Karna warns Shalya! | Karna-Parva-Section-43 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சல்லியனை நிந்தித்த கர்ணன்; சல்லியனைக் கர்ணன் ஏன் கொல்லவில்லை என்பதற்கு அவன் சொன்ன காரணங்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மௌனமடையச் செய்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் இவ்வார்த்தைகளில் அவனிடம் {சல்லியனிடம்} பேசினான்:(1) “ஓ! சல்லியரே, உதாரணம் சொல்லும் {உவமை கதை} வழியில் என்னிடம் நீர் பேசியதற்கு மறுமொழியாக, உமது வார்த்தைகளால் நான் இந்தப் போரில் அச்சுறுத்தப்படப்பட முடியாதவன் என்பதையே உமக்குச் சொல்கிறேன்.(2) வாசவனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்கள் அனைவரும் என்னோடு போரிட்டாலும்கூட, நான் அச்சமேதும் அடைய மாட்டேன் எனும் போது, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோரிடம் நான் அஞ்சுகிறேன் என்பது குறித்து என்ன சொல்வது?(3) வார்த்தைகளால் மட்டுமே அச்சுறுத்தப்பட இயலாதவனாக நான் இருக்கிறேன். ஓ! சல்லியரே, போரில் உம்மால் அச்சுறுத்தப்படத் தகுந்தவன் வேறு எவனோ (நான் அல்ல).(4) நீர் என்னிடம் கசப்பான வார்த்தைகள் பலவற்றைப் பேசியிருக்கிறீர். இழிந்தோரின் பலம் இங்கேயே இருக்கிறது. என் தகுதிகளைப் பேச இயலாத நீர், ஓ தீய இதயம் கொண்டவரே, கசப்பான காரியங்கள் பலவற்றையே பேசுகிறீர்.(5)
ஓ! மத்ரகரே {சல்லியரே}, கர்ணன் போரில் அஞ்சுவதற்காகப் பிறந்தவனல்லன். மறுபுறம், நான் வீரத்தை வெளிப்படுத்துவதற்காகவும், புகழை அடைவதற்காகவும் பிறந்தவனாவேன்.(6) உம்மிடம் நான் கொண்ட நட்பிற்காகவும், என் பற்றுக்காகவும் {பாசத்திற்காகவும்}, கூட்டாளியாக நீர் இருப்பதாலும் என இம்மூன்று காரணங்களாலேயே, ஓ சல்லியரே, நீர் இன்னும் உயிரோடு இருக்கிறீர்.(7) மன்னர் திருதராஷ்டிரருக்காக இப்போது செய்யப்படுவது முக்கியப் பணியாகும். ஓ! சல்லியரே, அப்பணி என்னைச் சார்ந்தே இருக்கிறது. அதன் காரணமாகவே இக்கணம் வரை நீர் வாழ்கிறீர்.(8) உம்மால் சொல்லப்படும் ஏற்பில்லா வார்த்தைகள் என்னால் மன்னிக்கப்படும் என்ற ஒப்பந்தம் என்னால் முன்பு ஏற்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓ! மத்ரகரே இதன் காரணமாகவே நீர் வாழ்கிறீர்.(9) ஆயிரம் சல்லியர்கள் இல்லாமலும் என்னால் என் எதிரிகளை வெல்லமுடியும்.[1] ஒரு நண்பனுக்குக் காயமேற்படுத்துபவன் பாவம் நிறைந்தவனாவான். இதன் காரணமாகவே இப்போது நீர் வாழ்கிறீர்” என்றான் {கர்ணன்}.(10)
-----------------------------------------------------------------------------[1] “இதன் பொருளாவது, ’நீர் ஆயிரம் முறை {என்னுடன்} இல்லாமல் போனாலும், அப்போதும் பாண்டவர்களை நான் வெல்வேன்’ என்பதாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கர்ண பர்வம் பகுதி-43ல் உள்ள சுலோகங்கள் : 10
ஆங்கிலத்தில் | In English |