மேன்மையானவர்கள் அனைவரையும் அவமதிக்கிறாய்.(71) விராடனின் நகரத்தில், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், பீஷ்மர், மற்றும் பிற கௌரவர்களின் பாதுகாப்பு என்ற ஆதாயம் உனக்கு இருந்தபோதே, பார்த்தனை {அர்ஜுனனை} நீ ஏன் கொல்லவில்லை?(72) சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட நரிக்கூட்டத்தைப் போல, அப்போது, பெரும் அழிவை ஏற்படுத்தியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனால் வீழ்த்தப்பட்ட போது, உங்கள் ஆற்றல் எங்கே சென்றது?(73) குரு வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டதும், முதலில் தப்பி ஓடியவன் நீயே.(74) துவைதத் தடாகத்தின் வனங்களில் {துவைத வனத்தில்}, ஓ! கர்ணா, கந்தர்வர்களால் நீங்கள் தாக்கப்பட்டபோது, குருக்கள் அனைவரையும் கைவிட்டுவிட்டு முதலில் தப்பி ஓடியவன் நீயே.(75) பேரழிவை ஏற்படுத்தியவர்களான சித்திரசேனன் தலைமையிலான கந்தவர்கள் போரில் வெற்றியடைந்த பிறகு, ஓ! கர்ணா, துரியோதனனையும், அவனது மனைவியையும் மீட்டவன் பார்த்தனே {அர்ஜுனனே}.(76)
முன்பு, ஓ! கர்ணா, ராமரேகூட {பரசுராமரே கூட}, (குரு) சபையில், மன்னர்கள் முன்னிலையில், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றலைக் குறித்துப் பேசியிருக்கிறார்.(77) அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் கொல்லப்பட முடியாதவர்கள் என்று மன்னர்கள் அனைவரின் முன்னிலையில், துரோணரும், பீஷ்மரும் பேசிய வார்த்தைகளை நீ அடிக்கடி கேட்டாய்.(78) அனைத்து உயிரினங்களை விடவும் மேன்மையானவனாக பிராமணன் இருப்பதைப் போல, உன்னைவிட மேன்மையானவனாக அர்ஜுனன் இருப்பவற்றில் சிலவற்றையே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(79) வசுதேவரின் மகனும் {வாசுதேவ கிருஷ்ணனும்}, குந்தி மற்றும் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} முதன்மையான தேரில் இருப்பதை நீ விரைவில் காண்பாய்.(80)
(அந்தக் கதையில்) காகமானது, நுண்ணறிவுடன் செயல்பட்டு, அன்னத்தின் பாதுகாப்பை நாடியதைப் போல, நீயும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் பாதுகாப்பை நாடுவாயாக.(81) பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் காணும்போது, ஓ! கர்ணா, இவ்வாறான பேச்சுகளை நீ பேசமாட்டாய்.(82) பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் உன் செருக்கைத் தணிக்கும்போது, உனக்கும் தனஞ்சயனுக்குமான {அர்ஜுனனுக்குமான} வேறுபாட்டை நீ காண்பாய்.(83) மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களின் மத்தியிலும் கொண்டாடப்படுபவர்கள் ஆவர். விட்டில் பூச்சியைப் போன்றவனான நீ, மடமையினால் பிரகாசமிக்க அந்த ஒளிக்கோள்கள் இரண்டையும் அலட்சியமாக நினைக்காதே.(84) சூரியனையும், சந்திரனையும் போன்ற கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் பிரகாசத்திற்காகவே {புகழுக்காகவே} {அவ்வாறு} கொண்டாடப்படுகிறார்கள். எனினும், நீ மனிதர்களில் விட்டிற்பூச்சியைப் போன்றவனே.(85) ஓ! கல்விமானே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் அலட்சியமாக எண்ணாதே. உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் மனிதர்களில் சிங்கங்களாவர். இவ்வாறான தற்புகழ்ச்சிகளில் ஈடுபடாதே” {என்றான் சல்லியன்}.(86)
-------------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 41-ல் உள்ள சுலோகங்கள் : 86
ஆங்கிலத்தில் | In English |